புத் 63 இல. 29

விகிர்தி வருடம் ஆடி மாதம் 02ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ஷஃபான் பிறை 05

SUNDAY JULY 18, 2010

 
.

அசரயாத்தீரை

அசரயாத்தீரை

ஜெயக்குமாரும், அன்ரனும், பீற்றரும் கலகம் ஆரம்பித்து ஆறாவது நாள் ஊருக்கு வந்து சேர்ந்த போது ஊரே ஆச்சரியத்தில் மூழ்கி விட்டது.

‘என்னண்டு தம்பிமார் வந்தியல் பொறுத்த சிங்கள ஊருக்க இருந்து...’

குடாநாட்டில் இங்கொன்றும் அங்கொன்றுமாய் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் வளர்ச்சி பெற்று இலங்கையிலும் தீப்பிடித்து எரியத் தொடங்கி இருந்தது.

பீற்றர் மதவாச்சிக்கும், வவுனியாவுக்கும் இடைப்பட்ட சிங்களக் கிராமம் ஒன்றின் தபாற் கந்தோரில் காரியாலய பையனாக வேலை செய்து கொண்டிருந்தான். ஜெயக்குமாரும், அன்ரனும் மடுமாதா திருநாளுக்குப் போயிருந்தனர்.

திருநாள் பூசை முடிந்ததும் இருவரும் பீற்றர் வேலை பார்க்கும் கிராமத்துக்குப் போய் சந்தித்து விட்டு ஊருக்குத் திரும்பலாம் என்ற எண்ணத்துடன் பஸ் பிடித்து செல்வதற்கு முன்பாகவே இனக்கலவரம் நாட்டின் சில பகுதிகளில் நடைபெற்றுக் கொண்டிருப்பதனை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

‘என்னாடாப்பா நீங்க ரெண்டு பேரும் இங்க வாறியள்... யாழ்ப்பாணத்தில சிங்கள ஆக்களைத் துண்டு துண்டா வெட்டி ஐஸ் பெட்டியில் வைத்து மீனை ஐஸ்போட்டுக் கொழும்புக்கு அனுப்புறாப் போல அனுப்புறாங்க எண்டு ஒரு கதை கிளம்பியிருக்கு... இஞ்சையும் குளம்புறதுக்கு அந்தா இந்தா எண்டு நிக்கிறாங்க...’

பீற்றர் கலவரத்துடன் நின்று இருவரையும் வரவேற்ற மாதிரியில் இருவருக்கும் சங்கதி புரியத் தொடங்கியது.

இருவரும் தன்னைச் சந்திக்க வந்திருக்கும் பெருமையைக் கூட பீற்றரால் அனுபவிக்க முடியாமல் வெப்பத்தை கண்ட புழுவாகத் துடித்தது அவனது இதயம். 

பீற்றரின் இதயம் அடித்துக் கொண்டிருப்பதை புரியாதவர்களாக நண்பர்கள் இருவரும் அந்தக் கிராமத்தின் எழிலைப் பார்த்து ரசித்தவர்களாக நின்றனர்.

‘பீற்றர் இது ஆர் இரண்டு புது ஆக்கள்... தமிழர்கள் போல் தெரியுது... இந்த நேரம் எப்புடி இஞ்ச வந்தினம் ஊர் நிலைமை மாறிக் கொண்டு வருது... நீ இப்புடி இதில இவையளோட நிக்கிறே நல்லாயில்லை...’

சுனில் வந்து சிங்கள மொழியில் சொன்னதும் பீற்றருக்கு மேலும் கலவரம் தொற்றிக் கொண்டது. அதைப் புரியாத இருவரும் சுனிலைப் பார்த்துக் கொண்டு நின்றனர்.

‘சுனில் ரெண்டு பேரும் பால்ய நண்பர்கள்... மடுவுக்கு வந்தாப் போல நிலைமை தெரியாமல் என்னைச் சந்தித்துப் போக வந்தினம்... என்னைவிட இதுகளை பாதுகாப்பதுதான் மச்சான் சுனில் நான் செய்ய வேண்டிய வேல...’

சிங்களத்தில் பீற்றர் சுனிலுக்குச் சொன்னதை இருவரும் ‘பீற்றர் சிங்களவனைப் போல பேசுறான்’ என நினைத்துக் கொண்டு நின்றான்.

கடந்த இரண்டு வருடங்களாக பீற்றர் அனிலுடன் பரிச்சையம் கொண்டிருந்தான். பீற்றர் அந்தக் காரியாலயத்துக்கு வந்த போது சுனில் அங்கேயே இருந்தான்.

ஆரம்ப காலங்களில் அதிகம் சிநேகம் கொள்ளாது இருந்த போதும் நாளடைவில் சுனிலுடைய மனிதாபிமான நடவடிக்கைகளை அவதானித்து பீற்றர் அவனுடன் சிநேகம் கொண்டான்.

1958 ஆம் ஆண்டு இனக் கலவரம் நடைபெற்றதாக பெரியவர்கள் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறார்கள். அதன் முன்பும் பின்பும் பல தடவைகள் தமிழர்களுக்கு எதிரான சிங்களக் காடையர்களின் அடாவடித்தனங்கள் அரசினராலேயே கட்டவிழ்த்து விடப்பட்டு வருகிறது.

தமிழர்களுக்கு எதிராக சிங்கள குளப்பகாரர்களால் இழைக்கப்பட்ட பல்வேறு கொடுமைச் சம்பவங்களையும் அவ்வப்போது சொன்னவர்கள் கூட்டியோ குறைத்தோ சொல்லி இருந்தாலும் அந்த அனுபவங்களை இதுவரை பார்த்தோ அனுபவித்தோ இருக்காததால் அதை ஒட்டிய பயமும் இவர்களுக்குக் குறைவாகவே இருந்தது.

‘சுனில் இப்ப நான் என்ன செய்யிறது மச்சான்... நீதான் இப்ப எனக்கு உதவி செய்ய வேணும்... இதை நான் உயிர் உள்ளளவும் மறக்க மாட்டன்...’

தற்போதைய சூழ்நிலையை மனம் வாங்கிக் கொண்ட பீற்றர் ஏற்பட்ட பதகளிப்பால் சுனிலிடம் இவ்வாறு கேட்டான். சுனிலும் பீற்றரின் வேண்டுகோளையிட்டு தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்கினான்.

‘கொல்லுங்கள் தமிழர்களை... அடித்து நொறுக்கி தீவைத்து அழித்து நாசமாக்குங்கள் தமிழர்களின் சொத்துக்கள் உடமைகளை...’

சிங்கள மொழியில் கனத்த குரல்கள் ஒலித்த திக்கை சுனிலைத் தொடர்ந்து அன்ரன், பீற்றர், ஜெயக்குமார் ஆகியோரும் பார்த்தனர்.

இருபதுக்கும் மேற்பட்டவர்களைக் கொண்ட கும்பலொன்று கைகளில் கோடரி, அலவாங்கு, இரும்புச் சட்டங்களுடன் வந்து தமிழர்களின் கடைகளைத் தாக்கத் தொடங்கினர்.

‘பீற்றர் அவர்களையும் கூட்டிக் கொண்டு என் பின்னால வா...’

கூறிய சுனில் தபால் நிலையத்தின் பின்பக்கமாக இறங்கி நடந்தான். பொழுதும் மைமலுக்குத் திரும்பிக் கொண்டிருந்தது. சுனிலுக்கு அவர்களைக் குளப்பக்காரர்களின் கண்களில் பட்டுவிடாமல் சேனையும் தோட்டமும் செடிகொடிகளும் உள்ள பாதை ஆனாலும் எதிர்ப்படும் ஓரிருவரின் கண்களில் கூட மண்ணைத் தூவி அழைத்துப் போகவும் வசதியாக அமைந்தது அந்த மைம்மல் பொழுது.

அன்றைய இரவும் மறுநாள் பகலும் சுனில் அவர்களைத் தன்னுடைய வீட்டுப் பாதுகாப்பில் வைத்திருந்தான். அடுத்தநாள் பொழுது கருதி சிறிது நேரத்தில் அவர்களைக் காட்டுப் பாதையால் கூட்டிச் சென்று அடுத்த கிராமத்தை அடைந்து விடவும் பகல் பொழுதில் ஓடியாடி அலுவல்கள் பார்த்திருந்தான் அவன்.

‘பீற்றர், நேற்றிரவு அந்தக் கலகக்காரர்கள் செல்லையா முதலாZன்ர கடைகளை அடித்து நொறுக்கி பொருட்களைக் கொள்ளை அடித்து தீ வைத்து லொறிகளையும் கெளுத்திச் சாம்பலாக்கி விட்டிருக்கிறாங்கள்...”

பகல் கடைத் தெருவுக்குப் போய் வந்த சமயம் இந்தத் தகவல்களைக் கொண்டு வந்திருந்தான் சுனில். அடுத்த கிராமத்தில் வசிப்பவனான தபால் விநியோகிக்கும் பாறூக்கின் வீட்டுக்கே இரவு கூட்டிச் செல்வதாகவும் இவர்களுக்கு தெரிவித்து இருந்தான்.

பகல் பாறூக்கின் பாதுகாப்பில் கழித்துவிட்டு அன்றைய இரவு காட்டு வழியாகக் கூட்டிப் போய் அடுத்த ஊரில் வசிக்கின்ற தொழிற்சங்கவாதியான சிறிசேனவின் இல்லத்தில் பகல் பொழுது கழித்து

அவ்விதம் அடுத்த ஊரில் வாழ்கின்ற நெருங்கிய நண்பனின் உதவியுடன் வவுனியாவுக்குள் அவர்களைக் கூட்டிச் சென்று வழியனுப்பி விடவே சுனில் ஏற்பாடுகளைச் செய்தும் இருந்தான்.

“கொழும்பில் இருந்து ரயிலில் யாழ்ப்பாணம் போய்க் கொண்டிருந்த குடும்பத்தில் ரெண்டு குமரிகளை சிங்களக் காடையர்கள் கடத்திச் சென்றிட்டாங்களாம்” பகல் பாறூக் இந்தத் தகவலைக் கொண்டு வந்திருந்தான்.

ஒருநாள் பொழுதுக்குள் இப்படிப் பலவாறான தகவல்களை அவர்களின் வாயிலிருந்து மூவரும் கேட்கக் கூடியதாக இருந்தது. செய்திகளுக்குக் காதுகளைக் கொடுக்கும் சமயம் தம்மை அறியாமலே உணர்ச்சி வசப்பட்டு விடுகின்ற போதிலும் தங்கள் நிலைமையை உணர்ந்து மூவரும் பயந்து போய் இருந்தனர்.

ஐந்து இரவுகளையும், நான்கு பகல் பொழுதுகளையும் பின்தங்கிய கிராமங்களிலும் அப்பகுதி காடுகளினூடாகவும் கழித்திருந்த மூவரையும் இறுதியாகப் பாதுகாத்துக் கொண்டு வந்த றிபாய் வவுனியா பஸ் நிலையத்தில் பஸ் ஏற்றிவிட்டிருந்தான்.

“றிபாய்.... சிறிசேன... பாறூக் சுனில் ஆகியோரும் எங்கட நன்றியைக் கூறிவிடும். உங்கட வீடுகளில் எங்களைத் தங்க வைத்து நீங்க செய்த உபகாரத்தை எண்டைக்கும் மறக்க மாட்டம்...”

பீற்றர், றிபாயிடம் நன்றிப் பெருக்குடன் கூறினான். இவர்களுக்கு வேண்டியதைச் செய்து கொடுத்து விட்டு றிபாய் விடை பெற்று சென்றதன் பின்பாகத்தான் பீற்றர் வவுனியா நகரத்தைக் கண்களால் துளாவினான்.

கடைகள் மூடிக்கிடந்தன. இங்கொன்றும் அங்கொன்றுமாக தேனீர்க் கடைகள் திறந்திருந்தன. அதுவும் ஒற்றைக் கதவுகளிலேயே திறந்திருக்கக் காணப்பட்டன. சன நடமாட்டம் குறைந்திருந்தது. இவர்களைப் போல் தென்பகுதிகளால் தப்பிப் பிழைத்து வந்தவர்கள் பஸ்களில் அடைக்கலம் புகுந்திருந்தனர்.

அவரவர்கள் தங்கள் அனுபவங்களை அழுகையும், மகிழ்ச்சியும் கலந்த சூழ்நிலையில் பரிமாறிக் கொண்டிருந்தனர்.

“என்ற ராசா வந்திட்டியே நாங்கள் இஞ்ச குலப்பம் நடக்குதெண்டு அறிஞ்ச நாளிலேருந்து உன்னால சமைச்சதும் சமையாததுமாய் திண்டதும் தின்னாததுமாய் பட்டபாடு கும்பிட்ட கடவுள் கைவிடேல்ல... ஆண்டவர்தான் உன்னைக் காப்பாற்றி இருக்கிறார்...”

றாவது நாள் வீட்டை அடைந்த பீற்றரின் தாய் ஒரு பாட்டம் பிலாக்கணம் வைத்து ஓய்ந்தாள். யாழ். கனகரத்தினம் மகா வித்தியாலயத்தில் இறக்கி விட்டிருந்த அகதிகளோடு இவர்களும் வந்திறங் கியதைப் பார்க்க வந்தான் எத்தனை கூட்டம்.

“இஞ்சையுள்ள சிங்களவர்களேம்... அடிச்சனுப்பி அவங்களின்ர உடமைகளையும் தீவைத்துக் கொளுத்தியழக்க வேணும்...”

“ ஓமடா அதுதான் சரி.... எங்கட சனங்கள் எத்தின பாடுபட்டு வந்திருக்குதுகள்... எண்டதை கனகரத்தினம் வித்தியாலயத்தில் பாக்க எவ்வொருவனும் அப்பிடித்தான்ரா செய்வான்கள்...”

“முதல்ல இவன் பண்டாவின்ர பேக்கரியை உடைப்பம்... அந்தச் சிங்களவனுக்கு எவ்வளவு திமிர்... இன்னுமிஞ்ச அவன் கடைதிறந்து வைச்சுக் கொண்டிருக்கிறான்.”

வீதியில் இளைஞர்கள் கூடி கதைத்துக் கொண்டு போன வார்த்தைகள், வீட்டு விறாந்தையில் கன்வேஸ் மீது படுத்திருந்த பீற்றரின் காதுகளில் நாராசமாக வந்து வீழ்ந்தது.

அவர்கள் குறிப்பிட்டுக் கதைத்துப் போன பேக்கரி பண்டா அவன் நினைவில் வந்தான்.

பீற்றர் பிறப்பதற்கு முன்பே தகப்பனார் இளைஞனாக இருந்த காலத்தில் இருந்தே பண்டா பேக்கரி வைத்து நடத்தி வருகின்ற சங்கதியை அவனது தகப்பனார் பல தடவைகள் கூறி இருந்தார்.

அறிவறிந்த காலத்தில் இருந்தே பண்டாவும் வாழ்வதை பீற்றர் அறிவான்.

சுனில், றிபாய், சிறிசேன, பாறூக் ஆகியோரின் நினைவுகளும் அவர்களின் மனைவி, மக்களது பராமரிப்பும் விருந்தோம்பல்களும் சங்கிலித் தொடர் விட்டன.

சேட்டை எடுத்துப் போட்டுக் கொண்டு வீதிக்கு இறங்கினான் பீற்றர்.

கதைத்துக் கொண்டு சென்ற இளைஞர்களின் கூட்டம் கண்களில் படவில்லை.

காரியத்தில் அவர்கள் துரிதமாக இறங்கி இருப்பதை உணர்ந்தவனாக அந்த வீதி போய்ச் சந்திக்கும் மையத்தை அடைந்து பண்டாவின் பேக்கரி அமைந்திருக்கும் இடத்தை போவதற்காக திரும்பி கால்களை துரிதப்படுத்தி எடுத்து வைத்தான் பீற்றர்.

ஜெயக்குமார், அன்ரன் ஆகியோரும் இடையில் பீற்றருடன் இணைந்து கொண்டார்கள்.

மூவரும் சேர்ந்து பண்டாவின் பேக்கரி சென்றடைவதற்கு முன்பே பெருநெருப்புச் சுவால் விட்டு பேக்கரியைத் தீக்கிரை ஆக்கிக் கொண்டிருந்தது.

கண்டதும் மூவரும் அதன் தகிப்பில் வெந்து போனவர்களாக விக்கித்து நின்றனர்.

‘உலகளாவிய ரீதியில் புதிய சமுதாய மாற்றம் ஒன்று ஏற்படாத வரையில் இப்படியான குளறுபடிகளுக்கு மக்கள் முகம் கொடுக்கும் நிலைதான் நடக்கும்’

இந்தச் சிந்தனை பீற்றரின் மூளையில் தைத்தது. இவரையும் கூட்டிக் கொண்டு திரும்பினான் அவன்.

(யாவும் கற்பனை)

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.