புத் 64 இல. 11

கர வருடம் மாசி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 18

SUNDAY MARCH 11,  2012

அவள் கள்ளி

அவள் கள்ளி

கண்ணிமைக்கும் நேரத்தில் களம்பு குந்து
காதல்விளை யாட்டினிலே பலம்பொ ருந்தி
என்னிதயத் தைப்பரிசாய் பறித்துச் சென்று
எல்லோரை யும்அசைத்துச் சரித்து விட்டு
பண்ணிசைக்கும் குயில்போலே காத்தி ருந்து
பரவசமாய் கனியிதழில் காதல் தந்து
என்னுலகைத் திசைமாற்றிச் சென்றிட் டாளே
எனதிருப்பை நிலைகுலையச் செய்திட் டாளே!

தேன்குழையும் தெள்ளுதமிழ் கவிதை தந்து
தினம்தினமும் தென்றலாய் எனைத் தழுவி
வான்மழையாய் அன்பொழுக உடல்ந னைத்து
வருகிறாளென் வஞ்சியவள் நடைப யின்று
ஏனெனக்கு இந்தநிலை எனவ றிந்தால்
எனையழைத்துச் சென்றவளோ உளம கிழ்ந்து
நானெங்கும் தோன்றிவிடா தெனைம றைத்து
நலமாக வாழ்கின்றா ளவளென் கள்ளி


காதல் சுவைத் தேனா?

- உண்ணஸ்கிரிய ஏ. கந்தையா -

அவள்மீது என்பார்வை பட்டு
என்மீது அவள் பார்வை தொட்டு
பார்வைக்குள் பார்வை பட்டுத்தெறித்து
முகிழ்ந்தது என்காதல் ஒளிப்பிழம்பு.

இரவெல்லாம் என் இதயம் ஒளியில்
ஏதேதோ பிதற்றினேன் நித்திரையில்
அவள் கூட அப்படித் தானாம்
அவள்கூற நான் நெகிழ்ந்தேன் பின்னாளில்

காணாத நாட்கள் எல்லாம் கசக்கும்
காய்ச்சல் குணம் மண்டதுபோல் வியர்க்கும்
வீணாக தோழர்களைச் சினக்க - நட்பில்
விரிசல் கூட தோன்றிட எத் தணிக்கும்.

பரீட்சைக்குத் தோற்றும் சிறுபிள்ளை
பாடத்தை மனனிப்பான் போல
ஏதெதையா மனப்பாடம் செய்வேன் - அவள்
எதிர் வந்தால் வாய்குறை விழிப்பேன்!

மெளனத்தில் பிறந்தது என்காதல்
மரணிக்க மாட்டாத நினை வலைகள்
விழிவாசல் எதிர்கொண்ட நேசம் - நான்
விழிமூடும் வரைஎன்னைத் தொடரும்

இருபதில் என்காதல் சுவைத் ‘தேன்’ - அதை
அறுபதில் அசைபோட்டு மகிழ்ந்தேன்
இணையமும் செல்போனும் இணைக்கும்
இக்காலக் காதல் என் காதல்போல
சுவைத் ‘தேனா’? காலா காலம் - இல்லை
சுவை குன்ற துப்பிவிடும் ‘சூயிங்கம்’ தானா?
 


பொழுது புலரும் புலம

- ஜின்னாஹ் சரிபுத்தீன் -

வான்சிவந்த கம்பளமாய் ஒளிரக் காலை
வாழ்த்தொலித்துக் கடலலைகள் முரசந் தட்ட
தேன்சிந்தி இதழ்விரிக்கும் தண்ட லைமேல்
துயில்கொண்ட தாமரைகள் வண்டு பாட
கான்மரத்துக் கொம்பர்களில் குயில்க ளொன்றிக்
கானமழை பொழியுமிசை காற்றின் மேவக்
கூன்நிமிர்த்திச் சிறகடித்துச் சேவல் கூவக்
கொற்றவன் போல் நெஞ்சுயர்த்திக் கதிரோன் வந்தான்

காலைமலர்ந் துலகுதுயில் எழுப்ப வெய்யோன்
காய்வதெங்கள் கிழக்கிற்றான் அமுத மன்ன
தூயதமிழ் மொழிவதுமித் தமிழ்மண் ணிற்றான்
தொன்மையுற வோ(டு) இந்து முஸ்லிம் மாந்தர்
நேயமொடு பேசுமொழி தமிழால் ஒன்றி
நோவினைகள் ஒருவர் பிறர்க் கிளைக்கா தேயோர்
தாயீன்ற மக்களென வாழ்ந்த திந்தத்
திருமண்ணில் தாமென்னில் வரலா றன்றோ

ஒருபுறத்தே கடலன்னை தொட்ட ணைக்கும்
ஒன்றன்பின் ஒன்றாக அலைகள் தாவும்
பெருகிவரும் புனல்தழுவும் நண்டுக் கூட்டம்
போட்டியிட்டே தரைநோக்கி வளைக ளுள்ளே
சொருகியுடல் தனைமறைத்து மெல்ல மெல்லத்
தலையுயர்த்தும் கண்ணிரண்டும் மின்னும் இந்த
அரியவெழிற் காட்சிதனைக் கண்கள் காண
அகம்பொலியும் அஃதெம்மண் அழகின் கூறே

வெண்நுரைப்பூ கரைகொண்ட நீலப் பட்டின்
வாகாகத் தரைதழுவும் கடலைக் கண்டே
பெண்ணினத்தார் மயங்கிடுவார் ஆகா! இஃதோர்
புதுவண்ணச் சேலையென்றே ஆழி மீதே
உண்ணச்சிறு மீன்கவர புள்ளி னங்கள்
ஒன்றையொன்று போட்டியிட்டுச் சுழல அஃதை
உண்ணவெனப் பாயுதல்போல் பெருமீன் நீர்மேல்
உந்தியெழுங் காட்சிகண்டால் கவல்மா ழாதோ

அலையடித்த அலைவாயின் கரைகள் பெண்டிர்
அழகுமிகு அழகினைப்போற் கருமை கொண்டு
நிலமென்னுஞ் செம்மணலாஞ் சேலைக் காங்கே
நீண்டபெருங் கரைபோன்றே நிலைத்தி ருக்க
வலைபடுமீன் கவரக்கை வலைக ளோடே
வரும்மீனோர் பதம்பதிய அழகு மாற
அலைமீண்டுந் தலைதழுவி அழகு செய்யும்
அற்புத்தைக் காண்பதுமோர் அழகா மம்மா

மெய்வெள்ளை காரிக்கும் முன்னே ஆழி
மீன்பிடிக்க வருவோர்கள் கண்டே முந்நாள்
பொய்யாகக் கோபங்கொண் டெதிர்தி சையில்
போயொளித்த பகலவனும் ஊடல் தீர்ப்பான்
தூயபொன்னின் தேரேறித் தோளு யர்த்தித்
தோன்றுமவன் சுடர்கண்ட உழவர் கூட்டம்
கையெடுத்த பொருட்களுடன் மேற்கு நோக்கிக்
கழனிகளின் வளங்காண ஏகு வாரே

பரந்துகிடந் தரசோச்சும் ஆழி மீதே
பாய்மரங்கள் பலநூறாய் மீனுக் காகப்
பரந்தூரும் இராப்போழ்தில் பகலில் ஆங்கே
பலநூறாய் மீனவர்கள் ஒன்றாய்க் கூடிக்
கரைவலையிட் டாழ்கடலில் மீன்பி டிப்பர்
கத்தலொலி வான்பிழக்கும் வாறே அன்னார்
நிரையாக வலைபற்றி ‘அம்பா’ச் சொல்லி
நெளிந்துநெளிந் திழுப்பதனைத் தினமுங் காண்போம்

கடலினெதிர்த் திசையினிலே பொன்கொ ழிக்கும்
கழனிகளால் வளம்பெறுமெம் கிழக்கு மண்ணின்
கொடையெனவே நாற்போகம் விளையும் உண்ணக்
குறையறவே சுயதேவை பூர்த்தி யாகும்
தடையில்லா தென்நாளும் புனல்வ ழங்குந்
தேக்கங்கள் இடையிடையே காணும் நன்செய்
இடையில்லா தேதொடர்ந்து பொலியும் வானும்
ஏற்றபடி பொழிந்ததற்கென் றுதவு மாமே

பொன்மணிகள் கோத்தெடுத்துச் சரங்க ளாக்கிப்
பொன்வண்ண இலைகளிடை புகுத்தி வைத்தே
கண்ணையள்ளு வாறுசெய்த தாரோ அஃது
கடவுள்செய்த விளையாட்டோ காண்ப தற்குத்
தன்னிலவின் ஒளியினிலே தலைவன் மார்பில்
தலைபுதைத்து நிற்கின்ற தலைவி போல
மண்மகளின் மேற்பு ரண்டு நெற்க திர்கள்
மகிழ்கின்ற காட்சியென்றும் களிப்பை யூட்டும்

வான்மதிவிண் பூரணமாய்க் காயும் நாளில்
வாவிகளில் உறைகின்ற உயிரி னங்கள்
தேனாகச் செவியினிக்கக் கானம் பாடும்
தெவிட்டாத மகிழ்வையுந் தூண்டும் எங்கும்
காணாத புதுமையிது கிழக்குக் கென்றே
கொண்டவரம் எனில்மிகையே இல்லை இஃதை
வானாளில் ஒருமுறைதான் எனிலுங் கேட்க
வேண்டாவோ பிறப்பின்பே றாகு மன்றோ

பிட்டுக்கு மாவிடையே தேங்காய்ப் பூவாய்ப்
பிரித்தெடுக்க உற்றபடி சேர்த்து வைக்கும்
மட்டுநகர் மக்கள் தம் வழக்கம் போல
மக்களிங்கே ஒற்றுமையாய் அடுத்த டுத்தே
ஒட்டுமொத்த மாகமுஸ்லிம் தமிழர் என்றே
ஒன்றியொன்றி வாழுகின்றார் பல்லாண் டாக
பிட்டிடையிற் பிரிந்தாலும் பிரியார் ஒன்றிப்
பேசுமொழி தமிழென்ற பொதுமை யாலே

சாதியின் மதபேதம் எமக்குள் ளில்லை
சமயத்தால் வேறுவேறாய் ஆன போதும்
ஆதியிறை தனைவணங்குங் கோயில் இங்கே
அனைவருக்கும் பொதுவாகும் விழாக்கா லத்தில்
பேதமின்றி அனைவருமே கூடு வார்’தீப்
பள்ளயம்’ஓர் உதாரணமாம் ‘பாண்டி ருப்பில்’
வேதத்தில் கிறிஸ்தவரும் இஸ்லாம் இந்து
வெவ்வேறே எனினும் நாம் ஒருதாய் மக்கள்


விடுதலை கிடைத்தவுடன்;

- நதா அக்ரம் -

விடியலை தேடிய
பாதைகள்
வினாக்குறியில் இடம்பெயர
அநாதரவாய் மாறிவிட்ட
இளசுகளை
ஆதரிக்கத்தான் போகிறேன்
விடுதலை கிடைத்தவுடன்

தொடக்கத்தில் பணம் கொட்ட
அடக்கத்தில் கோட்டை விட்ட
மானத்தை புகை உண்ட
மங்கையர் மீது
சீறிப்பாயத்தான் போகிறேன்
விடுதலை கிடைத்தவுடன்

நல்வினை தடுத்து
தீவினை தொடுத்தோரை
போற்றும் சமூகத்தை
தூற்றத்தான் போகிறேன்
விடுதலை கிடைத்தவுடன்

ஒளி வீசிய இன்பங்கள்
இருள் சூழ்ந்த துன்பங்களாய்
போன தொடர்கதையை
மாற்றத்தான் போகிறேன்
விடுதலை கிடைத்தவுடன்


கண்ணீரே காவியமாக...!

 வீ. எம். எலிசபெத்

என் இதயம் உனக்காய் அழுகின்றது!
உன் இதயத்தில் எனக்கிடம்
இல்லை என்பதற்காக அல்ல!
இதயமே இல்லாத உன்னை நேசித்ததற்காக!

தினமும் எழுதப்பட்ட என் கவிவரிகளின்
கதாநாயகனாக நீ இருந்தாய்!- ஆனால்
கண்ணீரை மட்டுமே பரிசளித்து விட்டு- என்
கவி வரிகளை வெறுமையாக்கினாய்!
கனவையெல்லாம் கானலாக்கினாய்!

அன்பை மட்டுமே அறிந்திருந்த நான்
அழுவதற்கும் கற்றுக் கொண்டது
உன்னால் தான்!
ஆனாலும் என்ன? - ஒரு
கதாநாயகனாக நீ இல்லாவிட்டாலும்- அதே
கவியை காவியமாக்கினாய்!
என்னை நான் பல மனங்களில்
கண்டெடுக்க காரணமும் நீ ஆனாய்!

காலம் கடந்து என்னை நீ
காண நினைத்தால் (தோன்றினால்)
உனக்காக நான் வடித்து வைத்த
கண்ணீர் காவியத்தை உன்
இதயத்தால் படித்துப்பார்- என்
இதயத்தின் வலி அப்போது புரியும்!

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.