வரு. 68 இல. 43

துர்முகி வருடம் ஐப்பசி மாதம் 07நாள் ​​ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1438 முஹர்ரம் பிறை 21

SUNDAY OCTOBER 23, 2016

 

 
உமா ஓய திட்டத்தினால் அவல நிலையில் மக்கள்

உமா ஓய திட்டத்தினால் அவல நிலையில் மக்கள்

உமா ஓய திட்டத்தினால் தொடந்தும் தாம் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக இத் திட்டத்தால் பாதிக்கப்பட்ட பண்டாரவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கினிகம,ஹீல்ஓய மற்றும் எல்ல பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட ஹீல் ஓய, கித்தல் எல்ல, மகுல் எல்ல, ரஜகொடுவ, பல்லபேருவ, போன்ற பிரதேசங்களில் வாழும் மக்கள் கவலையும், அதிருப்தியும் தெரிவிக்கின்றனர்.

தாம் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த இப் பிரதேசத்தில் நிம்மதியாக வாழ முடியாது தினமும் எந்த நேரத்தில் எது நடக்கும் எந்த வீடு எப்போது சரிந்து விழும் எனும் பீதியில் வாழ்ந்து வருவதாகவும், அன்றாடம் தாம் பயிர்ச்செய்கை மேற்கொண்டு வந்த விவசாய மற்றும் வீட்டுத் தோட்ட நிலங்கள் யாவும் உமா ஓய திட்டத்தினால் நிலங்களில் ஏற்படும் பாரிய வெடிப்பினால் மண்ணில் புதையுண்டு செல்லும் பயங்கர அபாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். பரம்பரை பரம்பரையாக விவசாயத்தினை நம்பி வாழ்ந்து வந்த தாம் விவசாயம் செய்ய முடியாது ஜீவனோபாயம் பாதிக்கப்பட்டுள்ளதையும் அவர்கள் கூறுகின்றனர். சுமார் முப்பது முதல் ஐம்பது அடி ஆழமான கிணறுகளும், விவசாய நீர்க் குழிகளும் வற்றி வறண்டு போயுள்ளத்தால் நீருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இது தவிர தாம் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் கட்டிய வீடுகளிலும், குடிசைகளிலும் ஆங்காங்கே பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டு எப்போது எங்கு வேண்டுமானாலும் விழலாம் எனும் மரணப் பயத்தில் தினமும் உயிர் வாழ்ந்து வருவதாக கவலையும், அதிருப்தியும் தெரிவிக்கும் இப் பிரதேச மக்கள் அரசாங்கமும் இத் திட்டத்தினை மேற்கொள்வோரும் தமக்கு தகுந்த நட்ட ஈட்டினையோ அல்லது மாற்று வழிகளையோ செய்து தரவேண்டும் என ஜனாதிபதியிடமும் அரசாங்கத்திடமும் வலியுறுத்திவிடுவதோடு ஆர்பாட்ட பேரணிகளையும் நடாத்தி வருகின்றனர்.

கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட இந்த உமா ஓய திட்டத்தினை நிறுத்துவதற்கும் அல்லது மாற்று வழியினை ஏற்படுத்தவும் சமூக ஆர்வலர்களும், பிரதேசவாசிகளும் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் கைகூடாது போனமை இப் பிரதேச வாசிகளின் துர்பாக்கியமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.