புத் 64 இல. 11

கர வருடம் மாசி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 18

SUNDAY MARCH 11,  2012

ஒஸாமாவின் உயிருக்கு

ஒஸாமாவின் உயிருக்கு

உலை வைத்த உறவு?

இஸ்லாமிய இயக்கங்கள், அமைப்புகள் மற்றும் அல்கைதா என்பவற்றின் ஏக தலைவன் என வர்ணிக்கப்பட்ட ஒஸாமா பின்லேடனின் மரணத்தின் தொடர் கதைகள் இன்னும் வந்து கொண்டேயிருக்கின்றன.

எவ்வளவு பெரிய கெரில்லா இயக்கத்தின் தலைவர் என்ற பெருமை மட்டும் ஒஸாமாவை உயர்த்தி விடவில்லை. பொறியியல்கலையில் அவரது பாண்டித்தியம், கொண்ட கொள்கைக்காக அவர் எடுத்துக் கொண்ட கோலம், கணக்கில்லாத கோடிக் கணக்கான சொத்துக்களுக்கு உரிமையாளராகவிருந்த செல்வந்தம் போன்றவை ஏதோவொரு வகையில் ஒஸாமாவைப் பெரிய மனிதராக்கிற்று என்பதே வரலாறுகளின் தடயம். அரபு நாடுகள் அனைத்தும் உட்பட ஐரோப்பா, ஆசியா, ஆபிரிக்காவென ஒஸாமா பணியாற்றாத நாடுமில்லை, பறந்து திரியாத தேசமுமில்லை. 1998-1999ம் ஆண்டு காலங்களில் கென்யா, தன்ஸானியா ஆகிய நாடுகளிலிருந்த அமெரிக்க தூதரகங்கள் தாக்கப்பட்ட பின்னரே மலைப் பொந்தில் பதுங்கிய பூதம்போல் ஒஸாமா பின்லேடன் உலகின் முன் தோன்றலானார், பேசப்படலானார். இவ்வளவு பெரிய அல்லது முக்கியமான மனிதனின் அல்லது தளபதியின் அல்லது பயங்கரவாதியின் இல்லாவிட்டால் வேறென்னவோ ஒவ்வொருவரது அணுகுமுறைகளுக்கேற்ப இந்த சொற்பிரயோகத்தை பாவித்துக் கொள்ளுங்கள்.

இவரது மரணம் எப்படி வந்தது என்பதே இன்றைக்கும் வேண்டப்பட்டு நிற்கின்ற வினா. அண்மையில் வெளியான தகவலின்படி ஒஸாமா பின்லேடனின் குடும்ப தகராறுகளே மறைவிடத்தையும் அப்போட்டாபாத் மாளிகையையும் பாகிஸ்தான் அமெரிக்க உளவுத்துறைகளுக்குக் காட்டிக் கொடுத்ததாக ஒருகதை. இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக மறைவான வாழ்க்கையில் அல்லலுற்று களைப்படைந்து காடுகள், மலைகள், கணவாய்கள் பாலைவனங்களில் மாறுவேடமணிந்து அலைக்கழிந்த ஒஸாமா நிலையான இருப்பிடத்தில் அமர்ந்து கொண்டு இஸ்லாமிய எழுச்சிக்கான இலட்சியங்களை எண்ணத் தொடங்கினார்.

இந்தப் பாரிய பொறுப்புக்குப் பின்னாலுள்ள போர்கள் முரண்பாடுகள், விமர்சனங்கள் எல்லாம் இப்பாரினில் பாரிய அழிவையும் அச்சத்தையும் ஏற்படுத்துமென்பதும் ஒஸாமாவுக்கு தெரிந்த விடயமே. வருவதை வரவுவைத்து இமயம் போல் நிமிர்ந்து நிற்போம் என்பதற்காக 2005ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு வந்துள்ளார் ஒஸாமா. இதற்கு முன்னர் 2003ல் ராவல்பிண்டியில் காலித் ஷேக் முஹம்மத் என்பவர் கைது செய்யப்படுவதற்கு முன்னர் அவரை சந்தித்துள்ளார். மூன்று மனைவிகள், எட்டு பிள்ளைகள், ஐந்து பேரப்பிள்ளைகள் எனப் பெரும் குடும்பப் படையே அப்போட்டாபாத்திலுள்ள அடுக்குமாடி அரண்மனைக்குள் வாழ்ந்துள்ளது. உலகின் நாலா பக்கங்களிலும் ஒஸாமாவை சல்லடை போட்டுக் கொண்டு தேடுகையில் அவரும் தனக்கு நாலா பக்கங்களிலுமுள்ள மனைவியரில் சிலரை அப்போட்டாபாத்துக்குள் அழைத்து வந்ததில் வாசகர்களுக்கு ஆச்சரியமுண்டோ. யெமன் பகுதியைச் சேர்ந்த அல்சடா என்ற பெண்ணை 1999 ம் ஆண்டு மணமுடிக்கும் போது மணப்பெண்ணுக்கு 19 வயதாம். ஷிஹாம்சபர் என்றொரு மனைவி, மற்றும் சவூதி அரேபியாவைச் சேர்ந்த கைரியாஹ் என்ற மனைவியும் இங்கு வாழ்ந்துள்ளனர்.

ஒஸாமா பின்லேடனின் அந்திம கால மனைவியர்களே இம் மூவரும். இன்னும் பல மனைவியர்கள் இருந்ததாகப் பேசப்பட்டாலும் தெளிவான ஆதாரங்கள் இதுவரை அறியப்படவில்லை. கைரியாஹ் என்ற சவூதி மனைவியே உள்ளவர்களில் மூத்தவரும் ஆரம்பகாலத்து உறவைக் கொண்டவரும். ஆப்கான், ஈரான், பாகிஸ்தான், சவூதி என்று கைரியாஹ் அடிக்கடி போய்வருவதுண்டு. இருந்த போதும் அப்போட்டாபாத் அரண்மனையில் இவருக்குத் தனியான தங்குமிடங்கள் தயார் நிலையிலேயே இருக்கும். அல்கைதாவுக்கெதிரான தாக்குதல்களையும் தேடுதல்களையும் மேற்குலகம் தீவிரப்படுத்திய போது 2001ம் ஆண்டு பாகிஸ்தானிலிருந்து ஈரான் வழியாக சவூதி அரேபியா செல்கையில் ஈரான் காவல் படையினர் கைரியாவைக் கைது செய்தனர்.

நிலைமைகள் மோசமடைந்து விடயம் வெளியே வருவதற்கு முன்னர் ஈரானின் உயர்மட்டத்தினரோடு அல்கைதா தலைமை பேசியது. பாகிஸ்தான் எல்லையோரத்தில் அல்கைதாவால் பிடித்து வைக்கப்பட்டிருந்த ஈரான் எல்லைக் காவல் படையினரை விடுவித்துப் பகரமாக கைரியாஹ் விடுவிக்கப்பட்டதெல்லாம் பழைய கதைகள். ஆப்கானிஸ்தானின் ஹெல்மெண்ட் மாகாணம், பாகிஸ்தானின் வஸிரிஸ்தான் மாகாணங்கள் என்பன நேட்டோ படையினரால் குண்டு மழை கொட்டப்பட்ட 2010ம் ஆண்டு காலப்பகுதியில் மீண்டும் கைரியாஹ் அப்போட்டாபாத் வந்துள்ளார். “என்னடா இந்த நேரத்தில் நேரம், காலம் தெரியாமல் வந்துவிட்டாளே இப்பெண்” என்று பின்லேடனின் நண்பர்கள் உறவினர்கள் கதிகலங்கிப் போய் நின்றனர். என்ன செய்வது வந்தவளை இனிமேல் பத்திரமாகப் பாதுகாப்போம் என்று எண்ணிய ஒஸாமா அப்போட்டாபாத் மாளிகையில் கைரியாவுக்கென ஒதுக்கப்பட்ட அரண்மனையில் தங்க வைத்தார். இருந்த போதும் ஏனைய மனைவிமார் பிள்ளைகள் எல்லோரும் கைரியாஹ் மீது சந்தேகமே. விதி விட்டது நடந்தே தீரும் என்ற நம்பிக்கையில் கைரியாவை கண்டுகொள்ளாமல் இருந்தார் ஒஸாமா. ஒஸாமாவுக்காக இறுதிப்பணியொன்றை தலைமேல் சுமந்து வந்துள்ளேன் என்று தனது விஜயத்துக்கான காரணத்தைக் கேட்கவும், கைரியாஹ் கூறியுள்ளார்.

ஆனால் ஒஸாமா பின்லேடனின் கொலையில் மனைவி கைரியாவுக்கு தொடர்புகள் இருப்பதற்கான தடயங்கள் இன்னும் கிடைக்கவில்லை. ஏனைய மனைவியரிடம் செலுத்தும் அன்பு, பாசம் தனக்குக் கிடைக்க வில்லையே என்ற ஆதங்கம் கைரியாவிடம் இருந்திருக்கலாம் என்கின்றனர் பலர். ஆனால் பொதுவாக இந்தக் காலகட்டங்களில் ஒஸாமா பின்லேடன் குடும்ப விவகாரங்களில் ஒதுங்கி அல்கைதாவின் எதிர்காலம் பற்றியே சிந்தித்தார். இதனால் ஏனைய மனைவிமாருடனும் பெரிதாக குடும்ப விடயங்களை அலட்டிக் கொள்ளவில்லை என்கின்றனர் ஆய்வாளர்கள். அப்போட்டாபாத் மாளிகைக்குள் கண்டெடுக்கப்பட்ட கணனிகள், தொலைபேசிகள் இன்னும் நவீன தொழில்நுட்ப கருவிகளை பார்க்கும் போது இங்கு குடும்பம் நடத்த நேரமா இருந்திருக்கும் என்றும் எண்ணத்தோன்றுகின்றதாம். என்னமோ 2011 மே 2ல் ஒஸாமா பில்லேடன் கொல்லப்பட்டார். மனைவியர் கைது செய்யப்பட்டனர். இப்போது ஒஸாமாவின் மைத்துனர்கள் தங்கள் சகோதரிகளை தாயகம் அழைத்துச் செல்ல பாகிஸ்தான் வந்துள்ளனர். யெமன் நாட்டைச் சேர்ந்த மனைவி அல்சடா புறப்படுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பாகிஸ்தான் அரசு செய்துவிட்டது. இந்நிலையில் ஒஸாமாவின் சடலம் அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக சில செய்திகள். ஒஸாமாவை கொன்ற உடனே கடலில் புதைத்துவிட்டோம் என்றனர் முன்னர். இப்போது மரபணு சோதனைக்காக அமெரிக்காவிலுள்ள விசேட இராணுவ முகாமில் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுவதைப் பார்த்தால் “யாரைத் தான் நம்புவதோ பேதை நெஞ்சம் அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்” என்ற பாடலே ஞாபகத்துக்கு வருகின்றது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.