புத் 65 இல. 50

விஜய வருடம் கார்த்திகை மாதம் 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஸபர் பிறை 11

SUNDAY DECEMBER 15 2013

 

 
வாசிப்பதும் யோசிப்பதும் ஆரோக்கியம் தரவல்லவை

வாசிப்பதும் யோசிப்பதும் ஆரோக்கியம் தரவல்லவை

பிரபல நரம்பியல் வைத்திய நிபுணர் கே. புவனேந்திரன்

இன்றைய சந்ததிகளுக்கு வாசிப்பும் யோசிப்பும் அன்றாடம் அவசியம். வாசிப்பின் மூலம் தேடலும் அதனைக் கொண்ட சிந்திப்புமே சுயமான அறிவையும் ஆரோக்கியமான சரீரத்தையும் கொடுக்கும் என்கிறார் நரம்பியல் வைத்திய நிபுணர் கே. புவேனந்திரன்.

யாழ் காரைநகரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் யாழ் சென்றல் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும் கொழும்பு றோயல் கல்லூரியில் உயர்தர வகுப்புடன் மருத்துவக் கல்லூரியில் பிரவேசித்து, மேலும் லண்டனில் பயிற்சி பெற்ற இவர் இன்று சிங்கப்பூரில் கடந்த நான்கு தசாப்தங்களுக்கு மேல் பிரசித்தி பெற்ற நரம்பியல் வைத்திய நிபுணராக விளங்கி வருகிறார்.

அண்மையில் இலங்கைக்கு வருகை தந்திருந்த அவர், தன் வாழ்க்கை பயண அனுபவங்களைத் தொகுத்து எழுதிய “THE CURIOUS ADVENTURES OF A DOCTOR FROM JAFFNA” ஆங்கில நூலை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பல அறிஞர்கள் முன் வெளியிட்டு வைத்தார்.

நூலில் வைத்தியத்துறையைச் சார்ந்த விடயங்களை விட தனி மனிதன் ஒருவன் தொழில் சார்ந்த கருவியைவிடவும் மனதில் கொள்ள வேண்டிய சுதந்திரமான காத்திரமான எண்ணங்களை தன் சுய அனுபவங்களூடாக சுவையாக 309 பக்கங்களில் வெளிக்கொணர்ந்துள்ளார்.

தொழில் நிமித்தம் அதே சிந்தனையோடு இயந்திரமாக இயங்கிக் கொண்டிருக்காமல் அதிலிருந்து விடுபட்டு ஓய்வு நேரங்களில் மனதை இலகுபடுத்திக் கொள்வோமானால் சரீர ஆரோக்கியத்திற்கு அதுவே அருமருந்தாகும்.

இன்று எல்லா வற்றிக்கும் இணையத்தளத்தின் உதவியே தேவைப்படுகின்றது. வைத்தியராகட்டும், பொறியியலாளராகட்டும் எத்துறையைச் சார்ந்தவர்களாயினும் இணையத்தளத்தின் உதவியின்றி இயங்க முடியாதவர்களாகவே இருக்கின்றனர். சுயமாக வாசிக்க வேண்டும். சுயமாக சிந்திக்க வேண்டும். அதன் மூலமே மூலைக்கு பயிற்சி நரம்புகளுக்கு தொழிற்பாடு இயக்கம் எல்லாம் சீராக இருக்கும். படிப்பு, சிந்திப்பு, உடற்பயிற்சி இவற்றை மூலாதாரமாகக் கொண்டால் சரீரத்துக்கு எந்த விணையும் நேராது என்று கூறும் அவர் வாழ்க்கையை விநோதமாகக் கொள்ள வேண்டும் என்கிறார்.

இன்று மருத்துவத்துறையைச் சார்ந்தவர்களுக்கு முன் உதாரணமாக தன்னுடைய சுய வாழ்க்கை சரித்திரத்தை கவி நயத்துடன் கலந்த நகைச் சுவையுடனும் ஆங்கிலத்தில் நகர்த்தி சென்றிருக்கிறார். அவரின் வாழ்க்கை குறிப்பேட்டிலிருந்து சில துளிகளை இங்கே தொகுத்து தருகின்றேன்.

காரைநகரை பிறப்பிடமாக கொண்ட எங்கள் குடும்பம் யாழ் நகரில் தொழில் நிமித்தம் வசிப்பிடமாகக் கொண்டிருந்தது. என்னுடைய தந்தையார் வக்கீல் தொழிலை மேற்கொண்டிருந்தார். தாயார் சிறுமியாக இருக்கும்போதே கோலாலம்பூரிலிருந்து இலங்கைக்கு வந்து விட்டவர். அவரின் தந்தையார் அருளய்யா பார்னபஸ் பிரபலமிக்க கட்டிட கலைஞராவார்.

கிறிஸ்தவ பரம்பரையில் வந்த என் தாயார் சைவ குலத்தில் பிறந்த என் தந்தையை திருமணம் செய்து கொண்டார். முறைப்படி சமூக சட்டத்திற்குட்பட்ட திருமண வாழ்க்கையில் இணைந்த என் பெற்றோர் சமய பண்பாட்டிற்கமைய கிறிஸ்மஸ், தீபாவளி பெருநாட்களை பேதமின்றி கொண்டாடினர்.

அந்நாட்களில் பிரசவ காலத்தில் என் தாயார் கோலலாம்பூர் சென்று விடுவது வழக்கம். என்னுடைய மூத்த இரு சகோதரிகளும் இரு சகோதரர்களும் கோலாலம்பூரில் பிறந்தவர்கள். நானும் எனது இளைய சகோதரியும் யாழ் நகரிலேயே பிறந்தோம்.

பால்ய பருவத்தில் படிக்க முன்பள்ளிகளோ (மொன்டசரி) அன்றி நவீன சாதனங்களோ அன்று இருக்கவில்லை. நிலத்தடியில் மார்பல் விளையாடுவதும் மரம் ஏறி கிளி பட்சிகளைப் பிடிப்பதிலும் என் விளையாட்டு மோகமாக இருந்தது.

சிறுவயதிலேயே கதை கேட்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். என்னுடைய மூத்த சகோதரி கதைக் கூர நான் வாய் பிளந்து கேட்டு ரசித்துக் கொண்டிருப்பேன்.

என்னுடைய வித்தியாரம்பத்தை என்னுடைய தந்தையே செய்து வைத்தார். வலக்கரத்தை பிடித்து மணலில் விரல் பதித்து எழுதவைத்தார். அதைத் தொடர்ந்து சிலேட் பலகையிலும் பின் “ரோயல் கிரவுன் கொப்பி புக்” நான்கு வரிகளைக் கொண்ட கோட்டில் எழுதி பழகினேன். இளமையில் கல்வி சிலையில் எழுத்து போன்று அவை மனதில் பதிந்துவிட்டது.

பள்ளி காலத்திலேயே படிப்போடு மாத்திரம் என்னை மட்டுப்படுத்திக் கொள்ளவில்லை. டெனிஸ்விளையாட்டில் ஈடுபாடு கொண்டிருந்தேன். இசைப்பிரியன் நான். வயலின் வாசிப்பதில் அளவிலா ஆனந்தம்.

கல்வியோடு கலையும் கலந்த அறிவு சார் பின்புலமே என்னை இந்த வயதிலும் கலகலப்பாக இயங்க வைக்கின்றது.

என்னிடம் பயிற்சிக்காக வரும் இளம் டாக்டர்களிடம் நான் கேட்கும் முதல் கேள்வி, உன்னுடைய பொழுது போக்கு என்ன? எந்த விளையாட்டில் ஆர்வத்தோடு ஈடுபாடுண்டு என்று வினாவும் போதே அவர்கள் சலித்துக் கொள்வார்கள்.

இதற்கெல்லாம் எங்கே நேரம். அடுத்த நாளுக்குரிய வேலைகளை ஆயத்தம் செய்யவே நேரம் போதாது. போதிய நித்திரையின்மை, களைப்பு சோர்வு என்றுதான் சஞ்சலத்தோடு மன அழுத்தம் கொள்வார்கள்.

இந்த மன அழுத்தத்திலிருந்து இவர்களை மீட்க ஒரு மாலைப் பொழுதில் அல்லது ஓய்வு நாளொன்றில் ஒன்று கூடலுக்கு அழைப்பேன். அங்கே அவர்கள் மனச் சுமையை ஓர் ஓரத்தில் இறக்கி வைத்துவிட்டு உல்லாசமாக பொழுதைக் கழிக்க ஏற்பாடு செய்வேன். ஆனால் ஒன்று கூடலிலும் பெரும்பாலும் ஒருவருக்கொருவர் தொழில் விடயமான விடயங்களைத்தான் கலந்துரையாடிக் கொண்டிருப்பதைக் காணக்கூடியதாகவிருக்கும்.

இந்த மனோ நிலையிலிருந்து அவர்களை மாற்றி சிரித்து பேசி உல்லாசமான சூழ்நிலைக்கு அவர்களை அழைத்துச் சென்றேன். முகத்தில் புன்னகையும் உள்ளத்தில் உவகையும் காணப்பட்டாலே உள, உடல் ஆரோக்கியத்திற்கு வித்தாகும். இதை எம் பெற்றோர் அடித்தளத்திலிருந்துகொண்டு வர வேண்டும் என்பதை அறிவுறுத்துகின்றார்.

நோய்க்கு மருந்து மனதை மகிழ்ச்சியாக பேணுவதே என்று விபரிக்கும் அனுபவ பக்கங்கள் ஒவ்வொன்றும் சுவாரஸ்யமாக நகர்கின்றது.

அவரைப்பற்றி அறிமுகப்படுத்துகிறார். நரம்பியல் வைத்தியராக விருக்கும் நான் திருமணம் செய்ததும் வைத்தியதுறையைச் சார்ந்த கமலாவை. ருக்ஷி, தர்ஷி என இரண்டு குழந்தைகள். அவர்கள் இருவரும் வைத்தியர்கள். திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார்கள். நான், மனைவி, குழந்தைகள், பேரப்பிள்ளைகள் என சந்தோசமான வாழ்க்கைப் பயணம் எங்களது.எனது சொந்த கிராமமான காரைநகர் வளந்தாளையின் வனப்பை என்னால் மறக்க முடியாது. ஊர் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். லண்டனில் மருத்துவ பயிற்சியை முடித்து நாடு திரும்பியதும் கிராமத்திற்கு அருகிலுள்ள மூலாய் வைத்தியசாலையில் பணியாற்றக் கூடிய வாய்ப்புக் கிடைத்தது.

டச்சு காலத்தில் அம்ஸ்டர்டாம் என அழைக்கப்பட்ட காரைநகர் அழகானதோர் தீவு. அதே போன்று கலாசார பண்பாட்டோடு ஊரிய மக்கள் வாழ்க்கை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

காரைநகர் தந்த மண்ணின் பெருமையே இன்று உலகலாவிய புகழ்பூத்த வைத்திய நிபுணர்களில் ஒருவராகத் திகழ்கின்றேன்.

சிங்கப்பூர் மக்களோடு ஒன்றரக் கலந்து அந்நாட்டு பிரமுகர்களின் நட்பை பெற்றவர். அவர்களுடன் கலந்துரையாடும் போது அளவளாவிய கருத்துக்கள், ஹாஸ்யம் நிறைந்த சம்பவங்கள் பற்றி பரிமாறிக்கொண்டதன் விளைவே இவ்வாறானதோர் நூலை வெளியிட ஊக்குவித்தார்கள் என்றுகூறுகிறார். நூல் வெளியீட்டின் மூலம் கிடைக்கும் நிதிகள் அனைத்தும் யாழ் வாசிகசாலை அபிவிருத்திநிதியத்திற்கு வழங்கவும் முன்வந்துள்ளார்.

அதற்கு அணி செய்வதுபோல் நூலின் அணிந்துரையில் சிங்கப்பூர் முன்னாள் ஜனாதிபதி எஸ். ஆர். நாதன் கருத்து வெளியிடுகையில்

அவரது வாழ்க்கை குறிப்புக்கள் சுவாரஷ்யமானதாகவும், பாங்கான முறையிலும் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளன. இலங்கையில் தனது இளமைக்கால ஆள்நிலை அம்சங்களை ஒன்று திரட்டியும், மருத்தவ மாணி பட்டதாரியாக வெளியேறி, கொழும்புக்கு வெளியே முதற் தடவையாக சேவையாற்றிய மருத்துவரொருவரின் வாழ்க்கைக் கோலங்களை படம் பிடித்தும் அவர் எமக்குக் காண்பிக்கின்றார்.

இலங்கையிலிருந்து இலண்டனுக்கும் பின்னர், சிங்கப்பூருக்குமென நகர்ந்த அவரது வாழ்க்கையின் எஞ்சிய காலப்பகுதிகள், ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாறியதென்பதை அவர் எவ்வாறு கண்டறிந்தாரென்பதை கூறுவதாகவும், இத்தன்மை வாய்ந்த அரிய நூலை நான் இளைய தலைமுறையினருக்கும் வயது வந்தோருக்கும் பரிந்துரைக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வைத்தியக் கலாநிதி புவனேந்திரன் இது குறித்து தெரிவிக்கையில், தனது வாழ்க்கையில் தான் சந்தித்திருந்த தனித்துவமிக்க நபர்கள் குறித்தும், தனிமனித வாழ்க்கையின் அர்த்தம் பற்றியும் விபரித்துள்ளேன் என்றார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.