புத் 64 இல. 11

கர வருடம் மாசி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 18

SUNDAY MARCH 11,  2012

 
~யார் ஒருவர் சிறந்த நிர்வாகியாக

~யார் ஒருவர் சிறந்த நிர்வாகியாக

இருக்கிறாரோ அவரால் எதனையும்

சாதிக்கவும் பிரசாசிக்கவும் முடியும்'
 

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முன்னாள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வி.ஏ. திருஞானசுந்தரம்

வானலையூடே காற்றலைகளில் சங்கமிக்கும் குரல்கள் எத்தனையோ காற்றோடு காற்றாக கரைந்துவிட்ட நிலையில் பல படிகளைத்தாண்டி அதி உன்னத நிலைக்கு உயர்ந்த தமிழர் என்ற பெருமையைத் தட்டிக் கொண்டவர்தான் ஓய்வு பெற்ற ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ச் சேவையின் முன்னாள் பணிப்பாளராகவும் பிரதிப் பணிப்பாளர் நாயகமாகவும் பணியாற்றிய V.A. திருஞான சுந்தரம்.

அண்மையில் அவரைச் சந்தித்த வேளை வாழ்வின் தொழிலின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட போது உடன் பிறப்பு சகோதர பாசத்தின் உணர்வை உள்வாங்கப்பட்ட என் உள்ளத்தில் திரைப்பட பாடலொன்று இவருக்காகத்தான் எழுதப்பட்டதோ என்று நினைக்கத் தோன்றியது.

“முத்துக்கு முத்தாக

சொத்துக்குச் சொத்தாக

அண்ணன் தம்பி

பிறந்து வந்தோம்

ஒண்ணுக்குள் ஒண்ணாக....

அண்ணன் சொல்லும் வார்த்தையெல்லாம்

வேதமெனும் தம்பி உள்ளம்.....”

பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் அவரின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த பாசங்களை வெளிக்கொட்டிக் கொண்டிருப்பதைக் காணக் கூடியதாக விருந்தது.

கலந்துரையாடலில் வழமையான ஆரம்பக் கேள்விக்கு முன்னாலேயே ஓர் அறிமுகத்தைத் தந்தார்.

“கோழி மேய்ச்சாலும் கோர்ணமேந்தில் மேய்ப்பதுதான் புருஷ லட்சணம்” என்ற கருத்து ஊறிப் போயிருந்த யாழ்ப்பாண சமுதாயத்தின் அங்கமாக விளங்கியவன் நான். அரச இலிகதர் சேவையில் சேர்ந்தால் ஒரு ஹெட்கிளார்க் ஆக அல்லது ஓ.ஏ.வோ அல்லது அதற்கு ஒருபடி மேலான சிறிய உத்தியோகமொன்றுடன் ஓய்வு பெறலாம். அதை விட ஊடகத்துறை உன்னை உயர் நிலைக்கு உயர்த்தி விடும் என்று கூறி பத்திரிகைத்துறையிலே என்னை ஈடுபடுத்தி உருவாக்கி அத்துறையில் என்னை சேர்த்து விட்டவர் என் அண்ணா. தாயை இழந்துவிட்ட என்னை கோழி தன்குஞ்சுகளை இறக்கைக்குள் வைத்து காப்பது போல் வளர்த்து விட்ட வரும் அவர்தான். என்று தன் ஊடகத்துறை பிரவேசத்தை அர்ப்பணித்தார்.

தமையனின் நிழலில் வளர்ந்த நீங்கள் பிறந்தகத்தைப் பற்றிக் கூறுங்கள்.

இலங்கையின் சரித்திரப் பிரசித்தி பெற்ற விஷ்ணு ஆலய சூழலில் அமைந்துள்ள துன்னாலை வடக்கில் வேலுப்பிள்ளை அண்ணாமலை - தெய்வானை (சித்திரம்) தம்பதியினருக்கு மூன்றாவது குழந்தையாக 1937ம் ஆண்டு டிசம்பர் முதலாம் திகதி பிறந்தேன். கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரியில் தான் பள்ளி வாழ்க்கை. பல்கலைகளும் வளர்ந்தோங்கும் வடமராட்சி கரணவாய் தெற்கின் சித்தம்பதியில் வளர்ந்தமையானது இலக்கியம், நாடகம், சமயம் போன்ற பல்கலைகளிலும் தேற ஏதுவாக அமைந்தது. கல்லூரி காலத்தில் அமைந்த பாராளுமன்றத்தில் கலை, கலாசார, சமய விவகாரங்களுக்கு பொறுப்பான மாணவ அமைச்சராக இருந்ததனால் அத்துறைகளில் பெரும் ஈடுபாடு என்னுள் ஒட்டிக்கொண்டது.

கரவெட்டி அண்ணாவியார் வேலுப்பிள்ளை சரவணமுத்து, அண்ணாவியார் கிருஷ்ண ஆழ்வார், கலையரசு சொர்ணலிங்கம் போன்ற கலைத்துறை ஜாம்பவான்கள் மத்தியில் வளர்ந்து அவர்களின் கலை ஆளுமைகளில் ஈர்க்கப்பட்டுள்ளேன். கலை என்னுள் குருதியோடு சங்கமித்து விட்டது.

ஊடகத்துறையில் காலடி வைத்த உங்களின் முதல் பணி எங்கே ஆரம்பமாயிற்று?

1956 ஆம் ஆண்டு என்னுடைய 19 ஆவது வயதில் வீரகேசரி பத்திரிகையில் ஆசிரிய பீடத்தில் இணைந்தேன். ஸ்ரீ ஹரன் ஐயா வீரகேசரியின் பிரதம ஆசிரியராக அப்போது இருந்தார். செய்தி ஆசிரியராக கே.வி.எஸ். வாஸ் அவர்களும் பத்திரிகையுலகில் மறக்க முடியாத ஊடகவியலாளர்களான கோபால ரட்ணம், டேவிட் ராஜ், பொன் பாலசுந்தரம் போன்றோரும் அங்கே கடமையாற்றிக் கொண்டிருந்தார்கள். என்னுடன் சமகாலத்தில் இணைந்து கொண்டவர்கள்தான் ரக்வானை எஸ். பெருமாளும், ரி.எம். முருகையாவும்.

செய்தி சேகரித்தல், சேர்த்த செய்தியை செவ்விதாக்கம் செய்தல் (சப்எடிட்) பணிகளோடு மரகதம் என்ற புனை பெயரில் ‘வனிதையர் அரங்கம்’, கலாமதி என்ற புனை பெயரில் ‘கலையரங்கம்’ பக்கங்களைத் தயாரித்து கலை, இலக்கிய ஆர்வலர்களுக்கு கைகொடுத்துதவி வந்தேன்.

பத்திரிகைத்துறையில் நல்ல வளர்ச்சி கண்ட காலம், நிர்வாகத்தினருக்கும் தொழிலாளர்களு க்குமிடையே தொழில் பிணக்கு கசியத் தொடங்கிவிட்டது. அன்று பலம் வாய்ந்த தொழிற் சங்கமாக பாலாதம்புவின் இலங்கை வர்த்தக ஊழியர் சங்கம் விளங்கியது. பத்திரிகை தொழிற் காரியாலய ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கி வேலை நிறுத்தம் செய்தமையால் சிறிது காலம் பத்திரிகை தடைப்பட்டது. ஊழியர்களுக்காக தொழிற்சங்கம் சார்பில் பாலாதம்பு வாதாடி ஊதியத்தோடு தொழில் மீளப் பெற்றுக்கொடுத்தார். நிர்வாகம் அதனை ஏற்றுக் கொள்ளாது அப்பீல் செய்தது. இவ்வழக்கை பிரபல வழக்கறிஞர் கொல்வின் ஆர்.டி.சில்வா வாதிட்டார். இதன் மத்தியில் நான் உயர் கல்வி நிறுவனமொன்றில் ஆசிரியராக இணைந்து கொண்டேன்.

1962ல் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தில் மொழி பெயர்ப்பாளர் பதவிக்கான விண்ணப்பம் கோரியிருந்தார்கள். அதற்கு விண்ணப்பித்திருந்தேன். முன்னாள் நீதி அமைச்சராகவிருந்த நிசங்க விஜயரத்ன அப்போது இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளராகவிருந்தார். அவர் நடத்திய நேர்முகப் பரீட்சையில் நான் தேர்வு செய்யப்பட்டேன்.

காப்புறுதித்துறை சார்ந்த ஆங்கிலச் சொற்களையும் ஆவணங்களையும் அழகு தமிழில் அச்சு வாகனமேற்றினேன்.

பழம் நழுவி பாலில் விழுந்தது போல் என் எழுத்தார்வத்துக்கு சில்லையூர் செல்வராஜன் அங்கே காப்புறுதி பிரசார பணிகளில் கடமையாற்றிக் கொண்டிருந்ததும் எனக்கு உந்து சக்தியாக அமைந்தது.

இறுதி பிரசார பணிகளில் கடமையாற்றிக் கொண்டிருந்ததும் எனக்கு உந்து சக்தியாக அமைந்தது.

‘காப்புறுதியே (உங்கள்) காவற்கவசம்’, ‘செத்தும் கொடுத்தான் சீதக்காதி’ என்று ஆயுட்காப்புறுதிக்கு வரை விலக்கணம் வகுத்து பிரசாரத்திற்கு வழிசமைத்தேன்.

காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் சார்பாக ஒலிபரப்பான வர்த்தக விளம்பரங்களில் எனது ஆக்கங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. இந்தச் சந்தர்ப்பத்தில் மறைந்த என் இளைய சகோதரனின் நினைவு வருகின்றது. காப்புறுதி கூட்டுத்தாபனத்தினருக்காக எனது நெறியாள்கையில் ‘தேன்கூடு’ தொடர் நாடகம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வர்த்தக சேவையில் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. நாடகப் பிரதிகளையும் நானே எழுதி வந்த நிலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட சுகயீனத்தால் அவ்வாரப் பிரதியை எழுத முடியாமல் எனது இளைய சகோதரன் மனோரஞ்சனிடம் பிரதி ஒன்றை எழுதும்படி கேட்டேன். ஆயுட் காப்புறுதியின் தத்துவத்தை நன்கு அறிந்து வைத்தாற்போல் ‘ஆயிரம் பொன்’ என்ற பொருள் பதிந்த நாடகப் பிரதியை எழுதி தந்தான். ‘ஆயிரம் பொன்’ அதாவது ‘யானை இருந்தாலும் ஆயிரம் பொன். இறந்தாலும் ஆயிரம் பொன்’ என்பதை விளக்கியதாக அமைந்ததால் ‘ஆயுட்காப்புறுதிக்கு அதை ஓர் வரைவிலக்கணமாகக் கொள்ள முடியும் என்று பலரும் ஏகோபித்த முறையில் கருத்துரைத்ததை என்னால் மறக்க முடியாது. வளரும் பயிர் இளமையிலேயே கருகிப்போனது பெரும் வேதனையென்று பெருமூச்சு விட்டார்.

‘காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தில் கோலோச்சிய நீங்கள் எவ்வாறு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் கால்பதித்தீர்கள்?

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் சேவைக்கு பகுதி நேர அறிவிப்பாளர் தேவையென்று விளம்பரப்படுத்தியிருந்தார்கள். என் விண்ணப்பமும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தேர்வானேன். 1962 ஜுலை 10 இல் பகுதி நேர அறிவிப்பாளனாகவும் செய்தி வாசிப்போனாகவும் நியமனம் பெற்றேன்.

அதிகாலை 4 மணியிலிருந்து என் கடமைகள் மாறி மாறி சுழன்று கொண்டிருந்தது. ‘பற்றறுத்த பைங்கொடி’ – (மணிமேகலை பற்றியது) ‘கண்ணில் தெரியுதொரு தோற்றம்’ (மகாவலி பற்றியது) ‘கண் (தான்) அம்மா என் காதலி’ (கண்கள் பற்றியது) ‘ஐந்து வயது மகள் அழகாகக் கோலமிட்டால்.....” (உள்ளூர் தயாரிப்புகளை ஊக்கப்படுத்தியமை)

‘வீடே நாடகம்’ (சிறு குடும்பத்தில் நடைபெறும் உரையாடல்) போன்ற விவரணச் சித்திரங்கள் இசையோடு எழுதித் தயாரித்து ஒலிபரப்பியதோடு, சின்னஞ்சிறுசுகளுக்கான ‘வளரும் பயிர்’ முதல் வளர்ந்தோருக்கான ‘நாளைய சந்ததிவரை’ நேர்காணலுடன் பிரதிகளையும் எழுதித் தயாரித்தும் ஒலிபரப்பி வந்தேன்.

இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தில் இணைந்திருந்த காலத்தில் கிடைத்த நிர்வாக அனுபவம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தானத்திலும் என் வாழ்வுக்குக் கைகொடுத்தது.

1980 இல் ஒலிபரப்பு மற்றும் ஆளணி முகாமைத்துவம் இரண்டிலும் அனுபவம் வாய்திருந்த படியால் நிர்வாகப் பிரிவின் உதவிப் பணிப்பாளராக என்னை நிரந்தரப் பதவியில் அமர்த்தினர். அறிவிப்பாளர்கள் மற்றும் தொழில் நுட்பத்துறை சம்பந்தப்பட்ட நிர்வாக கடமையிருந்த படியால் நான் அறிவிப்பாளராக செயல்பட்டதைத் தவிர்க்க வேண்டியிருந்தது. தொழிற் சங்கப் பிரச்சினைகள் மற்றும் தொழிலாளர் நல்லுறவுகளைப் பேணுவதிலும் கையாள்வதிலும் உயர் மட்டத்தினரின் பாராட்டைப் பெறக்கூடிய வகையில் செயல்பட்டேன். மேலும் ஒரு படியாக வர்த்தகப் பிரிவின் மேலதிகப் பணிப்பாளராக தரம் உயர்த்தப்பட்டேன். தரமான நிகழ்ச்சிகள் தந்து கொண்டிருந்த வேளை.......

1983 ஜுலை கலவரம் நிலை குலையச் செய்தது. கப்பலேறி ஊர்போய்ச் சேர்ந்தேன். கறுப்பு ஜூலை சகஜ நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது உடனடியாக காரியாலயம் திரும்புமாறு அவசர தந்தியொன்று கிடைத்தது. கடமைக்கு திரும்பிய எனக்கு தமிழ்ச் சேவையின் பிரதிப் பணிப்பாளராக நியமனம் வழங்கினார்கள்.

ஜுலை கலவரத்தினால் தமிழ்ச் சேவைக்கு ஏற்பட்ட பாரிய பின்னடைவுகளைச் சரி செய்து நொந்து போயிருந்த மக்களின் மனங்களைச் சொஸ்தைப்படுத்தக் கூடிய வகையில் நிகழ்ச்சிகளை ஒலிபரப்ப வேண்டிய காலமாகையால் கலை, இலக்கிய, நாடக, இசை, மொழி வளர்ச்சித்துறை சார் நிகழ்ச்சிகளுடன் சம்பந்தப்பட்டவர்களின் நிபுணத்துவ ஆலோசனைகளைப் பெற்று நிகழ்ச்சிகளை செவ்வனே தயாரித்து ஒலிபரப்பி வர வழி வகுத்தேன்.

1984 ஆம் ஆண்டு தமிழ்ச் சேவையின் பணிப்பாளராக பதவி உயர்த்தப்பட்டேன். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வரலாற்றில் கூட்டுத்தாபனத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் (நிர்வாக) என்ற பதவியை வகித்த ஒரே தமிழர் என்ற பெருமை எனக்குண்டு. நான் ஆற்றிய சேவைக்கும் இறைமைக்கும் கிடைத்த வாய்ப்பாகவே அதை நான் கருதுகிறேன். ஆளணி முகாமைத்துவம், ஒலிபரப்பு நிர்வாகம், உலக அறிவு என்பவற்றிலெல்லாம் என்னுடைய அணுகுமுறைகளிலும் ஊழியர்களின் மேம்பாட்டிற்கான என் பங்களிப்பிலும் தலைமை நிர்வாகத்தின் பாராட்டை வெகுவாகப் பெற்றுள்ளேன். என் கட¨மைக்குக் கிடைத்த ஆத்ம திருப்திகள் அவை. ஒலிபரப்புத் துறையோடு ஒளிபரப்புத்துறையில் பங்களிப்பு ஏதும் உண்டா.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் 1997 டிசம்பர் முதலாம் திகதி ஓய்வு பெற்றதன் பின் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், சுயாதீனத் தொலைக்காட்சி ஆகியவற்றில் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும், ஆலோசகராகவும் ஏககாலத்தில் பணியாற்றியுள்ளேன்.

ஒலிபரப்புத்துறையில் உங்களை வளப்படுத்திக் கொள்ள வெளிநாட்டு பயிற்சிகள் எங்கெல்லாம் கிடைத்தன?

ஜப்பான் னிசிறி ஒலிபரப்பு நிலையம், ஜேர்மனி டொஷ்யவலே வானொலி பயிற்சியகம், சிங்கப்பூர் றேடியோ, - தொலைக்காட்சி, மலேசியா ஆசிய அபிவிருத்தி ஒலிபரப்பு நிலையம், நேபாளம் டொய்ஷவலே பயிற்சி நிலையம் ஆகியவற்றில் ஒலிபரப்புத்துறையிலான அனுபவங்களை மேலும் வளப்படுத்திக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் எனக்கு கிடைத்தது.

இந்தத் துறையில் நீங்கள் பெற்ற அனுபவங்களை எழுத்துருவில் படைத்துள்Zர்களா?

1987ல் கோலாலம்பூரில் நடைபெற்ற 6 வது தமிழாராய்ச்சி மாநாட்டில் கூட்டுத்தாபன பிரதிநிதியாகக் கலந்து கொண்டேன். 2006ல் பேராசிரியர் கா. சிவத்தம்பி தலைமையில்) “தொடர்பாடற் கற்கைக் கலைச் சொல் அகர முதலி” தயாரித்த நிபுணர் குழுவில் நானும் ஒருவன். 2011ல் கொழும்பில் நடைபெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் ‘இலத்திரனியல் ஊடகத்தில் செய்தி செவ்விதாக்கம்’ பற்றிய ஆய்வுக் கட்டுரை, தினக்குரலின் 15 ஆவது ஆண்டு நினைவு மலருக்கு ‘இலங்கையில் தமிழ் ஊடகம்’ என்ற ஆய்வு கட்டுரை, ஒலிபரப்புத்துறை சார்ந்த ‘சிவலயம்’, ‘மனோலயம்’ நூல்களின் தொகுப்பு, பேராசிரியர் கார்த்திகேசு அவர்கள் பற்றிய ‘கரவையூற்று’, ‘கரவை விக்னேஸ்வரா வழிவந்த ஒரு தமிழ் அறுவடை’ ஆகிய நூல்களின் தொகுப்பாசிரியராக இருந்து பங்களிப்பை செய்துள்ளேன்.

“ஊடகவியலாளராக ஆரம்பித்த பயணம் அத்துறையில் அதி உயர் சிகரம் கண்டீர்கள் இதற்குக் கிடைத்த கெளரவ விருதுகள் பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

கொழும்பு கம்பன் கழகம் தந்தது. ‘ஊடகத்துப் பேராளன்’, ஜனாதிபதி தேசிய விருதான ‘ஸ்ரீலங்காதிலக’, கலாசார அமைச்சு வழங்கிய ‘கலாபூஷணம்’, மேல் மாகாண சபையின் ‘தேசாமிர்தன்’, பிரதேச தமிழ் விவகார அமைச்சின் ‘கலைச் செம்மல்’, ஸ்ரீபத்ரகாளி அம்மன் தேவஸ்தானம் தந்த ‘ஒலி அரசு’, இந்து சமய கலாசார திணைக்களம் ‘தமிழ் ஒலி’, அகில இலங்கை தெலுங்கு காங்கிரஸ் வழங்கிய ‘மதுர பாஷணி’ என்ற கெளரவ விருது அணிகள் என்னை அலங்கரித்தாலும் இந்த வளர்ச்சிக்கு ஊடகத்துறையில் என்னை கால் பதிக்க வைத்த தமையனுக்கே சமர்ப்பணமாக்குகிறேன்.

இவ்வளவு பணிகளுக்கு மத்தியிலும் கடமையே கண்ணாகவிருந்த உங்களுக்கு குடும்ப பொறுப்புகளைக் கவனிக்க நேரமிருந்திருக்குமா?

திட்டமிட்டு எந்தெந்த அலுவல்களுக்கு நேரம் ஒதுக்க வேண்டுமோ அதை நிர்ணயித்துக் கொண்டு குடும்ப பொறுப்புகளை கவனிப்பதற்கென்று நேரத்தையும் ஒதுக்கிக் கொண்டு, இரண்டையும் இசகு தவறாமல் ஒப்பேற்றிய நிறைவு எனக்குண்டு. இதில் ஆத்ம திருப்தியும் கொண்டேன்.

அறிவிப்பாளர்களாக வர துடிக்கும் இளைஞர்களுக்கு தாங்கள் கூற விரும்புவது என்ன?

இன்றும் சரி அன்றும் சரி இளைஞர்கள் அறிவிப்பாளர்களாகவே வர விரும்புகின்றார்கள். விருப்பம் கொண்டுள்ள அனைவருமே அறிவிப்பாளராக வர முடியாது. அறிவிப்பாளராக வேண்டுமானால் உங்கள் குரலை, உச்சரிப்பை, மொழியின் இலட்சணத்தை ஒலிப்பதிவு செய்து நீங்களே அதை கேட்டுப் பாருங்கள். உங்களுக்கே தெரிய வரும் நீங்கள் சிறந்த அறிவிப்பாளராக பிரகாசிக்க முடியுமாவென்று.

கலைக்கோயில் என்று நாம் மதிக்கும் இலங்கை வானொலி எமக்குக் கற்றுத் தந்த பாடங்கள் இவை. இதை மனதில் கொள்ள வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்.

ஒலிபரப்புத்துறையில் அறிவிப்புச் செய்து, நிகழ்ச்சிகள் தயாரிப்பாளராகவிருந்து, பிரதி எழுதி, செய்தி வாசித்து அனுபவம் கொண்ட நீங்கள் நிர்வாகத்துறையிலும் பிரகாசித்திருக்கிaர்களே! அது எப்படி சாத்தியமாயிற்று?

இந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு சம்பவத்தை நினைவூட்ட விரும்புகிறேன். அன்று தமிழ்ச் சேவை பணிப்பாளராக விருந்த காலஞ்சென்ற கே.எஸ். நடராஜா அவர்கள் ஒரு சமயம் என்னுடன் உரையாடிக் கொண்டிருந்த சமயம் ஒரு விடயத்தைக் குறிப்பிட்டார்.

எவன் ஒருவன் சிறந்த நிர்வாகியாக இருக்கிறானோ அவனால் எதனையும் செய்து முடிக்கவும் முடியும். பிரகாசிக்கவும் முடியும். இதையே தாரக மந்திரமாக கொண்ட எனது ஒலிபரப்பு வாழ்க்கையை கைதூக்கி விட்டது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.