வரு. 68 இல. 34

துர்முகி வருடம் ஆவணி மாதம் 05ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 துல்க-ஃதா பிறை 16

SUNDAY  AUGUST 21, 2016

 

 
இதுவும் தமிழர் சம்பந்தப்பட்டது என்பதால் இழுத்தடிப்போ எனச் சந்தேகமாம்

ஒரு சுற்று அமர்வில் தீர்வு காணக்கூடிய விடயம் இத்தனை வருடங்கள் இழுத்தடிப்பு

மீனவர் பிரச்சினை நீண்டு செல்வதற்கு இரு நாட்டு தலைவர்களுமே பொறுப்பு

இதுவும் தமிழர் சம்பந்தப்பட்டது என்பதால் இழுத்தடிப்போ எனச் சந்தேகமாம்

 (சென்னையிலிருந்து தே. ​ெசந்தில்வேலவர்)

இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினையானது தீர்வு காணப்படாது பல வருடகாலமத் தொடர்வதற்கு இரு நாட்டினது அரசாங்கங்களுமே பொறுப்பேற்க வேண்டும். இரு நாடுகளினதும் தலைவர்கள் பேசித் தீர்க்க வேண்டிய விடயத்தை இத்தனை வருட காலமாக இழுத்தடிப்புச் செய்து வருவது ஏன் என்று புரியவில்லை.

இரு நாட்டு தலைவர்களும் நினைத்தால் ஒரு வார காலத்தில் இப்பிரச்சினைக்குத் தீர்வினைக் கண்டுவிடலாம். ஆனால் எத்தனையோ சுற்றுப் பேச்சுக்களை எத்தனையோ வருடங்களாக நடத்தியும் ஒரு தீர்வினைக் காண முடியாதுள்ளது. தமது வாழ்வாதாரத்திற்காகப் போராடும் மீனவ சமூகத்தின் பிரச்சினைகள் அரசியல்வாதிகளுக்கு பேசும் பொருளாகவும், விளையாட்டாகவும் உள்ளது என விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளனும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வை.

கோபால் சுவாமியும் தெரிவித்தனர். சென்னையிலுள்ள அவர்களது அலுவலகத்தில் அவர்களைச் சந்தித்துரையாடிய போதே அவ்விருவரும் இந்த ஒருமித்த கருத்தைக் கூறினர்.

இந்தியாவில் தமிழகத்து தமிழ் மீனவர்களும், ஈழத்தில் யாழ்ப்பாணத்து வடபகுதித் தமிழ் மீனவர்களும் பாதிப்புக்குள்ளாவதும், தமக்கிடையே மோதிக் கொள்வதும் இரு நாட்டுத் தலைவர்களுக்கும் பெரிதாகத் தென்படவில்லையோ எனும் சந்தேகமும் எமக்கு எழுகிறது. அதனால் இந்தப் பிரச்சினையை வெறுமனே மாதமொரு தடவை பேசும்விடயமாக்காது விரைவாகத் தீர்வு காணவேண்டும்.

தமிழகத்திலிருந்து முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசிற்கு கடிதங்கள் எழுதுவதும், இராமேஸ்வரத்திலும், ஈழத்தின் வடபகுதியில் மீனவர்கள் வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதுமாகவே பொழுது கழிகிறது. ஆனால் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்படுவதும், இலங்கை மீனவர்களை இந்திய கரையோர காவற்படையினர் விரட்டுவதும் தொடர் கதையாகவே உள்ளது எனவும் திருமாளவனும், வைகோவும் தெரிவித்தனர். எனவே இரு நாட்டுத் தலைவர்களுக்கும் தமது சொந்த நாட்டு மீனவ சமூகத்தின் மீது உண்மையான அக்கறை இருக்குமானால் உடனடியாக அமர்ந்துபேசித் தீர்வினைக் காண வேண்டும். தமிழக முதல்வர் ஜெயலலிதாக இதுவரை 88 கடிதங்களை மத்திய அரசிற்கு எழுத்திவிட்டார். முன்னர் கலைஞர் கருணாநிதி சுமார் 50 கடிதங்கள் வரை எழுதினார். ஆனால் இதுவரை ஆக்கபூர்வமாக எதுவும் நடக்கவில்லை. இலங்கையில் பாராளுமன்றத்தில் இந்த விடயம் நகைச்சுவையாக பேசப்படுகிறது. சுடுவோம், அடித்துவிரட்டுவோம் என ஏளனமாகப் பேசப்படுகிறது. இந்நிலை மாற்றியமைக்கபட வேண்டும். இருநாட்டு மீனவர்களும் தமது தொழிலை, பிரச்சினைகள் எதுவுமின்றிச் செய்யக்கூடிய சூழலை தலைவர்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும் வைகோவும், திருமாளவனும் தெரிவித்தனர்.

ஈழத்தமிழர் தீர்வு விடயத்தில் தமிழகத்தில் அதிகமாகக் குரல் எழுப்பிவந்த நீங்கள் இப்போது மிகவும் அமைதியாகி விட்டீர்களே எனக் கேட்டபோது, இல்லவே இல்லை, இப்போது அங்கு சமாதான சூழல் ஏற்பட்டுள்ளதால் அமைதியாக இருந்து அங்கு நடப்பதை அவதானித்து வருகிறாமே தவிரவும் எங்களது உயிர்மூச்சு ஈழத்தமிழர்கள்மீது எப்போதும் இருக்கும் என இருவரும் தெரிவித்தனர்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.