புத் 63 இல. 29

விகிர்தி வருடம் ஆடி மாதம் 02ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ஷஃபான் பிறை 05

SUNDAY JULY 18, 2010

 
.

மலையக அரசியல் தலைமைகள் கவனத்தில் கொள்ளுமா?
நூற்றாண்டு பின்தங்கிய நிலையில் மொனராகலைப் பகுதி தோட்டத் தொழிலாளர்கள்

மலையக அரசியல் தலைமைகள் கவனத்தில் கொள்ளுமா?

உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என ஒலித்த குரல்கள் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களே எனக் கூறும் அளவிற்கு நிலைமைகள் மாறி வருகின்றன. மலையகப் பகுதியை வெளியிலிருந்து மேலோட்டமாகப் பார்ப்பவர்கள் அம்மக்களின் வாழ்வாதாரத்தில் மேம்பாடடைந்திருப்பதாக கூறுவார்கள். தொழிலாளர்களின் பிள்ளைகள் தொழிலாளர்களாகவே இல்லாமல் வேறு தொழில் துறைகளில் நாட்டம் கொள்பவர்களாகவும் கல்வி ரீதியில் சற்று முன்னேற்றம் காணப்படுவதாகவே எண்ணுவார்கள்.

இவற்றுக்கெல்லாம் எதிர்மாறாக அரசியல், சமூக, பொருளாதார, கல்வி, நிர்வாக ரீதியான தொடர்புகள் எதுவுமின்றி பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு மொனராகலை பிரதேச தமிழ் மக்கள் வாழ்ந்து வருவதை எந்தவொரு மலையக அரசியல் தலைமையும் கண்டுகொள்ளவில்லை என்பது வருந்தத்தக்க விடயமாகும்.

மொனராகலை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் சிறுபான்மையினர் என அடையாளம் குத்தப்பட்ட சுமார் 13 ஆயிரம் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை எவரும் கண்டுகொள்வதேயில்லை. அந்த மக்களுக்காக குரல்கொடுத்த ஒரேயொரு தமிழ்ப் பிரதிநிதியாக இருந்த பிரதேச சபை உறுப்பினர் டாக்டர் முத்துலிங்கம் சுட்டுக்கொல்லப்பட்டு விட்டார். அவரது மறைவின் பின்னர் இந்த இனத்துவ பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விட்டதுடன் அந்த மக்களுக்காக குரல் கொடுக்க எவரும் இல்லாத நிலையில் அரசியல் அநாதைகளாக்கப்பட்டனர். புதிய தேர்தல் வரைபுச் சட்டங்கள் வருமாயின் பாதிக்கப்படும் முதல் தொகுதி மக்கள் என்றால் மிகையாகாது.

மொனராகலைப் பகுதியில் ஒன்பது பெருந்தோட்டங்கள் இருக்கின்றன. குமாரவத்த, பாராவில, கும்புக்கன், சிறுகல, மரகல, வெளியாய, அலியாவத்த, பாலாறு, சின்னப்பாலாறு, பிபிலை குறூப், தன்னக்கும்புர, பூட்டாவத்த, மாகலவத்த, கமேவல, வைகும்புர ஆகிய தோட்டங்கள் உள்ளடங்குகின்றன. அவ்வாறே வெல்லவாய தேர்தல் தொகுதியில் புத்தல எனும் தமிழ்க்கிராமமும் இருக்கிறது.

இக்கிராமத்தில் 160 தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்ட ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. ஜனாதிபதியின் பெருந்தோட்ட இணைப்பாளராக பணிபுரியும் என் கோவிந்தராஜா, அந்த மக்களின் வாழ்வாதார நிலைமைகளைப் பற்றிய பல்வேறு தகவல்களை எம்முடன் பகிர்ந்துகொண்டார்.

மொனராகலை மாவட்ட பெருந்தோட்டங்கள் அனைத்தும் அரச நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ஜனதா பெருந்தோட்ட அபிவிருத்திச் சபையால் நிருவகிக்கப்படுகின்றன. பிரதான உற்பத்தியாக இறப்பர் செய்கையும், அதனோடு கூடிய கரும்புச் செய்கையும் காணப்படுகிறது. மொனராகலை மாவட்டத்திற்குட்பட்ட நமுனுகுல பகுதியில் அமைந்துள்ள கண்ணக்கும்புர, பூட்டாவத்தை தனியார் கம்பனிகளுக்கு உள்வாங்கப்பட்ட தோட்டங்களுடன் ஒப்பிடுகையில் மொனராகலைப் பிரதேச தோட்டங்கள் மிகவும் பின்தள்ளப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றன.

 இங்கொரு சமூகம் இருக்கிறதா எனக்கூட எண்ணிப்பார்க்காத தமிழ் அரசியல் தலைமைகளுக்கு மத்தியில், பெரும்பான்மை மக்களின் தயவிலேயே தங்கியிருக்க வேண்டிய அவலம் நிலவுவதாகக் கூறும் கோவிந்தராஜா, பதுளை மாவட்டத்தைப் போல தமிழ்ப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யாமலேயே ரணங்களைச் சுமப்பதாக கூறுகிறார்.

தோட்டத் தொழிலை மட்டும் நம்பிப் பயனில்லை. அயல் கிராமங்களுக்குச் சென்று தினக்கூலிக்கு வேலை செய்து குடும்ப வாழ்க்கையை கொண்டு நடத்தும் இம் மக்கள் அரசாங்கத்தின் உதவிகளுக்காக ஏங்கிக்கொண்டிருக்கின்றனர். யுத்த சூழலின்போது அப்பகுதியில் ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்துவிட்டால் முதலில் தாக்கப்படுவதும் அவர்கள் தான். பாதிக்கப்பட்டதும் அகதியாகி அருகிலுள்ள பாடசாலையை நோக்கி ஓடுவதும் நிலைமைகள் சுமூகமானதும் வீடு திரும்புவதும் ஒன்றும் புதிய விடயமல்ல. 1983 இலிருந்து யுத்தத்தின் இறுதிக்கட்டம் வரையிலும் வன்செயல்களால் பாதிக்கப்பட்டதும் இவர்கள் தான்.

மொனராகலை பிரதேச தோட்டங்களில் குறிப்பாக கும்புக்கனவில் 68 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இவர்களுக்கான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. அப்பகுதி பாதைகள் இதுவரை காலமும் சீர் செய்யப்படவில்லை.

குடிநீர் வசதியில்லை. மருத்துவ வசதியில்லை இப்படி இல்லை இல்லையென்ற எல்லாமே குறைபாடுகள் தான் என்ற சொல்லே முன்வரிசையில் இருக்கின்றது. சிறுபான்மைக்குள் சிறுபான்மையினராக விளங்குவதால் தமது தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது அநாதரவாக்கப்பட்டுள்ள இப்பிரதேச மக்கள் உட்கட்டமைப்பு அபிவிருத்தி பணிகளுக்குள் உள்வாங்கப்பட்டமையால் பாதிப்பு பட்டியலில் முதன்மை பெறுகின்றனர்.

*இங்கு வாழ்வோரில் கணிசமானோருக்கு பிறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ் இறந்தோருக்கான மரண சான்றிதழ் என்பன இல்லாதிருக்கின்றன.

*அவ்வாறே பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறையும், தேவைக்கான கல்விச் சேவையும் இடம்பெறுவதில்லை. *தோட்ட வீதிகள் புனரமைக்கப்படாமையால் அவசரத் தேவைகளுக்கு பயணிப்பதில் மிகவும் சிரமத்தை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

*தூர பிரதேசமென்பதால் இங்கு கடமை செய்ய வருவோரும் நீண்டகாலத்திற்கு நின்று பிடிப்பதில்லை.

*அதிகமான இந்துக்கள் வாழ்ந்தபோதும் இந்து ஆலயங்களுக்கான வளப்பதிர்வு இடம்பெறுதிவதில்லை.

*சிறார்களை ஊக்குவிக்கக் கூடிய முன்பள்ளிகளோ, கல்வித் தேவைக்கு உரமூட்டக்கூடிய நடவடிக்கைகளோ விரல்விட்டு காணப்படுகின்றன.

*தோட்ட நிருவாகக் கட்டமைப்புக்கள் சீர்குலைந்து காணப்படுகிறது.

*பழமை வாய்ந்த லயன் காம்பிராக்கள் திருத்தப்படாமல் அதன் கூரைகள் இந்திரன் கண்களை ஒத்ததாக இருக்கின்றது.

ஒட்டுமொத்தத்தில் இங்குள்ள நிலைப்பாடுகள் ஒரு ஏக்கம் கலந்த பார்வையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.

இந்த பின்னணிகளுக்கு மத்தியிலே வன்செயலால் பாதிக்கப்பட்டு வாழ்விடங்களை இழந்தவருக்கு அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் தலையீட்டினால் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்பட்ட வீடுகளுக்கு இன்று வரையிலும் கடன் செலுத்த வேண்டிய நிர்ப்பந்த நிலை நிலவுவதாகவும் இங்கு வாழ் மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

இந்த பின்புலங்களுக்கு மத்தியில் மொனராகலை மாவட்ட தமிழ் மக்கள் மீது கரிசனை செலுத்தப்படவேண்டியது மலையகத்தின் அரசியல் தொழிற் சங்கங்களினதும் அரச சார்புடையவர்களினதும் கடமை மட்டுமல்லாது அரச சார்பற்ற நிறுவனங்களின் அவசியக் கடமை என்பதும் உணரத்தக்கது.

இந்த மாவட்டத்தில் தமது பிரதிநிதித்துவம் பற்றி பேசப்படாமையினால் தமிழ் அரசியல்வாதிகளின் கவனயீர்ப்பு பூச்சியமாகவே உள்ளது. அதனால்தான் என்னவோ இங்குள்ளவர்கள் இரண்டாந்தர பிரஜையாகவே கணிக்கப்படுகின்றனர். எனவே தொடர்ந்தும் மொனராகலை மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணமும் புறக்கணிப்பிலிருந்து விடுபட்ட சூழ்நிலையும் தோன்றுவதற்கு அனைத்து விதமான பங்களிப்பும் அவசியமென வலியுறுத்துவோமாக.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.