புத் 64 இல. 11

கர வருடம் மாசி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 18

SUNDAY MARCH 11,  2012

 
"இலங்கை மீதான சர்வதேச அழுத்தம் இன விரிசலை துருவப்படுத்தவே வழிகோலும்''

"இலங்கை மீதான சர்வதேச அழுத்தம் இன விரிசலை துருவப்படுத்தவே வழிகோலும்''

அவசியமற்ற நேரத்தில், தேவையற்ற விதத்தில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஊடாக இலங்கை அரசாங்கத்தின் மீது சர்வதேச அழுத்தத்தை பிரயோகிப்பது ஏற்கனவே இனங்களுக்கிடையே காணப்படும் விரிசலை அதிகரித்து, மேலும் துருவப்படுத்துவதற்கே வழிகோலும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஜெனீவாவில் இடம்பெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19வது அமர்வுக்குச் சென்று விட்டு வந்துள்ள அமைச்சர் ஹக்கீம், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள பிரேரணை, அதனால் ஏற்படக் கூடிய விளைவுகள் பற்றி கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார். வாரமஞ்சரியின் கேள்விகளுக்குஅமைச்சர் ஹக்கீம் அளித்த பதில்கள்:

கேள்வி: ஜெனீவாவிற்குச் செல்வதற்கு முன்னரும், அமர்வுகள் ஆரம்பிக்க முன்னரும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை (பிரேரணை) அமெரிக்கா கொண்டுவரப் போவது பற்றி நன்கு தெரிந்திருந்ததா?

பதில்: அங்கு நாங்கள் ஆயத்தமாகவே சென்றோம். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தாமாகவே எமது தூதுக்குழுவின் பிரதி நிதிகளைத் தெரிவு செய்திருந்தார்.

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லி ணக்கத்திற்கான ஆணைக்குழுவின் அறிக்கை வெளியான தன் பின்னணியில் வெளிநாட்டமைச்சர் ஜீ.எல். பீரிஸ் அவசர வெளிநாட்டு விஜயங்களை மேற்கொண்டார். பின்னர் அமர்வுகளுக்கு இடையிலும் நிலைமையை அவதானித்து விட்டு ஆபிரிக்க நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்காக அவசரமாகப் புறப்பட்டுச் சென்று வந்தார்.

பல்வேறு வரலாற்றுக் காரணிகளுக்காக தென்னாபிரிக்காவிலுள்ள ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் என்ற அமைப்பின் உறுப்பினர்களுடன் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சமூகம் உறவுகளையும், தொடர்புகளையும் கொண்டிருக்கின்றது. ஆனால், தென்னாபிரிக்க அரசாங்கம் இலங்கைக்கு ஆதரவு திரட்டும் முயற்சிக்கு எமக்கு ஒத்துழைத்து வருகின்றது.

இவ்வாறிருக்க, இலங்கைக்கு எதிரான பிரேரணையை ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடரில் கொண்டுவரப்படப் போகும் தகவல் முதலில் ஜனவரி மாதம் 25ம் திகதியே எங்களுக்கு எட்டி யது. இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சி மேற் கொள்ளப்படும் சூழ்நிலையில் இவ் வாறானதொரு எத்தனிப்பு தேவையற்றதொன்றாகவே எமக்குத் தோன்றியது.

கேள்வி: அமெரிக்கா தற்போது முன்வைத்துள்ள பிரேரணை பற்றி என்ன நினைக்கின்aர்கள்?

பதில்: கடந்த புதன்கிழமையன்றுதான் அதனை முன்மொழிந்திருக்கின்றார்கள். அதனது உள்ளடக்கத்தை எனக்கு இன்னும் சரிவர பார்க்க கிடைக்கவில்லை.

கனடா போன்ற சில நாடுகள் பிரேரணையின் தொனியையும், வேகத்தையும், தாக்கத்தையும் குறைத்து போதிய கால அவகாசத்தையும் வழங்குவதற்கு விரும்பியதாகத் தெரிகின்றது. ஆனால், துரதிஷ்டவசமாக அமெரிக்காவும், பிரித்தானியாவும் வேறுவிதமான மனப் பதிவுகளோடு முற்றிலும் மாற்றமான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளோடு சுமுகமான உறவைப் பேணுவதற்கு நாம் விழையும் போது இவ்வாறானதொரு நிலைப்பாட்டை அந்நாடுகள் எடுப்பது அவ்வளவு ஆரோக்கியமானதாக தோன்றவில்லை.

கேள்வி: ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடருக்குச் சமாந்திரமாக அதன் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளோடு இலங்கைக் குழுவினர் மேற்கொண்ட உரையாடல்கள் எவ்வாறிருந்தன? அவர்கள் கடினமான நிலைப்பாட்டில் இருந்தனரா அல்லது சிநேகபூர்வமாக நடந்து கொண்டனரா?

பதில்: எங்களது குழுவினர் மத்தியில் கருத்து முரண்பாடுகள் இருந்ததாக சிலரால் குற்றஞ்சாட்டப்பட்ட போதிலும், வெளிநாட்டுப் பிரதிநிதிகளுடன் உரையாடும் போது எவ்வாறான அம்சங்களைக் கையாள்வது என்பது குறித்து ஒரு புரிந்துணர்வு காணப்பட்டது.

உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளைப் பொறுத்தவரை அவர்கள் கடும் போக்குடனோ, சினமடைந்தோ காணப் படவில்லை. புன்முறுவல் பூத்தவர்களாகவும், சிநேக பூர்வமாகவுமே எம்முடன் அவர்கள் நடந்து கொண்டனர்.

ஆனால் பிந்திய கட்டத்தில், நாம் ஏற்பாடு செய்திருந்த ஏற த்தாழ நாற்பது பிரதிநிதிகள் பங்குபற்றிய பகல் போசன ஒன்று கூடலின் போது அவர்களில் சிலர் பலதரப்பட்ட கேள்விகளை எழுப்பிய துடன் குறுக் கீடுகளை ஏற்படுத்தினர். இது எங்க ளில் சிலரைச் சினமடையச் செய்தது.

கேள்வி: ஆங்கிலத்தில் ‘நவி பிள்ளை’ எனக்குறிப்பிடப்படும் நவநீதம்பிள்ளையை நீங்கள் ஜெனீவாவில் சந்தித்திருக்கின்aர்கள். அவர் பக்கச் சார்பற்றவர் என நீங்கள் நம்புகின்aர்களா?

பதில்: மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் என்ற ரீதியில் உலகின் பல் வேறு சிக்கல்கள் மலிந்த நிலைகள் (Trouble Spots) மீது அவர் அதிக கவ னஞ் செலுத்தி வருகின்றார். இலங்கையின் மீதும் அவரது கவனம் வெகுவாகத் திரும் பியிருக்கின்றது. அதில் தவறில்லை.

நவநீதம்பிள்ளை இன அடிப்படையில் தமிழ் பெண்மணியொருவர் என்ற கார ணத்தினால் அவர் ஒரு பக்கச் சார்பாக நடந்து கொள்ளக் கூடும் என்ற விதத்தில் வதந்திகள் உலாவினாலும் கூட, எங்க ளைப் பொறுத்தமட்டில் அவர் அவ்வளவு கடுமையாக நடந்துகொள்ளவில்லை. அவர் தனது தொழிலைப் புரிகின்றார். அதனை நாம் மதிக்க வேண்டும்.

கேள்வி: இனங்களுக்கிடையிலான துருவப்படுத்தலின் விளைவு அல்லது அபாயம் பற்றி ஆரம்பத்திலேயே குறிப்பிட்டீர்கள். அதுபற்றி மேலும் ஏதாவது தெரிவிக்க விரும்புகின்aர்களா?

பதில்: யுத்தம் ஓய்ந்துள்ள சூழ்நிலையில், நாட்டில் முழுமையான சமாதானத்திற்கான ஒளிக் கீற்றுகள் தென்படுகின்ற வேளையில் தேவையற்ற வெளிச் சக்திகளின் தலையீடு ஏற்கனவே விரிசலடைந்துள்ள இனங்களுக்கிடையில் நிலவும் நல்லெண்ணத்தையும், நல்லுறவையும் மேலும் துருவப்படுத்திவிடலாம் என்ற அச்சம் மேலோங்கியுள்ளது. போதாக்குறைக்கு இருதரப்புகளிலுமுள்ள தீவிரவாத சக்திகள் குட்டையைக் குழப்பிவிடலாம் என்ற கவலையும் உண்டு.

கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்த முக்கியமான கூட்டத் தொடரில் பங்கேற்காமை பற்றி என்ன நினைக்கின்aர்கள்?

பதில்: அங்கு செல்வதில்லை என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் முடிவு ஒருவிதமான ஆறுதலை அளிக்கின்றது. அவர்கள் அங்கு சென்றிருந்தால் சில வேளை இங்கு விபரீதமான விளைவுகள் ஏற்பட்டிருக்க இடமுண்டு.

மிதமாகவோ தீவிரமாகவோ அன்றி பொதுவாக மத்தியதரமாக நடந்து கொள்வதே சாலச் சிறந்தது.

அவ்வாறு மத்தியதரத்திலிருந்து கருத்துக்களைக் கூறும் போது சிலவேளைகளில் அத்தகையோருக்கு “துரோகிகள்” என நாமகரணம் “சூட்டப்படுவது இயல்பாகும்” பிரிந்துபட்டிருக்கும் இருதரப்பிலும் இதனை அவதானிக்க முடியும்.

தமிழர் தரப்பை எடுத்துக் கொண்டால் ஒரே மனிதர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் துரோகியாகவும், வீரர் ஆகவும் சித்திரிக்கப்படலாம். இவ்வாறான கதி திருவாளர்கள் எஸ்.ஜே.வீ. செல்வநாயகம், ஜீ.ஜீ. பொன்னம்பலம், அ. அமிர்தலிங்கம், ஏன்! ஆர். சம்பந்தன் ஐயாவுக்கும் நேர்ந்திருக்கின்றது. இவ்வாறு, கள நிலவரத்தைப் பொறுத்து அரசியல் நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. எந்தவொரு தலைவரும் துரோகி என்றும் வீரர் என்றும் மாறி மாறி அழைக்கப்படுவது சகஜம்.

புதிய தலைமுறை அரசியல் தலைவர்களான நண்பர் சுமந்திரன் போன்றோர் எதிர்நோக்கும் சவால்களும் கவலை அளிக்கின்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் அவருக்கு “கொடும்பாவி” எரித்திருப்பது நல்லிணக்க முயற்சிகளிலிருந்து அத்தகையோரை பின்வாங்கச் செய்யும் ஒரு துர்ப்பாக்கிய நிலைமைக்குத் தள்ளிவிடக் கூடும். உணர்ச்சிபூர்வமாக விடயங்களை அணுகுவதை விட, நிதானமாகவும், தூர நோக்கோடும் அவற்றை அணுகவேண்டிய தேவையுள்ளது.

கேள்வி: இறுதியாக, இந்தப் பிரேரணையை இலங்கையால் முறியடிக்க முடியுமா?

பதில்: முடியும் என்ற நம்பிக்கையுண்டு, ஆனால் ஒருமாதம் நீடிக்கும் இவ்வமர்வின் போது நாம் உறுப்பு நாடுகளுடனான உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் சோர்ந்துபோய் விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சுஐப் எம். காசிம்

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.