புத் 64 இல. 11

கர வருடம் மாசி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 18

SUNDAY MARCH 11,  2012

 

இன்று ஆரம்பமாகும் ஆசிய கிண்ணப் போட்டி ஏனைய அணிகளுக்கு சிம்ம சொப்பனமாய் இலங்கை

இன்று ஆரம்பமாகும் ஆசிய கிண்ணப் போட்டி

ஏனைய அணிகளுக்கு சிம்ம சொப்பனமாய் இலங்கை

26 வருடங்கள் பழைமை வாய்ந்த ஆசிய கிரிக்கெட் கிண்ணப் போட்டி 11வது தடவையாகவும் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இன்று பங்களாதேஷ் மிர்பூர் நகரில் பங்கா மைதானத்தில் ஆரம்பமாகிறது.

போட்டியை நடத்தும் பங்களாதேஷ் அணி முதன் முதலில் சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டதும் 1986ஆம் ஆண்டு ஆரம்பமான ஆசியக் கிண்ண பாகிஸ்தானுக்கெதிரான போட்டியின் போதுதான்.

இதுவரை 10 ஆசியக் கிண்ணப் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இம்முறை நடைபெறுவது 11வது முறையாகும். இதற்கு முன் நடைபெற்ற போட்டிகளில் இந்திய அணி 5 முறையும், இலங்கை அணி 4 முறையும், பாகிஸ்தான் அணி ஒருமுறையும் கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளன. இம்முறை ஒவ்வொரு அணியும் மற்றைய அணியுடன் லீக் சுற்றில் ஒருமுறை மோதும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரு இடங்களைப் பெறும் அணிகள் 22ம் திகதி நடைபெறும் இறுதிப் போட்டியில் விளையாடும்.

இதுவரை நடைபெற்ற ஆசியக் கிண்ணப் போட்டிகளில் இந்திய, இலங்கை அணிகளே ஆதிக்கம் செலுத்தியுள்ளன. இம்முறை ஆசியக் கிண்ணத் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காரணம் கடந்த தொடர் தோல்விகளிலிருந்து மீள்வதற்கு இந்திய அணி இத் தொடரை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம். வழமை போல் ஆசிய கண்ட மைதானங்களில் இந்திய அணி சிறப்பாக விளையாடும்.

ஆனால் இந்திய அணியில் தற்போது குத்து வெட்டுகளும், ஒற்றுமையீனமும் தலைதூக்கியுள்ளன. ஆசியக் கிண்ணப்போட்டியிலிருந்து செவாக், ஸஹீர்கான், உமேஷ் யாதவ் நீக்கப்பட்டதும், உப தலைவர் பதவி இளம் வீரர் விராத் கோஹ்லிக்கு வழங்கப்பட்டது பற்றியும் பல்வேறு கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன. செவாக் நீக்கப்பட்டது தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் கூறப் பட்டாலும் தோனியுடன் ஏற்பட்ட மோதல்தான் அவர் நீக்கப்பட்டதற்குக் காரணம் எனப் பரவலாகப் பேசப்படுகிறது. செவாக் நீக்கப்பட்டதற்கு தேர்வுக்குழுத் தலைவர் ஒரு கருத்தையும், இந்திய கிரிக்கட் சபை (பி. சி. சி. ஐ) அதற்கு முரணான கருத்தையும் கூறியுள்ளது. அவுஸ்திரேலிய முக்கோணத் தொடரின் போது சச்சின் டெண்டுல்கர், கெளதம் காம்பீர், செவாக் ஆகியோரை சுழற்சிமுறையில் விளையாடுவதற்கு வழிவகுத்தவர் தலைவர் தோனி. இதிலிருந்துதான் பிரச்சினை ஆரம்ப மானது. அப் போட்டித் தொடரின் போது பத்திரிகைபேட்டியில், தலைவரைச்சாடி கெளதம் காம்பீரும், மேற்குறிப்பிட்ட வீரர்களைச்சாடி தோனியும் பேட்டி வழங்கி பகையை வளர்த்துக் கொண்டிருந்தனர்.

ஆசியக் கிண்ணப் போட்டியில் இக்கசப்பான சம்பவங்களை மறந்து ஒற்றுமையுடன் விளையாடாவிட்டால் தொடர் தோல்விகளிலிருந்து இந்திய அணி மீள்வது கடினமே. சுமார் ஒரு வருடத்தின் பின் பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி லீக் போட்டியொன்றில் மார்ச் 18 மோதவுள்ளது. இப்போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

பாகிஸ்தான் அணியானது கடைசியாக விளையாடி இங்கிலாந்துடனான 4 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரை முழுமையாக இழந்ததன் பின் அவ்வணி பங்குகொள்ளும் முதலாவது போட்டித்தொடர் இதுவாகும். ஆசிய கிண்ணப் போட்டிகளில் சிறந்த பெறுபேறுகளை பெறாத பாகிஸ்தான் அணி இம்முறை சாதிக்கலாம் என்று எதிர்பார்க்கலாம். உள்ளூர்ப் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் நkர் ஜெம்ஷட் 2009ம் ஆண்டுக் குப் பிறகு மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்துத் தொடரில் சிறப்பாகச் செயற்படாத விக்கட் காப்பாளர் அத்னன் அக்மாலுக்குப் பதிலாக சப்ராஸ் இணைக்கப்பட்டுள்ளார்.

மீண்டும் தலைமைப் பொறுப்பை பொறுப்பேற்ற மஹேல ஜயவர்தனா பல வியூகங்களை வகுத்து, ஒவ்வொரு போட்டியின் போதும் இலங்கை அணி வீரர்களை மிளிரச் செய்திருந்தார். ஒருவர்தான் சிறப்பாகச் செய்கிறார் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாதளவுக்கு மொத்த அணியுமே சிறப்பாகச் செயற்பட்டுள்ளது. ஆரம்ப போட்டிகளில் சோபிக்காத உபுல் தரங்கவுக்குப் பதிலாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கிய தலைவர் மஹேல ஜயவர்தன தனக்காக விளையாடாது அதிரடியாக ஆடி முதல் இறுதிப் போட்டியைத் தவிர மற்றைய எல்லாப் போட்டிகளிலும் சிறந்த ஆரம்பத்தை தனது அணிக்காகப் பெற்றுக் கொடுத்தார். முன்னாள் தலைவர் டில்ஷான் சிறந்த ஒத்துழைப்புக் கொடுத்துள்ளார். அவர் இத் தொடரில் ஆகக் கூடுதலான ஓட்டங்கைளப் பெற்றுள்ளார். துடுப்பாட்டத்தில் நடு வரிசையில் வரும் குமார் சங்கக்கார, சந்திமால், திரிமான்னவும் பின்வரிசையில் வரும் திஸர பெரேரா, உபுல் தரங்க, குலசேகர போன்ற அனைவரும் இத் தொடரில் சிறப்பாகச் செயற்பட்டனர். பந்துவீச்சும் குறிப்பிடத்தக்களவு சிறப்பாக இருந்தது. களத்தடுப்பில் மட்டும் சற்றுச் சொதப்பியிருந்தனர்.

எனவே ஆசியக் கிண்ணப் போட்டியில் மற்றைய அணிகளுக்கு பெரும் சவாலாக இலங்கை அணி விளங்கும் என்பதில் சந்தேகமில்லை.

பங்களாதேஷ் அணியையும் குறைத்து எடை போட முடியாது. சொந்த மண்ணில் நடைபெறுவதால் அந்நாட்டு ரசிகர்கள் முன்னிலையில் சிறப்பாகச் செயற்படுவார்கள் என எதிர்பார்க்கலாம். மேலும் அண்மையில் அந்நாட்டில் நடைபெற்ற பி. பீ. எல். போட்டித் தொடர்களில் அந்நாட்டு அணி வீரர்கள் பங்குகொண்டு திறமையாக விளையாடி சிறந்த பயிற்சியினையும் பெற்றுள்ளனர். எனவே இப்போட்டித் தொடர் விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

மேற்படி தொடரில் அனைத்துப் போட்டிகளும் பகல்-இரவு ஆட்டமாக நடைபெறும். இலங்கை நேரப்படி பி. ப 2.00 மணிக்கு ஆரம்பமாகும் போட்டிகள் அனைத்தும் கால்டன் ஸ்போட் நெட்வேர்க் (சிஎஸ்என்) தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப்பாகின்றன.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.