வரு. 68 இல. 34

துர்முகி வருடம் ஆவணி மாதம் 05ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 துல்க-ஃதா பிறை 16

SUNDAY  AUGUST 21, 2016

 

 
உலகத் தமிழ் மக்களிடம் இலங்கை எம்.பிக்கள் மதுரையில் உருக்கமான வேண்டுகோள்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் உயர் கல்வி வளர்ச்சிக்காக உதவுங்கள்!

உலகத் தமிழ் மக்களிடம் இலங்கை எம்.பிக்கள் மதுரையில் உருக்கமான வேண்டுகோள்

யுத்தத்தினால் கணவனை இழந்த பெண்களின் பிள்ளைகள் உயர் கல்வியினைத் தொடர உதவ முன்வருமாறு மூன்று இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் உலகத் தமிழர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகிய மூவருமே வேண்டுகோளை விடுத்துள்ளனர். புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் உலகத் தமிழ் மக்களுக்கு இவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மதுரையில் நடைபெற்ற இலக்கிய விழா ஒன்றில் கலந்துகொண்டிருந்தபோதே இவர்கள் இவ்வழைப்பினை விடுத்துள்ளனர்.

யுத்தத்தினால் கனவனை இழந்த பெண்களின் பிள்ளைகள் உயர்கல்வியினைப் பெறுகின்ற வளர்ந்த பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து கவனம் செலுத்தவேண்டிய கடப்பாடு காணப்படுகிறது. பதிவுசெய்யப்பட்ட 90,000 விதவைக் குடும்பங்கள் பல்வேறு பொருளாதார பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர், என ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்

தந்தையரை இழந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் இளைஞர்களின் கனவான உயர் கல்வியினை பெறுவதற்கு இணைந்து செயற்பட இங்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தமிழர்கள் கைகோத்தால் தாம் உதவ தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

தமது உடமைகள் சொந்த பந்தங்களை இழந்த மக்களின் நெருக்கடியினை விபரித்துக் கூறிய நிர்மலநாதன் “தமிழ் மக்கள் அவரகளது அடிப்படைத் தேவைகளைக் கூடப் பூர்த்திசெய்ய முடியாத நிலையில் உள்ளனர். நாங்கள் அரசியல் மேடைகளில் சுதந்திரத்துக்காக போராடுகிறோம். தமிழ் மக்களின் விடுதலைக்காக உயிர்த் தியாகம் செய்தவர்களை கைவிட முடியாது. இம்மக்களின் தொழில் முனைவோர் கல்வி, மற்றும் வாழ்க்கைத்தர மேம்பாடு போன்றவற்றிற்கு உதவுவது உலகம் முழுவதிலுமுள்ள தமிழ் மக்களின் தலையாய கடமையாகும்” எனக் கூறியுள்ளார்.

இலங்கை தமிழ் மக்களின் கல்வி மற்றும் வாழ்வாதார பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்கு சங்கம் 4 உலகிலுள்ள தமிழ் மக்களை நெருங்குவதற்கு சாதகமான மேடையை அமைத்துத் தந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.