புத் 63 இல. 29

விகிர்தி வருடம் ஆடி மாதம் 02ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ஷஃபான் பிறை 05

SUNDAY JULY 18, 2010

 
.

சிட்டுக்குருவியே... என் சிட்டுக்குருவியே...!

சிட்டுக்குருவியே... என் சிட்டுக்குருவியே...!

இப்போதெல்லாம்...
முற்றத்து பூமரங்களும் குப்பை கூளங்களை
உற்பத்திப்ப தேயிலை
ஷம்பூ மணக்கும் குளியலறைத் தரை விளிம்புகளில்
அழுக்குப் பாசிகளோ வளருவதேயில்லை
துவைக்காத துணிகள் கூட
சலவைத்தூள் விளம்பரத்தில் மடமடக்கும்
அழுத்திமடித்த ஆடைகளாய்...
அலம்பாத பாத்திரங்களும் பளபளப்பில்
நட்சத்திரங்களை வென்றபடி...
இப்போதெல்லாம்...
சமைக்காத சட்டிபானைக்குள்ளும்
கறிவேப்பிலையும் ஏலமும் கமகமக்கும் கறிசோறு
ஈரத்துணியுரசாத தரையோடுகளிலும்
படிவதாயில்லை தூசுத்துணிக்கை
இப்போதெல்லாம்...
புதிதாய் அணிந்தும் அள்ளிப் போட்டுக் கொண்டுமான
மாலைநேரப் பயணங்களிலெல்லாம்
மனசு இஷ்டப்படுவதேயில்லை.
மேசை இழுப்பறைக்குள் வாரப்பத்திரிகையின்
கவிதைப் பக்கங்களை நறுக்கிப் போடத் தோணுவதுமில்லை
இணையத்தில்கூட புதிதாயொன்றும்
இணைப்பதாயுமில்லை.
சின்னத் திரைகளுக்குள்
மூக்குச் சிந்திக்கூட வெகுநாளாச்சு
வழிபாடும் அது சார்ந்தவையும் தவிர்ந்து
முழுநாளின் தேடலுமே உன்
ஒற்றைப் பைக்குள்ளேயே ஒடுங்கிப் போனதா?
சிட்டுக்குருவியே... சிட்டுக்குருவியே...
வெண்பஞ்சு மேகங்களை இறகாயணிந்தே என்
மனசு முழுக்கச்சிறகடிக்குமென்
சின்னக்குருவியே... கொஞ்சம் வாயேன்.
இன்றைய உன் வகுப்பறைக்குள் கடைசிமணி
எப்போது ஒலிக்குமென சொல்லிவிட்டுப் போயேன்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.