புத் 63 இல. 29

விகிர்தி வருடம் ஆடி மாதம் 02ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ஷஃபான் பிறை 05

SUNDAY JULY 18, 2010

 
.
தந்தை எனும் தத்துமரம்...!

தந்தை எனும் தத்துமரம்...!

அப்பா

மெழுகுதிரியும் நீயும் ஒன்றாகவே

எனக்குப்படுகிறது

ஒளி தருவதற்காக

மெழுகு

உருகுகிப்போகிறது

நீயோ கரைந்து போகிறாய்

தாய்மை என்பது பிள்ளை பெறுவதனால்

மட்டும் வருவதல்ல

அஃது உன்னைப் போல

அன்பைச் சொரிவதனாலும் வரலாம்

அல்லவா....?

பெண்மையின்

தாய்மையோ வயிற்றிலே எனில்

ஆண்மையின் தாய்மை

பாசக்கயிற்றிலே

அல்லவா....!

தாய் சுமப்பதோ பத்துமாதமெனில்

மற்றைய காலமெல்லாம்

தந்தை எனும் தத்து மரம் தானே

இருந்தும் என்ன

நிழல் தரும் இந்த மரத்துக்குத் தான்

நிழல் இல்லையே....?

ஒளிகொடுத்துவிட்டு

நீ மட்டும் கலங்கி நிற்பதால் தானா

உனை

கலங்கரை விளக்கென்கிறார்கள்.

வாழ்க்கை

என்பது ஏடெனில்

நீ தானே எழுத்தாணி...?

ஏடுகள் நிலைக்கும்

ஆனால்

எழுதித் தேய்வதென்னவோ

எழுத்தாணிதானே.....!

அப்பா

நீ ஏணியோ அல்லது தோணியோ

தெரியாதெனக்கு

உயர்வது நாங்கள்

ஆனால்

தள்ளாடுவது நீ மட்டும் தானே.....!

மட்டுவில் ஞானக்குமாரன்


ஓர் ஊமையின் ரணமும் ராகமும்

நடுக்காட்டிலே

நிலைக்குத்தாக நிமிர்ந்தபடி

இருப்புக் கொண்டிருக்கும்

ஒரு சிறு தனிக் குன்று நான்...

அருகே எனக்குக் குடை பிடித்தபடி

அழகியதொரு ஆலமரம்

அதன் உச்சியிலிருந்து

பறவைகள் விடும் சத்தம்

ன் காதுகளுக்கு

இனிய ரீங்காரம்...

இப்படியாக என்

‘வாழ்தல்’ நகர்கையில்

உளியும் கையுமாய்

என்னருகிலே ஒருவன்

வருகிறான்...

‘சிற்பி’ அவன் பெயர்

‘செதுக்குதல்’ - அவள் தொழில்

‘காலமும்’ நேரமும் இப்போதுதான்

கனிந்து வந்திருக்கிறது - அவன்

கைவண்ணத்தில் நானுமினி

அழகியதொரு சிலையாக

உருவாகி விடலாம்...’

ஓ... எனக்குள்ளோ

பேரின்பப் பிரவாகம்...

ஆரம்பக்கட்ட வேலைக்கவன்

ஆயத்தமாகி விட்டான்

உளியாலே என்னுடம்பைத்

தட்டித்தட்டிப் பார்த்தான்

ஊத்தை தேய

முற்றாக என்னை

உரசி உரசிப் பார்த்தான்

என்னாலோ ஒன்றுமே

பேசமுடியவில்லை

அவனாலோ என்னை இனி

நேசிக்க முடியவில்லை...

‘ஊமைக் கல்’ என்றும்

‘உதவாக் கல்’ என்றும்

உரத்துக் கத்தினான்...

விலை மதிப்பில்லாக்

கல்லென்றும்

சிலைக்கு உதவாத

கல்லென்றும்

வீண் வார்த்தை பேசினான்.

சிந்தனையே இல்லாததொரு

மந்தையாக

செருப்புக் காலாலும்

பலமாக உதைத்தான்

மூக்கைச் சீறி - என்

முகத்திலே எறிந்தான்

எல்லாவற்றுக்கும் இறுதியாக

எச்சிலையும் காறி

என்னிலே துப்பி விட்டு

எட்டத்தே (நடந்தான்)

போகிறான்...

அருகே நின்று கொண்டு

நிழலை என்றும் தரும்

அந்த ஆல மரத்துக்கும்

அதன் உச்சியிலிருந்து

எச்சங்களைப் பீச்சிப் பீச்சி

என்னை எப்போதும்

ஈரலிப்பாகவே வைத்திருக்கும்

பட்சிகளுக்கும் தான்

நான் இனி எப்போதும்

நன்றியைச் சொல்ல வேண்டும்

பாவம் அந்தப் பகுத்தறிவாளனாகப்

பிறந்து உலகையே

செதுக்க வந்த

சிற்பிக்கு மட்டும் தெரியாது

என்னிலும் ஓசையும்

வாழ்தலின் ராகமும்

அடங்கி இருப்பதனை.

கன்னிமுத்து வெல்லபதியான்


சாதனைப் பக்கம்

எத்தனை எதிர்பார்ப்புகள்

இதயத்தின் ஓரமாய்...

விடியலின் அத்திவாரம் முதல்

அஸ்தமனத்தின்

அறுவடை வரை...

வாலிப நெஞ்சங்களும்

இதே மரநிழலில் தான்

ஊஞ்சலாடிக் கொண்டிருக்கின்றனர்

ஆனாலும்

களைப்புகள்

உணரப்படுவதில்லை.

ஒரு மயான வீதியைப் போல்

மனம் அமைதியாயிருக்க

ஆந்தையின் அலறலும்

அழகிய கவிதையாகும்...

நீண்ட பெருமூச்சுக்கள்

சுகமானதாகவே தெறிக்க

சொந்தக்காலில் நிற்க வேண்டும்

என்ற துடிப்பு...

எல்லோருக்குள்ளும்

ஏதோ சொல்ல முடியாத

சந்தோஷம்...

கவலை...

கனவு...

நிம்மதி...

னைவுகள்...

நிஜங்கள்...

ஆசைகள்...

துடிப்புகள்...

இருக்கத்தான் செய்கிறது

வாழ்வை வளையமிட்டபடி...

இயற்கைக் காற்றில்

இலவசமாய் சுகம் அனுபவிக்கும்

சுகம்

இறைவன் கொடுத்த வரம்...

ஏனோ சில வேளைகளில்

மரணத்தின் மடியில் துயில நினைத்தாலும்

துடித்தெழத் தோன்றும்

ஒரு சின்ன வசந்தத்திற்காக வேனும்

விரிந்த வானத்தில்

விழிகள் தொலைகையில்

சில நட்சத்திரங்களையும்

களவாடச் சொல்லும் வயது

சாதனையாளனாக இருந்தால்

ஒரு நட்சத்திரத்தை சமைத்து

வானில் வீடுகட்டச் சொல்லும் மனது...

உண்மை வெற்றி

எதுவென்றால்

இதய சாம்ராஜ்யத்தை நாமே ஆளும்

நம்பிக்கைதான்

எப்போதும்...

அஷ்ரபா அலிறிஷாப்
அக்குறணை.


தையல்

தையல் வகுப்புக்குப்
போனேன்
ஆடைகள் தைக்கவல்ல
கிழிந்து போன
எனது
இதயத்தைத் தைப்பதற்கு

எம். ஐ. ரொஸானா பர்வின்,
முள்ளிப்பொத்தானை


இதயம்

நெஞ்சக் கூட்டில்
ஒளித்துத் தானே
வைத்திருந்தேன்
எப்படி களவுபோனது?

பூகொடை அஸ்மா


வானம்

வயதுக்கு வந்த
பூமிப் பெண்ணின்
வண்ண முக்காடு

அஸ்மா மஜிஹர்,
ஒலுவில்


நாகரீகம்

குழந்தையே வேண்டாம்
குன்றிவிடும்
உடல் நலம்!
குதிக்கிறாள்
புதுமைப் பெண்

ரஜித்தா சிவபாலன்


சிகரட்

ஒட்டுப் பலகையில்
அடிக்கப்பட்ட
ஒரு
வெள்ளை ஆணி
பலத்திற்காக அல்ல
பலஹீனத்துக்காக

ஹொரவப்பொத்தானை
ஜவாஹிர்


பார்த்து
கிழிப்பதற்கல்ல
படித்து
விழிப்பதற்கே
உங்கள் கவிதைகள்

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.