புத் 64 இல. 11

கர வருடம் மாசி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 18

SUNDAY MARCH 11,  2012

 
காதி நீதிபதிகள் கடமையை

காதி நீதிபதிகள் கடமையை

சரிவரச் செய்கிறார்கள்:
 

தவறுகள் இருப்பின் நிரூபியுங்கள்

அண்மைக்காலமாக இல ங்கை அபிவிருத்திக்காக ஊடக மன்றத்தினால், ஊடகவியலாளர்களில் இலங்கையில் அமுலிலுள்ள முஸ்லிம் தனியார் சட்டத்துடன் தொடர்பான கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டு வருகின்றமையை அவதானிக்க முடிகிறது. கடந்த 5ம் திகதி தினகரன் வாரமஞ்சரியில் பிர சுரிக்கப்பட்டிருந்த 'காதிமாரின் உதாசீன த்தால் பாதிக்கப்படும் முஸ்லிம் பெண் கள் என்ற கட்டுரையை வாசிக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிட்டியது.

இலங்கை அபிவிருத்திக்கான ஊடக மன்றத்தினால் தயாரிக்கப்பட்டு ஊடகங்களில் வெளியிடப்படும் கட் டுரைகள் பெரும்பாலும் காதி நீத வான்களைக் குற்றம் சுமத்துபவை களாகவே இருப்பதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அபிவி ருத்திக்கான ஊடக மன்றம் ஒருசில பெண்களிடம் கலந்து பேசி விட்டு இவ்வாறான அறிக்கைகள் வெளியி டுவதை நான் ஒருபக்கச் சார்புடையது என்றே கருதுகிறேன்.

கட்டுரையில் தாபரிப்புப் பணம் தொடர்பில் கலாநிதி நபீஸ் வெளியிட்ட கருத்தும் குறிப்பிடப்பட்டிருந்தது.

'தாபரிப்பு பொறுத்தமட்டில், அது தொடர்பாக உள்ள சட்ட விதிமுறைகள் எதுவும் திருத்தப்பட வேண்டியதில்லை. காலத்திற்கு ஏற்ற வகையில் குடும்பத்திற்குத் தேவையான செலவினை மதிப்பீடு செய்து நியமிக்கும் அதிகாரம் காதியாருக்கு உண்டு. இருக்கின்ற சட்டத்தைப் பயன்படுத்தினாலேயே போதும்.

மலேசியா போன்ற நாடுகளில் தாதிமார் இதனைச் சிறப்பாகச் செய்கிறார்கள். நாளாந்தம் ஒருவருக்கு எவ்வளவு செலவு ஏற்படும் என்பதைக் கணிப்பீடு செய்து தாபரிப்புப் பணத்தை விதிக்கிறார்கள். நமது காதிமாரும் இத்தகைய நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும். நமது காதிநீதிபதிகளைப் பொறுத்தமட்டில் அவர்கள் பலப்படுகிறார்கள். அவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரம் என்னவென்பது அவர்களுக்குத் தெரியாது. பராமரிப்புத் தொடர்பில் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்படும் போது அதனைக் கணவன் பின்பற்றாவிட்டால் மாஜிஸ்திரேட் ஊடாக அவர்கள் தமது ஆணையை நடைமுறைக்குக் கொண்டு வரலாம். மீண்டும் மீண்டும் கெஞ்சிக் கொண்டிருக்கின்ற தேவை காதிமாருக்கு இல்லை என்று கலாநிதி நபீஸ் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு கலாநிதி நபீஸ் கருத்துத் தெரிவித்திருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். காதிமாருக்கு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் தெரியும். அவர்கள் பயப்படத் தேவையில்லை. தாபரிப்பு வழக்கு தீர்ப்புகள் பெரும்பாலும் இரு தரப்பு இணக்கப்பாட்டுடனேயே வழங்கப்படுகின்றன. பல சந்தர்ப்பங்களில் இணக்கப்பாடின்றியும், காதி நீதவான் தனது அதிகாரத்தைப் பிரயோகித்து தீர்ப்பினை வழங்குகின்றார். பிரதிவாதியின் வருமானம், அவர் குடும்பமாக வாழ்ந்த போது செலவு செய்த விபரங்கள், அவரது தொழில், சம்பளம், குடும்பப் பின்னணி மற்றும் பிள்ளைகளினது செலவுகள், தேவைகள் என்னும் விபரங்கள் பெறப்பட்டு அதனடிப்படையில் தாபரிப்புப் பணம் உத்தரவிடப்படுகிறது.

காதிநீதிபதிகள் தாம் நினைத்தவாறு தீர்ப்புகள் வழங்குவதில்லை. தாம் வழங்கிய தீர்ப்பின்படி தாபரிப்புப் பணம் செலுத்தப்படாவிட்டால் தாம் வழங்கிய தீர்ப்பினை ஒரு வலியுறுத்தற்கட்டளை மூலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஊடாக நடைமுறைப்படுத்துகின்றனர். காதி நீதிபதிகளுக்கு இது பற்றி சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை.

ஆனால், நடைமுறையில் இது நிகழ்ந்து கொண்டிருக்கும் போது, இது தொடர் பாக ஆய்வுகளை மேற் கொள்ளாது இலங்கை அபிவிருத்திக்கான ஊடக மன்றம் கட்டுரைகளைப் பிசுரிப்பது என்ன நியாயம்.

காதி நீதிமன்றினால் வழங்கப்பட்ட தீர்ப்பின்படி பிரதிவாதி தாபரிப்புப் பணம் செலுத்தாவிட்டால், சம்பந்தப் பட்ட பெண் காதிநீதிமன்றத்துக்கு எழுத்து மூலம் விண்ணப்பிக்க வேண்டும். காதி நீதிமன்றம் பிரதிவாதியை காதி நீதிமன்றில் ஆஜராகும்படி அறிவித்தல் அனுப்பும். இவ்வாறு மூன்று அறிவித்தல்கள் அனுப்பியும் அவர் நீதிமன்றம் சமுகமளிக்காது விடின், சமுகமளிக்காமைக்கான காரணம் அறிவிக்கப்படாதவிடத்து காதிநீதி மன்றத்தினால் மஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு வலியுறுத்தற் கட்டளை அனுப்ப முடியும். கட்டுரையில் குறிப்பிட்டிருப்பது போன்று காதிநீதிபதிகள் கெஞ்சிக்கொண்டிருப்பதில்லை.

இன்று காதிநீதிமன்றங்களுக்கு வரும் பெரும்பாலான பெண்கள் தமது கணவரிடமிருந்து பிள்ளைகளுக்கோ, அல்லது தனக்கோ தாபரிப்புப் பணம் கோரும் போது கணவனின் வருமானம், தொழில்; அவரது விலாசம் என்னும் விபரங்கள் கூட சரியாக தெரியாதவர்களாக இருக்கிறார்கள். தாபரிப்புக் கோரும் போது இந்த விபரங்களை அவர்கள் காதிநீதிமன்றுக்கு தெரிவிக்க வேண்டும்.

ஊடகமன்றம் சட்டத்தை உதாசீனம் செய்துள்ள சம்பவங்களையும், சம்பந்தப்பட்ட காதி நீதிபதிகளின் விபரங்களையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வரவேண்டும். வெறுமனே பொதுவாக அனைத்து காதி நீதிபதிகளையும் குற்றம் சுமத்துவதை தவிர்ந்து கொள்ள வேண்டும்.

மாத்தளை மாவட்ட சம்பவம் ஒன்றினையும் கட்டுரையாளர் விளக்கியிருக்கிறார். ஒரு காதிநீதிபதி வழங்கும் தீர்ப்பில் நியாயமில்லை. தீர்ப்பு தவறானது எனக் கருதும் போது அத்தீர்ப்புக்கு எதிராக காதி கள் சபைக்கு மேன்முறையீடு செய்யலாம் என்பதை ஏன் இந்த ஊடக மன்றத்தினால் பெண்கள் மத்தியில் முன்வைக்க முடியாது? விழிப்புணர்ச்சிகளை ஏற்படுத்த முடியாது. வெறுமனே சம்பவங்களை எழுதுவதனால் மாத்திரம் தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியாதல்லவா?

ரம்புக்கனையைச் சேர்ந்த ஒரு பெண்ணின் கதையையும் கட்டுரையாளர் எழுதியுள்ளார். காதி நீதவான்கள் குறித்துபெண்களின் கருத்துக்களை முன் வைத்திருக்கும் அவர் ஏன் சம்பந்தப்பட்ட காதிநீதிபதிகளின் கருத்தையும் வினவவில்லை. அவர்களின் கருத்துக்களையும் கட்டுரையில் சேர்க்கவில்லை. இவ்வாறு சேர்க்கப்பட்டிருந்தால் இது தொடர்பில் ஒரு தெளிவு பிறந்திருக்கும்.

கலாநிதி நபீஸ் சொல்வது போன்று சட்டத்தை மாற்ற வேண்டியதில்லைதான் அதனை அமுல்படுத்தாத தாதிமாரைத் தான் மாற்றவேண்டும். ஆம், அவர் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். சட்டத்தை சரியாக அமுல் நடத்தாத ஓரிரு காதிமார்கள் இருக்கலாம். அவர்கள் மாற்றப்பட்டு வருகிறார்கள். காதிநீதிபதிகளின் நியமனம் மூன்று வருடங்களுக்கே வழங்கப்படுகிறது. மூன்று வருடங்களில் பின்பு புதிதாக விண்ணப்பங்கள் கோரப்பட்டே நியமனங்கள் வழங்கப்படுகின்றன. தவறிழைக்கும் காதிநீதிபதிகள் மீண்டும் நியமனம் பெறுவதில்லை.

இன்று திருமணப் பிணக்குகள் அதிகரித்துச் செல்வதற்கும் காதிகோடுகள் நிரம்பி வழிவதற்கும் அடிப்படைக் காரணங்கள் என்ன? இவைகளை எவ்வாறு களையலாம் என்பது தொடர்பில் ஊடகமன்றம் கரிசனை கொண்டு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக சில முஸ்லிம் விவாக பாதிவாளர்களினால் மேற்கொள்ளப்படும் ஷரீஆ சட்டத்திற்கும் முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்திற்கும் முரணான விவாகப் பதிவுகள் இன்று சமூகத்தில் குடும்ப சீரழிவுகளை ஏற்படுத்தி வருகின்றன. இது தொடர்பில் நாம் தீவிர கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

பெண்களின் விடிவுகளுக்காக உரிமைகளுக்காக ஊடக மன்றம் காதி நீதிபதிகளுடன் கைகோர்த்துச் செயற்பட வேண்டும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.