புத் 63 இல. 29

விகிர்தி வருடம் ஆடி மாதம் 02ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ஷஃபான் பிறை 05

SUNDAY JULY 18, 2010

 
.

காலமில்லாக் காலம் பேச்சும்: மறுபேச்சும்

காலமில்லாக் காலம் பேச்சும்: மறுபேச்சும்

01.

நபீல் எழுதிய “காலமில்லாக் காலம்” கவிதை நூல் வெளியீட்டு விழா, காலமில்லாக் காலம் மக்கள் நிறைந்திருந்த ஒரு நூல் வெளியீட்டு விழாவாக நிகழ்ந்திருந்தது. இதில் நபீலின் கவிதையும் மனிதமும் வெற்றி கண்டிருப்பதனை உணரமுடிகிறது.

இலக்கிய நிகழ்வுகளையும் நூல் வெளியீட்டு மேடைகளையும் பகிரங்கமாக வெறுத்து, விலகி இருந்தவர்கள் சிலரையும் இந்நிகழ்வில் காலமில்லாக் காலம் காணக் கிடைத்தமை, ஆரோக்கியமான ஒரு நிகழ்வின் கருத்தையும் இந்நிகழ்விற்கு கொடுத்திருந்தது.

குறிப்பாக சோலைக் கிளியின் தலைமையில் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வொன்றைக் காலமில்லாக் காலம் காணக்கூடியதாக இருந்தமை ஆச்சரியமும் ஆர்வமும் கலந்த பிரமிப்பை கொடுப்பதாகக் கூறி உரையாளர்கள் தங்கள் உரைகளைத் தொடங்கினார்கள்.

அங்கும் இங்கும் அலைந்து திரிந்து நபீலின் நூலின் மீது ஒரு எட்டுவைத்துப் போன உரைகள் நிகழ்ந்தன. இதில் காலமில்லாக் காலம் மேடைக்கு வந்தவர்களுள் எச்.எம். பாறூக்கும் ஒருவராக இருந்தார். அவருடைய பேச்சுக்கு மறுபேச்சாக அல்லது கருத்துக்கு மாற்றுக் கருத்தாக எனது எழுத்தின் அவசியம் இங்கு பதிவாகிறது.

இலக்கிய செயற்பாடுகளிலிருந்து மிக நீண்டகாலமாக விலகியிருந்த எச்.எம். பாறூக் போன்றவர்கள் மீண்டும் தங்கள் செயற்பாடுகளை இலக்கிய வாசிப்போடு இணைத்துக் கொண்டமை வரவேற்கக் கூடியதும், ஆரோக்கியமானதுமான ஒரு நல்ல அம்சமாகும். ஆனாலும் 1980 களில் அவர்கள் கொண்டிருந்த தீவிர இலக்கிய ஈடுபாடுகள் போன்றும் அவர்களது காத்திரமான அவதானிப்புக்கள் போன்றும் செயற்படும் ஆயிரம் பேர் இன்று பன்முகமாகி இருக்கின்றார்கள் என்ற சவால்களையும் அவரிங்கு தேட வேண்டும் என்பதும் இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஏனெனில் எச்.எம். பாறூக் இறுதியாக எந்த மேடையிலிருந்து இறங்கினாரோ, இறுதியாக எந்தப் பேச்சை முடித்தாரோ, அதே மேடையில் மீண்டும் ஏறி, அன்று விட்ட அதே பேச்சை மீண்டும் தொடர்ந்ததாகவே அவரது காலமில்லாக் காலத்தின் பேச்சு இருந்தது. இடைப்பட்டகால இலக்கியப் போக்குகளும், செல்நெறிகளும் பற்றிய அவரது வாசிப்பு பூச்சியம் என்பதை அவரது பேச்சுத் தொனி நன்கு புரிய வைத்தது.

02. பேச்சு:

“இலக்கிய நிகழ்வுகளிலிருந்து விலகி இருந்தவர்கள் அல்லது ஒளித்து இருந்தவர்கள் என்று எங்களைச் சொல்லலாம். ஒரு காலத்தில் எல்லா மேடைகளிலும் எங்கள் விமர்சனங்களை கோபமூட்டுவதாகவே பார்த்தார்கள். புகழ்வதையும், நல்லவைகளை மட்டும் கூறுவதையும் விமர்சனமாக ஏற்றுக் கொண்டார்கள். எதிர்பார்த்தார்கள். உண்மையான விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளும் படைப்பாளிகள் இங்கில்லை. அதனால்தான் நாங்கள் இலக்கிய நிகழ்வுகளிலிருந்து விலகிக் கொண்டோம்.” என்று தங்களது இலக்கிய இடைவெளிக்கு அர்த்தம் கூறியதாக எச்.எம். பாறூக்கின் பேச்சுத் தொடங்கியது.

“மற்றவர்களைத் திருத்தவும், சரிபடுத்தவும் முயன்று பிறரின் கோபங்களையும் எதிர்ப்புகளையும் நாம் ஏன் உருவாக்கிக் கொள்ள வேண்டும். எங்களை நாங்கள் ஒழுங்குபடுத்திக் கொண்டால் போதும்” என்பதை இதன் சாரமாகவும் மொழிந்தார்.

மறுபேச்சு:

அவரது கருத்தின்படி இலக்கிய உலகின் விமர்சனமுறை இத்தகையதொரு நாகரிகத்தை உருவாக்கி இருப்பது அவதானிப்பான ஒரு விடயம்தான். ஆனாலும் நேர்மையான விமர்சனங்களை ஏற்றுக் கொள்கின்றவர்கள் இல்லை என்று பலரும் கூறுகின்றார்கள், முதலில் தங்களைப் பற்றிய பிறரின் விமர்சனங்களை அவர்கள் ஏற்றுக் கொள்கின்றார்களா? என்ற கேள்வி இங்கு முக்கியமாகிறது. ஏனெனில் “ஊருக்குத்தான் உபதேசம் எனக்கில்லை” என்றிருப்பவர்கள் எம்மில் பலர்.

நாங்கள் யாரையும், எதையும் விமர்சிக்கலாம் எங்களை யாரும் விமர்சிக்க கூடாது, அப்படி விமர்சித்தால் நாங்கள் சண்டையிடுவோம் என்றால் அது ஒருவகையான இலக்கிய அடக்குமுறையாகவும், ஒருபக்க அதிகாரத்துவமாகவும் இருக்கிறது.

எச்.எம். பாறூக்கின் கூற்றின்படி, தான் சார்ந்தவை அல்லது தங்களது குழு சார்ந்தவை மட்டுமே சிறந்த படைப்புகளாகவும் உயர்ந்தவைகளாகவும் காணப்படுவதே அவர்களது விமர்சன முறையாக இருந்திருக்கிறது. அதனை காலமில்லாக் காலம் உரையில் பாறூக் சரியாக நிருபித்துப் பேசினார். அவ்வாறானவற்றைத்தான் அவர்கள் தான் சார்ந்தும் தங்களது குழு சார்ந்தும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். மற்றவை எல்லாவற்றையும் புறம்தள்ளித் தூக்கி எறிந்திருக்கிறார்கள்.

ஒரு பக்க நியாயம், அல்லது யாரையும் தங்களுக்குச் சமமாகக் கொண்டுவருவதற்கு தடைபோடும் ஆதிக்கம் என்று கூட இதனைப் பார்க்கலாம். பொதுவாக இலக்கிய உலகில் இருக்கக் கூடாததும், உருவாக்கக் கூடாததுமான குழுவாதத் தரப்பினர்களுக்குள்ளிருந்து வரும் எந்த விமர்சனங்களும் நேர்மையாக இருக்காது. பாறூக் அவர்களின் விமர்சனமும் குழுவாதத்தின் வெளிப்பாடாகவே இருந்தது. (உரையில் அவரிட்ட பட்டியல் பெயர்கள் இதற்குச் சான்று)

03. பேச்சு:

கவிஞர்களுடன் கோபப்பட்டவர்களின் கருத்துக்களை தன் பேச்சோடு இணைத்துக் கொண்ட பாறூக்.

“அண்மையில் ஒரு கவிதையைப் பார்த்தேன். 30 வருடகாலமாக எழுதுகிறார். ஆனாலும் கவிதையில் இன்னும் ஒரு வளர்ச்சியில்லை. தொடர்ந்தும் அவ்வாறே எழுதிக் கொண்டிருக்கிறார். இவரைப் பார்த்தால் கோபம் வராது என்ன செய்யும்” என்று தனது பேச்சிலும் கோபம் காட்டினார்.

மறுபேச்சு:

30 வருடமாக எழுதும் ஒரு கவிஞனின் கவிதையில் வளர்ச்சி ஏற்பட வேண்டுமா? இல்லையா? என்பது ஒரு புறமிருக்க, 30 வருடம் பேசிய பாறூக்கின் பேச்சில் என்ன வளர்ச்சி இருக்கிறது?

என்று கேட்கவும் தோன்றுகிறது. கவிஞரின் மீது பாறூக்கின் கேள்வி நியாயமானது என்றால் பாறூக்கின் மீதான எனது கேள்வியும் நியாயமானதுதான்.

ஒவ்வொரு மனிதனும் குழந்தைப் பருவத்தைக் கடந்து வருபவன். ஒரு கவிஞனின் கவிதையும் குழந்தைப் பருவத்தைக் கொண்டிருக்கிறது. இன்று சர்வதேச வானில், ஆகாயத்தில் மிதக்கும் சில கவிஞர்கள் தங்களுடைய குழந்தைப் பருவ எழுத்துக்களை மறந்துவிட்டார்கள். தங்களுடைய முதல் கவிதை சர்வதேச விருது பெற்ற கவிதை என்ற மமதையில் பேசுகிறார்கள், கவிதைகள் மலிந்துவிட்டதாகக் கூறி ஏளனம் செய்கிறார்கள். இவ்வாறானவர்களுக்கு தங்களுடைய குழந்தைப் பருவ புகைப்படங்களை ஞாபகப்படுத்த வேண்டியும் இருக்கிறது.

இது இவ்வாறு இருக்க, வளர்ச்சிடையாத கவிதைகளை ஏளனம் செய்பவர்கள், அதனை வளர்ப்பதற்கான புதிய விமர்சன முறைகளை உருவாக்குவது பற்றியும் பேசுவது ஆரோக்கியமான ஒரு விடயமாகவும் இருக்கும்.

04. பேச்சு:

“காலத்துக்குக் காலம் பல இஸங்களைப் பேசுவார்கள். இப்போது ஜிost ணிoனீலீrnisசீ (பின் நவீனத்துவம்) பேசுகிறார்கள். ஜிost ணிoனீலீrnisசீ என்று ஷிலீx சார்ந்து எழுது கிறார்கள். ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கிறது.” என்று அடுத்ததான தனது கோபத்தை பாறூக் தனது பேச்சில் வெளிப்படுத்தினார்.

மறுபேச்சு:

பின் நவீனத்துவம் என்றால் ஷிலீx சார்ந்து எழுதுவது என்ற அர்த்தத்தில் பாறூக் அவர்கள் பின் நவீனத்துவத்திற்குப் பிழையான ஒரு கற்பிதத்தினை முன்வைத்துப் பேசியது பின் நவீனத்துவம் தொடர்பான எத்தகைய ஒரு வாசிப்பும் அவரிடம் இல்லையென்பதை நிரூபித்தது.

பின் நவீனத்துவம் என்பது ஷிலீx சார்ந்த எழுத்து என்று இதுவரையும் எங்கும் குறிப்பிட்டிருக்கவில்லை. இது பின் நவீனத்துவக் கவிதை என்று ஷிலீx ஆக எழுதிய கவிதைகளை யாரும் பின் நவீனத்துவத்தின் கீழ் அடையாளமிடவுமில்லை. பின் நவீனத்துவ சிந்தனைகளில் இவ்வாறான மதிப்பீடுகளை யாரும் பதிவு செய்யவுமில்லை. அவ்வாறு செய்திருந்தால் அது தவறான கற்பிதமாகவே இருக்கும்.

பின் நவீனத்துவம் என்பது கவிதை மற்றும் இலக்கியம் மட்டும் சார்ந்த ஒன்றல்ல. அது மொழி, அதிகாரம், இலக்கியம், உளவியல், பெண்ணியம், ஓவியம், திரைப்படம், அரசியல் பொருளாதாரம் என்று பல்வேறு தளங்களிலும் விரிந்து செல்லுகின்ற ஒன்றாகப் பேசப்படுகிறது.

ஆனால் ஷிலீx ஆகக் கவிதை எழுதுவது பின் நவீனத்துவம் என்று பாறூக் அவர்கள் பேசியது பின் நவீனத்துவம் என்பதை முழுமையாக விளங்காமல், அந்தப் பெயரை மட்டும் தெரிந்து கொண்டு வெறுக்கின்ற ஒருவராக இருந்தாரென்பது நன்கு புரிந்தது.

ஒரு சிந்தனையை அல்லது கருத்தினை மறுப்பதானால் அதிலுள்ள பிழையான அம்சங்களை அல்லது தவறான வடிவங்களை சுட்டிக்காட்டி இவ்வாறான அம்சங்களினால் இதனை ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கிறது என்று கூறுவது ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு வாதமாக இருக்கும். ஆனால் பின்நவீனத்துவம் ஷிலீx சார்ந்து கவிதை எழுதுவது என்று, உடன்பாடு இல்லாத ஒரு கருத்தினால் ஒட்டுமொத்தமான ஒரு பெரும் கோட்பாட்டையே உதறிவிடுவது பாறூக் அவர்களின் ஆளுமையைக் குறைத்து மதிப்பிடச் செய்கிறது.

யாரிடமோ கொண்ட கோபத்தை பின் நவீனத்துவத்திடம் தீர்ப்பது போன்று “சில பெண்களும் மிக மோசமான ஷிலீx எழுத்துக்களை எழுதுகின்றார்கள் என்று குறிப்பிட்டார்”

குறிப்பாக 90களின் பின்னரான ஆளுமையான கவிதைப் புனைவுகளில் பெண்களின் ஈடுபாடு மிக உயர்வான மதிப்பீடுகளில் பேசக்கூடியவாறு அடையாளம் பெற்றிருக்கிறது. வீச்சான மொழி, விரிந்த பார்வை, பன்முக தோற்றம் என்று இன்று பெண் படைப்பாளிகளின் பிரதிநிதிகள் பெரிதும் பேசப்படுகின்றன.

ஒரு சிலரின் ஒரு சில கவிதைகளுக்காக ஒட்டுமொத்த பெண் எழுத்துக்களையும் ஒதுக்கிவிட முடியாது. ஒருவரின் ஒரு கவிதையில் காணப்படும் மோசமான ஷிலீx மொழிக்காக அவரது முழு எழுத்துக்களையும் புறந்தள்ளிவிடவும் முடியாது.

பின் நவீனத்துவக் கதையினுள் பெண் எழுத்துக்களை மோசமாகக் கூறி ஒருவகை ஓரங்கட்டுதலை அவர்களுடைய எழுத்தின் மீது செலுத்திய பாறூக்கின் பார்வை அவர்களது ஏனைய எழுத்துக்கள் மீதும் பட வேண்டும்.

பெண் எழுத்துக்களை மோசமாக எழுதலாமா? எழுதக்கூடாதா? என்கின்ற வாதம் ஒருபுறம் இருக்க, இன்று பஹிமா ஜகான், பெண்ணியா, அனார், சலனி, ஆழியாள், ஔவை போன்ற இன்னும் நீண்டு கொண்டு போகும் இது போன்ற பெண் எழுத்துக்கள் 90களின் பின் முழுமை பெற்றிருப்பதனை பாறூக் அவர்கள் மீள்வாசிப்புச் செய்ய வேண்டும்.

வளர்ச்சியடையாத கவிஞர்கள், மோசமாக ஷிலீx எழுதும் கவிஞர்கள் என்று இரு தரப்பினர்கள் மீதும் ஆத்திரம் கொண்ட பாறூக் அவர்களுக்கு இத்தகைய கவிதைகள்தான் இடைப்பட்ட காலத்தில் கிடைத்ததா? இதை நோக்கும் போது குறைகளை மட்டும் தேடிப்பிடித்துப் பேசும் ஒரு மனநிலை வெளிப்படுகிறது. நல்லவைகளை அல்லது காத்திரமானவற்றை முன்வைக்கும் மனப்பக்குவம் இவர்களிடம் இல்லை என்றும் புரிகிறது.

05

1980களில் காணப்பட்ட ஒரு சில எழுத்துக்களையும், கவிஞர்களையும் தனது பேச்சில் முழுமைப்படுத்தி அவர்களுடைய கவிதைகளையும் வாசித்துக் காட்டிய பாறூக், அதற்குப் பின்னரான 30 வருடகால இலக்கிய எழுத்துக்களையும் கவிஞர்களையும் கவிதைகளையும் முற்றாக பேசாது விட்டது, தேடலில்லாத ஒரு குறை கூறலாக இருந்தது அல்லது கூறக்கூடாதென்ற பிடிவாதமாகவும் இருந்திருக்கலாம்.

“நவீன கவிதையின் ஆளுமைகளாக மகாகவி, நீலாவணன், நுஃமான், சண்முகம் சிவலிங்கம், சோலைக்கிளி போன்றோர் மீது பாறூக் அவர்களின் மதிப்பீடு காணப்பட்டிருந்தது. (மேலுள்ளவர்களை ஆளுமையாகக் குறிப்பிட்டதை பிழையாக நான் கூறவில்லை) இதற்குப் பின்னரான எந்த ஆளுமைகளும் அவரது மதிப்பீட்டிற்குள் அடையாளம் காணப்படவில்லை.

இது எனது பணியில்லை என்று அவர் கூறுவதாயின், தனது உரையில் தற்கால கவிதைகளின் பிழைகளைக் கூறியது ஏன்? பிழைகளைக் கூறியவர் சரிகளையும் கூறி இருக்கலாம். அல்லது 1980கள் வரையுள்ள காலத்தோடு எனது பேச்சை வரையறுத்துள்ளேன் என்று ஒரு கோடிட்டிருக்கலாம். ஆனால் அவரது பேச்சின் நோக்கம் 1980 களுக்குப் பின் கவிதைகளுமில்லை, கவிஞர்களுமில்லை என்பதைக் குறிவைத்திருந்தது.

ஆனால் 1980களின் பின்னர் 3000 கவிதைகள், 300 கவிஞர்கள், 30 நூல்கள், 3 ஆளுமைகள் என்று எத்தனையோ விடயங்கள் வந்துவிட்டன.

இது போன்று படைப்புலகப் பட்டியல்களை இடுகின்றவர்கள் குறிப்பாகப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் என்றுள்ள கலாநிதிகள், இலக்கிய ஆய்வாளர்கள் யாவரும் இத்தகைய தவறினை இன்றுவரை இதுபோன்ற சந்தர்ப்பங்களில் தொடர்ந்தும் விட்டுக் கொண்டே இருக்கின்றனர்.

வரலாற்றில் ஒரு காலமிருந்தது. புவியீர்ப்பைக் கண்டுபிடித்தவர் நியூட்டன், தொலைபேசியைக் கண்டுபிடித்தவர் கிரகம் பெல், அமெரிக்காவைக் கண்டுபிடித்தவர் கொலம்பஸ் என்று ஒவ்வொரு கண்டுபிடிப்பிற்கும் ஒவ்வொருவருடைய பெயரும் அதில் அவர்கள் தந்தையாகவும் அடையாளம் கூறப்பட்டார்கள்.

இந்த வரலாறு இலக்கியத்திலும் ஒரு தொற்று நோய்யாகி புதுக்கவிதை முன்னோடி பாரதியார் என்றும், சிறுகதை முன்னோடி புதுமைப்பித்தன் என்றும் இதுபோல் புராண எழுத்தாளர்கள் பலரும் பெயரிடப்பட்டார்கள். அக்காலத் தோற்றத்திற்கு இது பொருத்தமானதாக இருந்திருக்கலாம்.

இத்தன்மை ஒருவரை மையமாகக் கொண்டு வரையப்படும் ஒருவர் மையக் கோட்பாட்டு வட்டம் போல் சுற்றுகின்ற ஒரு விடயமாகும். ஆனால் இன்று எத்தனையோ கண்டுபிடிப்புகள், விண்வெளி ஆய்வுகள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இலக்கியப் பிரதிகள் எல்லாம் உருவாகினாலும் ஆரம்ப வரலாற்றுக் காலங்களில் குறிப்பிடுவதுபோல் ஒருவர் மைய வட்டமாக பெயரிட்டு அடையாளப்படுத்தப்படாமல் அவை தட்டையான ஒரு நிலையிலேயே வைத்துப் பார்க்கப்படுகின்றன.

ஏனெனில் குறிப்பிட்ட ஒரு விடயத்தில் ஒருவர் மட்டுமல்லாது ஒன்றுக்கு மேற்பட்ட பலரும் ஒரே ஆளுமையுடன் இருப்பது தட்டையான பார்வையின் அவசியத்தை முன்வைக்கிறது.

இன்றுள்ள எமது இலக்கிய மதிப்பீடுகளையும் இத்தகைய ஒரு தட்டையான மதிப்பீட்டு முறையிலேயே 90 களுக்குப் பின் மதிப்பிட வேண்டியும் இருக்கிறது. தட்டையான மதிப்பீட்டுக்கான வாசிப்புக்களை முன்வைக்கும் ஒரு அணுகுமுறை இன்றுள்ள இலக்கிய உலகிற்கும் மிகவும் அவசியமானதாகவும் தெரிகிறது.

மகாகவியைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறோம். இன்னுமொரு மகாகவியை நாம் உருவாக்கவில்லை. நுஃமானைப் பற்றி உரைத்துக் கொண்டிருக்கிறோம் மற்றுமொரு நுஃமானை நாம் வளர்க்கவில்லை. சோலைக்கிளியைச் சொல்லிக் கொண்டிருக்கிறோம் புதிதாய் ஒரு சோலைக் கிளியை பறக்கவிடுகிறோமில்லை.

இவற்றையெல்லாம் எதிர்பார்த்து, காலமில்லாக் காலம் மேடையில் வந்தமர்ந்திருந்த பாறூக்கின் பேச்சில் புதியதோர் பாறூக்கை காணலாம் என்று ஆவல்பட்டிருந்தோம். ஆனால் அவரது பேச்சு ஒரு பழைய பாறூக்கேயே அடையாளப்படுத்தியதில் நாங்கள் ஏமாற்றமடைந்தோம்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.