வரு. 68 இல. 43

துர்முகி வருடம் ஐப்பசி மாதம் 07நாள் ​​ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1438 முஹர்ரம் பிறை 21

SUNDAY OCTOBER 23, 2016

 

 
ஆளுமையின் அடையாளம் ஹஜர்ஜான்

ஆளுமையின் அடையாளம் ஹஜர்ஜான்

ஒவ்வொருவர் மனதிலும் மாறாமல் மறையாமல் இருக்கும் நாள் பாடசாலைக்குச் சென்ற முதல் நாள். என்னை பொருத்த வரையில் பாடசாலைக்குச் சென்ற முதல் நாளை விடவும் ஆசிரியர் சேவையில் இணைந்து கொண்ட முதல் நாளை விடவும், முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கு பிரதி அதிபராக நியமனம் பெற்றுச் சென்ற முதல் நாளே மனதில் நிறைந்து நிற்கின்றது. பயந்து பயந்து பதுங்கிப் பதுங்கி உள்ளே சென்ற போது கிடைத்த இன்முகத்துடன் கூடிய வரவேற்பு என்னைக் கவர்ந்தது. பக்கங்களை நிறைத்துக் கொண்டிருக்கும் பட்டங்களை அறிந்து வைத்திருந்ததால் அதற்கேற்றாற் போல் ஆணவமும் அகம்பாவமும் அடக்கி ஆழும் சுபாவமும் இருக்கும் என, அஞ்சினேன். கிஞ்சித்தும் அவை இல்லை எனக் கண்டு கொண்ட போது இதயத்தில் இமயத்தைத் தொட்டு விட்டார். இமாலயத் திறமையும் தகைமையும் கொண்டவர் தானே. உள்ளங்களைத் தொடுவதில் பின்நிற்கவும் தவறவில்லையென்பது தான் பெருமைப்படக் கூடிய விடயம். இதனால் இவரை எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றது.

அதிகம் கதைக்க மாட்டார். என்றாலும் ஒவ்வொரு தடவையும் கதைக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக இவரை படிக்க ஆரம்பித்தேன். அதன் விளைவு தான் இந்த பிடிப்பு. பெற்றோருடன் மாணவியருடன் கீழ் மட்ட ஊழியருடன் பணிவாகவே நடந்து கொள்வார். கண்டிப்பு அவர் தொனியில் இருக்காது. அனைவரையும் நல்லவர் என்றே சொல்வார். எவர் மனதையும் புண்படுத்த மாட்டார். இவரின் ஆளுமை கல்வியால் வந்ததா? சூழலால் வந்ததா? என்பது பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் அறிவு, அழகு, அன்பு, ஆற்றல், ஆளுமை அனைத்தும் ஒருங்கே அமையப் பெற்ற இன்னொரு பெண் இலங்கையில் இருப்பாரோ என்பது என்னைப் பொருத்த வரை சந்தேகத்திற்குரிய விடயமே.

குருநாகல் மண்ணில் பிறந்து அந்த மண்ணுக்கு பெருமை சேர்த்த மங்கை இவர். ஸாஹிராக் கல்லூரியில் ஆரம்பக் கல்வியைக் கற்றவர். தமிழ் மொழியில் புலமை பெற்றவர். பொறியியலில் சிறப்புப்பட்டம் பெற்று அதன் பின்னர் பட்டப்பின் கல்வி டிப்ளோமா, பட்டப்பின் கல்வி முகாமைத்துவ டிப்ளோமா, கல்வி முகாமைத்துவம், கல்வியியல் முதுமாணிப் பட்டம், சிறுவர் கல்வி, தகவல் தொழில்நுட்படம் என்பனவற்றில் டிப்ளோமா பட்டம் அனைத்துக்கும் முத்தாய்ப்பு வைத்தது போல் கலாநிதி பட்டம் இத்தனையையும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமான மாறி மாறிப் பெற்றுக் கொண்டார். வாழ்நாள் நீடித்த கல்வி என்ற எண்ணக் கருவுக்கு ஏற்ப பாடசாலையில் தொடங்கிய கல்வி, பேராதனை பல்கலைக்கழகம், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம், இலங்கை திறந்த பல்கலைக்கழகம் என்று உள்நாட்டு பல்கலைக்கழங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாமல் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களிலும் சங்கிலித் தொடராகத் தொடர்ந்தது. 1982ம் ஆண்டு ஆசிரியர் பணியைத் தொடங்கியவர். ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளர், உதவிக் கல்விப் பணிப்பாளர், பிரதிக் கல்விப் பணிப்பாளர் கல்விப் பணிப்பாளர் எனத் தொடர்ந்து சார்க் அமைப்பிலும் (மனித அபிவிருத்தி நிலையம் - இஸ்லாமாபாத்) கடமையாற்றினார். கல்வி நிருவாக சேவையில் முதல் தர அதிகாாியான இவர் இத்தனை தகைமைகளை தன்னகத்தே கொண்டிருப்பதாலும், இவரை எனக்கு பிடித்திருக்கின்றது. கல்வித் தகைமைகளை கூட்டிக் கொள்ள வேண்டும் என்ற தனியாத தாகம் எனக்கும் இருந்தது.

கல்விக் கொள்கை, கல்வித் திட்டமிடல், தகவல் தொழில்நுட்பம், கல்வி முகாமைத்துவம், கல்வி ஒன்றிணைப்புக்கான சமாதானக் கல்வி போன்ற பயிற்சி நெறிகளை லண்டன், சிங்கப்பூர், அவுஸ்திரேலியா, ஜேர்மன், கொாியா போன்ற நாடுகளில் நடத்தியுள்ளார். மலேசியா, இந்தோனேசியா, மாலைத்தீவு போன்ற நாடுகளில் சிறுவர் கல்வி, சமாதானக் கல்வி தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார்.

வெளிநாட்டு பட்டங்கள், பதவிகள் இவரை அலங்கரித்த போதிலும், அழகிய தமிழை இவர் மறந்து விடவில்லை. அவரது தமிழ் மொழி மூலமான பேச்சு மிகவும் இனிமையாகவே இருந்தது. பாரதி கண்ட புதுமைப் பெண் இவராகத் தான் இருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகின்றது. சிங்களமும் ஆங்கிலமும் சரளமாகவே அவர் நாவில் விளையாடும் மும்மொழித் தேர்ச்சி என்பது அவரிடம் காணப்படும் இன்னொரு சிறப்பம்சமாகும்.

வாசிப்பை நேசிக்கும் இவர் ஏனையோரையும் வாசிக்கத் தூண்டுவார். வானொலியும் தொலைக்காட்சியும் இவரது பொழுது போக்குகள். கருத்துள்ள விடயங்களை கேட்பார், பார்ப்பார், ரசிப்பார். எழுத்துத் துறையிலும் ஏற்கனவே ஈடுபாடு உள்ளவர். “இசையும் கதையும் எழுதி அனுபவம் பெற்றவர். அந்த அனுபவம் எனக்கும் உண்டு என்பதால் அவரை எனக்குப் பிடித்திருக்கின்றது. அவரது தமிழ் புலமை இனங்காணப்பட்டதால் கம்பன் விழாவிலும் விருது வழங்கி பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார். அவருக்குள்ள தகைமைகளும் திறமைகளும் இன்று ஒரு ஆணுக்கு இருந்திருந்தால், கழுத்து நிறைய மாலைகள் விழுந்திருக்கும். விருதுகள் வந்து குவிந்திருக்கும். எமது சமூகம் ஏனோ பெண்ணின் சாதனைகளுக்கு அங்கீகாரம் கொடுக்கத் தயங்குகின்றது. அதனால் என்றும் பெண்கள் இலை, மறை காயாகவே இருக்க வேண்டும் என்பது நியதியா? சமூகம் இவரை இனங்கண்டு கொள்ளுமா? இவருக்குரிய இடத்தைக் கொடுக்க முன் வருமா? ஆவலுடன் காத்திருக்கின்றது முஸ்லிம் பெண்கள் சமூகம்.

பல உயர் பதவிகளை வகித்தவர். சமூக நலன் கருதி முஸ்லிம் மகளிர் கல்லூரியின் அதிபராக பதவியேற்றார். இதனால் கல்லூரி பெருமை பெற்றது, வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்றாலும் இவருக்கு இணையாக ஒருவர் அதிபராக இனியும் வருவாரா? காலம் பதில் சொல்லட்டும். இந்த ஐந்து வருட கால சேவையில் இவர் சாதித்தவை அநேகம்.கம்பீரமான நுழைவாயில், அழகான முற்றவெளி, மாடிக் கட்டிடங்கள், ஆரம்பப் பிரிவு வாத்திய இசைக்குழு, பாடசாலையில் அதிகரித்துச் செல்லும் பரீட்சை பெறுபேறுகள், தரம் 5, கா.பொ. த. சாதாரண தரம், உயர் தரம், இணைபாடவிதான செயற்பாடுகள் என்பன இவரது முயற்சியின் அறுவடைகளாகும். இங்கு மாணவியரின் திறமைகள் பட்டை தீட்டப்படுகின்றன.

நலன் விரும்பிகள், பழைய மாணவிகள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பெற்றோர் என பாடசாலை சமூகத்தின் உள்ளங்களை கொள்ளை கொண்டவர். இதன் மூலம் கல்லூரியின் பல தேவைகள் நிறைவேற்றப்பட்டன. அதிபர் ஒரு நிறை குடம். எனவே இந்த அதிபரை எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றது. செயற்திறன்மிக்க இவரின் சேவைகள் ஏனைய அதிபர்களுக்கு ஒரு முன்மாதிரி. வழிகாட்டியும் கூட. இவரை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். அறிந்து கொள்ளச் செய்வது முஸ்லிம் சமூகத்தின் கடமையும் பொறுப்புமாகும்.

இதுவரை சாதனைகள் பல புரிந்தாலும் சோதனைகளும் வரத்தான் செய்தன. ஆளுமைமிக்க அவரால் அனைத்தையும் முறியடித்து வெற்றி கொள்ளவும் முடிந்தது. இவரை ஏய்க்கவும் மேய்க்கவும் ஏனையோரால் முடியாது போய்விட்டது. சவால்கள் இவருக்கு சாமான்யமானது. தடைக் கற்களை படிக்கற்களாக்கி வெற்றியுடன் வீரு நடை போடுகின்றார் இந்தத் தலைமகள். அவரை எனக்கு நன்றாகவே பிடித்திருக்கின்றது.

இந்த அழகு தேவதை ஒரு கலங்கரை விளக்கு. அதன் ஒளி தீவு முழுவதும் பரவட்டும். சென்ற இடமெல்லாம் சிறப்புப் பெற்று, தொட்டதெல்லாம் துலங்கி நீடித்த ஆரோக்கியம் பெற பிரார்த்திப்போமாக.

எம்.எம்.எவ். ரபக்கா

பிரதி அதிபர்

முஸ்லிம் மகளிர் கல்லூரி - கொழும்பு

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.