புத் 63 இல. 29

விகிர்தி வருடம் ஆடி மாதம் 02ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ஷஃபான் பிறை 05

SUNDAY JULY 18, 2010

 
.
இலங்கையில் கொழும்புச் செட்டிகள்

இலங்கையில் கொழும்புச் செட்டிகள்

இலங்கையின் பிரதான இனங்களுக்கு மேலதிகமாகக் குறைந்த எண்ணிக்கையினராக வாழும் வேறு இனத்தவர்களும் உள்ளனர். இவர்களைக் ‘கலாசார சிறுபான்மையினர்’ எனலாம். இவர்கள் தங்கள் தனித்துவத்தைப் பேணும் அதே வேளை நாட்டின் பொது நீரோட்டத்தில் இணைந்து வாழ்கின்றனர். கொழும்புச் செட்டிகள் சமூகம் இத்தகைய ஒரு இனக் குழுவாகும்.

செட்டிமார் என்று பொதுவாகக் கூறும்போது புறக்கோட்டை வர்த்தகத்தில் முத்திரை பதித்தவர்களே நினைவுக்கு வருவர். கொழும்புச் செட்டிகள் எனப்படுவோர் இவர்களிலிருந்து வேறுபட்டவர்கள். கொழும்புச் செட்டிகளில் சிலர் முன்னணி வர்த்தகத்தில் ஈடுபடுகின்ற போதிலும் (பிலிப் கிறிஸ்ரோபர் ஒந்தாச்சி போன்றோர்) ஏனையோர் பல்வேறு துறைகளில் தொழில் வாண்மையாளராக விளங்குகின்றனர்.

இலங்கையில் கொழும்புச் செட்டிகளின் குடியேற்றம் கிட்டத்தட்ட நான்கு நூற்றாண்டுகளுக்கு முந்தியது எனக் கூறலாம். இவர்கள் இந்தியாவிலிருந்து வந்தவர்கள். ஆரம்பத்தில் வர்த்தக நோக்கங்களுக்காக இலங்கைக்கு வந்து சென்றவர்கள் காலப்போக்கில் இலங்கையைத் தங்கள் நிரந்தர வதிவிடமாகக் கொண்டனர். முதலாவதாக இலங்கையில் குடியேறியவர்களுள் பிற்காலத்தில் பிரசித்திபெற்று விளங்கிய சைமன் காசி செட்டியின் மூதாதையரான கஸ்பர் காசி செட்டியைக் குறிப்பிடலாம். இவர் 1620 இல் இலங்கையைத் தனது நிரந்தர வதிவிடமாகக் கொண்டார்.

கொழும்புச் செட்டிகள் வைஸ்ய வர்ணத்தைச் சேர்ந்தவர்கள். வணிகர்கள். பிற்காலத்தில் இவர்களில் பெரும்பான்மையானோர் மருத்துவம்; சட்டத்துறை சார்ந்த தொழில்களிலும் வேறு துறைகளிலும் சிறந்து விளங்கினர். தமிழ் இந்துக்களாக இருந்து கிறிஸ்தவ மதத்தைத் தழுவியவர்களே கொழும்புச் செட்டிகள். இதனால் இவர்களின் கலாசாரத்தில் இந்துக் கலாசாரத்தின் தாக்கம் காணப்படுகின்றது. திருமணத்தின்போது தாலி அணிவதை விசேடமாகக் குறிப்பிடலாம்.

கொழும்புச் செட்டிகளின் ஆரம்பகாலக் குடியிருப்புகள் பெரும்பாலும் செக்கடித்தெரு, பிக்கரிங்ஸ் வீதி, முத்துக்கிருஷ்ணா வீதி (பிற்காலத்தில் ஜெம்பட்டாவீதி), புதுச் செட்டித்தெரு ஆகிய பகுதிகளிலேயே அமைந்தன. இப்போது அவர்கள் நகரின் பல பகுதிகளிலும் வாழ்கின்றார்கள்.

ஐரோப்பியரின் ஆட்சிக் காலத்தில் கூடுதலான எண்ணிக்கையில் கொழும்புச் செட்டிகள் இலங்கையில் குடியேறினர். சிலர் வர்த்தகத்துக்காக வந்தனர். வேறு சிலரை ஐரோப்பியர்கள் தங்கள் தேவைக்காக அழைத்தனர். அக்காலத்தில் பிரசித்தி பெற்று விளங்கிய கொழும்புச் செட்டிகள் சிலரைக் குறிப்பிடலாம்.

*ஒல்லாந்த ஆளுநரின் மருத்துவரான மைக்கேல் ஜூரி ஒந்தாச்சி (1714)

*புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ செட்டிமாரின் தலைவரும் பிரதான கேட் முதலியாருமான டொன் சைமன் டி மெலோ. (1758)

*விவிலியத்தைத் தமிழில் மொழிபெயர்ந்தவரான வண. பிலிப் டி மெலோ. (1723-1790)

*டாக்டர் குயின்ற் ஜூர்கன் ஒந்தாச்சி (1818)

*இலங்கையின் முதலாவது சிவில் சேவை அதிகாரி சைமன் காசி செட்டி (1807-1860)

*டாக்டர் பிலிப் செபஸ்தியன் பிறிற்றோ (1856-1906)

குடிசனக் கணக்கெடுப்பில் கொழும்புச் செட்டிகளை இலங்கைத் தமிழர்களுடன் சேர்த்தே கணக்கெடுத்தனர். இந்த நடைமுறையை அவர்கள் விரும்பவில்லை. தங்களைத் தனியான இனமாகக் கணக்கெடுக்க வேண்டும் என்று இலங்கை செட்டி சங்கத்தின் (Sri lankan Chetti Association)  பொதுச் செயலாளர் ஷர்லி புள்ளே திஸேரா வரலாற்று ரீதியான ஆதாரங்களுடன் அரசாங்கத்திடம் விண்ணப்பித்தார். இதன் விளைவாக, கொழும்புச் செட்டிகளைத் தனியான இனக் குழுவாக அங்கீகரிக்க வேண்டும் என்று 1984 ஜனவரி 14ந் திகதி அரசாங்கம் சுற்று நிருபமொன்றை வெளியிட்டது. இச்சுற்று நிருபத்தை நடைமுறைப்படுத்தும் வகையில், தேசிய சனத்தொகைக் கணக்கெடுப்பில் கொழும்புச் செட்டிகளைத் தனியான இனக் குழுவாகக் குறிப்பிட வேண்டும் என்று ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்த்தன 1989 ஒக்ரோபர் 30ந் திகதி பணிப்புரை விடுத்தார்.

இலங்கையில் பல துறைகளில் கொழும்புச் செட்டிகள் முதன்மை வகித்துள்ளனர்.

*வண. பிலிப் டி மெலோ கிறிஸ்தவ மதகுருவாக அங்கீகரிக்கப்பட்ட முதலாவது இலங்கையர்.

*ஹென்றி பிரான்சிஸ் முத்துகிருஷ்ணா முதலாவது தமிழ் பாரிஸ்டர்.

*டாக்டர் வில்லியம் சார்ள்ஸ் ஒந்தாச்சி தாவரவியல் பூங்காவின் முதலாவது இலங்கையரான பணிப்பாளர்.

*டாக்டர் சைமன் டி மெலோ அசரப்பா பிரித்தானிய பல்கலைக்கழகத்தின் வைத்திய கலாநிதிப் பட்டம் பெற்ற முதலாவது இலங்கையர்.

முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே, வடமேல் மாகாண சபையின் முன்னாள் தவிசாளர் றிச்சி பெர்னாண்டோபுள்ளே, கவிஞரும் சட்டத்தரணியுமான மேர்வின் காசி செட்டி, விளம்பரத்துறை ஜாம்பவான் றெஜி கந்தப்பா ஆகியோர் சமகாலத்தில் பிரபல்யம் பெற்ற கொழும்புச் செட்டிகள்.

இலங்கையில் இப்போது 150,000 கொழும்புச் செட்டிகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவர்கள் நாட்டின் பல பகுதிகளிலும் வாழ்கின்ற போதிலும் கொழும்புச் செட்டிகள் என்றே அழைக்கப்படுகின்றனர். ஆரம்ப காலத்தில் இவர்களின் மூதாதையர்கள் கொழும்பு நகரில் மாத்திரம் குடியேறியதால் இப்பெயர் வந்திருக்கலாம்.

(Cultural Minorities of Sri lanka என்ற நூலில் யஸ்மினி தம்பையாவின் கட்டுரையிலிருந்து தொகுக்கப்பட்டது)

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.