வரு. 68 இல. 43

துர்முகி வருடம் ஐப்பசி மாதம் 07நாள் ​​ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1438 முஹர்ரம் பிறை 21

SUNDAY OCTOBER 23, 2016

 

 

ஆசிய எழுவர் ரக்பியில் சாதித்த இலங்கை உலக ரக்பி தகுதிகாண்போட்டிக்குத் தெரிவு

ஆசிய எழுவர் ரக்பியில் சாதித்த இலங்கை உலக ரக்பி தகுதிகாண்போட்டிக்குத் தெரிவு

2018ஆம் ஆண்டு அமெரிக்காவின் சென் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெறவுள்ள அணிக்கு எழுவர் கொண்ட ரக்பி கிண்ணத் தொடரில் பங்குபற்றவுள்ள ஆசிய வலய நாடுகளைத் தெரிவு செய்யும் ரக்பி கிண்ண தகுதிகாண் போட்டிகள் அடுத்த வருடம் ஹொங்கொங்கில் நடைபெறவுள்ளன.இதில் இம்முறை ஆசிய எழுவர் ரக்பி கிண்ணத்தொடரில் 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட இலங்கை அணியும் இத்தீர்மானமிக்க போட்டியில் களமிறங்கவுள்ளது.இவ்வருடத்தில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற ஆசிய எழுவர் ரக்பி கிண்ணத்தொடரின் முழுப் புள்ளிகளின் அடிப்படையில் பிரபல ஹொங்கொங் அணி 36 புள்ளிகளையும், இலங்கை அணி 27 புள்ளிகளையும் பெற்றும் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் ஹொங்கொங்கில் நடைபெறவுள்ள இத் தகுதிகாண் போட்டியில் விளையாடவுள்ளது.12 அணிகள் பங்குபற்றவுள்ள இத்தகுதிகாண் போட்டியில் ஆசியாவிலிருந்து இலங்கை மற்றும் ஹொங்கொங் அணிகளும், ஐரோப்பிய கண்டத்தலிருந்து ஸ்பெய்ன் மற்றும் ஜேர்மனி ஆகிய அணிகளும், ஆபிரிக்க கண்டத்திலிருந்து நமீபியா மற்றும் உகண்டா ஆகிய அணிகளும், எஞ்சியுள்ள அணிகள் எதிர்வரும் மாதங்களில் நடைபெறவுள்ள ஓஷனியா எழுவர் ரக்பி, ஆர்ஜன்டீனா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய எழுவர் ரக்பி தொடர்களின் பிறகு அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி எதிர்வரும் 2018இல் அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலக எழுவர் ரக்பி கிண்ணத் தொடருக்கு ஏற்கனவே தகுதிபெற்ற பிரபல ஜப்பான் அணியுடன் அடுத்த வருடம் நடைபெறவுள்ள தகுதிகாண் போட்டிகளில் சம்பியனாகும் அணி இத்தொடரில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசிய ரக்பி அரங்கில் கடந்த சில காலங்களாக சிறப்பாக விளையாடிவரும் இலங்கை ரக்பி அணி பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றது.இதில் இவ்வருடம் நடைபெற்ற 18 மற்றும் 20 வயதுக்குட்பட்ட ஆசிய எழுவர் ரக்பி கிண்ணத்தை முதற்தடவையாக இலங்கை அணி சுவீகரித்துக்கொண்டதுடன், கடந்த வாரம் நிறைவடைந்த ஆசிய எழுவர் ரக்பி கிண்ணத்தின் இறுதியில் 2ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டது.ஆனாலும் இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் எழுவர் ரக்பி போட்டிகளும் இடம்பெற்றதுடன், இதன் தகுதிகாண் போட்டிகள் கடந்த ஏப்ரல் மாதம் மொனாக்கோவில் நடைபெற்றது.இதில் களமிறங்கிய இலங்கை அணி ஸ்பெய்ன் மற்றும் ஜேர்மனி அணிகளுக்கெதிராக மட்டுமே வெற்றியைப் பதிவு செய்திருந்தது.

ஆனாலும், சர்வதேச அணிகளுடன் விளையாடிய அனுபவம் போதியளவு காணப்படாமையினால் இலங்கை அணிக்கு இத்தோல்வியை சந்திக்க நேரிட்டமை இங்கு கவனிக்கத்தக்கது. எனவே அடுத்த மாதம் டயலொக் கிண்ண கழகங்களுக்கிடையிலான ரக்பித் தொடரும், அதனைத்தொடர்ந்து க்ளிபர்ட் கிண்ண ரக்பி கிண்ணமும் நடைபெறவுள்ளன. இதில் சிறப்பாக விளையாடி திறமைகளை வெளிப்படுத்துகின்ற வீரர்களுக்கு அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள உலக ரக்பி தகுதிகாண் எழுவர் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை ரக்பி சங்கம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.