புத் 65 இல. 50

விஜய வருடம் கார்த்திகை மாதம் 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஸபர் பிறை 11

SUNDAY DECEMBER 15 2013

 

கேழ்வரகில் நெய்யென்றால் கேட்பவர்களுக்கு புத்தியில்லையா?

கேழ்வரகில் நெய்யென்றால் கேட்பவர்களுக்கு புத்தியில்லையா?

அரசாங்கத்திற்கு வெறுப்பேற்ற வேண்டுமென்பதற்காக வடக்கில் வேண்டு மென்றே சில பல எரிச்சலூட்டும் காரியங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்து வருவதை நன்கு உணர முடிகிறது. அதிலும் வடமாகாண சபைத் தேர்தல் வெற்றியின் பின்னர் தமிழ்க் கூட்டமைப்பு நடந்து கொள்ளும் விதம் வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழ்ந்துவரும் தமிழ் மக்களாலேயே வெறுக் கத்தக்கதாக அமைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது.

வடமாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெற்றதும் தாம் வடக்கில் தனி அரசாங்கத்தை அமைத்து ஆட்சி நடத்துவது போன்றதொரு மாயை கலந்த பிரமையில் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்கள் நடந்து கொள்வதை தெளிவாக அவதானிக்க முடிகிறது. மத்தியில் ஓர் அரசாங்கம் உள்ளது, அவ்வரசாங்கம் நியமித்த ஆளுநர் ஒருவர் வடக்கில் இருக்கிறார், ஒரு வரையறுக்கப்பட்ட அதிகாரங்களைத் தவிர அனைத்துமே மத்திய அரசாங் கத்திடம்தான் உள்ளது என்பதை மறந்து தாம் தனியானதொரு அரசாங்கத்தை நடத்திவருவது போன்று இவர்கள் நடந்து வருகிறார்கள்.

தமது வெற்றியின் பின்னர் தமது கூட்டுக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகள், பிரிவினைகள், பதவிச் சண்டைகள் என்பவற்றை நாசூக்காக மறைத்து தாம் மக்களுக்குச் சேவை செய்துவருவதாக தமிழ்க் கூட்டமைப்பினர் பாசாங்கு செய்து வருகின்றனர். முதலமைச்சர் விக்னேஸ்வரன் வடக்கு இராஜ்யத்திற்கு தானே தலைவர் போல எண்ணிச் செயற்பட்டு வருகிறார். இந்த எண்ணமே அவரை இந்தியப் பிரதமருக்கு வடக்கிற்கு வருமாறு கடிதம் எழுதவும் தூண் டியது. இலங்கை வரும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் வடக்கிற்குச் செல்லும் போது முதலமைச்சரைச் சந்திக்கும் வேளைகளிலும் அவருக்கு தான் ஒரு நாட்டின் தலைவர் என்ற பிரமை ஏற்படுவது நன்கு புலனாகிறது.

வேட்பாளராக நியமனம் பெறுவதற்கே கட்சிக்குள் முட்டிமோதி முன்னுக்குப் பின் முரணான அறிக்கைகள் விட்டு கூட்டுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களை ஒதுக்கிவிட்டு வந்தவர் என இன்றுவரை சக கூட்டுக் கட்சித் தலைவர்களால் ஏளனம் செய்யப்படும் முதலமைச்சர், தான் மத்திய அரசாங்கத்திற்கு மதிப்பளித்துச் செயற்பட வேண்டும் என்பதை மறந்து செயற்படுவது இவர் கற்ற அதியுயர் கல்விக்கும், ஆற்றிய அதியுயரிய பதவிக்கும் குந்தகத்தை ஏற்படுத் துவதாக அமைந்துள்ளது. சாதாரண படிப்பறிவுடன் அரசியல் வாதியாகிய ஒருவர் இவ்வாறு நடந்து கொண்டால் அதில் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்த நாட்டின் உயர் சபையான உயர் நீதிமன்றத்தின் நீதியரசராக பணியாற்றிய இவர் இவ்வாறு படிமுறை தெரியாது அல்லது தெரிந்திருந்தும் தவறி நடப்பது வேதனைக்குரிய விடயம் ஆகும். நீதியரசர் ஆசனத்தில் இவர் இருந்த காலத்தில் ஒரு சாதாரண நீதிமன்ற முதலியார் இவரது தீர்ப்பினை மறுதலித்து இவருக்கு அறிவுரை கூறினால் அல்லது எதிர்த்து நின்றிருந்தால் இவரால் அதனை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்திருக்குமா? அல்லது ஏற்றுக் கொண்டுதான் இருந்திருப்பாரா? ஆனால் இன்று அவர் அத்தகை யதொரு செயற்பாட்டையே செய்து வருகிறார். மத்திய அரசாங்கத்தையும், அதன் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோ ரையும் இவர் ஒரு அலட்சியப் போக்கிலேயே எண்ணி வருகிறார். மத்திய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட ஆளுநரை இவரும். இவரது வடமாகாண சபையும் குறைத்து மதிப்பிட முனைகிறார்கள்.உண்மையில் ஆளுநர் அல்லது மத்திய அரசு தனக்குள்ள அதிகாரத்தை பிரயோகித்தால் இவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது போய்விடும் என்பது இவருக்குத் தெரியாமலில்லை.

இவ்வளவு தூரம் தன்னிச்சையாகவும், தான்தோன்றித்தனமாகவும் நடந்து கொள்ளும் இவரை அரசாங்கம் இதுவரை எதுவுமே கேட்கவில்லை. பண்பாக விட்டுப் பிடிப்போம் எனும் வழமையான அமைதிப் போக்கையே அரசாங்கம் பெருந்தன்மையுடன் கடைப்பிடித்து வருகிறது. அதனை அரசாங்கத் தரப்பின் பலவீனமாகக் கருதி வடக்கில் பல அரசியல் நாடகங்களை இவர்கள் அரங்கேற்றி வருகின்றனர். வடக்கே வரும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு பொய்கள் உரைக்கப்படுகின்றன. காணாமற்போனவர்கள் எனக் கூறப்படு பவர்களின் உறவினர்களை வைத்து அவ்வப்போது பொய்யாக ஆர்ப்பாட் டங்களும் நடத்தப்படுகின்றன. இவற்றிற்கு தமக்குச் சார்பான தமிழ் ஊடகங் களின் துணையும் தாராளமாகப் பெறப்படுகிறது.

இவ்வாறெல்லாம் தமிழ்க் கூட்டமைப்பினர் நடந்து கொள்ளவும், அவற்றை நம்பிக் கொண்டிருக்கவும் மக்கள் இன்னமும் மூடர்களாக இல்லை. கேழ் வரகில் நெய்யென்றால் கேட்பவர்களுக்கு புத்தியில்லையா என்ற முது மொழியே ஞாபகத்திற்கு வருகின்றது. முப்பது வருட கால யுத்தத்தின்போது வடக்கு கிழக்கு மக்கள் அனுபவித்த கொடுமைகள் பல. புலிகளின் கட்டுப் பாட்டிற்குள் சிக்குண்டிருந்த மக்களை இன்றைய அரசாங்கமே விடுவித்து நிம்மதியாக வாழ வைத்துள்ளது.

அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆற்றிய உரை யொன்றில் முப்பது வருட காலமாகப் போராடிய புலிகளால் அல்லது அரசியல் ரீதியாகப் போராடிய தமிழ்த் தலைவர்களால் பெற்றுக் கொள்ள முடியாத சகலவற்றையும் கடந்த நான்கு வருடங்களாக இன்றைய அரசாங்கம் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு வழங்கியுள்ளது எனத் தெரிவித்திருந்தார். இது எவராலும் மறுக்கப்பட முடியாத உண்மை.

புலிகளின் காலத்தில் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் தமது கல்வி முதல் சகல விடயங்களிலும் பின்னடைவையே எதிர்கொண்டிருந்தனர். புலிகள் மக்களைத் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தனர். இதனால் அம்மக்களது வாழ்க்கையைப் போலவே அவர்களது பிரதேசங்களும் அபிவிருத்தியில் பின்னடைவைக் கண்டிருந்தது. ஆனால் இந்த அரசாங்கம் மக்களை விடு வித்து அவர்களைச் சுதந்திரமாக வாழ வைத்துள்ளதுடன் அவர்களது வாழ்க் கைத் தரத்தை உயர்த்தியதுடன், அவர்களது பிரதேசங்களையும் அபிவிருத்தி செய்துள்ளது.

கடந்த வடமாகாண சபைத் தேர்தல் முடிவுகள் வரும்வரையில் வடக்கில் அரசாங்கம் தனது பணியைச் செவ்வனே செய்து வந்தது. சர்வதேசம் தமது கைகளுக்குள் என்பதாக தமிழ்க் கூட்டமைப்பினர் தமிழ் மக்களுக்கு அளித்த பொய் வாக்குறுதிகளை நம்பி வாக்களித்து அவர்களை வெற்றிபெற வைத்த மக்கள் இன்று அவை அனைத்தும் பொய் என்பதையும், அவர்களது இயலாமையையும், அரசாங்கத்தின் அருமையையும் நன்கு உணர்ந்துள்ளனர்.

மாகாண ஆட்சியைத் தமிழ்க் கூட்டமைப்பு கைப்பற்றிவிட்டதால் அரசாங் கம் தனது பணிகளை இடைநிறுத்திவிடவில்லை. மத்திய அரசின் கீழ் வரும் சகல அபிவிருத்திப் பணிகளுமே வழமை போன்று நடைபெற்று வருகிறது. அத்துடன் மாகாண அதிகாரங்களைப் பயன்படுத்தி மாகாண சபை மேற்கொள்ளும் சகல பணிகளுக்கும் ஆதரவும் வழங்கி வருகிறது. எனவே இனிவரும் காலங்களிலாவது மக்கள் உண்மையை உணர்ந்து செயற்பட வேண்டும் என்பதே எமது வேண்டுகோளாகும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.