புத் 65 இல. 50

விஜய வருடம் கார்த்திகை மாதம் 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஸபர் பிறை 11

SUNDAY DECEMBER 15 2013

 

 
போதைப் பொருள் கடத்தலை முறியடித்த பொலிஸ் அதிகாரியும், மனைவியும் கொலை

போதைப் பொருள் கடத்தலை முறியடித்த பொலிஸ் அதிகாரியும், மனைவியும் கொலை

சந்தேகநபர்கள் நால்வரும் மரணம்

அன்று கடமையை முடித்துக் கொண்டு மிகவும் களைப்பாக வீடு வந்து சேர்ந்த சுனில் மறுநாள் அதிகாலையில் மீண்டும் பொலிஸ் சேவைக்கு செல்லவிருப்பதால் மனைவி பிள்ளைகளுடன் இரவு போஷனத்தின் பின் நித்திரைக்கு சென்றனர். சிறிது நேரத்தில் வீட்டின் கதவை யாரோ திறக்க முனைவதை உணர்ந்தார். சுனில் பக்கத்திலுள்ள அலுமாரியை கதவு திறக்கா வண்ணம் அணைவாக வைத்திருந்தார்.

திடீரென கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்தவர்களின் கைகளில் பாரிய தடிகள் காணப்பட்டன. அவர்கள் தடிகளினால் சுனிலைத் தாக்கினர். விசேட அதிரடி படையின் பயிற்சியின் காரணமாக ஒருவாறு தன்னை சுதாகரித்துக் கொண்ட சுனிலின் தலையில் பலமாக ஒருவர் தாக்க அவர் கீழே சாய்ந்தார். பதற்றமடைந்திருந்த சுனிலின் மனைவி சமன்மலி சப்தமிட்டவாறு பிள்ளைகளை அணைத்துக் கொண்டார். பின்னர் கணவரை தாக்கும் அக்கோஷ்டியினர் எதிர்க்க தொடங்கினர். இவரும் தாக்கப்பட்டு கீழே சாய்ந்தார். இரண்டு வயதுடைய மகனும் தடியினால் தாக்கப்பட்டார். மூத்த மகன் ‘சுலக்ஷன்’ உயிர் தப்பினார். வீட்டிலுள்ள பொருட்களை உடைத்துவிட்டு வந்தவர்கள் முச்சக்கரவண்டியில் தப்பிச்சென்றனர். இதுவரை ஒளித்திருந்த மூத்த மகன் சுலக்ஷன வெளியே வந்து சப்தமிட்டதும் அயலவர்கள் கூடினர். சம்பவம் பத்து நிமிடங்களில் நடந்து முடிந்துவிட்டதாம்.

சுனில் ஸ்தலத்தில் இறக்க அவர்மனைவி சமன்மலி கராபிடிய வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படுகையில் இறந்தார். இரண்டு வயது மகன் வைத்தியர்களின் பல மணிநேர போராட்டத்தின் பின் உயிர் பிழைத்தார்.

சுனில் அவரது மனைவி ஆகியோர் கொல்லப்படுவதற்கு காரணம், போதைப் பொருள்தான் சட்ட விரோதமான செயல்களி லீடுபடுவோரை எதிர்த்தமையால்தான் என ஊர் மக்கள் பேசிக்கொண்டனர்.

கம்புருபிடிய மாஸ்முல்ல பிரதேசத்தில் ஆறுபேர் கொண்ட குடும்பத்தில் கடைசி மகனாக வெலிகம லியனாராச்சிலாகே சுனில் பொலிஸ் விசேட அதிரடி படையில் 2001ம் ஆண்டு முதல் கடமையாற்றினார். முப்பது வருட கொடிய யுத்தத்தின் பின் அரசு வெற்றி பெற்றதையடுத்து பொலிஸ் சாதாரண சேவையில் கடமையாற்றினார். பல பிரதேசங்களில் கடமையாற்றிய இவர் இறுதியாக மாத்தறை பொலிஸ் குற்ற தடுப்பு பிரிவில் இணைந்துகொண்டார். மனைவி அப்சரா சமன்மலி இரு மகன்களுடன் சந்தோசமாக வாழ்ந்த இவருக்கு அண்மையில் பயமுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. சட்டத்துக்கு விரோதமாக செயல்படுவோரை எதிர்த்து சுனில் நின்றமைதான் இதற்குக் காரணமாகும். மாஸ்முல்ல பிரதேசத்தில் போதை பொருள் விற்பனையாளர்களிடமிருந்து பெரும் எதிர்ப்புண்டானது. திருட்டு மரப்பலகை வியாபாரத்தையும் இவர் எதிர்த்து வந்ததால் இவர்முன்னர் இவ்வாறு தலையில் தாக்கப் பட்டார். இதற்கெல்லாம் பயந்து வாழ முடியாது என் கடமையை நான் செய்வேனென இவர் அடிக்கடி மனைவியிடம் கூறி வந்தாராம்.

வலஸ்முல்லையைச் சேர்ந்த “கெடயம் சிந்தக” (சிந்தக வசந்த) இவரை தெரியாதவர் எவருமிலர் போதைபொருள் வியாபாரத்தின் மொத்த வியாபாரி இவர்தான். அப்பகுதியை கதிகலங்கச் செய்யும் இவர் பற்றி சுனில் அறிந்திருந்தார். சுனில் தன்னை சட்டத்தின் பிடியில் சிக்கவைக்க முனைவதை அறிந்து அடிக்கடி சுனிலுக்கு பயமுறுத்தல்கள் விடுத்துவந்தார்.

இவ்விரட்டை கொலைகளுக்கு காரணமானவர் “கெடயம் சிந்தக” வென்பதை ஊரார் அறிந்திருந்தனர் இதனை ஊர்ஜிதப்படுத்தியது அவரது தலைமறைவாகும். சுனிலின் வீட்டிலிருந்து சற்றப்பால் வசித்து வந்தவர் கெடயம் சிந்தக.

கடந்த நவம்பர் மாதம் 16ம் திகதி சனிக்கிழமை இவ்விருவரும் கொலை செய்யப்பட்டனர். சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு பொலிஸ் விரைந்து விசார ணைகளை மேற்கொண்டனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட மரத்தடிகளை பொலிஸார் சோகோ பிரிவினர் கைபற்றினர். அயல் பகுதிகளை சோதனையிட்டபோது மேலும் சில தடிகளை பொலிஸார் கைப் பற்றினர் இத்தடிகளில் இரத்தக்கறையும் கேசப்பகுதிகளும் காணப்பட்டன. பொலிஸ் நாய் “லிலி” கொண்டுவரப்பட்டது. தடிகளை மோப்பம் பிடித்த நாய் நேராக கெடயம் சிந்தகவின் வீட்டுக்குள் சென்றது வீட்டினுள் மேலும் சில தடிகளைபொலிஸார் கைப்பற்றினர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட தடிகளை ஒத்தவையாக இவை காணப்பட்டன.

கெடயம் சிந்தகவின் மனைவியும் பிள்ளைகளும் விசாரணை செய்யப்பட்டனர். இது பற்றி எதுவும் தெரியாதென வீட்டார் பொலிஸாரிடம் கூறினர். பொலிஸ் உயர் அதிகாரிகளான டி.எம் விஜேராம, டி.எம். அபேசேகர, பி. எம். புஷ்பகுமார, ஆர். சி. ஹெட்டியாராச்சி, டியுடர் அபேவிக்ரம, அஜித் பிரசன்ன, அநுர உசன்த, தம்மிக ஹபுகொட, ஆகியோரின் ஆலோசணையின் பேரில் சந்தேகநபர்களை கைதுசெய்ய பல பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டன. இக் கொலைகளில் பிரதான சந்தேக நபருடன் இன்னும் மூவர் சம்பந்தப் பட்டுள்ளரென தெரியவந்தது. பிரதான சந்தேக நபரின் மனைவியும் பிள்ளைகளும் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டனர். இவரது தாயும் கண்டுபிடிக்கப்பட்டார். சம்பவம் நடைபெற்ற இரண்டு நாட்களின் பின் சுனில் அவரது மனைவி ஆகியோரின் இறுதி ஊர் வலத்தில் பொலிஸ்மா அதிபர் என். கே. இலங்ககோன் உட்பட பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தங்காலை குற்ற தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி அநுர உசன்தவுக்கு கிடைத்த தகவலையடுத்து சந்தேக நபர்களுள் இருவர் வலஸ்முல்ல, ஸ்ரீஎல்லயை சேர்ந்தவர்களென தெரியவந்ததும் அங்கு சென்ற போது அவர்கள் வீட்டலிருந்து தப்பிச்சென்றது தெரிய வந்தது.

சந்தேக நபர்களுள் ஒருவர் ஹக்மனையிலிருந்து முச்சக்கரவண்டியில் வருவதாக தகவல் கிடைத்தது. முச்சக்கரவண்டி நிறுத்தப்பட்டு சந்தேக நபர் விசாரிக்கப்பட்டார். முதலில் தனக்கொன்றும் தெரியாது என்றவர் பின்னர் நடந்தவற்றை விபரித்தார். இந்நபர் இராணுவ கமாண்டடோ பிரிவைச் சேர்ந்தவரென்றும் இராணுவ சேவையிலிருந்து தப்பி சென்றவ ரென்றும் தெரியவந்தது.

“நாம் நால்வர் இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்டிருந்தோம் முதலில் நாம் கெடயம் சிந்தகவின் வீட்டுக்கு சென்று மது அருந்திய போது பொலிஸ் கான்ஸ்டபிளை கொல்ல வேண்டுமென தெரிவிக்கப்பட்டது. அவரது வீட்டுக்கு சென்று கான்ஸ்டபினையும் அவது மனைவியையும் பாரிய தடியினால் தலையில் தாக்கி கொன்றபோது தவறுதலாக சிறு பாலகனும் தாக்கப்பட்டதாக சம்பவத்தை விபரித்த சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.

கொலைக்கு பயன்படுத்த எடுத்துச் சென்ற தன்னியக்க துப்பாக்கி, மேலும் ஒரு சாதாரண துப்பாக்கி ஆகியவை ஓரிடத்தில் புதைத்துள்ளதாயும் சந்தேக நபர் தெரிவிக்க அதனை மீட்க பொலிஸார் சென்றபோது அவர் வேறொரிடத்தை காண்பித்தார். உடனே சந்தேக நபர் அவ்விடத்திலிருந்து துப்பாக்கியை எடுத்து பொலிஸ் அதிகாரியை சுடமுற்பட்டபோது அடுத்த பொலிஸ் அதிகாரி சந்தேக நபரை சுட்டதில் அவர் ஸ்தலத்தில் இறந்தார். மற்றைய மூவரில் இருவரை ஒளித்துவைத்திருக்கும் ஆயுதங்களை காண்பிக்க ‘பொலிஸார் அழைத்துச் செல்கையில்’ தெனகம் நதியில் குதித்து தப்பிக்க அவர் முற்பட்டனர். அவர்களிருவரும் நதியில் மூழ்கி மரணித்தனர். இப்போது தப்பியிருப்பவர் பிரதான சந்தேக நபர் மட்டும்தான். பிரதான சந்தேக நபராக கருதப்படும் “கெடயம் சிந்தக” (சிந்தக வசந்த) நைகலை வனத்தில் ஒளிந்திருப்பதாக தகவல் கிடைத்ததும் பொலிஸ் விசேட அதிரடி படையினர் வனத்தை சுற்றி வளைத்தனர். திடீரென பொலிஸாரை நோக்கி கைக்குண்டு வீசப்பட்டதையடுத்து கைக்குண்டு வீசப்பட்ட திசையை நோக்கி பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர் பின்னர் அத்திசையை நோக்கி தேடுதல் நடத்திய போது சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

இச் சடலத்துக்குரியவர் “கெடயம் சிந்தக என்பது ஊர்ஜிதம் செய்யப்பட்டது. இம்மாதம் மூன்றாம் திகதி செவ்வாய்க்கிழமை இறந்த கெடயம் சிந்தகவின் வீட்டை சிலர் எரித்தனர். இவரது பூதவுடல் நான்காம் திகதி புதன்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது. இச்சம்பவத்தில் காயமடைந்த இரு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் சிகிச்சைக்காக கம்புருபிடிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விரட்டை கொலை சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நால்வரும் உயிரழிந்துள்ளனர்.

எம்.எம்.ஜெய்னுலாப்தீன்

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.