புத் 64 இல. 11

கர வருடம் மாசி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 18

SUNDAY MARCH 11,  2012

 

கண்டிப்பு உள்ள இடத்தில் காரியம் இருக்கும்

கண்டிப்பு உள்ள இடத்தில் காரியம் இருக்கும்

ஹீpடீரென்று ஒருநாள் இரவு வாத்தியார்மகள் கூக்குரலிட்டாள்! எல்லோருடையவும் தூக்கம் கலைந்தது! வாத்தியாரும் அறையண்டைவந்து எட்டிப்பார்த்தார். மகள் வயிற்றுவலியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறாள்! தாய் மனோகரி ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கிறாள்! அவள் கூப்பாடு கூடிக் கொண்டே இருக்கிறது!

எட்டிநிற்கும் கணவனைக் கண்டு கொண்டாள் மனைவி “என்னப்பா, பார்த்துக் கொண்டு நிற்குaங்க! கெதியா ஆட்டோவப்புடியுங்க ஆசுப்பத்திரிக்குக் கொண்டு போகவேணும்!” சத்தமிட்டாள். அவர் பதைபதைப்போடு ஓடிப்போய் நான்காவது வளவில் வெளிப்படைலயில் நிறுத்தியிருக்கும் முச்சக்கரத்தை அழுத்த அவன் தூக்கம் கலைந்து வந்து அவர்கள் வீட்டுக்கு முன்னால் நிறுத்த, இருவருமாக மகளைத் தூக்கிக் கொண்டு வைத்தயமனை ஏக, வைத்திய உதவியைநாட, ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்ல, இருவரும் சேர்ந்து ஒத்துழைப்புவழங்க, பிடிவாதம் தளர்ந்து சமாதான விளக்கு எரிந்தது!

முன்பும் ஒருமுறை இப்படித்தான், இருவரும் கதைபேச்சு இல்லாமல் இருந்து கதிர்காமநாதன் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுக் கொண்டு இருவரும் வன்மம் வைராக்கியத்தில் ஈடுபட்டு வரும்நாளில், பெற்றோர் ஏகாம்பரம் தம்பதிகள் சமாதானம் சக வாழ்வு ஏற்படாதா என்று ஏங்கி வரும் போதில், கதிர்காமநாதனின் தங்கை குடும்பத்தோடு வந்து சேர்ந்தாள் வெளிநாட்டில் இருந்து!

கல்யாணம் முடித்து வெளிநாடு போன பின் இப்போதுதான் வந்திருக்கிறாள் தங்கை! அவளுக்கு பிள்ளைகள் கணவனுக்கும் திருகோணமலையின் முக்கியதலங்களை காட்சிகளை எல்லாம் காட்டி மகிழ்விக்க வேண்டும்! நன்கு அன்புடன் உபசரித்து விருந்தோம்பல் செய்து தென்புபடுத்த வேண்டும்! இவைகளுக்கெல்லாம் மனைவியின் ஒத்துழைப்பு இல்லாமல் எப்பிடி?

அவர்தான் வலியச் சென்று மனைவியிடம் சரணாகதியடைந்தார்!... இப்படியே சண்டையும் சச்சரவும் நிர்ப்பந்தத்தால் சமாதானமும் ஏற்பட்டு வாழ்க்கை வண்டி போய்க் கொண்டிருந்தாலும், கதிர்காமர் நெஞ்சில் ஒரு ஈறல் அரித்துக் கொண்டே இருக்கும்!

“இவள் என் வழிக்குக்கட்டுப்பட்டு நடக்கிறாள் இல்லை. நான் சொல்வது எதையும் கேட்டு நடக்கிறாள் இல்லை. தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கிறாள் இல்லை! என்னை மதிக்கிறாள் இல்லை!

ஆகையால் அவர் தினசரி மனைவியோடு எரிந்துவிழுந்து கொண்டே தான் இருந்து வந்தார்!

இந்தக் காட்சிகளை நாளும் பொழுதும் பார்த்து சகிக்க இயலாமல் வேதனைப் படலாயினர் மனோகரியின் பெற்றோர்- ஏகாம்பரம் தம்பதிகள்! ‘நெடுகிலும் இவர்களுக்குள் பிரச்சினைதானா! ஒற்றுமையாக சந்தோச சல்லாபமாக.... அதுவும் வேண்டாம் சண்டை சச்சரவு இல்லாமல் அமைதியாக ஒருநேரம்கூட வாழவில்லையே இவர்கள்! என்று பரிதவிப்புக்குள்ளாயினர்! தாயார்தான்மிகவும் கொதிப்படைந்து கொண்டே இருந்தார்! அவர் உணர்ச்சிவசப்பட்டு முட்டிமோதிக் கொண்டே இருந்தார்! இடையிலே புகுந்து மருமகனை நார்நாராகக் கிழிக்க வேண்டும் போலிருக்கும்! நிலைமை தெரிந்து ஆசிரியர் ஏகாம்பரம் சைக்கினையால் அவரை ஆறுதல்படுத்துவார்!

என்றாலும் அவர் ஆத்திரம் தீர, புறுபுறுப்பைக் கொட்டுவார்!

“இந்தாள் என்ன, பெண்டிலோட நெடுக ஏறிவிழுந்து கொண்டேயிருக்கு! வீட்டிலயும் வாத்திவேல பார்க்குது! பொலிஸ் இன்ஸ்பெக்டர் மாதிரி எல்லே நெடுக்கிலும் அதிகாரம் பண்ணிக் கொண்டு இருக்கிறார்! இந்தாள்ற முகத்தில ஒருக்கா எண்டாலும் சிரிப்பக் காண ஏலாம இருக்கு. என்ரபிள்ளைய கிளியப் பிடிச்சு பூனையிற்றக் குடுத்தமாதிரிப் போயிற்று! அவள் என்னமா உத்தரிக்கிறாள் இவனோட..... போதாக்குறைக்கு எங்களையும் எல்லே தாக்கிக்கதைக்கிறார்! ‘என்ன நினைச்சுப் பெத்து வளர்த்தாங்களோ தெரியாது! என்ன பிறப்பும், வளர்ப்பும்!.... பரம்பரைக்குணத்தையோகாட்டுaர்? எப்படித்தான் சொன்னாலும் பரம்பரைக்குணம் போகுது இல்ல! உன்ர அப்பன் ஒரு விசர முடிச்சார் அந்த விசர் ஒருவிசரப் பெத்தது! என்ர வாழ்க்கையும் விசர்வாழ்க்கையாப் போச்சுது’ என்டெல்லே பேசுறார் எங்களை எல்லாம் தாக்கி! எனக்குவாற ஆத்திரத்துக்கு கொல்லத்தான் எண்ணமாயிருக்கு சாப்பாட்டுக்க என்னத்தையும் வைச்சு!” ஏகாம்பரத்தார் வாயிலே விரலை வைத்து ‘சத்தம் போடாதே!’ என்று எச்சரித்தார். அவர் காதிலே விழுந்தால் பெரிய பிரச்சினையாகும்! “நீங்கள் பயந்து பயந்து இருங்கோ, அவங்கள்ற குடும்பப் பிரச்சினையில நாங்கள் தலையிட்டால் பெரிய பிரச்சினையாகி விடும் எண்டு சொல்லிக் கொண்டு இருங்கோ! ஒருநாளைக்கு அவளும் ஆத்திரம் தாங்காமல் ஏதும் இசக்குப்பிசக்காச் செய்து போட்டாள் என்றால்தான் ஓடிமுழிப்பீர்கள்!”

“அந்தளவு தூரம்வராது அவரும் சின்னதுக்கெல்லாம் பிரச்சினைப்படுகிறார்தான் இவ்வளவு பேச்சுப் பேசினாலும் ஒருநாள் எண்டாலும் கை நீட்டி அடிக்கல்லத்தானே!.... உன்ர மகள்றவாயும் கூடாதுதானே! இவள்றவாய்க்கு வேறவன் எண்டால் அடிச்சு நொருங்கியிருப்பான்! இவள் வாயமூடிக் கொண்டிருந்தால் சண்டை ஏன்பருக்குது? அவள் சொல்லுற மாதிரிக் கேட்டு நடந்தால் சண்டை ஏன் வருகுது!” என்று சொன்னவர், ‘நானும் உன்னோட இதேமாதிரி உத்தரிச்ச நான் தானே’ என்று உச்சரிக்கவந்ததை முழுங்கிக் கொண்டார்! “இவரோட ஒப்பிடக்குள்ள இளையவள்புருசன் எவ்வளவோதிறம்! அந்தாள் வாறது போறது இருக்கிறது ஒண்டுமே! தெரியாது தானும் தன்னுடையபாடும்! புருசன் எண்டால் இப்படி எல்லே இருக்க வேணும், எனக்கு இங்க ஒரு நிமிசம் கூட இருக்கபிடிக்குதில்ல அதுதான் அங்க ஓடி ஓடிப்போறநான்!” இந்தப் பேச்சைக் கேட்டு ஏகாம்பரத்தார் நமட்டுச் சிரிப்பு சிரித்தார், ஏனோ?

அக்காள் மனோகரி வீட்டில் இப்படி இருக்க தங்காள் மனோரஞ்சிதம் வீட்டில் என்ன நடக்கிறது என்று பார்ப்போமா? இரஞ்சிதம் வீட்டில் தொலைக்காட்சியை குடும்பத்தோடு எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இரஞ்சிதம் மடியில் வெண்டிக்காயை வைத்து நறுக்கிக் கொண்டிருந்தாள். பிள்ளைகள் கொப்பி புத்தகங்களோடு காட்சிப் பெட்டியின் முன்னால் இருந்தனர், காட்சியையும் புத்தகங்களையும் மாறிமாறிபார்த்தபடி! இரஞ்சிகணவன், அவன் தான் மாமியார் மெச்சியமருமகன், காட்சியை வெகுவாய் இரசித்துக் கொண்டிருந்தான் வாயிலே சிகரட் புகைந்து கொண்டிருந்தது!

ஏகாம்பரம் தம்பதிகளும் அதைக் கவனமாய் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர். காட்சிப்படத்தைப் பார்த்து உணர்ச்சியில் தம்மை மறந்து வார்த்தைகளை உதிர்த்தனர்:

‘என்னமாதிரிசாறி உடுத்தியிருக்கிறாள்! கரை, சட்டைக்கு நல்லா மெச்பண்ணுது! - மனோரஞ்சிதம், “என்மாதிரி டூயட் ஆடுறாள்! நானும் இதுமாதிரி ஆடிக்காட்ட வேணும்” - மகள். “தனியநிண்டு எத்தினபேர அடிச்சுவிழுத்துறான்! அவன எத்தின பேர் காதலிக்கினம்! நானும் கெதியா கராட்டி பழகப் போக வேணும்” - மகன். “இதில வாற பொம்புளைகள்ற இடையையும் தொடையையும் பார்த்தால் இன்னொரு கலியாணம் முடிக்க வேணும் போல இருக்குது!” - ஆசைமருமகன் மனதுள்! “ஆ! இப்பிடி ஆக்கின செய்யுறானே பொஞ்சாதிக்கு! என்னடி பார்த்துக் கொண்டிருக்கிறாய் நெருப்புக் கொள்ளியால வையன்ரி அவன்ரமூஞ்சியில!” - தாயார்.

“ஆம்பிளைகள் எல்லாம் முழுவதையும் மூடிமறைச்சுக் கொண்டு நிண்டு ஆடுறாங்கள். இவள் ஒருத்தி மட்டும் முக்கால் நிர்வாணமாக நிண்டு கொண்டு ஆடுறாளே!.... பரமேசா! காலம் கெட்டுப் போச்சு! இதுகளகுடும்பத்தோட இருந்து பார்க்க ஏலுமோ?! இளசுகள் உருப்படியா வளருங்களோ?.... இது மூத்த மருமகன் தான்சரி! கண்ட நேரமும் ரீ.வி. திறக்கவிடமாட்டார். அதிலையும் பிள்ளைகள் படிக்கிற நேரம் கிட்டவும் போக ஏலாது! இது இந்த மருமகன் பிள்ளைகளோட சேர்ந்து தானும் பேய்ப்பிராக்குபாக்குது!” - ஆசிரியர் ஏகாம்பரம்

இப்படியாக பலரும் பலவிதமான அபிப்பிராயங்களோடு காட்சிகளைப் பார்த்து இரசித்துக் கொண்டிருக்கும் போது, உறவுப் பெண் ஒருத்தி வந்தாள் சற்று வயதானவளாயிருந்தாள். அவள்வந்ததைக் கூட ஒருவரும் கவனிக்கவில்லை! எல்லோரும் படக்காட்சியை அவதானித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஏகாம்பரத்தார் அங்கு இருக்கவில்லை எதையோ நினைத்துக் கொண்டு போய்விட்டார். வந்த பெண் கொஞ்ச நேரம் நின்று இருப்பவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள் வா... இரு... என்று சொல்லவில்லை!

அவள்தானாகவே காலியாக இருந்த ஒரு முக்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு தானும் தொலைக்காட்சி பார்த்தாள். விளம்பர நேரம் வந்து கூட யாரும் அவளைச் சட்டை செய்யவில்லை. அவளும் படம்பார்த்துவிட்டு வந்த சுவடே தெரியாமல் போய்விட்டாள்! அவள் வந்ததும் போனதும் யாருக்கும் தெரிந்திருக்காது. அவள் ஏதும் சேதி சொல்லவந்தாளா, தூது சொல்லவந்தாளா, புதினம் சொல்வந்தாளா, உதவிகேட்க வந்தாளா, இல்லை சும்மா பொழுது போக்க வந்தாளா?

யாரும் பார்வையாலாவது அக்கறைகாட்டியிருந்தால் வெளிப்படுத்தியிருப்பாள்! பாவம் அவள் போய்விட்டாள்.

மூத்தவனுக்கு இக்காட்சியில் சலிப்புத்தட்டிவிட்டது போலும், அவன் தனியாக அறைக்குள் போயிருந்து கைபேசியில் வேறுபடங்களைப் போட்டுப்பார்த்துக் கொண்டிருந்தான். அனேகமாக அவை முழு நிர்வாண நீலோற்பவ காட்சிகளாகத்தான் இருக்கும்! மேசையில் புத்தக கட்டுகள் அடுக்கியிருந்தன. விரிந்து கிடந்த புத்தகம் இவனைப் பார்த்துச் சிரித்தது!

மூத்தவளும் அடுத்த அறைக்கு பிரவேசித்து விட்டாள். அவளும் கைபேசியில்தான் கதைக்கிறாள். காதில் வைத்தல்ல, கண்ணில் வைத்து முகத்தில் முகம் பார்த்துப் பேசுகிறாள்! பெண்கள் ஆண்கள் எல்லாம் வருகிறார்கள். வருகிறவர்கள் முரசு தெரியச் சிரிக்கிறார்கள்; சரசமாட நினைக்கிறார்கள்! இவளும் எல்லாவற்றுக்கும் பதிலிறுக்கிறாள் ஒலியால் மட்டுமல்ல, முகபாவனையாலும் தான்!

அப்பப்பா! எத்தனை சிரிப்பு, களிப்பு இரசிப்பு. சரசம்; விரசம்!

இளைவயன் இளமட்டங்களோடு இருந்து கணினியை கவனித்தபடி இருக்கிறான். கணினியால் உலகத்தையே கணிக்கலாம்; கவனிக்கலாம்; கண்காணிக்கலாம்! ஆனால் இவர்கள் எதைமூளையிலே திணித்துக் கொண்டிருக்கிறார்களோ, யாரோ அறிவார்!

வீட்டுக்கு மனோரஞ்சியின் கணவனைத் தேடிக் கொண்டு மூன்று பேர் வந்தனர். வந்தவர்கள் தாங்களாகவே அவர் பக்கத்தில் அமர்ந்தனர். அவர் பரந்தசிரிப்பால் அவர்களை வரவேற்றார். இன்று விடுமுறைநாள். அதனால்தான் தம் நண்பரைத் தேடிவந்திருக்கின்றனர். இப்படி அடிக்கடி வருவர். பகிடிக்கதைகள் விடுவர்.

எல்லோரும் விழுந்து விழுந்து சிரிப்பர். எல்லைமீறினால், இவர் கையசைத்து சைகையால் அடக்கி வாசிக்கச் செய்வார்! சிறிதுநேரத்தில் நால்வரும் உள்ளறைக்குள் போய்விடுவர். மேசையைச் சுற்றிவட்டமடித்து வீற்றிருப்பர். மின்விசிறி சுழலும், போத்தல் சத்தம் கேட்கும்! பேசும் சப்தம் கத்தலாகவும் மாறும்! அதன் பிறகு மகிழ்ச்சி ஆரவாரம்தான்! என்ன நடந்தாலும் வெளியே ஒன்றும் கேட்காது; தெரியாது. எல்லாம் இறுக்கி மூடியிருக்கும்! என்றாலும் இரஞ்சி இடைக்கிடை வாய்க்கு இதம்பதமானதுகளை (ரேஸ்ற்) வைத்துவிட்டுப் போவாள் இளநகையோடு, இடைக்கிடை மூத்தவளிடமும் கொடுத்து விடுவாள். அவளும் அவ்வாறே செய்வாள்! சிலவேளைகளில் வந்தவர்கள் வீட்டிலும் இதே கைங்கரியம் பதிலுக்கு நடக்கும்! அறையுள்ளே என்ன நடக்கிறது என்று வீட்டிலே எல்லோருக்கும் தெரியும்! வாத்தியார் முகம்சுழித்து பேசாமல் இருப்பார்! ‘ஏதோ இந்தளவோட இருந்தால்சரி’ என்ற மனப்பாங்கு அவருக்கு. தாயார்: ‘இந்த மருமகன்தான்சரி!

வீடு எப்போதும் கலகலவென்று இருக்கும்; சந்தோஷமாக இருக்கும்; நாலுபேரும் வாறது வீட்டுக்குப் பெருமையாகவும் இருக்கும்: இளையமருமகன் பொஞ்சாதி புள்ளைகளோட எல்லாத்துக்கும் ஒத்துப் போவார். ஒண்டுக்குக் கூட எதிர்த்து சண்டை பிடிக்கிற இல்ல! சந்தோஷமாக வைச்சிருக்கிறார் வீட்ட” என்பாள்.

மனோரஞ்சிதத்துக்கும் வீட்டிலே அடைபட்டுக்கிடப்பது பெரிய சித்திரவதை! இடைக்கிடை என்றாலும் வீட்டைவிட்டு வெளிக்கிட்டு சினேகிதிகளைத் தேடி போய் அரட்டையடித்தால்தான் அவள்மனம் ஆறுதல் காணும்!

மேலும் சனசமூக நிலையத்தில் மாதர் முன்னேற்றசங்கம் துவங்கியிருக்கிறார்கள். மனோரஞ்சிதமும் அங்கத்தவராகச் சேர்ந்துள்ளாள் சங்க அலுவல்காரணமாக மாதர் அடிக்கடி வந்து போவார்!

கணவனின் பிள்ளைகளின் தோழர்களும் அடிக்கடி வந்து புழங்குவர். ‘இதனால் அவள் பெருமைப்பட்டு புளகாங்கிதமடைந்தாள்! அடுத்தவருடம் மாதர் சங்கத் தெரிவுக்கு மனோரஞ்சிதத்தைத்தான் தலைவியாகத் தெரிவு செய்யப் போகிறார்களாம்! பேச்சடிபடுகிறது. இவள் ஒரு மாநாட்டில் பெண்ணுரிமை பற்றிப் பேசிய பேச்சுத்தான் பலருக்கும் இந்த அபிப்பிராயத்தை ஏற்படுத்தியது!

மனோகரிக்கு கணவனை எதிர்த்து சண்டை மாருதமாகப் பேசமட்டும்தான் தெரியும்! இவள் குரல் இல்லத்திலே ஒலிக்காது; மேடையிலேதான் முழங்கும்! இது அவர்கள் வீட்டின் சிகரப் பெருமை! அன்று, அக்காள் மனோகரி வீட்டில் ஒரே குதூகலம்! மகிழ்ச்சி ஆரவாரம்! மனோகரி அன்று போல் என்றும் பூரிப்படையவில்லை! மிகவும் மனம் மகிழ்ந்தவர் ஆசிரியர் ஏகாம்பரம்தான். மூத்தமருமகனின் செயல்திறமையை அவர் மனதார வாழ்த்தினார்! சதா அவரை வைது தீர்க்கும் மாமியார் கூட வாழ்த்த வேண்டிய நிலைப்பாடாயிற்று!

இந்தப் பெருமைகளுக்கெல்லாம் கர்த்தாவான கதிர்காமநாதன் அமைதியாக தன் அறையில் இருந்து இறைவனுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டிருந்தார்!

‘எல்லாப் பெருமையும் இறைவனுக்கே! அடுத்தவனுக்கு கெடுதி எண்ணாதவனுக்கு, நோக்கில் குறியாய் இருப்பவனுக்கு, முயற்சியில் அயற்சி இல்லாதிருப்பவனுக்கு, இறையில் நம்பிக்கை தளராதவனுக்கு எண்ணியது ஈடேறவே செய்யும்’! அவர்மனம் இப்படிச் சொல்லிக் கொண்டே இருந்தது. வீட்டுக்கு நண்பர்கள், உறவினர்கள் வாழ்த்துக் கூறி தங்கள் சந்தோசத்தை தெரிவித்தனர்! மூத்தவனும் மூத்தவளும் தங்கள் அப்பாவுக்குத்தான் நன்றியைத் தெரிவித்தனர் மனமுருகி.

இருவரும் மாவட்டத்தில் திறமைச் சித்தியடைந்து பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகியுள்ளனர்! அவர்கள் குடும்ப வரலாற்றில் இதைவிடப் பெருமைக்கு ஆனந்தத்துக்கு உரியது வேறு என்ன இருக்க முடியும்!

இதைப்பார்த்து பொறாமைப்பட்டவர்ளும் இருக்கவே செய்கிறார்கள்! ஒருவளவுக்குள் இருக்கும் தங்காள் மனோரஞ்சிதம் வீட்டார் எட்டியும் பார்க்கவில்லை!

எப்போதும் கலகலப்பாய் மகிழ்ச்சி ஆரவாரமாய் இருக்கும் அவ்வீடு இன்று சோபை இழந்து போனது ஏனோ?! நேற்றில் இருந்து மூத்தவளைக் காணவில்லை! வழமை போல ‘ரியூசன்’ போகிறேன் என்று போனவள், இரவாகியும் வரவில்லை; விடிந்த பின்பும் காணவில்லை! தேடிப் போயும் கிடைக்கவில்லை! அதிர்ச்சிச் செய்திதான்! மனதை உடைத்தது!.... மூத்தவள் சேர்ந்துபடிப்பவனோடு கூடிக் கொண்டு ஓடிவிட்டாளாம்! அவனையும் வீட்டைவிட்டு விரட்டிவிட்டார்களாம்! இவர்கள் எங்குபோய் எப்படி வாழப் போகிறார்கள் என்றுதான் இங்கு கவலை!

தாயார் இளையவன் வீட்டில் அழுது தீர்த்துவிட்டு மூத்தவள் வீட்டுக்கு வந்தாள். கண்களைத் துடைத்துக் கொண்டு!

அங்கேவாத்தியார் ஏகாம்பரம் எந்தச் சலனமும் இல்லாமல் அமைதியாகவே வீற்றிருந்தார்! அவர் தன்மனைவியாரையே எதிர்பார்த்துக் காத்திருந்தார். எப்படித்தான் எடுத்துச் சொன்னாலும் கேட்காது, அனுபவத்திலாவது பாடம் படிக்க மறுக்கும் கழுதைகளுக்கு கருத்துரை வழங்கவே பார்த்திருந்தார்!

அவள் கண்ணீர்மல்க வாத்தியார் அருகில் அமர்ந்திருந்தாள். ‘என்ன சந்தோசமாக இருந்த வீடு, இப்ப இழவு விழுந்தமாதிரிப் போயிற்றே! நல்லாப்படிக்கிறாள் எண்டு நாங்கள் இருக்க, இப்பிடி குடிகெடுத்துப் போட்டாளே! என்று அவள்மனம் புலம்பியது.

வாத்தியார் ஏகாம்பரம் மிக நிதானமாக இவ்வளவு காலமாக நடந்தவைகளில் இருந்து பெற்றபாடத்தை இரத்தினச்சுருக்கமாக அறிவுரையாக பகரலானார்.

“அடிக்கிற கைதான் அணைக்கும்; அணைக்கிறகைதான் அடிக்கும், கண்டிப்பு உள்ள இடத்திலதான் அன்பும் அக்கறையும் இருக்கும்! மூத்தமருமகன் குடும்பத்தில் அக்கறையுள்ள ஒரு இலட்சியவாதி! அதனால்தான் பெண்டாட்டியோட முரண்பட்டுக் கொண்டே இருந்தாள்; போராடினார்! தன் இலட்சியத்தில் வெற்றிபெற்றுவிட்டார்! அவர் ஆனந்த கண்ணீர் வடிக்கிறார்! உன் ஆசை மருமகன்ல நீ, இரத்தக் கண்ணீர் வடிக்கிறாய்!

‘யாவும் கற்பனை’

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.