வரு. 68 இல. 43

துர்முகி வருடம் ஐப்பசி மாதம் 07நாள் ​​ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1438 முஹர்ரம் பிறை 21

SUNDAY OCTOBER 23, 2016

 

 
யுத்தத்துக்கு ஒப்பானதொரு நெருக்கடிக்குள் காத்தான்குடி களப்பு வாழ் மக்கள்

யுத்தத்துக்கு ஒப்பானதொரு நெருக்கடிக்குள் காத்தான்குடி களப்பு வாழ் மக்கள்

பாரிய சூழல் பிரச்சினையாக மாறிவரும் குப்பை

இலங்கையில் குப்பைகளை அகற்றுவதற்கு முறையான திட்டமிடப்பட்ட வேலைத்திட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படாமையால் இன்று 'குப்பைகள்' என்பது மிகப்பெரிய சூழலியல் பிரச்சினையாக மாறியுள்ளது. இலங்கையில் சாரசரியாக மனிதன் ஒரு நாளைக்கு 2 1/2 கிலோ குப்பைகளை அகற்றுவதாகவும், அவற்றில் 500 கிராமுக்கு அதிகமான கழிவுகள் இலகுவில் உக்காத பொருட்களாக இருப்பதாகவும் சூழல் பாதுகாப்பு நிறுவனத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. எனினும், எதைப்பற்றியும் சிந்திக்காது வெறுமனே 'குப்பைகள் அகற்றப்படுகின்றன' என்ற பெயரில் ஓர் இடத்திலிருந்து குப்பைகளை எடுத்து சென்று இன்னொரு இடத்தில் கொட்டுகின்றார்கள். அதுவும் மனித வாழ்விடங்களுக்கு அருகிலுள்ள நீர்நிலைகளிலும், காணிகளிலும் அவற்றைக் கொட்டுகின்றார்கள். இதனால் காலப்போக்கில் அவ்விடங்களில் சேரும் குப்பைகள் உக்காது சூழலை மாசடைய செய்வதுடன், பல்வேறு சுகாதார பிரச்சினைகளையும் ஏற்படுத்திவிடுகின்றன.

இங்கிலாந்து சமுத்திர சமிக்ஞை கணிப்பீடுகளின் தரவுகளுக்கமைய சமுத்திரங்களுக்கு அருகில் அதிகளவில் குப்பைகளை கொட்டும் நாடுகளின் வரிசையில் இலங்கை ஐந்தாவது இடத்தை வகிப்பதாக இலங்கை சூழல் பாதுகாப்பு மத்திய நிறுவனத்தின் பிரதான அதிகாரி ரவீந்து காரியவசம் தெரிவித்தார்.

அந்தவகையில் கடந்த 40 வருடங்களாக காத்தான்குடி களப்பு பகுதிக்கு அருகில் கொட்டப்பட்டுவரும் குப்பைகளினால் களப்பின் பெரும் பகுதி இன்று குப்பைகளினால் மூடப்பட்ட நிலையிலுள்ளது. இதனால் ஒரு காலத்தில் யுத்த நிலைமைகளினால் கஷ்டங்களை ​அனுபவித்த காத்தான்குடி மக்கள் இன்று குப்பைகளினால் பெரும் சூழலியல் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றார்கள்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் தரவுகள், யுத்தத்தினால் அப்பிரதேசத்தை விட்டு இடம்பெயர்ந்து சென்ற சுமார்குடும்பங்கள் 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து மீண்டும் அப்பிரதேசத்தில் மீள்குடியேறியதாகவும், அதனைதொடர்ந்தே களப்புக்கு அருகில் கொட்டப்பட்ட, அப்புறப்படுத்தப்படாத குப்பை கூளங்கள் பெரும் பிரச்சினையாக எழ தொடங்கியதையும் சுட்டிக் காட்டுகின்றன.

இது தொடர்பாக காத்தான்குடி முஸ்லிம் பள்ளிவாசலின் நிறுவன தலைவர் மொஹமட் சுஹயிர் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்திய போது,

ஒரு காலத்தில் ஆயுதங்களினால் எங்களை தாக்கினார்கள். தற்போது யுத்தம் நிறைவடைந்துவிட்டது. அதனால் குப்பைகளால் எங்களை தாக்குகின்றார்கள் என்றார்.

குப்பைகள் கொட்டப்பட்டிருக்கும் இடத்துக்கு அருகில் அல்ஹிரா முஸ்லிம் பாடசாலை இருக்கின்றது. இப்பாடசாலையில் மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள். 2012 ஆம் ஆண்டு மாணவர்கள் விளையாடுவதற்கென்று மைதான மொன்றை அமைத்த போதிலும். களப்புக்கு அருகில் கொட்டப்பட்டிருந்த குப்பைகளினால் மைதானமும் காலப்போக்கில் மாசடைய தொடங்கியது. இன்று மாணவர்கள் தமது ஓய்வு நேரத்தில் விளையாடுவது குப்பைகளால் நிறைந்த மைதானத்திலேயேயாகும்.

எனவே இத்தகைய நிலைமைகள் மாணவர்களின் சுகாதாரத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்து வருகின்றது.

இதுதொடர்பாக அல்ஹிரா பாடசாலை அதிபர் சாரூக் தெரிவிக்கையில், 40 வருடங்களுக்கும் மேலாக இங்கு குப்பைகள் கொட்டப்படுகின்றன. குப்பைகள் கொட்டுவதற்கு இடமில்லை என்பதால் களப்புக்கு அருகில் கொட்டுவதாக நகர சபையினர் தெரிவிக்கின்றனர்.

பலதடவைகள் பொதுமக்கள் ஆர்பாட்டங்களை நடாத்தினார்கள். அதன்விளைவாக இங்குள்ள குப்பைகளை அகற்ற முயற்சிகளை எடுத்தார்கள். எனினும், இன்னுமொரு தரப்பினர் குப்பைகள் கொட்டுவதற்கு இடமில்லையென்று தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியமையால் அந்த முயற்சியும் கைவிடப்பட்டது. குப்பைகள் இருக்கும் இடத்துக்கு அருகிலுள்ள வகுப்பில் மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள். இதனால் மாணவர்களுக்கு நோய்க் கிருமிகள் தொற்றுவதற்கு அதிகமான வாய்ப்புகள் காணப்படுகின்றன என்றார்.

இது தொடர்பாக பள்ளிவாசல் நிறுவன சம்மேளனத்தின் உபதலைவர் தெரிவிக்கையில், முன்னைய வர்த்தமானியின்படி காத்தான்குடி பிரதேசத்துக்கு என வரையறுக்கப்பட்ட காணிகள் யுத்தத்திற்கு பின்னர் பல தனியார் நிறுவனங்களின் கைகளுக்கு மாறின. இதனால் இங்கு அதிகமாகவே காணப்படுகின்றது. இதனால் மாற்றுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தவோ குபைகளைக் கொட்டவோ காணிகளுக்குப் பற்றாக்குறை காணப்படுகின்றது. யுத்தகாலத்தில் தமது காணிகளை விட்டு சென்றவர்கள் கூட மீண்டும் வந்து தமது காணிகளில் குடியேறினால் அரசாங்க காணிகளில் குடியேறி விட்டார்கள் என வழக்கு தாக்கல் செய்கின்றார்கள் என தெரிவித்தார்.

காத்தான்குடி களப்புக்கு அருகில் கொட்டப்படும் குப்பை பிரச்சினைக்கு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாக பள்ளிவாசல் மற்றும் நிறுவன சம்மேள தலைவர் ஏ.ஏம். ஏம். தௌபீக் தெரிவிக்கையில்,

குப்பைகள் பிரச்சினைக்கு தீர்வொன்றினை பெற்றுக்கொடுப்பதற்காக எமது சம்மேளனத்தின் உதவியுடன் 40 இலட்சம் ரூபா பணம் திரட்டப்பட்டு காணியொன்றை வாங்கி நகர சபையினருக்கு ஒப்படைத்தோம். தற்போது அந்த இடத்தில் அசேதன உரவகைகள் தயாரிக்கப்படுகின்றன என்றார்.

காத்தான் குடி நகர சபை செயலாளரிடம் இது தொடர்பாக வினவிய போது,

யுத்தத்துக்குப் பின்னர் மக்கள் மீள்குடியேறியமையால் இப்பகுதியில் சனத்தொகை அதிகரித்தது. எனவே அகற்றப்படும் குப்பைகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. ஒரு நாளைக்கு 30 ஆயிரம் கிலோ குப்பைகள் இங்கு கொட்டப்படுகின்றன. அவற்றில் 26 வீதமான கழிவுகளே சேதன பசளை தயாரிப்புக்கென்று அனுப்படுகின்றது. குப்பைகளை கொட்டுவதற்கு முறையான இடமில்லையென்பதே பிரதான பிரச்சினையாகவுள்ளது. 2018 ஆம் ஆண்டுக்குள் இப்பிரச்சினைக்கு நிரந்த தீர்வொன்றினை பெற்றுக்கொடுக்க வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருகின்றோம் என்றார்.

இத்தகைய நிலைமைகளினால் ஏற்பட்டுள்ள சூழலியல் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வோமானால்,

பொதுவாக ஒருவகை கடற்வாழ் உயிரிணத்தின் மூலமே முருங்கை கற்பாறைகள் உருவாகுகின்றன. எனினும்,குப்பைகள் அவ்விடங்களில் கொட்டப்படும் போது அந்த உயிரினங்கள் உயிரிழந்துவிடுகின்றன. எனவே காலப்போக்கில் முருங்கை கற்பாறைகள் அழிவடைய குப்பைகள் காரணமாக அமைகின்றன. அதுமட்டுமின்றி, குப்பைகளினால் கடற்கரையோரங்களில் வளரும் கண்டல் தாவரங்களும் அழிக்கப்படுகின்றன.

மேலும் குப்பைகள் மீது சூரிய ஒளி நேரடியாக படுவதால் மீதேன் வாயு உற்பத்தி செய்யப்படுகின்றது. இதனால் அப்பிரதேசத்தைச் சுற்றி வாழும் மக்களுக்கு ஆஸ்மா போன்ற சுவாசக் கோளாறுகள் ஏற்படுவதற்கு அதிகமான வாய்ப்புகள் காணப்படுகின்றன.

எனவே, காத்தான்குடியை போலவே முத்துராஜவெல, மீதொட்டமுல்ல, ஹபரண, பதுளை போன்ற பிரதேசங்களில் குப்பைகள் தொடர்பான இத்தகைய பிரச்சினைகள் அதிகமாகவே காணப்படுகின்றன. எனவே இதுதொடர்பில் துரிதமான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கின்றது.

மனிதன் இயற்கையை கட்டியாள நினைப்பதனால் ஏற்படும் பல்வேறுபட்ட அசாதாரண விளைவிகளில் ஒன்றே குப்பைப் பிரச்சினையும். மீண்டும் இயற்கையோடு இயைந்த வாழ்வு நோக்கிய பயணத்தினை மனிதன் தொடக்குவதற்கான முதற்படியாக இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் உணர்வுரீதியாக கட்டியெழுப்ப பட வேண்டியது அவசியம்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.