புத் 65 இல. 50

விஜய வருடம் கார்த்திகை மாதம் 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஸபர் பிறை 11

SUNDAY DECEMBER 15 2013

 

 
வடக்கில் நான்கு வருட காலத்தில் பாரிய அபிவிருத்திப் பணிகள்

வடபகுதி மக்களின் நன்மை கருதி செயற்பட ஜி.ஏ. சந்திரசிறி முடிவு

வடக்கில் நான்கு வருட காலத்தில் பாரிய அபிவிருத்திப் பணிகள்

வெற்றி இலக்கை தொடர்ந்தும் முன்னெடுக்க ஆளுநர் ஆதரவு

“போர் முடிவடைந்து ஒரு குறுகிய காலப்பகுதிக்குள் நாங்கள், புனர்வாழ்வு, புனர்நிர்மாணம், மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை அமுலாக்குதல் ஆகியவற்றின் செயல் ஒழுங்கில் பல முன்னேற்றங்களையும், வெற்றிகளையும் பெற்றிருக்கிறோம்” என்று தெரிவித்துள்ள வட மாகாண ஆளு நர் ஜி.ஏ. சந்திர சிறி “இப்பொழுது நாங்கள் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண சபையை அமைத்திருக் கிறோம்.

வட மாகாணத்தின் அபிவிருத்தியையும் நிர்வாகத்தையும் இச்சபை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு நாங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் எனவும் கூறினார். வடக்கு மாகாண மக்களின் நன்மைக்காக ஆளுநரும் அரச சேவை உத்தியோகத்தர்களுமாக நாங்கள், கடந்த காலத்தில் சேவையாற்றி அடைந்த அபிவிருத்தி நிர்வாக வெற்றிகளை, தெரிவு செய்யப்பட்ட சபை தொடர்ந்து முன்கொண்டு செல்லவேண்டும் என நல்லெண்ணத்தையும் பரஸ்பர புரிந்துணர்வையும் வெளிப்படுத்தும் வகையில் ஆளுநர் தெரிவித்தார்.

ஆளுநர், முதலமைச்சர், மாகாண அமைச்சர்கள் மற்றும் சபையின் ஏனைய உறுப்பினர்கள் ஆகியோர் தத்தமது அதிகாரங்களையும் வகிபாகத்தையும் பொறு ப்புக்களையும், எமது அரசியல் யாப்பின் 13வது திருத்தச் சட்டம் மற்றும் 1987 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க மாகாண சபைச் சட்டம் ஆகியவற்றினால் வழங்கப்படும் சட்டங்கள், விதிகள், ஒழுங்குகள், வழிகாட்டுதல்கள் ஆகியவற்றுக்கு இணங்கவே கொண்டிருக்க முடியும் எனவும் ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

ஆளுநரின் அதிகாரங்களும் செயற்பாடுகளும், மாகாண சபை உறுப்பினர்கள், மாகாண சபை நடவடிக்கை ஒழுங்கு நிதி விடயம், மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு, ஆளுநரின் உத்தியோகபூர்வ நடவடிக்கை முறைமைகள் முதலிய விடயங்களை 13வது திருத்தச் சட்டத்தின்படியே அமைய வேண்டும் எனவும் அவர் கூறினார்.

ஊடக அறிக்கை

“அரசியல் வாய்ப்புக்கான 13வது திருத்தம், மாகாண ஆளுநர் ஒருவரின் வகிபாகம் மற்றும் பொறுப்புக்கள் என்பதனடிப்படையில் வட மாகாண ஆளுநரால் ஆற்றப்படும் வகிப்பாகம்” எனும் விடயத்தின் கீழ் வட மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி அவர்கள் சிரேஷ்ட அரச அதிகாரிகளுக்கு இன்று (13 டிசம்பர் 2013) காலை யாழ்ப்பாணம் கல்வியியல் கல்லூரியில் உரை நிகழ்த்தினார்.

வடக்கின் மாவட்ட அரச அதிபர்கள், மத்திய அமைச்சக்களின் கீழ்வரும் அரச திணைக்கள அதிகாரிகள் ஆகியோரும் வட மாகாண சபையின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் சகிதம் மண்டபத்தில் நிறைந்திருந்து ஆளுநரின் உரையை செவிமடுத்தனர். 2009 இல் ஆயுத வன்முறைப் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் ஒற்றுமையாக ஒன்றிணைந்து ஆளுநருடன் கரம் கோர்த்து வட மாகாணத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்ட அரச சேவையாளர்கள் நயந்து பாராட்டத்தக்க வர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தெரிவு செய்யப்பட்ட வட மாகாண சபைக்குரிய பெளதீக ரீதியான தள நிலைவரங்களையும், அக, புறச் சூழ்நிலைகளையும், நிறுவன, நிர்வாக ரீதியான ஒழுங்குபடுத்தல்களையும் ஆயத்தங்களையும் வெற்றிகரமாக ஏற்படுத்திக் கொடுப்பதற்கு தனது வழிகாட்டலின் கீழ் சிரேஷ்ட நிலையிலுள்ள மாகாண உத்தியோகத்தர்கள் அனைவரும் அயராது பாடுபட்டனர் என்பதை ஆளுநர் நினைவூட்டினார்.

புதிய மாகாண சபையை நிர்வாக ரீதியாக பெளதீக, ஆளணி வளங்களுடன் இயங்க வைப்பதில் அனைத்து செயலாளர்களும், திணைக்களத் தலைவர்களும், தனது வழிகாட்டலில் பூரணமான ஆதரவும் ஒத்துழைப்பும் நல்கியிருந்தனர் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.

 

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.