புத் 65 இல. 50

விஜய வருடம் கார்த்திகை மாதம் 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஸபர் பிறை 11

SUNDAY DECEMBER 15 2013

 

‘KAVITHAIMANJAREY’

ஒரு தந்தையின் மன வேதனை!

இப்போது என்கையில் எதுவுமில்லை
இருந்தபணம் வளவுவாசல் எல்லாம் போச்சு!
எப்போதும் பிள்ளைகளின் நிழலில் வாழ
எண்ணியது எல்லாமே கனவாயாச்சு
அப்பாவின் இயல்புகுணம் அறிந்தும் நீங்கள்
ஆதரவு இல்லாமல் அலைந்து சாக
இப்புவியில் விட்டுவிட்டீர்; கவலையில்லை
என்றோ ஒருநாளிலிதை உணர்ந்தால் போதும்
-*-
இருள்நிலவு எல்லோர்க்கும் வந்து போகும்
இன்றெனக்கு இருட்டுத்தான் நிலவும் ஒரு நாள்
வருமென்று நம்பிநானும் வாழுகின்றேன்.
வயதெனக்கு மட்டுமல்ல உங்களுக்கும்
வரும்; வாதை வருத்தமும் வந்து சேரும்
வாலிபமும் வயோதிபமும் நம்மைத்தேடி
வருமென்ற நியதியதை வாழும்போதே
வாலிபத்தில் நீங்களெல்லாம் உணர்ந்தால் போதும்
-*-
உங்களுக்கும் பிள்ளைகுட்டி பிறக்கும்; நாளை
ஊரெல்லாம் ஓடிவந்து வாழ்த்துச் சொல்லும்
உங்கள் சொந்தப் பிள்ளையுமை ஒதுக்கி வாழும்
ஒருநிலமை வராதவரை வளர்த்தால் நானும்
எங்கிருந்த போதும் நான் வாழ்த்துச் சொல்வேன்.
என்துயரம் என்னோடு தொலைந்து போகும்
உங்கள் வாழ்வு உயரட்டும் ஒரு நாள் அப்பா
உங்களுக்காய் வாழ்ந்தா ரென்று நினைத்தால் போதும்


கள்ளித் தோட்டங்களின் தரிசனம்...!

காலத்தின் கண்ணீர்த்துளி...
கயமைகளின் அரங்கேற்றம்...!
சீலங்களின் சிறைபட்டுச்
சிந்தை கருகிடும் சிந்தனை மொட்டு
சந்நிதி காணாமலே சருகாகும் பரிதாபம்...!
சகத்தினர் மனங்களில் எல்லாமே பகல் வேடம்...!

சோலை என்று புறத்தோற்றம்!
சுகித்திடவே உள்நுழைந்தால்,
காலைப் பதம் பார்க்கும்,
கள்ளிச் செடிக் கூட்டம்...!


இராகவனின் முகமூடி இட்டு,
இராவணர்கள் வெறியாட்டம்...!
இயந்திரப் பட்சிகளாய்,
இதயங்களும் உருமாற்றம்...!

பரிமாணம் கடந்த பாசம்...
பரிணாமம் தேடினாலோ
பன்னகம் எனக் காணும்...!
பந்தங்களின் பசுஞ்சோலை...!
பன்னீர் மலர்ப் பந்தல்...!
பணத்தாசை மேவியதால் இன்று
உறவெல்லாம் கனல் சொரியும்...!
மனத்தலத்து அசுர கணம்
மயக்கத்தின் பறை முழக்கும்...!

புல்லின் பூந்துளியிலும், புந்தி
பறி கொடுக்கும் எந்தனுக்கோ,
பொருளாதார நலனை மட்டும்
பூஜிப்போர் தம்-
சுவாச ஸ்பரிஸம் கூட, சூரியச்
சுவாலை எனச் சுட்டெரிக்கும்...!


கொடுமை

கொடுமை கொடுமை கொழுநன் கிழவோன்
ஆனமின் அவனின் அகவையை மதிக்கா
திருத்தல் கொடுமை இதனினுங் கொடுமை
சுடுமெனத் தெரிந்துத் சொற்தீ மூட்டி
சுடுதல் கொடுமை சுவைபட வாழ்ந்த
அனுபவம் மறத்தல் அதனினுங் கொடுமை!
சகப்பும் இனிப்புங் கலந்த தாயினுங்
காதலி லொன்றிக் களித்துற வாடித்
தாயுந் தந்தையு மானதைச் சொல்வனோ?
-*-
மெல்லியல் பிளந்து இதய மிப்போ
கல்லியல் படைந்த காரண மென்னே?
அந்தமில் லன்மின் அடையா ளங்களாய்
மக்களைப் பெற்று மகிழ்ந்தவர் தமக்கிடைப்
புரிந்துணர் வற்றுப் போனதுங் கொடுமை!
முழுமையின் ஒருசிறு பகுதிதான் உள்ளது
அச்சிறு பகுதியே அந்திம வாழ்க்கை!
அகவையில் வீழ்ந்த கிழவோன் கிழவோள்
முதுமையிற் கொள்ளும் முரண்பா டேதான்


வாழ்வதா, சாவதா?

கைப்பி டித்தவள் பாதை மாறினாள்
காலம் செய்த கோலமோ? - அவள்
“ஒப்ப னைக்கென வாழ்ந்த பேதையோ?”
உண்மை இராமனின் சீதையோ?”

மழலை நால்வரைப் பெற்ற பின்னரும்
மனதில் விழுந்தது என்னவோ? - என்
அழுகை காணவே ஆசை வந்ததோ
“அறுந்து போனது பந்தமோ?”

“கையில் என்னிடம் காசிருக்கையில்
கணவன் கண்ணென எண்ணினாள்!”- தினம்
மெய்யில் நோயுமே மொய்த்த போதிலே
மெல்ல விடைபெற உன்னினாள்!

நீதி மன்றிலே ஏற்றி யென்னையே
நிலை குலைத்திட நினைக்கிறாள்! - தன்
“சாதி சனங்களைச் சார்ந்தி ருந்துமே
சந்ததம்துயர் விதைக்கிறாள்!”

“அண்ணன் தம்பியே உலகம் என்கிறாள்
அக்கா மேலெனச் சொல்கிறாள்!” - வெடி
குண்டு போலவே உள்ளம் கூறிடக்
குதறி நாளுமே கொல்கிறாள்!

பிரிய மானஎன் பிள்ளை நான்கையும்
பிரித்து வைத்திடப் பார்க்கிறாள்! - தன்
புருஷன் என்பதை மறந்து, வெளியில்நீ
போக வில்லையா? கேட்கிறாள்!”

ஒட்டி இவளுடன் உலகம் மீதினில்
உயிருக் குயிரென வாழ்வதா? - “உறவை
வெட்டி விட்டுமே விலகி விடுவதா?
வீழ்வதா; இல்லைச் சாவதா?”


என்றென்றும் காதல்!

ஆதவன் உதிக்காமல்
அகிலமே சூனியமாகலாம்
நிரந்தரமாய் நிலவு
மறைந்து வானம்
இருளாகலாம்.

கோள்கள் எல்லாம்
குடைசாய்ந்து குப்புற
விழலாம்
சுனாமி வந்து
எல்லோரையும் சுருட்டிக்
கொண்டு போகலாம்.

ஆழி பொங்கி
அகிலமே அழிந்து
போகலாம்.
பயிர்கள் எல்லாம்
காய்ந்து பூலோகம்
பாலை வனமாகலாம்
பாவை நான்
உன்மீது கொண்ட
காதல் மட்டும்
என்றுமே ஈரமாகவே
இருக்கும்.


நான்

சொத்து
சேகரிக்கும் அதிகாரி
என்னிடம் வந்து
என்சொத்துகளின் விபரங்களைக்
கேட்டார்;

“உங்கள் அசையும் சொத்து?”
“பிள்ளைகள்”

“உங்கள் அசையா சொத்து?”
“இதோ”என்று
என் இல்லத்தரசியைக்
காண்பித்தேன்!

“அப்படியானால் நீங்கள்?”
“.....?
நானோ
பழைய சாமான்களை வைக்கும்
பரந்தாவில்...!


காதல்!

தொல்லைகள் நிரம்பிய
ஆடம்பர அகராதி
மடையர்கள் வாழும்
மண்ணறை வீடு.
ஆண்கள் தேடும்
கானல் நீர்.
பெண்கள் போடும்
“சீஸன்” ஆடை
பெற்றோர்கள் ஏறும்
தூக்கு மேடை.
கவிஞர்கள் பாடும்
தேசிய கீதம்.
காமுகர்கள் உண்ணும்
மாமிச உணவு.
வரலாறு கண்ட
உண்மைக் காதல்
உடல் வரை சேர்ந்ததல்ல.
உயிர் வரை சேர்ந்ததே.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.