வரு. 68 இல. 34

துர்முகி வருடம் ஆவணி மாதம் 05ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 துல்க-ஃதா பிறை 16

SUNDAY  AUGUST 21, 2016

 

 
நலம் தரும் நல்லூர் கந்தன்

நலம் தரும் நல்லூர் கந்தன்

 தமிழ் மன்னன் ஆரியச் சக்கரவர்த்தியின் பிரதம அமைச்சரான செண்பகப் பெருமாள் என்றழைக்கப்பட்ட புவனேகபாகு என்பவனால் 884ஆம் ஆண்டளவில் இவ்வாலயம் கட்டப் பெற்றதாக வரலாறு கூறுகிறது. இவனது பெயரே இவ்வாலயத்தின் கட்டிடத்தில் 'ஸ்ரீ சங்கபோதி புவனேகபாகு' என பொறிக்கப்பட்டிருப்பதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. ஆரியச் சக்கரவர்த்திகள் நல்லூரிலிருந்து ஆட்சி புரிந்த காலத்திலே. மன்னருடன் அரசவையும் சென்று தலை வணங்கிய தலைசிறந்த ஆலயமாக இது விளங்கியதில் ஆச்சரியம் எதுவுமில்லை.

1478ஆம் ஆண்டளவில் யாழ்ப்பாணத்தை ஆட்சி புரிந்த கனகசூரியனின் மகனான சிங்கைப் பரராஜசேகரன் மேலும் இவ்வாலயத்தை வளமாக்கினான். வடக்கே சட்டநாதர் ஆலயத்தையும் கிழக்கே வெயிலுகந்த பிள்ளையார் ஆலயத்தையும் தெற்கே கைலாயநாதர் ஆலயத்தையும் மேற்கே வீரமாகாளி அம்மன் ஆலயத்தையும் கட்டுவித்து நல்லையம்பதியில் அருளாட்சி பெருகச் செய்தான் என வரலாறு கூறுகிறது.

வெளிநாட்டவர் ஆக்கிரமிப்பு அந்நாளில் வர்த்தக நோக்கமாக இலங்கை வந்தடைந்த போர்த்துக்கேயர் சிறிது சிறிதாக நாட்டினுள்ளும் பிரவேசித்தனர். இதுவே அன்றைய ஆக்கிரமிப்பாகக் கருதப்பட்டது. பறங்கியர்ப் படை கொழும்புத்துறையில் காலடி பதித்தபோது, யாழ். அரசன் அதனைத் தடுக்க முயன்றான். ஆனால் அவனால் முடியாமல் போனது. சைவத்தின் அரணாக அமைந்திருந்த குன்றனைய குமரன் கோயில் போர்த்துக்கேயத் தளபதி பிலிப் ஒலிவேறா என்பவனால் அழித்தொழிக்கப்பட்டது.

ஆனால் கோயில் பூசகரும் ஆலய மெய்க் காப்பாளனும் சேர்ந்து தமது இன்னுயிரையும் பொருட்படுத்தாது ஆலயத்தின் செப்புச் சாதனங்கள், திரு ஆபரணங்கள், சிவலிங்கங்கள் ஆகியவற்றை வெளியே எடுத்துச் சென்று காப்பாற்றி விட்டனர். இதுவும் நல்லைக் கந்தனின் இன்னருள் என்றுதான் கூற வேண்டும். இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர் ஆட்சி இடம்பெற்றது.

அன்றைய காலகட்டத்தில் நல்லைக் கந்தன் ஆலயம் அமைந்த இடத்தில் கிறிஸ்தவ ஆலயம் ஒன்று ஒல்லாந்தரால் அமைக்கப்பட்டது.காலங்கள் மாறின. நல்லூர்க் கந்தன் ஆலயம் முன்னரிலும் பார்க்க மிகச்சிறப்பாக அதே இடத்தில் அமைக்கப் பெற்றது. இதுவும் அழகன் முருகனின் நல்லருள் என்றே பக்தர்களால் போற்றப்பட்டது. மாப்பாண முதலியார் பரம்பரை இவ்வாலயத்தை அமைத்த பெருமை மாப்பாண முதலியார் பரம்பரையையே சாரும்.

இவர்களில் முன்னிப்பவர் இரகுநாத மாப்பாண முதலியார் ஆவார். இதற்கு 'யாழ்ப்பாண வைபவம்' என்னும் நூலும் சைவத்தையும் தமிழையும் அன்று நிலைபெறச் செய்த நல்லை ஸ்ரீ ஆறுமுக நாவலர் வெளியிட்ட துண்டுப் பிரசுரங்களுமே சான்றுகளாக அமைகின்றன. இன்று மிகச் சிறப்பாக ஆலயத்தை நிர்வகித்து வரும் குமாரதாஸ மாப்பணார் குடும்பத்தினரது அரிய சேவைகள் சொல்லுந்தரமன்று.

இவர்களது அயரா முயற்சியே இன்று புதுப்பொலிவுடன் காட்சி தரும் இன்றைய நல்லைக் கந்தன் ஆலயம். இலங்கையின் நல்லையம்பதி சித்தர்களான செல்லப்பா சுவாமிகளும், யோகர் சுவாமிகளும் அருள் உலா வந்த மண். ஆலய உற்சவத்தின்போது யாழ். நகரமே விழாக் கோலம் பூண்டிருக்கும். மக்கள் யாவரும் விரதமிருந்து ஆசார சீலர்களாய் நல்லைக் கந்தனது நினைவிலும் தொழுதலிலும் தமது பொழுதை இனிதே கழிப்பர்.

தேர்த் திருவிழாவான இன்று நல்லூர் ஆலயத்தின் உள்ளும் புறமும் பக்தர்களின் வெள்ளம் அலை மோதும் காட்சியே ஒரு தனி அழகுதான். தினமும் காலைப் பொழுதினிலே, பக்தர் கோஷ்டிகளின் 'நல்லைக் கந்தனுக்கு அரோகரா' என்னும் ஒலி வானளாவ எழ பஜனைக் கோஷ்டிகள் பின் தொடர கொடி, குடை, ஆலவட்டம் சூழ எழில்மிக்க சித்திரத் தேரிலே ஆறுமுகப் பெருமான் ஆரோகணித்து வீதி உலா வருவார். தீர்த்தோற்சவம் தேர்த் திருவிழாவை அடுத்து இடம்பெறும் தீர்த்தத் திருவிழா பஞ்ச கிருத்தியத்தின் அருளைக் குறிக்கின்றது.

தீர்த்தோற்சவமன்று ஷண்முகப் பெருமான் தங்க மயிலேறி வள்ளி, தெய்வயானை சமேதராய் விநாயகப் பெருமானும் சண்டேஸ்வர மூர்த்தியும் உடன் எழுந்தருள பஞ்ச மூர்த்திகளாக கோயிற்றிருக்கேணியின் முன்றலில் உலாவந்து நிற்பர். முதலில் அத்திர தேவர் தீர்த்தமாடுவர்.

பின்னர் கோயில் எஜமானும் முருக பக்தர்களும் தீர்த்தமாடுவர். பின்னர் பஞ்ச மூர்த்திகளும் மஞ்சள் பட்டு, மஞ்சள் மலர் மாலை அலங்காரத்தோடு வெளி வீதி உலா வரும் காட்சி. மனதைக் கொள்ளை கொள்வதாகும். மறுநாள் பூங்காவனத் திருவிழா வெகுகோலாகலமாக இடம்பெறும்.

ஆலய நந்தவனத்தில் திருக்கல்யாண வைபவம் இடம்பெற்று முத்துக்குமார சுவாமி வள்ளி, தெய்வயானை சமேதராய் மூன்று தண்டிகைகளில் அழகு பவனி வந்து அடியார்களுக்கு அருள் பாலிப்பர். இக்கல்யாண வைபவத்தோடு இவ்வாண்டுக்குரிய ஆலய உற்சவம் இனிதே நிறைவு பெறும். வடக்கில் போர்ச் சூழல் மறைந்து சமாதானம் தோன்றியிருக்கும் இக்கால கட்டத்தில் நாட்டில் நிரந்தர அமைதியும் மக்களிடையே ஒற்றுமையும் நிலவ, ஆட்சியிலிருப்போர் நல்லதோர் தீர்வை வழங்கிட நல்லைக் கந்தன் இன்னருள் புரிவானாக.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.