புத் 63 இல. 29

விகிர்தி வருடம் ஆடி மாதம் 02ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ஷஃபான் பிறை 05

SUNDAY JULY 18, 2010

 
.

ரணிலின் ஆதரவு நிலைக்குமா?

ரணிலின் ஆதரவு நிலைக்குமா?

அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக அரசாங் கத்துடன் ஒத்துழைப் பதற்கு ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் முன்வந்திருக்கின்றார். இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதிக்கும் ரணில் விக்கிரமசிங்ஹவுக்குமிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ஐக்கிய தேசிய முன்னணியின் தூதுக்குழு அரசாங்கத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசியது.

அரசியலமைப்பில் செய்ய வேண்டிய திருத்தங்களைச் செய்வதற்குத் தடங்கல் இருக்காது என்ற நம்பிக்கையை இவ்விரு சந்திப்புகளும் மக்களிடம் தோற்றுவித்திருக்கின்றன. குறிப்பிட்டுக் கூறுவதானால் தேர்தல் முறையில் மாற்றம் செய்ய வேண்டியது ஒரு அத்தியாவசிய தேவை. இத்திருத்தத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவு கிடைப்பது மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய விடயம் தானே.

இந்த நம்பிக்கை நிலைத்து நிற்குமா என்பது பிரதான கேள்வி. ரணிலின் கடந்த காலச் செயற்பாடுகள் இந்தச் சந்தேகத்தைத் தோற்றுவிக்கின்றன. இவர் தோற்றுவித்த நம்பிக்கைகளை இவரே சிதைத்திருக்கின்றார்.

பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கம் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத்திட்டத்தை முன்வைத்தது. அதை நிறைவேற்றுவதற்குத் தேவையான மூன்றிலிரண்டு பெரும்பான்மை அரசாங்கத்துக்கு இருக்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் உதவியை அரசாங்கம் நாடியது. ஆதரிப்பதாக ரணில் நம்பிக்கையூட்டிக் கடைசி நேரத்தில் காலை வாரினார். தீர்வுத்திட்டத்தை மகா சங்கத்தினரின் அங்கீகாரத்துக்காகச் சமர்ப்பிக்க வேண்டுமெனக் கூறி ரணில் ஓரத்தில் ஒதுங்கினார்.

தீர்வுத்திட்டம் தொடர்பாக ரணிலின் இன்னொரு ‘பேய்க்காட்டை’யும் இங்கு குறிப்பிட வேண்டும். ஒவ்வொரு பிராந்திய சபையும் அதற்குத் தேவையான எல்லா அதிகாரங்களையும் பெறக்கூடிய சமச்சீரற்ற அதிகாரப் பகிர்வே ஐக்கிய தேசியக் கட்சியின் நோக்கம் என்று அறிக்கை வெளியிட்டார். வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குத் தேவையான எல்லா அதிகாரங்களும் கிடைக்கும் என்றும் சொன்னார். ஆனால் பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு கட்சியின் ஆலோசனைகளை அனுப்பிய போது பிராந்திய சபைகள் பாராளுமன்றத்திடமிருந்து அவற்றுக்குத் தேவையான அதிகாரங்களைக் காலத்துக்குக் காலம் பெற்றுக்கொள்ளலாம் என்று ‘பல்டி’ அடித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் முக்கிய விடயங்களில் கூட்டாகச் செயற்படுவதென ஒரு ஒப்பந்தம் கைச்சாத்தாகியது. ஜனாதிபதியுடன் ரணில் விக்கிரமசிங்க நடத்திய பேச்சுவார்த்தையின் விளைவாகவே இரண்டு கட்சிகளினதும் பொதுச் செயலாளர்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். பின்னர் அந்த நம்பிக்கையையும் ரணில் சிதைத்துவிட்டார்.

இப்போது அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதற்கு ரணில் முன்வந்ததற்கு அரசியல் வட்டாரங்களில் ஏதேதோ காரணங்களைச் சொல்கின்றார்கள். தனது கட்சியிலிருந்து சிலர் அரசாங்கத்தரப்புக்கு மாறுவதைத் தவிர்ப்பதற்காகவே இந்த முடிவு என்றும் கூறுகின்றார்கள்.

காரணம் என்னவாக இருந்தாலும் ரணிலின் அரசியல் வாழ்க்கையில் இது ஒரு முக்கிய கட்டம். மக்களிடம் இப்போது ஏற்பட்டிருக்கும் நம்பிக்கையைச் சிதைக்கும் விதத்தில் நடந்தால் அவரின் அரசியல் அஸ்தமனம் ஆகிவிடும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.