புத் 64 இல. 11

கர வருடம் மாசி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 18

SUNDAY MARCH 11,  2012

 
7 ஆண்டுகளில் 10,000 மின் நூல்கள்

7 ஆண்டுகளில் 10,000 மின் நூல்கள்

நூலக நிறுவனம் சாதனை

தமிழ் நூல்களை முழுமையாக இணைய உலகிலேயே உலாவிடச் செய்துவரும் நூலகம் நிறுவனத்தின் பணிகள், வியப்புக்கும் பாராட்டுக்கும் உரியவை. ஒரு பெரும் பல்கலைக்கழகமோ அல்லது அரச நிறுவனமோ செய்ய வேண்டிய பெரும் பணியைத் தமிழார்வமுடைய நண்பர்களினதும் அனுசரணையாளர்களினதும் துணை கொண்டு நூலக நிறுவனம் மேற்கொண்டுவருதல் தமிழ்கூறும் நல்லுலகின் நன்றிக்கும் பாராட்டுக்குமுரிய அழியாத பணியாக கருதப்படுகிறது என பேராசிரியர் சபா ஜெயராசா கூறினார்.

இரண்டாயிரத்து ஐந்தில் ஆரம்பிக்கப்பட்ட நூலக நிறுவனம் 2011 நவம்பர் வரை பத்தாயிரம் (10,000) நூல்விபரப்பதிவுகளை தரவேற்றம் செய்துள்ளதையும் நூலகத் திட்டத்தின் ஏழாவது ஆண்டு நிறைவை முன்னிட்டும் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வை தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குத்து விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பேராசிரியர் சபா ஜெயராசா; எதுவித கட்டணமும் செலுத்தாது யாரும் தமிழ்நூல்களை முழுமையாக கற்கக் கூடிய ஏற்பாடுகளை நூலகம் நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது. மரபுவழியான நூல்கள் மின் நூல்களாக ஆக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. அவற்றுக்குரிய செலவினை அறிவுக்காப்பின் முக்கியத்துவத்தை அறிந்து அன்பர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ். நூலகம் எறிக்கப்பட்ட போது ஒரு லட்சம் நூல்கள் வரை எரியூட்டப்பட்டன. இவ்வாறான ஒரு நிலைத்த ஆவணப்படுத்தல் அக்காலத்தில் இடம் பெற்றிருக்குமாயின், அத்தனை தமிழ் நூல்களையும் காப்பாற்றியிருக்க முடியும்.

நூல்களை ஆவணப்படுத்தலோடு மட்டும் இந்த நிறுவனத்தின் பணிகள் நின்றுவிடப் போவதில்லை. நாட்டார் கலைகள், நாட்டார் வழக்காறுகள், ஆற்றுகை வடிவங்கள் முதலியவற்றை ஆவணப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவிருத்தல் மேலும் மகிழ்ச்சியை தருகின்றது. தமிழியலில் ஆய்வுகளை மேற்கொள்பவர்களுக்கு உதவும் ஆவணங்களை இணையத்தள வழியாகக் கிடைக்கச் செய்யும் நடவடிக்கை நவீன ஆய்வுச் செயல் முறைக்கு வளமூட்டுகின்றது. நூலகங்களுக்குச் செல்லாது இல்லங்களில் இருந்தவாறே தமிழியல் ஆய்வை மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அறிவாற்றுனரின் (ணிலீntors) உதவியைப் பெற்று கொடுக்கும் முயற்சிகளும் செயற்திட்டங்களும் முன்னெடுக்கப்படுதலை அறிவார்ந்த உலகம் எதிர்பார்த்து நிற்கின்றது.

தலைமையுரை நிகழ்த்திய நூலக நிறுவனத்திற்கான இலங்கை இயக்குநர் சி. சேரன் ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி என்ற நூலுடன் தொடங்கிய எமது நூலகத் திட்டம் இன்று ஏழாண்டுகள் கடந்த நிலையில் ஏராளமான தன்னார்வலர்களின் அளப்பரிய உழைப்பினால் பத்தாயிரம் ஆவணங்கள் எனும் இலக்கை பூர்த்தி செய்து வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது. நூலக நிறுவன இயக்குனர் என்ற வகையில் இந்நிகழ்விற்கு தலைமை தாங்குவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

நாம் கடந்து வந்த மைல்கற்கள் ஒவ்வொன்றும் எமது பரிணாம வளர்ச்சியின் பாதைகள், ஒவ்வொரு தூண்கள். 2005ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் திகதி தைப்பொங்கல் தினத்தன்று அத்திவாரம் இடப்பட்ட எமது பணி பலமைல்கற்களை தாண்டி அவை அனைத்தையும் நினைவூட்டும் முகமாகவும் மெருகூட்டும் முகமாகவும் இன்று இப்பெரு விழாவில் கலந்து கொண்டிருக்கின்றோம்.

கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலக மூலையில் பணியாற்றி வந்த நாம் இன்று அதாவது அண்மையில் எமக்கென ஒரு அலுவலகத்தை கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் அமைத்துக் கொண்டோம். அத்துடன் அலுவலகத்திற்குத் தேவையான அதிவேக இணைய இணைப்புகளையும் பெற்றுக் கொள்ளவும் எம்மால் முடிந்தது.

இவ்வளவு தூரம் கடந்து வந்த நாம் சந்தித்த சோதனைகள் வேதனைகள் ஏராளம் அவற்றையெல்லாம் கற்றுக்கொண்ட பாடங்களாகவும், அனுபவங்களாகவும் மாற்றி கொண்டோம். எமக்கேற்பட்ட சோதனைகளையும், வேதனைகளையும் தங்களின் தோல்களில் சுமந்து நின்ற அன்பு நெஞ்சங்கள் இவ்வேளையில் நினைவுகூரப்பட வேண்டியவர்கள்.

நாம் ஒவ்வொருவரும் தனிநபர் என்ற புள்ளியை கடந்து ஒரு சமுதாய பேரியக்கமாக மாறி இன்று வெற்றி நடைபோடுகின்றோம் என்றால் அதற்கு காரணம் நாம் அனைவரும் ஒரு குடும்பமாக அதாவது நூலக குடும்பமாக செயலாற்றுகின்றோம் என்பதே ஆகும்.

டச்சுக்காரர்கள் 1470 முதல் இன்று வரையான நமது அச்சுப்பிரதிகளை பிரான்ஸ் அரசாங்கம் பல மில்லியன் யூரோக்கள் செலவில் இணையத்தில் ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள் ஜப்பான் அரசாங்கம் தீவிர வெறியுடன் இரண்டே ஆண்டுகளில் சாதித்து காட்டுகின்றோம் என்று செயல்படுகிறது.

National Digital Library of America  என்ற திட்டம் அமெரிக்க அரசாங்கத்தால் நினைத்துப் பார்க்க முடியாதளவு பெருமெடுப்பில் துவக்கப்பட்டுள்ளது. எமது அண்டை நாடான இந்தியாவும் Indian Insti tute of Science என்ற அமைப்பி னூடாக இதனை மேற்கொண்டு வருகின்றது.

இவை எல்லாவற்றையும் வைத்து நோக்குவோமாயின் நாமும் இன்று இவை அனைத்திற்கும் ஈடாக எமது மக்களிற்காக எமது சமூகத்திற்காக இப்பணியை ஆற்றிவருகின்றோம் என நாம் பெருமை அடைகின்றோம்.

இன்று எமது மரபின் வேர்களைத் தேடும் பணியில் பலர் முனைப்புக் கொண்டுள்ளார்கள். எமது சமூகம் பற்றிய பூர்வீகத்தை அறிய முற்படுபவர்களுக்கு எந்தளவு முதுசத்தை நாம் சொத்தாக வைத்திருந்தோம் என்பதை எல்லோரும் அறிவதற்கு நாம் ஒரு வெளியை அமைத்துக் கொண்டு இருக்கின்றோம். விஞ்ஞான பூர்வமான ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் வழி அமைத்துக் கொண்டிருக்கின்றோம். உலகின் பல்வேறு மூலைமுடுக்குகளிலும் சிதைந்துவாழும் எம்மவர்கள் தங்கள் பூர்வீகத்தை அறியவும் இனிவரும் சந்ததியினருக்கு எடுத்தியம்பவும் நாம் வழிசமைக்கின்றோம்.

எமது சமூகத்தின் மொழியின் இருப்பை உறுதி செய்வதற்கு ஆவணப் படுத்தல் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. எனினும் நாம் இதுவரை புத்தகவடிவில் வந்த வற்றையே ஆவணப்படுத்தி வருகின் றோம். அதையும் தாண்டி நாம் தொழி ற்பட வேண்டிய பல தளங்கள் உள் ளன. எமது சமூகங்களில் காணப்பட்ட, காணப்படுகின்றது. பேச்சுமொழிகள், நம்பிக்கைகள், தொன்மங்கள், சடங்குகள், நாட்டாரியல்கள், விளையாட்டுக்கள் நிர்வாகமுறைகள்,, தொழிற்சாலைகள், கலைகள் போன்ற வெவ்வேறு தளங் களில் உள்ள பரிணாமங்களை நாம் ஆவணப்படுத்த வேண்டியுள்ளது. இது தொடர்பாக நாம் ஆழமாக யோசி த்து பல்வேறுபட்ட ஆய்வு முயற்சி களையும் ஆரம்பித்து வைத்துள்ளோம். இவற்றை ஆவணப்படுத்த வேண்டிய பல்வேறு தொழில் நுட்பம் சார்ந்த முறைகள் பற்றியும் எமது தொழில் நுட்பக்குழு ஆய்வு செய்து வருகின்றது. இவை அனைத்தும் வெகுவிரைவில் எம்மால் சாத்தியப்படுத்த முடியும் என நம்புகின்றோம். அதுமட்டுமல்லாமல் அறிவு தகவற் சேகரங்களை கட்டற்ற திறந்த முறையில் வழங்கி இலங்கை தமிழ் பேசும் சமூகங்களின் கல்வி ஆய்வு மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு புத்துயிரளிப்போம்.

இலங்கை தமிழ் பேசும் சமூகங்கள் தொடர்பான எல்லாவகையான அறிவு தொகுதிகளையும் ஆவணப்படுத்தி பாதுகாத்து அனைவருக்கும் கிடைக்கச் செய்தல் எனும் எமது பணி இலக்கு நோக்கிய பயணம் இன்னும் வேகத்துடன் தொடர தங்கள் அனைவரினதும் பூரண ஆதரவை வேண்டி நிற்கின்றோம். இவ் அரிய வரலாற்றுத் திட்டத்தின் ஏழாவது (7) ஆண்டுவிழா கொண்டாடிடும் நாம் எமது 10வது ஆண்டு நிறைவு விழாவில் ஒரு இலட்சம் எனும் இலக்கை அடைவோம் என உறுதிபூணுகின்றோம் என்றார்.

கடந்த ஏழாண்டு காலகட்டத்தில் நூலக செயல் திட்டங்களுக்கு துணை நின்ற பங்காளிகளின் கெளரவிப்பில் ஆலோசனை சபை உறுப்பினர்களான 'சாகித்திய ரத்னா' பேராசிரியர் சபா ஜெயராசா, வைத்திய கலாநிதி தி ஞானசேகரன் பங்களிப்பாளர்கள் மூத்த படைப்பாளி தெளிவத்தை ஜோசப், கொழுந்து சஞ்சிகை ஆசிரியர் அந்தனி ஜோசப், சிற்றிதழ்களின் தீவிர செயற்பாட்டாளர் மேமன்கவி பதிப்புத் துறையில் தடம் பதித்த குமாரன் கணேசலிங்கம் ஆகியோரை நிகழ்விற்கு விருந்தினராக வந்திருந்த தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் மு. கதிர்காமநாதன், தொழில் அதிபரும் மாநகரசபை உறுப்பினருமான எஸ். குகவரதன், ஆகியோர் பொன்னாடை போர்த்தி கெளரவம் செய்தார்கள்.

ஸ்ரீராம் சிருஷ்டி கலையாலத்தின் மாணவிகளின் 'பெங்கோலி' கிராமிய நடனம் சபையோரை மகிழ்வித்தது.

"வாழ்க்கை எழுதுகின்ற வாசிப்புப் புத்தகம்" என்ற தலைப்பில் கவிஞர் சடகோபன் தலைமையில்

'கல்நூல்' என்ற தலைப்பில் கவிஞர் த. வி. ரிசாங்கன்,

'காய்ந்த ஓலைச்சுவடி' என்ற தலைப்பில் கவிஞர் க. ஹரிசன்

(கடதாசிப்புத்தகம்' என்ற தலைப்பில் கவிஞ்ர் தி. சுகந்தன்,

'மின்நூல்' என்ற தலைப்பில் கவிஞர் மு. மயானும் கவிதை மூலம் புத்தகப் பயன்பாட்டையும் இணைய நூலகத்தின் பயனையும் கவிதையில் சபையில் முன்வைத்தனர்.

காலத்தின் தேவை கருதி இளம் சந்ததியினர் மேற்கொண்டுள்ள இப்பாரிய பணியில் வெறுமனே பார்வையாளராக இருந்து விடாமல் நாமும் பங்காளராக செயல்படுவோம்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.