புத் 63 இல. 29

விகிர்தி வருடம் ஆடி மாதம் 02ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ஷஃபான் பிறை 05

SUNDAY JULY 18, 2010

 
.

பல்துறை வித்தகர் எம். எச். எம். ~ம்ஸ்

பல்துறை வித்தகர் எம். எச். எம். ~ம்ஸ்

என்றென்றும்
எம் மனங்களில்
நீங்கா இடம் பிடித்து
ஒளிர்ந்து கொண்டிருக்கும்
எங்கள் இலக்கிய
சூரியன்
எம். எச். எம். ஷம்ஸ்!
எட்டாத தூரத்தில் இலக்கிய
வானம் இருக்க
அதைத் தொட்டு வரும்
வித்தை கற்றுத் தந்து எம்மை
தட்டிக் கொடுத்து வளப்படுத்திய
எம்மாசான் - எமை
விட்டுப்பிரிந்து - இன்று
முடிந்ததோ எட்டாண்டு

சின்னச் சிட்டுக்களாய்
கவிபடைக்க - காத்திருந்த
சிறு மொட்டுக்களை
இதழ் விரித்து மணம்
பரப்பும் கவிப்பூக்களாய்
மலரச் செய்த - எம்
கலையுலக தந்தையவர்

புதுப்புனலில் நீராடி
அருவிக்கரையில் தலைதுவட்டி
இலக்கிய தேசத்தில் நமை
வாழ வைக்க - கவிஞர்
எனும் மகுடம் சூட்டி
அழகு பார்த்த எம்
அருமை ஆசான் அவர்

பல்துறை வித்தகராக திகழ்ந்த எம். எச். எம். ஷம்ஸ் பல கோணங்களில் சாதித்த துறைகளை எழுதிக் கொண்டே போகலாம். வெள்ளிச் சிறகடிக்கும் வெண்புறாவே முதல் கிராமத்துக் கனவுகள் வரை, தமிழ் சிங்கள நல்லுறவுப் பாலமாக இலக்கிய சாளரம் திறந்து பல சேவைகள் செய்த இலக்கிய வாதியாக அவர் திகழ்ந்தார். ஆனாலும் புதுப்புனலில் கலைகளை கற்ற சகாக்களில் ஒருத்தியான நான் அவர் நமக்களித்த அனுபவங்களையும் அறிவுரைகளையும் இன்றைய புதிய தலைமுறையினரேடு பகிர்ந்து கொள்வது பொருந்தும் எனக் கருதுகிறேன்.

1997ல் தினகரனில் மர்ஹும் ஷம்ஸ் ‘புதுப்புனல்’ பயணத்தை ஆரம்பிக்கும் போது நம்மில் பலர் வெறுமனே அதன் வாசகர்களாய் தான் இருந்தோம். பேனை பிடித்து ஆக்கம் படைக்கும் ஆற்றல் நமக்குள்ளும் இருப்பதாய் எமக்கு உணர்த்தியது புதுப்புனல் தான். ஆரம்ப வகுப்பாசிரியர்கள் விரல் பிடித்து ‘ஆனா, ஆவன்னா’ சொல்லித்தந்த அதே முறையில் நமக்கு கலை இலக்கியம் கற்றுத தந்தது புதுப்புனல் பட்டறையே. கவிதைகளில் யாப்புகள் யதார்த்தங்கள் பற்றியெல்லாம் எழும் சந்தேகங்கள் ‘அருவிக்கரை’யிலே தீர்த்து வைக்கப்பட்டன. வாசகர்கள் பலர் பேனையால் பேசத்துவங்கினர் (ஆசிரியர் நோக்கம் சரியான இலக்கை அடைந்தது) இதனை ஆசிரியர் ஷம்ஸ் அருவிக் கரையிலே இவ்வாறு கூறினார்.

‘துளித் துளியாய் சுரந்த பளிங்கு நீர்மணிகள் கரம் கோர்த்துப்பாய, சின்னச் சின்ன ஊற்றுக்களாய் புதுப்புனல் பிறந்தது. பாரிய பேராறுகளில் காண முடியாத நிர்மலமான ஒளியும் தூய்மையும் களங்கமற்ற தெளிவும் இந்தப் புனலின் சிறம்பம்சங்கள். யெளவனத்தின் தீட்சண்யமும் வேகமும் கள்ளமற்ற மழுப்பலற்ற நேரிய நோக்கும் புதுப்புனலின் செல்வங்கள் கடந்த ஓராண்டாக சின்னச் சின்னப் பூத்தூவலாக நாலா திசையிலுமிருந்து சேர்ந்த பங்காளிகள் நூற்றுக் கணக்கில் இவர்கள் எதிர்கால உலகச் சிற்பிகள். பேனாமுனை பிரசவிக்கும் படைப்புகள் வெறும் சரளைக் கற்களல்ல பெறுமதியான முத்துக்கள் இருபத்தோராம் நூற்றாண்டினது சுபீட்சப் பாதையை நெய்கின்ற ஊசிகள்.

புதுப்புனலின் சின்னச்சின்ன ஊற்றுக்களே! நீங்களே மானுட நேயத்தின் சுவாசக் காற்றுகள். எழுத்துக் கலை வீண் விளையாட்டல்ல. ஒரு புனிதப் பணி! முன்னேறட்டும் இந்தப் படைப்புப் பேரணி.”

புதுப்புனலின் முதலாம்ஆண்டு நிறைவின் போது ஆசிரியரின் ஆலோசனைகளும் வாழ்த்துரையும் இப்படி அமைந்தது. அவர் தந்த வழிகாட்டலை சிரம் மேல் ஏற்று புதுப்புனல் சகாக்கள் எழுதிக் கொண்டே இருந்தனர். இதன் பயனாக புனலின் ஐந்தாண்டு நிறைவில் பலர் புத்தகம் வெளியிடும் பக்குவத்தை அடைந்தனர். கவிதையில் ஹைக்கு, குறும்பா, வெண்பா என பல உச்சங்களைத் தொட்டு கவி படைத்தனர். ஒலுவில் பாயிஸ் இறக்காமம் நவாஸ் செளபி, நாச்சியா தீவு பர்வீன், கலைப்பிறை வஹாப்தீன், வாழைச்சேனை ஸல்மானுல் ஹாரிஸ், உக்குவளை பஸ்மினா அன்ஸார் என புனல்தொட்டு கவி படைத்த நேசர்களின் வெளியீடுகள் நாட்டின் எட்டுத்திக்கிலும் வியாபித்தன.

‘புதுப்புனல் ஊற்று முகிழ்த்த ஆண்டு 1997. ஐந்து ஆண்டுகள் புனலாடி மகிழ்ந்த புத்திலக்கியக்காரர்கள் பலர். புனல் தொட்டுச் சென்ற கரைகள் பல. ஒலுவில், பாலமுனை தொட்டு உக்குவளை வரை மருதமுனை கிண்ணியா தொட்டு அட்டுலுகம வரை நீர்கொழும்பு தொட்டு அனுராதபுரம், யாழ்ப்பாணம் வரை அது பரவிச் சென்றது. கலையும் இலக்கியமும் வர்த்தகப் பண்டமாகிவிட்ட இன்று மானுடத்தைப் பேசும் துடிப்புள்ள இளம் படைப்பாளிகள் உருவாக வேண்டும் என்பதே புனல் வரித்துக் கொண்ட பாதையாகும். வெற்றுப் புகழுக்கும் வெள்ளிப் பணத்துக்கும் பேனாக்கள் விலை போகும் காலம் இது. வெதும்பும் உள்ளங்களுக்கு தென்றலாய் வீசி ஆறுதல் தர வேண்டிய பேனா, போலிகளை மோசடிக்காரர்களை திணறடிக்கும் புயலாகவும் மாற வேண்டும். தத்துவங்களை எழுதுவது இலகு. அவை செயற்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படும். தளமே சமூகம். சமூக யதார்த்தங்களை புரிந்து கொள்ளாமல் பேசப்படும் தத்துவங்கள் கல்லில் தூவப்படும் விதைகள் போன்றவை.

இல்லாத மாயைகளை கற்பனையாக எழுதி எழுத்துலகை ஏமாற்றுவது படைப்பாளியின் பணியல்ல. வேஷங்களை முகம் கிழித்துக் காட்டி சமூக அநீதிகளை ஒழிக்கும் பாரிய கடமைப்பாடு எழுத்தாளனுக்குண்டு. எனவே, தான் எழுத்தை ஒரு தவம் என்பர்.

புதுப்புனலில் தவழ்ந்த படைப்புச் சேய்கள் சிலர் பிற்பாடு வார மஞ்சரியிலும், அமுதிலும் எழுதும் அளவுக்கு வளர்ந்தமை மகிழ்ச்சி தரும் விடயம். உண்மை நேர்மை, கருணை என்பவற்றை பற்றுக் கோடாகக் கொண்டு மனித நேய இலட்சியம் நோக்கி படைப்புப் பணியைத் தொடருமாறே மர்ஷ¤ம் ஷம்ஸ் அறிவுரை வழங்கினார்.

இது 2002 மார்ச் பிற்பகுதியில் இளம் எழுத்தாளர்களுக்கு அருவிக்கரையூடாக மர்ஹும் ஷம்ஸ் வழங்கிய இறுதி அறிவுரையாகும். 2002 ஜுலை 15 இல் அன்னார் தனது இறுதி யாத்திரையை தொடர்ந்த போது நாம் எல்லாம் இலக்கிய வானில் அநாதைகளாய் நின்றோம். ஆசிரியர் தந்த அறிவுப் பொதியைக் கொண்டு அவர் விட்டுச் சென்ற இடத்தில் இருந்து இலக்கியம் படைக்க முயற்சித்தோம். அதன் பயனாய் அவர் நினைவுக் கவிதைகளை தொகுத்து புதுப்புனலாக வெளியிட்டோம். இத்தோடு எம்பணி முடியவில்லை. அன்னாரின் படைப்புக்கள் பல நூலுருப் பெறாது ஏங்கிக் கிடக்கின்றன. அவற்றை வெளியிட்டு அவர் பணியை தொடர்ந்தும் முன்னெடுக்க அனைவரும் கரம் கோர்க்க வேண்டும். கவியுலகின் சிறு துளிகளாய் நாங்கள் தூவப்பட்டோம். அந்த விருட்சத்தின் கீழ் நாங்களும் விதைக்கப்பட்டோம். அவர் பணிகளை தொடர்வதால் ஒருநாளில் நாமும் விருட்சங்களாவோம்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.