புத் 65 இல. 50

விஜய வருடம் கார்த்திகை மாதம் 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஸபர் பிறை 11

SUNDAY DECEMBER 15 2013

 

அரசியலில் வெல்லும் அதிர்ஷ்டம் உங்கள் கைரேகைகளில் தெரிகிறதா?

அரசியலில் வெல்லும் அதிர்ஷ்டம் உங்கள் கைரேகைகளில் தெரிகிறதா?

சொந்த வீட்டில் வாழும்
அதிர்ஷ்டம் யாருக்குக் கிட்டும்?

அவரவர் சாதகங்களிலும் 4 ஆம் வீட்டுக்குரிய கிரகமும், வியாழனும் கூடி ஸ்திரராசிகளில் இருந்தாலும், அல்லது 4 ஆம் வீடானது ஒரு ஸ்திரராசியாக அமைந்து, அதில் வியாழன், சனி, இலக்கினாதிபதியான கிரகம் ஆகியோர் கூடியிருந்தாலும், பிறப்பு முதல் இறப்புவரை ஒரே வீட்டில் வசிக்கும் யோகமுண்டு.

இறந்தபின்னே வீடு பேறடைவதற்கு, அதாவது மோட்சம் புகுவதற்கு நாம் உயிருள்ளபோதே புண்ணியங்கள் செய்ய வேண்டுமென மதங்கள் கூறினாலும், அதைப்பற்றியெல்லாம் யார் கவலைப்படுகிறார்கள்? இப்பிறவியில் தாம் நிம்மதியாய் வாழ ஒரு வீடு கிடைக்குமா என்று எதிர்பார்ப்பது பலரின் கனவு; ஆயினும் சிலருக்கே அது நனவாகிறது!

இறப்பின்பின்னே நமக்கு வீடுபேறு கிடைக்குமா, அல்லது இப்போதைய பிறவியை விட ஓர் இழிந்த பிறவியாக நாம் பிறக்க நேரிடுமா என்பதை நமது சாதகங்களில் விரயவீடு எனப்படும் 12ஆம் வீடு எடுத்தியம்புவதுபோல, ஒதுங்குவதற்கு நிலையான நிழல், அதாவது -ஒரு சொந்த வீடு இந்த ஜென்மத்திலுண்டா என்பதை நமது சாதகத்தில் இலக்கினத்திலிருந்து எண்ணிவரும் நாலாம் வீடு எடுத்துக் கூறிவிடும். நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பதுபோல குந்த நிழலின்றி அங்குமிங்கும் ஒத்துவாரப்பட்டுத்திரியும் போது தான் எலி வளையானாலும் தனிவளை வேண்டுமென்ற உண்மை ஒவ்வொருவருக்கும் உறைக்கிறது.

சொந்த வீட்டின் அவசியம் பற்றி கொழும்பில் வசிப்போரைக் கேட்டால் தெரியும். திசைக்குத்திசை புதிதுபுதிதாய், நவீனம் நவீனமாய் எத்தனை அடுக்குத் தொடர்மாடி வீடுகள் தோன்றினாலென்ன, கொழும்பு ஆசிய நகரங்களில் ஆச்சரியமாய் மாறினாலென்ன, அத்தனையையும் தாண்டி எத்தனையோபேர் கராஜ்களிலும் சாக்கடையோரப்பலகை வீடுகளிலும் இடநெருக்கடிக்கும், பற்றாக்குறைகளுக்கும், கொசுக்கடிக்கும் மத்தியில் நோய் நொடிகளுடன் வாழ்க்கை நடத்துகின்றனர். எத்தனையோ பேர் இராப்பட்டால் பாயையும் தலையணையையும் தூக்கிக் கொண்டு படுக்கத் திண்ணை தேடித் திரிகின்றனர். வீதியோரங்களிலும் கடைத்தாழ்வாரங்களிலும் இரவில் படுப்பதற்கு பிச்சைக்காரர்களுக்கிடையே நடக்கும் எல்லைச் சண்டைகளை அவதானித்தால், தனக்குத்தனக் கென்று தனிவீடோ, அறையோ எவ்வளவு அவசியமென்பது விளங்கும்.

ஒருவரது சாதகத்தில் 4ஆம் வீட்டுக்கு அதிபதியான கிரகம், 4ஆம் வீட்டிலேயே பலத்துடன் இருந்தால் சொந்த வீடு கிடைக்கும் பாக்கியமுண்டு. அத்துடன் படிப்பு நன்றாக வரும் சொந்த வாகனம் அமையும். பெற்றதாய் எம்முடன் பந்தமாய் நெடுநாள் வாழ்ந்திருப்பாள். வாழ்விலும் தாழ்விலும் ஓடிவந்து உதவுகிற உறவினர்களும் நண்பர்களும் எமக்கு வந்து வாய்த்திருப்பர்.

இவ்வளவு நற்பலன்களும் நமது சாதகங்களில் நாலாகிடத்திற்குரிய கிரகம் சுபயோகம் பெற்று பலத்துடன் இருப்பதோடு, நாலாம் வீட்டிலும் சுபக்கிரகம் அமர்ந்து, அந்த வீடானது சுபக்கிரக பார்வை அல்லது சேர்க்கை பெற்றிருப்பதாலுமே சாத்தியமாகும்.

இங்கே சுபயோகம், பலம் என்றெல்லாம் குறிப்பிடும் சொற்களுக்கு அர்த்தமென்ன?

வசிக்கும் வீட்டைக் குறிக்குமிடமான நாலாம் வீடு, அல்லது அந்த ராசிக்குரிய கிரகம் கேந்திரம் அல்லது திரிகோணத்திலமர்ந்து ஆட்சி, அல்லது உச்சம் போன்ற நிலைகளை அடைந்து, சுபக்கிரக பார்வை அல்லது சேர்க்கை பெற்று, நவாம்சத்திலும் இது போன்றதொரு நிலையில் வலிமை பெற்றிருப்பதாகும். (கேந்திரம் என்பது இலக்கனத்திலிருந்து எண்ணிவரும் 1, 4, 7, 10 ஆகிய வீடுகளாகும். திரிகோணமென்பது இலக்கினத்திலிருந்து எண்ணிவரும் 1,5,9, ஆகிய வீடுகளாகும். இதில் இலக்கினமான முதலாம் வீடு, ஒரு கேந்திரம், ஒரு கோணம் ஆகிய இருநிலைகளுக்கும் பொருந்துவதாகும்.)

நாலாமிடத்திற்குரிய கிரகம் நீசமடைந்தோ, பகை வீடு புகுந்தோ, பாவக்கிரகங்களுடன் சேர்ந்தோ, துர்ஷ்தானங்களில் அமர்ந்தோ, அல்லது மறைவுத்தானங்களில் அமர்ந்தோ இருக்குமானால் அசுபயோகமுடையதாகும். அசுபயோகம் பெற்ற கிரகம் சுபபலன்கள் தருவதற்கு இடமில்லை.

இன்று பலரினது கேள்விகளும் தங்கள் ஒவ்வொருவருக்கும் நிலையான வீடுகிடைக்க தங்கள் சாதகங்களில் யோகம் உள்ளதா என்பதே. அவரவர் சாதகங்களில் 4ஆம் வீட்டுக்குரிய கிரகமும் வியாழனும் கூடி ஸ்திரராசிகளில் இருந்தாலும், அல்லது 4ஆம் வீடானது ஒரு ஸ்திரராசியாக இருந்து, அதில் வியாழன், சனி, இலக்கினாதிபதியான கிரகம் ஆகிய மூவரும் குடியிருந்தாலும், இப்படியான கிரக அமைப்பில் பிறந்தவருக்கு பிறப்பு முதல் இறப்புவரை ஒரே வீட்டில் - அதாவது தமது சொந்தவீட்டில் வசிக்கும் யோகமுண்டு என்று சோதிடம் கூறுகிறது.

ஒரு சாதகத்திலுள்ள பன்னிரு கட்டங்களையும் நாம் வீடுகள் அல்லது இராசிகள் என்று கூறலாம். இப்பன்னிரு வீடுகளையும் நாம் மூன்றுவகையாகப் பிரிக்கலாம். மேடம், கடகம், துலாம், மகரம் என்பன சரராசிகள். (ணிலிVயினிமி ஷியிமினிஷி). இடம், சிங்கம், விருச்சிகம், கும்பம் என்பன ஸ்திரராசிகள் (பியிகீரிளி ஷியிமினிஷி) மிதுனம், கன்னி, தனு, மீனம் என்பன உபயராசிகள் (விலிணிணிலினி ஷியிமினிஷி). சரம் என்றால் அசைதல். ஸ்திரம் என்றால் நிலையாய் இருத்தல். உபயம் என்றால் அசைவுக்கும் ஸ்திரத்திற்கும் பொதுவாய் இருத்தல், அப்படியானால் வாழ்நாள் முழுவதும் சொந்த வீடில்லாமல் வீட்டுக்குவீடு, திண்ணைக்குத்திண்ணை தூங்கித்திரிகிற பேர்வழிகள் யார் என்ற கேள்வி எழுகிறதல்லவா?

(தொடரும்...)

எஸ். ஜோன்ராஜன்

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.