புத் 64 இல. 11

கர வருடம் மாசி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 18

SUNDAY MARCH 11,  2012

 
அரசின் சுற்றுலாத்துறை அபிவிருத்தித் திட்டங்கள்

அரசின் சுற்றுலாத்துறை அபிவிருத்தித் திட்டங்கள்

இலங்கையின் சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கு அரசாங்கம் பல்வேறு ஊக்குவிப்புக்களை வழங்கி வருகின்றது.

2010ம் ஆண்டு 650,000 இருந்த சுற்றுலாப்பயணிகளின் வருகை 2011 ஆண்டு 750,000 ஆக இருந்துள்ளது. இவ்வருடம் 950,000 மாக அதிகரிக்கப்படும் என்று நம்பப்படுகின்றது. இதேவேளை 2016ம் ஆண்டில் இலங்கைக்கு 2.5 பில்லியன் உல்லாசப்பயணிகள் வருகை தருவார்கள் என்று இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையின் புள்ளி விபரங்களிலிருந்து அறிய முடிகின்றது.

இந்த அடிப்படையில் யுத்த சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் (திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை) மூன்று மாவட்டங்களிலுமுள்ள குச்சவெளி, பாசிக்குடா, அறுகம்பை ஆகிய பிரதேசங்களும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

இதன் முதற் கட்டமாக இலங்கை உல்லாசப் பயணத்துறை அமைச்சினால் 5ம் திகதி தொடக்கம் 7ம் திகதி வரை கிழக்கு மாகாணத்துக்கான முதலாவது நடமாடும் சேவை நடாத்தப்பட்டது. இலங்கை சுற்றறுலாக் கைத் தொழில் சம்மேளனத்தின் தலைவர் ஏ. எம். ஜஃபர், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, உல்லாசப் பயணத்துறை பிரதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோரிடம் விடுத்த வேண்டுகோளையடுத்து அறுகம்பே பிரதேசத்தில் இது வரைகாலமும் சட்ட ரீதியற்ற முறையில் இயங்கிவந்த ஹோட்டல்கள், தங்குவிடுதிகள் என்பவற்றை சட்ட ரீதியாகப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்மூலம் சுமார் எண்பது ஹோட்டல்கள், தங்குமிடங்கள் என்பவற்றுக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் கிடைக்கக் கூடிய வாய்ப்புக்கிட்டியுள்ளது.

பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எம். எஸ். வாஹீத் தலைமையில் நடமாடும் சேவை நடைபெற்ற போது, உல்லாசப் பயணத்துறை அமைச்சின் அதிகாரிகளான சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைமைத் தரக்கட்டுப்பாட்டு அதிகாரி திலிப் முட்டுத்தெனிய பணிப்பாளர் மாலினி கணேகொட ஆகியோர் கலந்து கொண்டு சட்ட ரீதியான பதிவுகளை மேற்கொண்டனர்.

தற்போது தேசியளவில் 23,300 அறைகள் உள்ளன. இது 2016ம் ஆண்டில் 45000 அறைகளைக் கொண்டதாக அமைய உள்ளன. பொத்துவில் அறுகம்பே பிரதேசத்தில் உள்ள 84 ஹோட்டல்களில் 540 அறைகள் உள்ளன. சுற்றுலாத்துறை சார்ந்த முதலீடுகள் உட்பாய்ச்சல்கள் என எதிர்வரும் ஆண்டுகளில் சுமார் 5 பில்லியன் யு. எஸ். டொலர் எதிர்பார்க்கப்படுகின்றது.

இது தவிர இன்னும் 5 வருடத்தில் நேரடி வேலைவாய்ப்பாக சுமார் 500,000 ஐந்து இலட்சம் பேரும் மறைமுகமாக 200,000 இலட்சம் பேரும் தொழில் வாய்ப்பைப் பெறவுள்ளனர்.

2010ம் ஆண்டுடன் 2011ம் ஆண்டை ஒப்பிடும் போது, சுற்றுலாப் பயணிகளின் வருகை 654, 475 இலிருந்து 854,000 அதிகரித்து 29.9% மேலதிகரிப்பைக் கொண்டுள்ளது. 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அதிகூடிய உல்லாசப்பயணிகள் இங்கு வருகை தந்துள்ளனர். இது 2010ம்ஆண்டு விகிதத்துடன் ஒப்பிடும் போது 66.7 சதவீதமாகும்.

2011ல் இலங்கைக்கு வருகை தந்த உல்லாசப் பயணிகளில் இந்தியாவிலிருந்து 171,374 பயணிகளும், 2வது இடத்தில் பிரித்தானியாவிலிருந்து 106,082 பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 55,882 பயணிகளும், மத்திய கிழக்கிலிருந்து 57,501 பயணிகளும், மாலைதீவிலிருந்து 48695 பயனாளிகளும் பிரான்ஸிலிருந்து 48696 பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 41728 பேரும், கனடாவிலிருந்து 24671 பேரும், அமெரிக்காவிலிருந்து 24386 பேரும் நெதர்லாந்திலிருந்து 22,966 பேருமாக முதற்பத்து இடங்களுடன் மேற்கூறப்பட்ட நாட்டினர் இங்கு வருகை தந்துள்ளனர்.

தற்போது வடக்கு கிழக்கில் உள்ள பிரதேசங்களில் யாழ்ப்பாணத்தில் 300 அறைகள் கொண்ட ஹோட்டல்களும், சிலாவத்துறையில் 400 அறைகள் கொண்ட ஹோட்டல்களும் குச்சவெளியில் 2000 புதிய அறைகளும் வாகரையில் 500 புதிய அறைகளும் பாசிக்குடாவில் 1000 அறைகளும் அறுகம்பேயில் 300 புதிய அறைகளம் ஸ்தாபிக்கப்படவுள்ளன.

இலங்கையை பொறுத்தவரையில் எட்டு வகையான இடங்கள் உல்லாசப் பயணிகளைக் கவர்கின்றன எனலாம். அவை கடற்கரைப் பிரதேசங்கள், வரலாற்றுப் பிரதேசங்களும் சமயத் தலங்களும், விஞ்ஞானப் பிரிவுகள் (உதாரணம் பேராதனைப் பூங்கா) வனப் பிரதேசமும் வினவிலங்களும், கலாசாரக் கொண்டாட்ட உற்சவங்கள், விளையாட்டுக்கள் (2ம் கடல் அலைச் சறுக்கு) வியாபாரம் கலை நிகழ்வுகள் என்பன நமது முதுசங்களாகும்.

மற்றுமொரு முக்கிய காரணியாக நெடுஞ்சாலை ஏ-4 வீதி காபட் வீதியாகச் செப்பனிடப்பட்டுள்ளதால் பயண நேரம் குறைவாகவும், பயணக் களைப்பு அற்றதாகவும் இருப்பது உல்லாசப்பயணிகளுக்கு மனமகிழ்வைக் கொடுக்கின்றது.

இவ்வாறான சிறப்பம்சங்களைக் கொண்ட நாட்டின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அடைந்து வரும் அதேவேளை கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை மேலும் விஸ்த்தரிப்பதற்கு இலங்கை சுற்றுலாக் கைத்தொழில் சம்மேளனத் தலைவர் ஏ. எம். ஜஃபர் தமது சம்மேளனம் சார்பாக 34 கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை சுற்றுலாத்துறை அமைச்சின் அதிகாரிகளான திலிப்முட்டு தெனிய, மாலனி, கனேகொட ஆகியோர்களிடம் சமர்ப்பித்துள்ளார்.

யுத்தம், சுனாமிப் பேரலைத் தாக்கம், வெள்ளம் போன்ற இயற்கைக் காரணிகளால் பொருளாதார ரீதியில் பின்தள்ளப்பட்ட கிழக்கு மக்களின் ஜீவனோபாய வாழ்வாதாரத்துக்கு சுற்றுலாத்துறை மூலம் கிடைக்கவிருக்கும் நலங்களும் வரப்பிரசாதங்களும் நொந்த மக்களின் உள்ளத்தை ஆறுதல்படுத்தும் என்பது நிச்சயம்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.