புத் 63 இல. 29

விகிர்தி வருடம் ஆடி மாதம் 02ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ஷஃபான் பிறை 05

SUNDAY JULY 18, 2010

 
.
அபிவிருத்தியை முன்னெடுக்கும் அதேவேளையில் தீர்வு குறித்தும் பேசப்பட வேண்டும்

இனப்பிரச்சினை தீர்வுக்கு இதுவே இறுதி சந்தர்ப்பம்

அபிவிருத்தியை முன்னெடுக்கும் அதேவேளையில் தீர்வு குறித்தும் பேசப்பட வேண்டும்

சி. அ. யோதிலிங்கம் யாழ். பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் துறையில் சிறப்பு கலைமானி பட்டத்தையும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுமானி பட்டத்தையும், இலங்கை சட்டக்கல்லூரியில் சட்டத்தரணி பட்டத்தையும் பெற்றவர். இலங்கையின் அரசியல் யாப்புகள்,இலங்கையின் இனக் குழும அரசியல், இலங்கையின் இன பிரச்சினையும் அரசியல் தீர்வு யோசனைகளும், ஒப்பியல் அரசாங்கம், சமாதான முன்னெடுப்பின் அரசியல் சவால்கள், இலங்கை இன பிரச்சினையின் சுருக்க வரலாறு, அரசறிவியல் ஓர் அறிமுகம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். கொழும்பு, கொட்டாஞ்சேனை நல்லாயன் கன்னியர் மட பாடசாலையில் அரசியல் விஞ்ஞான பாட ஆசிரியராக பணி புரிந்து வரும் இவர், இலங்கையின் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் அவ்வப்போது கட்டுரைகளையும் எழுதி வருகிறார்.

கேள்வி: 30 வருட கால யுத்த சூழ்நிலைகளுக்குப் பின் தற்போதைய அரசியல் நிலமைகளை அரசியல் ஆய்வாளர் என்ற வகையில் நீங்கள் எப்படிப் பார்க்கிaர்கள்?

பதில்: 30 வருடகால யுத்தம் என்பது அரசியலின் தொடர்ச்சியாகவே வந்தது. தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாததொரு கட்டத்தில் போர் ஏற்பட காரணமாக அமைந்தது. இதில் தமிழ் மக்கள் பாரிய இழப்புக்ளைச் சந்தித்துள்ளனர். சர்வதேசத்தின் ஆதரவுடன் இந்தப் போரை அரசாங்கம் முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது.

ஆனால் தமிழ் மக்களின் இன ரீதியான பிரச்சினைக்கு இன்னமும் தீர்வு கொண்டு வரப்படவில்லை. தீர்வை தமிழ் மக்கள் குறைந்த பட்சமாவது விரும்பும் அளவிற்கு கூட கொண்டு வரக்கூடிய சூழல் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அரசாங்கம் நினைத்தால் கொண்டு வரலாம். அதற்கான அரசியல் பலம் அரசாங்கத்திற்கு இருக்கிறது.

தென்னிலங்கை சிங்கள மக்களைப் பொறுத்த வரையில் யுத்தம் இல்லாத நிலையில் சமாதானம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் யுத்தமில்லாத நிலை, இயல்பு நிலையைக் கொண்டு வருதல், அரசியல் தீர்வு இந்த மூன்றும் வந்தால்தான் நிரந்தர சமாதானம் ஏற்படும்.

தமிழ் மக்கள் மிகவும் அதிருப்தியுற்ற நிலையில் இருக்கிறார்கள். தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமானால் மூன்று விடயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். வடக்கு கிழக்கு இணைந்த அதிகார அலகு அதற்குள் முஸ்லிம் மக்களின் நலன்களைப் பேணும் விதத்தில் ஒரு அலகை உருவாக்கி அதிகார பங்கீட்டைக் கொடுத்தாக வேண்டும்.

ஒரு தேசிய இனம் என்ற வகையில் அதற்கான தேவை இருக்கிறது. அதிகாரம் வழங்குவது, வடக்கு கிழக்கு இணைப்பு என்ற பேச்சை எடுத்தாலே தென்னிலங்கையில் பாரிய நெருக்கடிகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

கேள்வி: வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாட்டில் இரண்டு விதமான கருத்துக்கள் வெளியாகியிருக்கிறதே!

பதில்: முஸ்லிம் காங்கிரஸின் இரண்டு அறிக்கைகள் வந்தன. ஹசனலி ஒரு அறிக்கையையும் ஹரிஸ் ஒரு அறிக்கையையும் வெளியிட்டிருந்தனர். ஹரிஸின் அறிக்கையில் வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிராக கருத்து தெரிவித்திருக்கிறார்.

ஹசனலி வடக்கு கிழக்கு இணைப்போ பிரிப்போ அல்ல முக்கியம். முஸ்லிம் மக்களுக்கான அரசியல் தீர்வு, அதிகார அலகு என்பதே முக்கியம் என்றார்.

இணைந்த வடக்கு கிழக்கில் முஸ்லிம் மக்களுக்கு அதிகாரம் வழங்கப்படுமாக இருந்தால் அதனை எதிர்க்க வேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை.

இன்று பிரிந்த வடக்கு கிழக்கில் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

அவர்கள் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருவதால் பழைய அரசியலுடன் நிற்க முடியாத நிலை காணப்படுகிறது.

இன்றைய நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை மட்டத்தில் ஒரு புரிந்துணர்வு ஏற்பட்டிருக்கிறது. உள்ளூராட்சி சபைகளின் எல்லைகள் சீர்திருத்தத்தில் கூட இரு தரப்பும் இணைந்து சில யோசனைகளை முன்வைத்திருக்கிறார்கள்.

த. தே. கூட்டமைப்பு அண்மையில் இந்தியாவிற்கு செல்வதற்கு முன்னரும் மு. காங்கிரஸ¤டன் பேசி விட்டுத்தான் சென்றார்கள். ஆகவே, இந்த உறவு வலுவாக இருக்கும் நிலையில் ஹரிஸ் போன்ற ஒரு தரப்பின் கருத்து பாதிப்பை ஏற்படுத்தும் என கருத முடியாது.

ஆனால் தமிழ் மக்களிடமிருந்து அவர்களின் சுயநிர்யணம் தொடர்பான ஒரு உத்தரவாதம் தேவை. அதனை தமிழ் மக்கள் வழங்கித்தான் ஆக வேண்டும். அதிலொரு அரை நியாயம் இருக்கிறது.

கேள்வி: அதிகாரப் பகிர்வு தொடர்பான உங்களது கருத்தென்ன?

பதில்: அதிகார அலகு பிரச்சினையை தீர்க்கக் கூடிய நிலையில் அரசாங்கம் தற்போது இல்லை. அதனை எடுத்தாலே தென்னிலங்கை அரசியலில் ஒரு பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. அதிகாரப் பங்கீடு சுயநிர்ணய உரிமையை பிரயோகிக்கக் கூடிய அதிகாரங்கள் தமிழ் மக்களுக்குத் தேவை. யுத்தத்தினால் தமிழ் மக்கள் 50, 60 வருடங்கள் பின் தங்கிய நிலையில் இருக்கிறார்கள். கூடுதலான அதிகாரங்கள் அவர்களின் கைக்கு வரும்போதுதான் தங்களை வளப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பு உருவாகும்.

அதிகாரங்கள் எனும் போது ஒற்றையாட்சி, சமஷ்டி ஆட்சி வகைப்பாடே அதிகாரப் பங்கீட்டின் அடிப்படையில்தான் வகைப்படுத்தப்படுகிறது. உயர்ந்த சமஷ்டி எனக்கருதப்படும் அமெரிக்கா, சுவிட்சர்லாந்து நாடுகளைப் போன்ற முறைகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. மாநிலங்களில் பொதுவாக இருக்கக் கூடிய சில அதிகாரங்களை மாத்திரம் மத்திய அரசின் அதிகாரங்களாக வரையறுத்து எஞ்சியவற்றை பிரதேச அதிகாரங்களாக இருக்கும் அந்த மரபை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது தமிழ் மக்கள் தமது சொந்த விவகாரங்களைக் கையாள்வதற் கான அதிகாரங்கள் கொடுக்கப்பட வேண்டும். அந்த அதிகாரங்கள் இல்லாமல் அவர்கள் தங்கள் இருப்பை மேல்நிலைப்படுத்த முடியாது. இது அடிப்படையான விடயம்.

மத்திய அரசில் தமிழ் மக்களுக்கான பங்கென்ன? பல்வேறு சமூகங்கள் வாழும் ஒரு நாட்டில் பெரும்பான்மை ஜனநாயகத்தை பின்பற்றும் போது அது இயல்பாகவே பெரும்பான்மை சமூகத்திடம் அதிகாரங்களைக் குவிக்கும். முதலாளித்துவ ஜனநாயகம் இருக்க வேண்டும் ஆனால் அதேவேளை அது பெரும்பான்மை வாதமாகப் போய்விடக்கூடாது என்பதற்காகவே சமஷ்டி சிந்தனை முன்வைக்கப்பட்டது. இவ்விரண்டுக்கும் இடையில் ஒரு வகையான சமநிலையைப் பேண வேண்டும். சமஷ்டி என்பது ஒவ்வொருவரும் தமது இனங்களைத் தனியாகப் பார்க்கும் அதேவேளை கூட்டான இனங்களைக் கூட்டாகப் பார்க்கப்பட வேண்டும். ஆகவே, மத்திய அரசில் தமிழ் மக்களுக்கு என்ன பங்கிருக்கிறது என்பது அரசியல் தீர்வில் அடங்க வேண்டும்.

குறைந்த பட்சம் தமிழ் மக்களுக்கு வழங்கிய அதிகாரங்களைப் பறித்தெடுக்க முடியாத ஒரு பொறிமுறை அவசியம். சம நிலையாக, சமத்துவமாக இணைக்கப்பட்ட ஒரு மத்திய அரசாங்கம் இருக்க வேண்டும். தமிழ்த் தேசிய இனம், சிங்களத் தேசிய இனம் என்ற நிலையில் இரண்டையும் இணைத்த ஒரு மத்திய அரசாங்கம் இருக்க வேண்டும். அப்போது அங்கு ஒரு தனித்துவமான இடம் இருக்கும்.

தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் அவர்கள் தீர்மானிக்கக்கூடியதொரு பொறிமுறை தேவை. இரட்டை வாக்கெடுப்பு முறை என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.

இந்தியாவில் டாக்டர் அம்பேத்கார் அவர்களால் முன்வைக்கப்பட்ட கருத்து இது. அதாவது முழு சபையிலும் ஒரு தீர்மானம் எடுப்பது அதே வேளையில் 2 ஆவது தடவை எந்தத் தேசிய இனம் இருக்கிறதோ அதற்காக வாக்கெடுப்பு நடத்துதல். கூட்டான விடயங்களை கூட்டாக எடுப்பது.

மற்றது இந்த அதிகாரங்களுக்கான பாதுகாப்பு. பொதுவாகவே இலங்கை அரசியல் வரலாற்றில் தமிழ் மக்களுக்கு கிடைத்ததென்பது கொடுத்ததையும் பறிப்பதுதான். பறிக்காமல் இருப்பதற்கான பொறிமுறையொன்று தேவை. அதனை ஆய்வு செய்தே முடிவெடுக்க வேண்டும்.

இதற்கு நாம் சர்வதேச நாடுகளின் அனுபவங்களைப் பெற்றுக் கொள்ளலாம். அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், பொஸ்னியா, இந்தியா, கனடா ஆகிய நாடுகளின் அனுபவங்களில் எமக்கு பொருத்தமானவற்றை தெரிந்தெடுத்து பல புதிய விடயங்களையும் சேர்த்து ஒரு அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும். அப்போது தான் உண்மையில் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய ஒரு தீர்வாக அமையும்.

இன்றுள்ள கேள்வி என்னவென்றால் அதற்கான அரசியல் சூழல் இங்கு இருக்கிறதா என்பதே! அந்தச் சூழல் தற்போது இல்லை. தென்னிலங்கையைப் பொறுத்தவரையில் போர் வெற்றியின் பெருமிதத்தில் இருப்பதை காணக் கூடியதாக இருக்கிறது. போர் முடிந்து விட்டது இனியென்ன பிரச்சினை இருக்கிறது, அதனைவிட ஏதாவது அபிவிருத்தியை செய்யலாம் என்ற எண்ணப்பாடுதான் இருக்கிறது.

சர்வதேச அழுத்தம் காரணமாக ஏதாவது தீர்வொன்றை வழங்க வேண்டுமென வந்தாலேயொழிய தீர்வுக்கான பொறிமுறை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் இதுதான் ஒரேயொரு சந்தர்ப்பமாகும். அரசாங்கம் பலம் வாய்ந்ததாக இருக்கிறது. எதிர்க்கட்சிகள் தீர்வுக்கெதிராக போகாத சந்தர்ப்பம்.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஒரு அரசியல் தீர்வு வந்தாலேயொழிய இனி வரலாற்றில் அரசியல் தீர்வுக்கான வாய்ப்பு இல்லையென்றே கூற வேண்டும்.

எப்போதும் பல சமூகங்கள் வாழும் ஒரு நாட்டில் இனங்களுக்கிடையே நியாயமான அதிகாரப் பங்கீட்டைச் செய்யாமல் அங்கு எல்லா மக்களின் அபிலாஷைகளையும் இணைத்து ஒரு தீர்வைக் கொண்டு வரமுடியாது.

இந்தப் பிரச்சினை காரணமாக சர்வதேச நெருக்கடிகளுக்குள் இலங்கை சிக்கப் பார்க்கிறதா? என்ற கேள்வி எழுகிறது. சர்வதேசத்தில் வல்லரசுகளுக்கிடையே முரண்பாடுகள் காணப்படுகின்றன.

இலங்கை சிறியதொரு நாடு. எல்லா நாடுகளுடனும் ராஜதந்திரத்தைப் பேணும் வகையிலான அணுகுமுறையை பின்பற்ற வேண்டியிருக்கிறது. எல்லா நாடுகளுக்கிடையில் சமதூரத்தில் இருக்க வேண்டும். ஒரு நாட்டிற்குள் தங்களது பிரச்சினையை தீர்த்துக் கொள்ள முடியாது போனால் தேவையற்ற வகையில் அந்நிய தலையீடுகள் வர வாய்ப்பிருக்கிறது.

இலங்கை மரபு ரீதியாக பின்பற்றி வந்த வெளிநாட்டுக் கொள்கைகளிலிருந்து விலகிச் செல்கிறதா அதனால் எவ்வாறான தாக்கங்கள் ஏற்படும் என்ற கேள்விகள் எழுகின்றன. இதனையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.

கேள்வி: இனப் பிரச்சினை தீர்வு தொடர்பில் தமிழ்க் கட்சிகள் ஒன்றி ணைந்து செயற்படுவதற்கான முன்னெ டுப்புகளில் ஈடுபட்டு வருகின்றன. இது பற்றிய உங்கள் கருத்தென்ன?

பதில்: யுத்தம் முடிந்த பின் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. போர் மூலம் முன்னெடுக்கப்பட்ட எந்தவொரு நடவடிக்கையையும் சர்வதேசமும் அங்கீரிக்கவில்லை. ஜனநாயக ரீதியான செயற்பாடுகளுக்கே சர்வதேச மட்டத்தில் பெரும் ஆதரவு இருக்கிறது.

புலிகளின் தோல்விக்கு அவர்கள் சர்வதேச அரசியலை சரியான பாதையில் முன்னெடுக்காமையே காரணமாகும். இதனை இரண்டு கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும். புலிகளின் தவறை ஒரு பக்கமும் இன்னொரு பக்கம் சர்வதேச சூழலையும் பார்க்க வேண்டும் செப்டம்பர் 11 இற்கு பின்னர் சர்வதேசத்தில் ஏற்பட்ட மாற்றத்தையும் பார்க்க வேண்டும். அது இப்போதான் படிப்படியாக மாறி வருகிறது. மாறிவரும் இச்சூழலில்தான் இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடந்தது. பல காரணங்கள் இருக்கின்றன, அவற்றை தனித்தனியாக ஆராய வேண்டும். ஜனநாயகக் சூழல் ஒன்று மட்டுமே நமக்கு ஆதரவாக அமைந்துள்ளது. இக்கட்டத்தை உச்சமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.

தமிழ்க் கட்சிகள் மூன்று அணிகளாக இருக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான அரசாங்கத்துடன் இருக்கும் கட்சிகள், இயங்க முடியாத தீவிர தேசிய வாதத்தை கொண்ட அணி இம்மூன்று அணிகளும் ஒரு கொள்கை ரீதியான நிலைப்பாடோ, அமைப்பு ரீதியிலான பலமோ, ஒரு இராஜததத்திர ரீதியான நிபுணத்துவமோ எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு அமைப்பு முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டுமானால் அதற்கு அதன் இலக்கு தெளிவானதாக இருக்க வேண்டும். அதற்கொரு கொள்கைத் திட்டம் இருக்க வேண்டும். அதனை முன்னெடுக்க சரியானதொரு வேலைத் திட்டம் வேண்டும். அதனை முன்னெடுக்க சரியானதொரு அமைப்பு இருக்க வேண்டும். தலைமை அல்லது ஊழியர்கள் இருக்க வேண்டும். இவை அனைத்தும் இருந்தால் மட்டுமே ஒரு அமைப்பினால் முன்னேற முடியும்.

இன்றுள்ள தமிழ்க் கட்சிகள் எதுவும் ஒரு அமைப்பு ரீதியான செயற்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. அதற்குள் ஜனநாயகத் தன்மைகளும் பேணப்படுவதில்லை. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பெயருக்காகவே தமிழ் மக்கள் வாக்களிக்கிறார்களே தவிர உண்மையில் ஒரு அமைப்பாக இல்லை. அது போல ஏனைய அமைப்புகளும் கூட ஒரு அமைப்பாகச் செயற்படவில்லை. எந்தவொரு தீர்மானமும் ஒரு ஜனநாயக ரீதியாக எடுப்பதில்லை. அவை வெறுமனே பெயரளவிலான ஒரு கூட்டாகவே இருக்கிறது. ஆனால் தமிழ்மக்கள் இன்று அவர்களுக் கூடாகவே எதையும் செய்ய வேண்டியுள்ளது. ஈ. பி. டி. பி. ஓரளவு பலமாக இருக்கிறது. அது தன்னுடைய தனித்துவத்தை பேண முடியாததொரு சூழல் இருக்கலாம். ஆனாலும் மக்களோடு இருந்து சேவைகளைச் செய்து வருவதால் யாழ். மாவட்டத்தில் ஓரளவு செல்வாக்கு இருக்கிறது. ஏனைய கட்சிகள் வெறுமனே தேர்தல்களுடன் நின்று விடுகிறார்கள். அவர்களுக்கு எந்தவித ஆதரவும் அங்கு இல்லை. இன்று அவர்க ளும் ஒரு கூட்டமைப்பை அமைந்திருக்கின் றனர். கொள்கை ரீதியான கூட்டமைப்பா வெறுமனே பெயருக்கான அமைப்பா என்பது தெரியவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகவும் அரசாங்கத்தை திருப்திப்படுத்துவதற்காக இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

இவை இரண்டும் வேறு வேறு அமைப்புக்களாக இருக்கலாம். ஆனால் ஒரு கொள்கை ரீதியாக வலுவான இலக்குகளைக் கொண்ட அமைப்பாக வேலைத் திட்டத்தை முன்னெடுக்கக் கூடிய அமைப்பாக உருவாக்கிக் கொள்ளுங்கள். ஒரு அரசியல் தீர்வு என்று வரும்போது இணைந்து செயற்படக் கூடியதாக இருக்க வேண்டும். தனியே தமிழ்க் கட்சிகள் மாத்திரமல்ல, முஸ்லிம் கட்சிகள், மற்றும் மலையகக் கட்சிகளுடனும் இணைந்து செயற்பட வேண்டும். அனைத்துக் கட்சிகளும் பலவீனமான நிலையில் உதிரிகளாக இருந்து கொண்டு எதையும் சாதிக்க முடியாது. கட்சிகள் அமைப்பாகவும், சுயாதீனத்துடனும், அர்ப்பணிப்பு, நேர்மைத் தன்மை இருக்க வேண்டும். புலிகளின் தரப்பில் பல தவறுகள் இருந்தன. செல்வநாயகம் இருந்த தமிழரசுக் கட்சிக்கு இருந்த பிரக்ஞைபூர்வத் தன்மை தற்போதைய தமிழரசுக் கட்சிக்கு இல்லை.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.