புத் 65 இல. 07

நந்தன வருடம் மாசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் பிறை 05

SUNDAY FEBRUARY 17 2013

 

 
தனியார் அரைச் சொகுசு பஸ் சேவையை நிறுத்த தீர்மானம்

தனியார் பஸ்சேவை முறைகேடுகளை தடுக்க வருகிறது ஜி. பி. எஸ்.

தனியார் அரைச் சொகுசு பஸ் சேவையை நிறுத்த தீர்மானம்

கைத்தொலைபேசிகளில் உரையாடியவாறு பஸ்ஸை செலுத்துதல், வேகக் கட்டுப்பாட்டை மீறல் மற்றும் குறித்த இலக்கை குறித்த நேரத்திற்கு சென்றடையாமை ஆகியவற்றை உடனுக்குடன் கண்டுபிடிக்கும் ஜி. டி. எஸ். முறை விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக தனியார் போக்குவரத்து துறை அமைச்சர் சி. பி. ரத்நாயக்க தினகரனுக்குத் தெரிவித்தார்.

இதேவேளை அரைசொகுசு பஸ்களை முற்றாக சேவையிலிருந்து நீக்குவதற்கு தீர்மானித்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

இதன் மூலம் எதிர்காலத்தில் சாதாரண மற்றும் அதிசொகுசு பஸ்கள் மாத்திரமே சேவையிலீடுபடுத்தப்படுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தூர இடங்களுக்குச் செல்வோர் விரைவில் குறித்த இடத்தை அடைய வேண்டும் என்ற ஒரே நோக்கத் திற்காகவே அரைசொகுசு மற்றும் அதிசொகுசு பஸ்களை விரும்புகின்றனர். அரை சொகுசு எனும் பெயரில் சாதாரண பஸ் விலையிலும் ஒன்றரை மடங்கு பணம் வசூலிக்கும் பஸ் உரிமையாளர்கள் யன்னல்களுக்கு திரைச்சீலைகளை மட்டும் போட்டுவிட்டு சொகுசு என்பதன் அர்த்தத்திற்குரிய எந்தவொரு வசதியையும் பெற்றுக் கொடுப்பதில்லை. இறுதியாக வீதியிலுள்ள தூசி முழுவதும் பஸ் பயணி மீது காணப்படும். பணத்தையும் கொடுத்து பயணிகள் பாரிய சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருவது குறித்து எனக்கு நிறைய முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

பயணிகளின் வசதியே எமக்கு முக்கியம் ஆகையால் இந்த அரைசொகுசு பஸ் சேவையை முற்றுமுழுதாக நிறுத்திவிட தீர்மானித்துவிட்டோம். விரைவில் இதன் அனைத்து சேவைகளையும் இரத்துச் செய்வோம் என்றும் அமைச்சர் கூறினார்.

மேலும் தமது இலக்கை விரைவில் அடைய வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுக்காகவே பயணிகள் பணத்தை செலவு செய்வதனையும் பார்க்காமல் அதிசொகுசு பஸ்களை நாடுகின்றனர். ஆனால் அதிசொகுசு பஸ் சாரதிகளோ பயணிகள் குறித்து எந்தவொரு அக்கறையும் இல்லாமல் கையடக்கத் தொலைபேசியில் முன்னால் செல்லும் பஸ் சாரதியுடனும் பின்னால் வரும் பஸ் சாரதியுடனும் எங்கு இருக்கிறார்களென்பதை தெரிந்துகொண்டு மெதுவாக ஊர்ந்து செல்வதனை தற்போது வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்கள். இது குறித்து அமைச்சரிடம் வினவியபோதே, இனிவரும் காலத்தில் இவ்வாறான சாரதிகள் ஜி. பி. எஸ். முறையிலிருந்து தப்ப முடியாதென அமைச்சர் கூறினார்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் பொருத்தப்பட்டிருக்கும் இத்தொழில் நுட்பத்தினூடாக நாட்டின் தூர இடங்களுக்குச் செல்லும் அனைத்து பஸ்களினதும் மேற்குறிப்பிட்ட செயற்பாடுகளை உடனுக்குடன் கண்டறிய முடியும். தவறு இழைக்கப்படும் பட்சத்தில் குறித்த இடத்திலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குவதன் மூலம் அவ்விடத்திலேயே தண்டப்பணம் அறவிடுதல் உள்ளிட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இச்செயற்திட்டம் இன்னும் சில தினங்களுக்குள் அமுல்படுத்தப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் பயணிகள் எதிர்நோக்கும் மிகுதிப் பணம் வழங்காமை பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மார்ச் மாதம் முதல் ‘ப்ரீபெயிட் கார்ட்’ முறை நடைமுறைக்கு வருமெனவும் அமைச்சர் கூறினார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.