வரு. 68 இல. 34

துர்முகி வருடம் ஆவணி மாதம் 05ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 துல்க-ஃதா பிறை 16

SUNDAY  AUGUST 21, 2016

 

 
நல்லாட்சியைப் பாதுகாப்பது அனைவரினதும் கடமை

நல்லாட்சியைப் பாதுகாப்பது அனைவரினதும் கடமை

நல்லாட்சி அரசாங்கம் என்பதை எப்படி அடையாளம் காண்பது? என்று கேட்கிறார் ஒரு நண்பர். அரசாங்கத்துக்கு விசுவாசமாக இருப்பவர்களின் கூற்று இது என்பதா? அல்லது முன்னைய அரசாங்கத்தின் மீதான வெறுப்பின் அடையாளமா? அல்லது, சீன வெறுப்பு வாதத்தின் வெளிப்பாடா? அல்லது அமெரிக்க – இந்திய விருப்பின்பாற்பட்ட விளைவா? அல்லது மெய்யாகவே எதிர்பார்க்கப்பட்ட நல்லாட்சிதானா? நண்பருடைய ஒரு கேள்வி பல கேள்விகளைப் பெருக்கி யுள்ளது. நண்பர் என்னிடம் கேட்ட அதே கேள்வியைப் பல தரப்பினரிடமும் எறிந்தேன்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சொன்னார், “புதிய அரசாங்கம் நல்லாட்சியை நடத்துகிறதோ இல்லையோ என்பது ஒரு புறம் இருக்கட்டும். மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சியைத் தமிழ் மக்கள் விரும்பவில்லை. அவர்களுடைய விருப்பத்தை நிறைவேற்றியிருக்கிறோம். மகிந்தவை வீட்டுக்கு அனுப்பியிருக்கிறோம். இனி அடுத்ததைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேணும்“ என்றார்.

”ஆனால், 2016 இல் ஒரு தீர்வைத்தரும் என்றல்லவா சம்மந்தன் உறுதியளித்தார். அதாவது நல்லாட்சிக்கு ஆதரவளித்தால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் எல்லாம் தீர்க்கப்படும் என்றவாறாக...ஆனால், இன்னும் தமிழ் அரசியற் கைதிகள் உண்ணாவிரதமிருக்கிறார்கள். காணாமல் போகடிக்கப்பட்டவர்களுடைய உறவினர்கள் கண்ணீரோடும் கண்டன அட்டைகளோடும் தெருக்களில் ஊர்வலம் போகின்றனரே....?“ என்று திருப்பிக் கேட்டேன்.

“அதைப்பற்றியெல்லாம் சம்மந்தன் ஐயாவிடம்தான் கேட்க வேணும். நீங்கள் அவரிடம் கேளுங்கள் ப்ளீஸ்..“ என்று முடித்துக்கொண்டார்.

lll

சம்மந்தனிடம் இதைப்பற்றிக் கேட்பதற்கு தொடர்பு கொண்டேன். பதிலில்லை. எதிர்க்கட்சி அலுவலகத்தில் கேட்டபோது “ஐயா வெளியுர் போயிருக்கிறார்“ என்றார்கள்.

lll

தொடருந்துப் பயணமொன்றில் கூடவே பயணித்த படையினர்கள் இருவரிடம் நல்லாட்சி அரசாங்கத்தைப்பற்றிக் கேட்டேன். முதலில் என்னைக் கூர்ந்து பார்த்தனர்.

“நல்லாட்சி அரசாங்கம்" என்றால் என்ன என்றேன் அவர்கள் “அப்படியென்றால் என்ன“ என்று கேட்டனர்.

“மக்களுக்குரிய அரசாங்கம். அமைதிக்கும் சமாதானத்துக்கும் ஜனநாயக உறுதிப்பாட்டுக்கும் இனங்களுக்கிடையிலான ஒற்றுமைக்கும் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கும் ஊழலற்ற நிர்வாகத்துக்கும் ஏற்றமாதிரிச் செயற்படக்கூடிய அரசாங்கத்தையே நல்லாட்சி அரசாங்கம் என்று சொல்வது. இந்த அரசாங்கம் முன்பு இருந்த அரசாங்கங்களை விட வேறுபட்டு, வித்தியாசமாகத்தானே உள்ளது?“ என்று ஒரு சிறிய விளக்கத்தை அளித்துக் கேட்டேன்.

ஆளையாள் பார்த்துக் கொண்டனர். இன்னும் அவர்களுடைய முகத்தில் சந்தேகத்தின் நிழலாடியது. மெல்லத் தலையை அசைத்தார் ஒருவர். “அப்படியா?“ என்று கேட்பதைப்போலிருந்தது. மற்றவர் சொன்னார், “நாங்க இன்னும் வீட்டுக்குப் போக முடியல்லயே. எடுக்கிற சம்பளம் இப்படியே போக்குவரத்திலும் வேலை செய்யிற இடத்திலும் செலவழியுது. சண்டைக்குப் பிறகு வீட்டுக்குப் போகலாம். யுத்தம் எல்லாம் முடிஞ்ச பிறகு ஊரில் குடும்பத்தோட சந்தோசமாக வாழலாம் என்றுதான் நம்பியிருந்தோம். ஆனால், இன்னும் பிரச்சினை இருக்கு என்றுதான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். எப்பதான் இந்தப்பிரச்சினை இல்லாமற் போகும்? என்றார்.

ஒருவர் பதில் சொல்லவில்லை. சிரித்துக்கொண்டார். அவருடைய முகத்தில் எந்த உணர்ச்சிகளையும் காணமுடியவில்லை.

lll

கிழக்கு மாகாணத்துக்குச் சென்றபோது, ஒரு உரையாடலில் சில முஸ்லிம் நண்பர்களிடம் இதைப்பற்றிக் கேட்டேன், “தமிழ் முஸ்லிம் மக்களுக்கு இலங்கை இந்திய உடன்படிக்கைக்கு மேலதிகமாக – அதாவது 13 பிளஸ்க்கு மேலதிகமாக எதுவும் கிடைக்கப்போவதில்லை. இனி அதையெல்லாம் கவலைப்பட்டும் ஆகப்போவதொன்றுமில்லை. தமிழ், முஸ்லிம் அரசியற் தலைமைகளை நன்றாக எடைபோட்டு வைத்திருக்கின்றன. நல்லாட்சி என்பது, மகிந்த ராஜபக்ஸ என்ற இனவாதிக்குப் பதிலான ஆட்சி. “ என்றனர்.

“அப்படியென்றால், நீங்கள் மறுத்துச் சொல்கிற தமிழ், முஸ்லிம் தலைமைகளைத்தானே மக்கள் தொடர்ந்தும் ஆதரிக்கிறார்கள். அப்படியிருக்கும்போது நீங்கள் தமிழ், முஸ்லிம் தலைமைகள் சரியில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்? தவிர, இலங்கை இந்திய உடன்படிக்கையை ஏற்று வடக்குக் கிழக்கு மாகாணசபையில் பங்கேற்ற தமிழ் முஸ்லிம் தரப்புகள், இந்த மாகாணசபையில் எதையுமே செய்யமுடியாது என்றுதானே கைவிட்டன? அன்றுள்ளதை விட இன்று என்ன அதிகமாக வந்து விட்டது? அது மட்டுமல்ல, மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சியை நிராகரித்துத்தானே மைத்திரி – ரணில் கூட்டை தமிழ் முஸ்லிம் மக்கள் ஆதரித்தனர். ஒப்பீட்டளவில் மாற்றம் இருக்கிறதா? இல்லையா? இனமுரண்பாட்டுக்கான தீர்வு என்னவாக இருக்கும்? அந்தத் தீர்வு தமிழ், முஸ்லிம் மலையக மக்களுடைய அரசியல் உரிமைகளைப் பாதுகாக்குமா?என்று பதில் கேள்விகளை அடுக்கினேன்.

“மக்களின் ஆதரவை தவறாகப் பயன்படுத்திக் கொள்ளும் தலைமைகளைப்பற்றித்தான் சொல்கிறோம். தலைமைகள் மக்களுக்கு விசுவாசமாக இருக்க வேணும். அவர்களுடைய நம்பிக்கையைப் பாதுகாக்க வேணும். ஆனால், அதற்குப் பதிலாக மக்களின் நம்பிக்கையை இவை சிதைக்கின்றனவே! தமிழ், முஸ்லிம் மக்களின் தயவிலும் ஆதரவிலும் வந்த இந்த ஆட்சியைக் கொண்டு பல காரியங்களை இந்தத் தலைமைகள் செய்திருக்க முடியும்.தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உள் முரண்பாடுகளால் திணறுவதைப்போலத்தான் முஸ்லிம் காங்கிரசும் முரண்பாடுகளில் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கிறது. சிந்திக்கக்கூடியவர்கள் துக்கமடைகிறார்கள். நிலைமை மிகப் பாதகமாகவே இருக்கு. வெளிப்படையான இனமுரண்கள் இல்லை. அதனால் பதற்றம் இல்லாமலிருக்கிறது. அதனால்தான் சொல்கிறோம், இலங்கை இந்திய உடன்படிக்கை குறைந்த பட்சப் பாதுகாப்பைத்தந்தது என்று“ என்று பதிலளித்தனர்.

”நல்லாட்சி மீதான உங்களின் நம்பிக்கை என்ன? நல்லிணக்கச் செயற்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?” என்றேன்.

“நல்லிணக்கமோ சமாதானமோ பிரகடனம் செய்வதால் மட்டும் வருவதல்ல. அல்லது அங்குமிங்குமாக சில கருத்தரங்குகளை ஹொட்டேல்களில் சிலர் மட்டும் நடத்துவதாலும் வந்து விடாது. அவை நடைமுறையில் வரவேண்டியவை. நல்லிணக்கத்தைப்பற்றியும் சமாதானத்தைப்பற்றியும் முஸ்லிம்களுக்கும் மலையக மக்களுக்கும் தமிழ் மக்களுக்குமே முதலில் நம்பிக்கை வரவேண்டும். இந்த அரசாங்கத்துக்கு கூடுதலான பொறுப்புகளுண்டு. நல்லாட்சி மீதான நம்பிக்கையை அர்த்தமாக்க முயற்சிக்க வேணும். இப்போதே நம்பிக்கையின் வேர்கள் பலமாக வேண்டும். நாட்செல்லச் செல்ல எல்லாம் பாழாகி விடும். தாமதமான நீதி பாதிப்பையே தரும். இன்று தொடங்குவதே நம்பிக்கையும் நல்லதும். நாளை என்பது ஏமாற்றமும் காலங்கடத்துவதுமாகும்“ என்றார்கள்.

lll

இதேகேள்வியை, ஒரு கிறிஸ்தவ மதகுருவிடம் கேட்டேன். அவர் சொன்னார், “மைத்திரி ரணில் அரசாங்கம் வந்ததற்குப் பிறகுதான் ஜனநாயகச் சூழல் ஒன்று ஏற்பட்டிருப்பதாக மக்களுடைய மனதில் ஒரு எண்ணம் ஏற்பட்டிருக்கு. சனங்கள் பயமில்லாமல் வாழ்கிற ஒரு நிலைமை உண்டாகியிருக்கு. இதைவிட இந்த ஆட்சியுடன் பேசலாம் என்ற நம்பிக்கை தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இதெல்லாம் நல்லாட்சியின் அடையாளங்கள்தானே!” என்று.

“இருக்கலாம். ஆனால், தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலை தொடக்கம் தமிழ் மக்களின் மீள் குடியேற்றம் வரையிலும் பெரிய முன்னேற்றங்கள் எதையும் காணவில்லையே. பல இடங்களிலும் புத்தர் சிலை வைப்புகளும் பௌத்த விகாரைகளை அமைப்புகளும் நடக்கிறதே.. இப்படிச்செய்து கொண்டு எப்படி நல்லிணக்கத்தைக் காணமுடியும்? இதையெல்லாம் நல்லாட்சி எப்படி அனுமதிக்கும்?“ என்று கேட்டேன்.

இதுகளைப்பற்றிப் பேசித்தீர்க்க வேண்டியது அரசியல்வாதிகளின் வேலை. ஆனால், நல்லாட்சியில் – அதாவது இந்த அரசாங்கத்தில் மக்களுக்குக் கூடுதலான நம்பிக்கை உள்ளது. இது தமிழ், சிங்கள, முஸ்லிம், மலையக மக்கள் என அனைவரும் சேர்ந்து உருவாக்கிய ஒரு கூட்டரசாங்கம். இதை அதற்கேற்றமாதிரிப் பார்க்க வேண்டியது ஆட்சியில் இருப்பவர்களுடைய பொறுப்பும் கடமையுமாகும். என்றார் அந்த மதகுரு.

lll

பொதுவாகவே நல்லாட்சி பற்றிய விமர்சனங்களும் அபிப்பிராயங்களும் இந்த மாதிரித்தான் ஒரு விதமான கலவையாக உள்ளன. தெளிவான, உறுதியான பதிலைச் சொல்லக்கூடிய அளவுக்கு மக்களின் மனதில் அரசாங்கம் நம்பிக்கையின் விதைகளை ஊன்ற வேண்டும். பொது உடன்பாடுகொண்டு, நாட்டின் சவால்களை எதிர்கொண்டு அவற்றைத்தீர்ப்பதற்கான அரசாங்கம் என்பதே தொடக்கத்தில் இருந்த அறிவிப்பாகும். அந்த அறிவிப்பை ஆட்சிக்குப் பின்னரும் தொடர வேண்டும். அது தனியே மகிந்த ராஜபக்ஸ குடும்பத்தையும் அவருடைய தரப்பினரையும் கட்டுப்படுத்துவதுடன் மட்டும் முடிந்து விடக்கூடாது. அதற்கப்பால் செய்யவேண்டிய வேலைகளே நாட்டிற்கு அவசியமானவை. அவையே மக்களுக்கு நல்லாட்சி என்ற அர்த்தத்தைக் கொடுக்கும். இல்லையென்றால் அரசியற் பழிவாங்கல்களுக்கான நடவடிக்கைகளை மட்டுமே இந்த அரசாங்கம் மேற்கொண்டது என்ற அளவில் வரலாறு இந்த அரசாங்கத்தைப் பதிவு செய்து விடும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.