புத் 64 இல. 11

கர வருடம் மாசி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 18

SUNDAY MARCH 11,  2012

 
தங்கத் தமிழ்மலையின் பெரும் பரகசியம்

தங்கத் தமிழ்மலையின் பெரும் பரகசியம்

உணீ தமிழ்ப் பேரறிஞர் வரிசையில் முன்னிலை வகிப்பவர்களுள் முதன்மையானவராக இருந்தவர் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் ஆவார். கடந்த ஐந்து தசாப்தங்களுக்கு மேலாகத் தனது தமிழ்ப்பணி மூலம் எமது நாட்டுக்குப் பெருமை சேர்த்துக் கொடுத்த பேரறிஞர் இவர்.

பண்டிதரும் சைவப்புலவருமான ஆசிரியர் பொ.கார்த்திகேசுக்கும் வள்ளி யம்மைக்கும் 10.05.1932 ஆம் ஆண்டு மகனாகப் பிறந்த இவர் தனது ஆரம்பக்க வில்யை கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியிலும், இடைநிலைக் கல்வியை கொழும்பு ஸாகிறாக் கல்லூரியிலும் கற்று உயர் கல்வியினை பேராதனைப் பல்கலைக் கழகத்திலும் கற்று கலைப்பட்டதாரியாக வெளியேறினார்.

தனது பட்டப்படிப்பின் போது தமிழை ஒரு சிறப்புப் பாடமாகப் பயிலவில்லை. வரலாறு, பொருளியல், தமிழ் ஆகிய மூன்று பாடங்களையும் கற்று ஒரு பொதுப் பட்டதாரியாக 1956 இல் வெளியேறினார். 1963 இல் தமிழில் எம்.ஏ.பட்டம் பெற்றார். 1970 இல் பேர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் உலகப் புகழ்பெற்ற பேராசிரியர் ஜோர்ஜ் தொம்ஸனின் வழிகாட்டுதலில் பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் நாடகம் எனும் பொருள் பற்றி ஆராய்ந்து கலாநிதிப் பட்டம் பெற்றார்.

தான் கல்வி கற்ற கொழும்பு ஸாகிராக் கல்லூரியில் ஒரு ஆசிரியராகவே 1956 இல் அவர் தன் கல்விப் பணியைத் தொடங்கினார். வரலாறு, தமிழ் ஆகிய பாடங்களை அங்கு அவர் கற்பித்தார். இன்று இலங்கையில் பிரபல கல்வி யாளர்களாவும், ஓய்வு பெற்ற அரச அதிகாரிகளாகவும் விளங்கும் பலர் அக்காலத்தில் சிவத்தம்பியிடம் கல்வி கற்றவர்களே ஆவர்.

சிவத்தம்பி ஸாகிராவில் கல்வி கற்ற, கற்பித்த காலத்திலேதான் இஸ்லாம் பற்றியும், இலங்கை முஸ்லிம்களின் பண்பாடு மற்றும் அரசியல் பற்றியும் அவரின் ஆழமான புரிதலுக்கு அடித்தளமிட்டது எனலாம். 1961 இல் இலங்கைப் பாராளுமன்றத்தில் சமகால மொழி பெயர்ப்பாளராக இணைந்து ஐந்து ஆண்டு காலம் சேவை புரிந்தார். இதுவே அவரது அனுபவமும் அறிவும், ஆற்றலும் வளர்வதற்கு துணையாக அமைந்தது எனலாம்.

பல்கலைக்கழக ஆசிரியராக 1965 இல் சிறி ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இணைந்து கொண்டார். இப்பல்கலைக்கழகம் மிகப் பெரும்பாலும் சிங்கள மாணவர்களையும், ஆசிரியர்களையும் கொண்டதாகவே விளங்கியிருக்கிறது. இப்பல்கலைக்கழகம் முற்றிலும் பெளத்த பின்னணியில் உருவாகிய ஒரு பல்கலைக்கழகமாகும். இங்கு அவர் 13 ஆண்டுகள் சிங்கள மாணவர்களுக்குத் தமிழ் கற்பித்தார்.

அக்காலத்தில் ஒரு இடது சாரியாக வளர்ச்சி பெற்றிருந்த சிவத்தம்பி சிங்கள சமூகத்தையும், அதன் அரசியல் அபிலாசைகளையும் இடதுசாரி நோக்கில் புரிந்து கொள்வதற்கும், தேசிய ஒருமைப்பாடு பற்றிச் சிந்திப்பதற்கும் சிங்கள மொழியில் தேர்ச்சி பெறுவதற்கும் இக்காலகட்டமே உதவியது எனலாம்.

யாழ்ப்பாணத்தை விட்டு நீண்ட காலம் வெளியிலேயே வாழ்ந்த சிவத்தம்பி 1978 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்ற வந்தார். 1996 இல் ஒரு சிரேஷ்ட பேராசிரியராக தன் பணியிலிருந்து ஓய்வு பெறும் வரை அவர் அங்கேயே பணியாற்றினார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சில காலம் தமிழ்த்துறைத் தலைவராகவும், சில காலம் நுண்கலைத்துறைத் தலைவராகவும் அவர் அங்கு பணி புரிந்திருக்கிறார். அவரது பணி ஓய்வின் பின் அவரின் தகுதியையும், சேவையையும் கெளரவித்து தகைசால் ஓய்வுநிலைப் பேராசியராக நியமிக்கப்பட்டார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும், கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராகப் பணிபுரிந்த இவர் தஞ்சைப் பல்கலைக்கழகம், ஸ்கண்டிநேவியா பல்கலைக்கழகம், அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா, பெர்கிளி, விஸ்கான்ஸியன், ஹாவார்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் வருகை தரு பேராசிரியராகப் பணியாற்றி யுள்ளார்.

சிவத்தம்பி அவர்கள் வானொலி நாடகங்களிலும் நடித்துள்ளார். பல்கலைக்கழகக் காலங்களில் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். இந்த நாடக அறிவே பின்னர் வெளிநாட்டில் நாடகம் பற்றிய ஆய்வை மேற்கொள்வதற்கு உறுதுணையாக அமைந்தது எனலாம்.

இவர், பேராசிரியர் வித்தியானந்தன், பேராசிரியர் கணபதிப்பிள்ளை ஆகியோரின் மாணவராக இருந்துள்ளார். இவர்களது வழிகாட்டலில் மரபுவழி நாடகங்களையும், நவீன நாடகங்களையும் ஒரு சேர வளர்த்ததோடு பிற்ப்பட்ட காலங்களில் நாடகத்தை ஒரு கல்வி நெறியாக்கவும் முயற்சிகள் மேற்கொண்டிருந்தார். பல்கலைக்கழகங்களில் நாடகமும் அரங்கியலும் என்ற பட்டப்படிப்பு பாடநெறியினை உருவாக்குவதிலும் முன்னின்று உழைத்தவராவார்.

மார்க்சிய சிந்தனைகளில் அவருக்கு அதிக ஈடுபாடு இருந்திருக்கிறது. இதுவே பிற்காலத்தில் அவர் பல்துறை ஆய்வாளராக வளர்ச்சியடைவதற்கு அடிப்படையாக அமைந்திருந்தது. இலக்கியம், பண்பாடு, சமூகம், அரசியல், வரலாறு என்பவற்றிற்கிடையே உள்ள தொடர்புகளையும், ஊடாட்டத்தையும் அவர் தன் ஆய்வுகளில் விளக்கியிருக்கிறார்.

சமூகவியல் வரலாற்றுப் பார்வை அவரது ஆய்வுகளின் அடிச்சாறாக விளங்கியிருக்கிறது. இந்த வகையில் தமிழிலக்கியத் துறையின் செழுமைக்கும், வளர்ச்சிக்கும் பேராசிரியர் சிவத்தம்பியின் பங்கு முக்கியமானதாகவே அமைந்து காணப்பட்டுள்ளது.

தமிழ் என்று நோக்குகின்ற போதும் அவரது அறிவுப்புலம் குறித்த ஒரு எல்லைக்குள் வரையறுக்கத் தக்க ஒன்றில்லை. சங்க இலக்கியம் முதல் மிகச் சமீபத்திய இலக்கியம் வரையிலும் அதற்கப்பால் நாடகம், சினிமா முதலான கலைத்துறைகளிலும் அகலக் கால் பதித்து அதில் மாபெரும் தேர்ச்சியும் பெற்றார். அவ்வப்போது தோன்றுகின்ற புனைகதைகள், கவிதைகள் முதலான இலக்கியங்களையும், இலக்கியச் சமூகக் கோட்பாடுகளையும் படித்துத் தம் அறிவினைப் புதுப்பித்துக் கொள்ளும் இயல்பினராக இருந்ததோடு, தனது ஆங்கிலப் புலமை காரணமாக இவை உலகமயமானதையும் கூறிக்கொள்ளலாம்.

பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் தமிழ் வாசகர்ளால் நவீன தமிழ் அறிஞர் அல்லது நவீன இலக்கிய விமர்சகர் என்றெல்லாம் அழைக்கப்பட்டார். அவ்வாறு அவர் அழைக்கப்பட்டமைக்குக் காரணம் அவர் எத்துறை கொண்டு ஆய்வு செய்தாரோ அத்துறையில் பலமான புலமைபெற்று விளங்கியமையே ஆகும். தற்கால தமிழ் இலக்கிய உலகின் பீஷ்மர் என்றுதான் கற்றறிந்தோர் இவரை விழித்துக் கூறுகின்றனர்.

இவர் அதிகம் ஈடுபட்டது பழைய, இடைக்கால தமிழ் இலக்கியத்தையும் இலக்கணத்தையுமே ஆகும். ஏனென்றால் பட்டப் பின் படிப்புக்கான ஆய்வுகளுக்கு அவர் பழந் தமிழ் இலக்கியங்களையே நாடிச் சென்றிருக்கிறார். அவருடைய கலாநிதிப் பட்டப்படிப்பு ஆய்வு கூட “புராதன தமிழ்ச் சமுதாயத்தில் நாடகம்” என்றவாறாகவே அமைந்து காணப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வு முறையே சங்க இலக்கியங்களையும் சிலப்பதிகாரத்தையும் மிக நுணுக்கமாகப் பரிசீலிக்க ஓர் ஆய்வாகவும் இருந்திருக்கிறது.

இவர் அதிகமாக ஈடுபாடு காட்டிய நூல் தொல்காப்பியம் என்றே கூறலாம். குறிப்பாக அதன் பொருளதிகாரத்தை மிக நுணுக்கமாக நோக்கியிருக்கிறார். சங்க இலக்கியங்களின் அமைப்புக்கும், அவை தொடர்பாகத் தொல்காப்பியம் கூறும் இலக்கணங்களுக்கும் இடையே முரண்பாடுகள், போதாமைகள் இருப்பதாகக் கருதுத் தெரிவித்திருந்தார். தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலின் உருவாக் கத்துக்கான காரணங்களையும் அவற்றினடியாக தொல்காப்பியரின் ஆளுமைகளையும் புலப்படுத்த முயன்றிருக்கிறார். தொல்காப் பியத்தின் அடியான தமிழ்க் கவிதையினைத் தெளிவுபடுத்தியிருந்தார்.

போசிரியருக்கு தமிழின் பக்தி இலக் கியங்களில் இருக்கும் ஈடுபாடு குறிப்பிடத் தக்கதாகும். பக்தி இலக்கியங்கள் வழிபாட் டோடு மாத்திரம் தொடர்புபட்டவை அல்ல. பக்தி இலக்கியங்களுக்குள் இருக்கும் கவித்திறனையும், மானிட உணர்வையும் புறந்தள்ளிவிடக் கூடாது என்று கூறுகின்றார். மேலும் பக்தி இலக்கியங்களின் பங்கு குறித்தும் சிந்தித்திருக்கின்றார். கம்பனை தமிழ்க் கவிதையின் உன்னதமாகவும், மானிட உணர்வின் சிகரமாகவும் கொள்ளும் இவர் கம்பராமாயணத்தின் ஊற்றுக் கால்களைத் தமிழின் பக்தி இலக்கியங்களிலே கண்டிருக்கிறார்.

மேலும் அனைத்துலகத் தமிழ்க் கலை நிறுவகம் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் இறுதிக்காலம் வரை அந்நிறு வகத்தின் புலமைக் குழுத் தலைவராக இருந்து மிகச் சிறப்பாக வழி நடத்தினார். புலம்பெயர் நாடுகளில் வேறுமொழி பண்பாட்டுச் சூழலில் வாழும் தமிழர் களிடையே தமிழர்களின் இன அடையாள மாகக் கருதப்படுகின்ற மொழி, கலை, பண்பாட்டு விழுமியங்களை அழியவிடாமல் பாது காப்பதில் அயராது உழைத்த கண்ணியவானாகவும் இருந்துள்ளார்.

2000ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டுக்குப் பயணம் செய்து நாடுகளில் உள்ள தமிழ்க்கலை ஆசி ரியர்களை ஒருங்கிணைத்து அதுனூடாக தமிழ்க் கலையினை முன்னெடுத்துச் சென்றுள்ளனர். இதற்காக அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தினை உருவாக்கியிருந்தார். இதனால் பல்லாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழ்க்கலையினை ஆர்வத்தோடு கற்பதற்கு ஏற்ற வகையில் அனைத்துலகத் தமிழக் கலை நிறுவகத்தின் ஊடாக செயற்பாடுகளை முன்னெடுத்துச் சென்றிருக்கிறார். மாறிவரும் விஞ்ஞான உலகிற்கு ஏற்றவகையில் ஆளுமை மிக்க மாணவர்களையும் உருவாக்க வேண்டுமென்பதே இவருடைய பிரதான நோக்கமாக இருந்தது.

அதுமட்டுமில்லாமல் எமது மொழி, எமது சமயம், எமது பண்பாட்டு விழுமியங்கள் யாவற்றையும் வேற்று நாட்டவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதில் அதிகமாகப் பாடுபட்டவருமாவார்.

கட்டாயமாக ஓய்வு தேவைப்பட்ட காலங்களில் கூட உடல் வலிமையையும் பொருட்படுத்தாமல் புலத்தில் வாழும் தமிழ்க்கலை மாணவர்களின் தொடர் கல்விக்கு உதவியாக தமிழ்க் கலைகள் எனும் நூலினையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

இவ்வாறான இலங்கைத் தமிழ் வரலாறு குறித்தும் மற்றும் இலக்கியம் குறித்தும் 70 இற்கு மேற்பட்ட நூல்களையும் 200 இற்கு மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். சுமார் 45 வருட கால பல்கலைக்கழகச் சேவையில் இவர் ஏராளமான மாணவர்களை மிகப்பெரிய கல்வியாளர்களாகவும் உருவாக்கி இருக்கிறார். தன் உயரிய கல்விச் சேவையின் பலா பலனாக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பாராட்டிக் கெளரவிக்கப்பட்டுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இவர் ஆற்றிய பணிகளுக்காக பல விருதுகளைப் பெற் றுள்ளார். அவற்றுள் தமிழக அரசின் அதியுயர் விருதுகளில் ஒன்றான “திரு.வி.க.விருது” பெருமை மிக்கதாகும். இவ்விருதினைப் பெற்ற ஒரே இலங்கையர் பேராசிரியர் சிவத்தம்பி அவர்களே ஆவார்.

பன்முக ஆழுமையாளரான இவர் தமிழுலகம் போற்றும் ஈழத்துப் பேரறிஞர். ஆதலால் மகிழ்வு எங்களுக்கே.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.