புத் 65 இல. 07

நந்தன வருடம் மாசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் பிறை 05

SUNDAY FEBRUARY 17 2013

 

 
இலங்கையில் சுமார் 20 இலட்சம் நாய்கள் ; 60 வீதம் கட்டாக்காலிகள்

இலங்கையில் சுமார் 20 இலட்சம் நாய்கள் ; 60 வீதம் கட்டாக்காலிகள்

* விசர் நாய்க்கடி நோய் அதிகரிக்க வாய்ப்பு

* ஆண்டுதோறும் 50 பேர்வரை உயிரிழப்பு

* சனத்தொகையில் 1/8 பேர் நாய் வளர்ப்பு

இலங்கையில் சுமார் 20 இலட்சம் நாய்கள் உள்ளன. இவற்றில் 60 வீதமானவை கட்டாக்காலி நாய்களாக இருக்கின்றன. இதனால் அதிகளவில் நீர்வெறுப்பு நோய் (விசர்) ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

ஒவ்வொரு வருடமும் விசர் நாய்க்கடியினால் ஏற்படும் நீர் வெறுப்பு நோயினால் 40 முதல் 50 பேர் வரை உயிரிழக்கின்றனர். இவர்களுக்கு மிகவும் மோசமான பின்விளைவுகளை சந்தித்த பின்பே மரணமாக வேண்டிய நிலை உருவாகின்றது. இலங்கையில் வாழ்பவர்களில்

எட்டுப் பேரில் ஒருவருக்கு ஒரு நாய் வீதம் உள்ளது என கணக்கெடுப்பின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

நீர்வெறுப்பு நோய்த்தடுப்பு வேலைத் திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் ஹரிச்சந்திர தெரிவித்தார்.

ஒரு வருடத்திற்கு 12 இலட்சம் நீர்வெறுப்பு தடுப்பூசிகள் நாய்களுக்காக பெற்றுக்கொடுக்கப்படுகின்றன. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தடுப்பூசிகளை நாய்களுக்கு கொடுக்க வேண்டும் என்றும் டொக்டர் ஹரிச்சந்திர தெரிவித்தார்.

நீர்வெறுப்பு நோய் மிக விரைவில் உடல் முழுவதும் பரவக் கூடியதென்பதால் நாய்க்கடிக்கு உள்ளான ஓரிரு நிமிடங் களிலேயே சிகிச்சை பெறவேண்டும் என்றும் டொக்டர் ஹரிச்சந்திர தெரிவித்தார். இந்த நோய் உடலில் பரவும் போது நரம்பு மண்டலத்தை பாதித்து மூச்சுத் திணறலை ஏற்படுத்தும். துடித்தல், எச்சில் வடிதல் போன்றன நோயின் அறிகுறி களாகும்.

இறுதியில் நாயைப் போன்றே நடந்து கொள்வதுடன் பேச்சு வராமல் வெறும் சத்தம் மட்டுமே வெளிவரும் நிலை உருவாகி பல சோதனைகளை அனுபவித்து மரணிக்கும் நிலை ஏற்படும்.

நோயாளியின் அருகில் இருப்பவருக்கும் தடுப்பூசி போடவேண்டும். உலகில் நாயை மிக செல்லப்பிராணியாக வளர்ப்ப துடன் அதனை மிக பாதுகாப்பான முறையில் வளர்த்து வருகின்றனர் என்றும் டொக்டர் ஹரிச்சந்திர குறிப்பிட்டார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.