வரு. 68 இல. 43

துர்முகி வருடம் ஐப்பசி மாதம் 07நாள் ​​ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1438 முஹர்ரம் பிறை 21

SUNDAY OCTOBER 23, 2016

 

 
தேசிய மின்சாரத் தேவையில் காற்றாலையின் பங்களிப்பு

தேசிய மின்சாரத் தேவையில் காற்றாலையின் பங்களிப்பு

இலங்கையின் வறட்சியான காலநிலையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாவிட்டாலும், நுரைச்சோலை அனல் மின்னுற்பத்தி நிலையம் செயலிழந்ததின் பின் மின்வெட்டு சில மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டது.

முன்பு நீர்மின் வலுவுற்பத்தியே முழுமையாக காணப்பட்டாலும் ஜனத்தொகை பரம்பல் அடர்த்தி, உற்பத்தி பெருக்கம் காரணமாக மின்சாரமும் வாழ்க்கையின் அத்தியாவசியப் பாவனைப் பொருளாக மாறிவிட்டது. மின்சாரம் இல்லாவிடியின் முழுநாடே இருளில் மூழ்கிவிடும். நாட்டின் தேசிய அபிவிருத்து முடங்கிவிடும்.

மின் பிறப்பாக்கிகளின் இயக்கத்துக்கு நீர், எரிபொருள், நிலக்கரி, சூரிய சக்தி, காற்றாலை போன்றன பயன்படுத்தப்படுகின்றன. ஐரோப்பிய நாடுகளில் காற்றாலை மின்சாரத்தை பெறுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

புத்தளம் கடற்கரையை அண்டிய பகுதிகளில் பெரிய காற்றாடிகள் இயங்குவதை அவதானிக்கலாம். அவை காற்றின் மூலம் இயக்கப்பட்டு மின்னுற்பத்தி செய்யும் ஆலைகளாகும்.

சிரேஷ்ட பொறியியலாளரான ஆர். இராஜபிரபுவிடம், மின்பிறப்பாக்கியான காற்றாலைகள் குறித்து வினா எழுப்பிய போது,

தமது நிறுவனத்தினூடாக காற்றாலை மின்பிறப்பாக்கி நிறுவப்பட்டு, அதனூடாக மின்சாரத்தை உற்பத்தி செய்து இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்படுவதாக குறிப்பிட்டார்.

காற்றாலை மின் உற்பத்தி இயந்திரத்தில் சுழலும் இறக்கைகள், கியர் பெட்டி, ஜெனரேட்டர் எனப்படும் மின் உற்பத்தி இயந்திரம் ஆகிய மூன்று முக்கிய பகுதிகள் உள்ளன. காற்றின் விசை இறக்கைகள் மீது படும்போது அவை சுழன்று காற்று சக்தியை இயந்திர சக்தியாக மாற்றுகின்றன. இவ்வியந்திர சக்தி மின் உற்பத்தி இயந்திரத்தை இயங்க வைத்து மின்னுற்பத்தி செய்கின்றது.

அதாவது காற்றுச் சக்தி (Wind power) அல்லது காற்று மின்சாரம் (wind electricity) எனப்படுவது காற்றிலிருந்து மின்னாற்றலைப் பெறுவதைக் குறிக்கின்றது. அதாவது, காற்றுச் சுழலிகளைப் பயன்படுத்திக் காற்றிலிருந்து மின்னாற்றலை உற்பத்தி செய்யும் பொறிமுறையாகும்.

இன்று புதுசக்தி மூலம் மின்னுற்பத்தியை உள்வாங்க பல தனியார் நிறுவனங்கள் அரசாங்கத்துக்கு பங்களிக்கின்றன. இதனூடாக எதிர்காலத்தில் மின்சார தேவையினை நிறைவாக செயற்படுத்த முடியும் என்ற எதிர்பார்ப்புண்டு. Debug Group of Companies சிரேஷ்ட பொறியியலாளரான ஆர். இராஜபிரபுவிடம், மின்பிறப்பாக்கியான காற்றாலைகள் குறித்து வினா எழுப்பிய போது,

தமது நிறுவனத்தினூடாக காற்றாலை மின்பிறப்பாக்கி நிறுவப்பட்டு, அதனூடாக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்படுவதாகவும், இது எமது நிறுவனம் சார்ந்த வியாபாரமாக இருந்தாலும் இது ஒரு தேசிய சேவையாகும் என்றும் தெரிவித்தார். ஒரு நிறுவனத்திற்கு 10 மெகாவோட்ஸ் உற்பத்தியை மட்டுமே செய்யமுடியும். தமது Debug குழுமம் இரு பெயரில் 20 மெகாவாட்ஸ் உற்பத்திகளை செய்வதாகவும், மின்சாரம் தனிநபர்களின் ஏகபோக உரிமையாக மாறிவிடாவண்ணம் இருப்பதற்காக அரசாங்கத்தின் பாதுகாப்பான ஒரு திட்டமாகும்.

இலங்கையில் காற்றாலை உற்பத்தி பிரிவுகள் 15 இருப்பதாகவும் குறிப்பிட்ட அவர், இக்காற்றாலை மூலம் 125 மெகாவொட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாகவும், இது இலங்கை மொத்த மின் உற்பத்தியின் 5 சதவீதமாகும் என்பது குறிப்பிட்டார்.

புத்தளம், கற்பிட்டிய, யாழ்ப்பாணம், வெலிகந்த பகுதிகளில் இக்காற்றாலை மின்பிறப்பாக்கிகள் நிறுவப்பட்டு மின்னுற்பத்தி செய்யப்படுவதாகவும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் மன்னார் கடலில் காற்றாலை மின் பிறப்பாக்கிகள் அமைக்கப்படவுள்ளதாகவும், மன்னாரிலிருந்து 315 மெகாவோட்ஸ் மின்னுற்பத்தி எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டு, நாட்டுத் தேவைக்கேற்ப மின்னுற்பத்தி அதிகரிக்க வேண்டும் என்றார்.

சுற்றுச்சூழல் சார்ந்த விடயங்கள் குறித்து வினா எழுப்பப்பட்ட போது, மின்பிறப்பாக்கி காற்றாலை அமைக்கப்பட்ட இடங்களில் விவசாய உற்பத்திகளை மேற்கொள்ளலாம். சுற்றுச்சூழலில் பக்கவிளைவுகள் ஏதுமற்றது. அத்துடன், இது மனித வாழ்வியலுக்கு பாதகமற்றது. ஆனாலும் பறவையினம் அவ்விடத்தைவிட்டு சென்றுவிடும் என்பதையும் குறிப்பிட்டு, மின்பிறப்பாக்கி காற்றாலைககளை கடலிலும் அமைக்கலாம் என்றார் அதனால் மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்றார்.

அத்துடன், இதன் உற்பத்தி முழுமையாக காற்று வீசும் திசைகளில் தங்கியிருப்பதினால் நாளாந்தம் எரிபொருள் செலவு இருக்காது, அத்துடன், காபனின் செறிவு வருடத்திற்கு 616 மெகா டொன் குறைக்கப்படும் என்றும். இதுவும் சுற்றுச்சூழலுக்கு ஒரு நன்மையே என்று குறிப்பிட்டார்.

2030 ஆண்டு புதுப்பிக்கப்பட கூடிய சக்தியினால் மொத்த தேவையில் 30 சதவீதத்தைப் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது காற்றாலை, சூரிய சக்தியையும் குறிப்பிடலாம் என்றார்.

ஒரு காற்றாலை மின்பிறப்பாக்கியை உருவாக்குவதற்கு செய்யப்படும் முதலீடு மூன்று மில்லியன் அமெரிக்க டொலர் ஆகும் (இலங்கை நாணயப்படி 450 மில்லியன் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது) இதன் மூலம் வீண்விரயம், எரிபொருள் பயன்படுத்தல் என்பன தவிர்க்கப்பட்டு, ஒரு காற்றாலை மூலம் நாளொன்றுக்கு 1 மெகாவோட்ஸ் மின்சாரம் உற்பத்திசெய்யப்படுவதாகவும் மொத்த கேள்வியில் 1.2 வீதம் மட்டுமே காற்றாலை மூலம் சந்திக்கப்படுகிறது என்றார்.

அத்துடன், எரிசக்திகளில் தங்கியிருக்க தேவையில்லை. வெளிநாட்டு எதிர்பார்ப்புகளில் தங்கியிராமல் மின்னுற்பத்தி மூலம் பெருந்தொகையான அந்நிய செலாவணியை மீதப்படுத்தலாம். பராமரிப்பு செலவுமட்டுமே இருக்கும் என்றார் சிரேஷ்ட பொறியிலாளர் இராஜபிரபு.

காற்றாலை மின்பிறப்பாக்கி அமெரிக்கரான சார்ல்ஸ் எப். புருஸினால் 1888 இல் கண்டுபிடிக்கப்பட்டது. இன்று உலகம் பூராகவும் காற்றாலை மின்னுற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுதற்கு முக்கிய காரணம் காற்றின் மூலம் கிடைக்கும் மின்சாரம் எமக்கு இயற்கையின் பெரும் கொடை என்பதே . காற்றாலை எமது தேசிய மின்னுற்பத்தியில் பெரும்பங்களிப்பு என்பதை மறந்திடலாகாது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.