புத் 63 இல. 29

விகிர்தி வருடம் ஆடி மாதம் 02ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ஷஃபான் பிறை 05

SUNDAY JULY 18, 2010

 
.
முழு நாட்டையும் உலுக்கிய எம்பிலிப்பிட்டிய கொலைச் சம்பவம்

முழு நாட்டையும் உலுக்கிய எம்பிலிப்பிட்டிய கொலைச் சம்பவம்

இளைஞர் ஒருவரை அடித்து கொலை செய்து இரகசியமாக புதைத்து, சந்தேகம் ஏற்படாதவாறு அதன் மேல் வாழை மரமொன்றையும் நாட்டிவைத்த நபரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்திய வேளை, சந்தேக நபர் வழங்கிய வாக்கு மூலம் முழு நாட்டையுமே அதிர வைத்தது.

இக்கொலை தொடர்பாக விசாரணை நடத்தி சந்தேகத்தின் பேரில் 51 வயதையுடைய நபரை கைது செய்த எம்பிலிப்பிட்டிய பொலிசார் நடத்திய ஆரம்ப விசாரணையின் போது வாக்குமூலமளித்த சந்தேக நபர்
சடலத்தை தோண்டி எடுக்கும் போது அயலவர்கள் கூடி இருந்த போது.
வெளியில் எடுக்கப்பட்ட சடலம் மாஜிஸ்திரேட் முன்னிலையில் அடையாளம் காணப்படுகிறது.
நிலத்திற்கு அடியில் சடலம் காணப்படுகிறது.

‘1989 ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஒரு பெண்மணியையும் மேலும் 12 பேரை கொலை செய்துள்ளதாகவும், இவை எம்பிலிப்பிட்டிய மற்றும் தங்காலை நகரங்களில் தான் இவற்றை மேற்கொண்டதாகவும் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு கொலையை செய்ததாக பொலிசாருக்கு கிடைத்த இரகசியத் தகவலைக் கொண்டு எம்பிலிப்பிட்டிய பொலிசாரினால் கைது செய்யப்பட்டவர் எம்பிலிப்பிட்டிய, மோதரவான ஹெல்பதுஆரே என்ற இடத்தில் வசிக்கும் ஆறு பிள்ளைகளின் தந்தையாவார். இவர் ஏற்கனவே 13 கொலைகள் புரிந்துள்ளதாக ஏற்றுக் கொண்டுள்ளதாக எம்பிலிப்பிட்டிய பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் நிரோஷ் அபேகோன் தெரிவித்தார்.

13 உயிர்களை பலிகொண்டதாக சந்தேகப்படும் இந் நபர் 14 வது கொலையை மேற்கொண்ட போதும் பொலிஸ் வலையில் சிக்காமல் இருந்த வேளை சுமார் 20 நாட்களில் வசையாக மாட்டிக் கொண்டார் ஆசாமி. சென்ற 3ம் திகதி (03.07.2010) சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்திய போது அந்நபர் அனைத்தையுமே பொலிசாரிடம் விவரித்துள்ளார்.

ஊருபொக்க, கின்னலிய, உடஹேன என்ற இடத்தில் வசித்த ஜாகொடகே இன்திக ரங்கஜீவ என்ற 22 வயது இளைஞன் சென்ற ஜூன் 18 ஆம் திகதி முதல் காணவில்லை என எம்பிலிப்பிட்டிய, ஊருபொக்க பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

சந்தேக நபருக்கு சொந்தமான காணியொன்று ஊருபொக்க என்ற இடத்தில் இருப்பதாகவும் இதனால் சந்தேக நபருக்கும், கொலை செய்யப்பட்ட இளைஞனுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் இருந்து வந்துள்ளதாகவும் இது தான் முறுகல் நிலை ஏற்பட்டு கொலையில் முடிந்ததாக எம்பிலிப்பிட்டிய பொலிஸ் நிலைய தலைமையகப் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் விஜித குமார வாரமஞ்சரிக்கு விபரித்தார்.

சந்தேக நபர் ஒரு விவசாயி. இவர் ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்து விவாகரத்து செய்து மூன்றாம் திருமணம் செய்தவர் என்றும் தெரியவந்துள்ளது. மூன்றாம் திருமணம் செய்திருக்கும் பெண் தவிர வேறு பல பெண்களுடன் தகாத தொடர்புகள் வைத்திருந்ததாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரின் சகோதரியின் மகள் (மருமகள்), தனக்கு, இந்திக ரங்கஜிவ (கொலையுண்ட இளைஞன்) அடிக்கடி தொந்தரவு செய்வதாகவும், தன்னுடன் பிரச்சினைகளை வளர்த்துக் கொண்டே வருவதாகவும் சந்தேக நபரிடம் கூறியுள்ளார். இதனால் ஆவேசம் கொண்ட சந்தேக நபர் ‘இவன் என்ன பெரிய புள்ளியா? இவனிலும் பலரை நான் பார்த்திருக்கிறேன். பலரை மடக்கியும் இருக்கிறேன்.

நான் இதுவரை 13 பேரை கொலை செய்திருக்கிறேன்’ என மருமகளிடம் வாயளந்துள்ளார். உனக்கு தொந்தரவு தரும், ரங்கஜீவ, எனது காணித் தகறாறிலும் என்னுடன் மோதியுள்ளான். அவனது கதையையும் முடிக்கிறேன். நீ பார் நான் செய்தே காட்டுகிறேன்.

சம்பவ தினம் சந்தேக நபரின் வீட்டில் ஒருவரும் இல்லாத நாள். மருமகள் மூலம் தொலைபேசியின் வழியாக ரங்கஜீவவை வீட்டுக்கு வருமாறு அழைப்பு விடுக்கிறார். ரங்கஜீவ ஆசையுடன் அழைப்பை ஏற்று தனது மோட்டார் சைக்கிளில் சந்தேக நபரின் இல்லத்திற்கு வருகை தருகிறார்.

அங்கு அன்புடன் வரவேற்கப்பட்டு, மருமகள் ஆசையாக பேசி தயார் நிலையில் இருந்த தூக்க மாத்திரை கலந்த தேனீரை பருகக் கொடுத்து அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். சந்தேக நபர் ரங்கஜீவவை கொலை செய்யவென பாரிய முறையில் தாக்கி கத்தியால் வெட்டிக் கதையை முடிக்கிறார்.

இக் கொலையுடன் சம்பந்தமுடையதாக கூறப்படும் மருமகளும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ‘அவளை இப்போது தேடுகிறார்களா?’ என மறைந்திருந்த சந்தேக நபர் மருமகளிடம் தொலைபேசியில் கேட்டது முதல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டே இருவரும் கைது செய்யப்பட்டதாக தெரிய வருகிறது.

கொலையுண்டவர் வந்த மோட்டார் சைக்கிள், கொலைக்கு பயன்படுத்திய கத்தி என்பவற்றை கொலை நடந்த வீட்டில் இருந்து பொலிசார் மீட்டுள்ளனர்.

கொலையாளி கூறியவாறு ஏற்கனவே 13 கொலைகள் புரிந்தவன் என்றால், இவ்வாறு வீட்டுக்கு பின்புறம் சடலத்தை புதைக்கமாட்டார். எனக் கூறும் தலைமையகப் பொறுப்பதிகாரி, இவரினால் கொலையுண்ட ஒருவரையாவது வீடுகளில் தேடவில்லை என்றும் யாரையும் காணவில்லை என்றும் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யவில்லை என்றும் கூறினார்.

இக் கொலை தொடர்பான செய்தி காட்டுத் தீ போல முழு நாட்டுக்கும் பரவியும், இதுவரை யாராவது வந்து தமது உறவினரை காணவில்லை அவர்கள் இச் சந்தேக நபரால் கொலை செய்யப்பட்டுள்ளாரா? என பரீட்சித்துப் பாருங்கள் என்றும் பொலிசாரைக் கேட்டதில்லை என்றும் இன்ஸ்பெக்டர் விஜித குமார எடுத்துக் காட்டினார்.

ஆகவே இவர் 13 கொலைகள் செய்தார் என கூறும் கூற்றை அவர் முழுமையாக மறுத்தார்.

பொலிசார் சந்தேக நபரை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்ட போது சந்தேக நபரின் வாக்கு மூலப்படி எம்பிலிப்பிட்டிய தெல்பதுஆர என்ற இடத்தில் வீடொன்றுக்கு பின்னால் புதைத்திருந்த இடத்தை காட்டி சடலம் எம்பிலிப்பிட்டிய மாஜிஸ்திரேட் பந்து குணரத்ன முன்னிலையில் அழுகிய நிலையில் இருந்த அந்த சடலத்தை பொலிசார் மீட்டனர். எம்பிலிபிட்டிய மாஜிஸ்திரேட் பந்துல குணரத்ன முன்னிலையிலே சென்ற 3 ஆம் திகதி (03.07.2010) பிரேதம் தோண்டி எடுக்கப்பட்டது.

1989 ஆம் ஆண்டு முதல் அதாவது கடந்த 21 வருடங்களாக முதலாவது சந்தேக நபர் 13 கொலைகளை கட்சிதமாக செய்து முடித்ததாக தன்னிடம் கூறியதாகவும், இவை எதையாவது வெளியில் சொன்னால் என்னையும் கொலை செய்வதாக அச்சுறுத்தியதாக மருமகளான இரண்டாவது சந்தேக நபர் பொலிசில் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இது தான் முழு நாட்டையுமே அதிர வைத்தது எனலாம்.

ஒரு பெண் உட்பட 13 பேரைக் கொலைசெய்த கொலைஞன் &@!லிஸ் வலையில் சிக்காமல் 14 வது கொலையையும் செய்துள்ளானா? நிச்சயம் இது யாரையுமே அதிரவைக்கும். இது உண்மையா? அல்லது வாயளந்தானா? விசாரணையின் முடிவில் தான் விடை கிடைக்கும். எம்பிலிப்பிட்டிய பொலிஸ் நிலைய தலைமையகப் பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் விஜித குமாரவின் ஆலோசனைப்படி, குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி நிரோஷ் அபேகோன் தலைமையில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.