வரு. 68 இல. 34

துர்முகி வருடம் ஆவணி மாதம் 05ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 துல்க-ஃதா பிறை 16

SUNDAY  AUGUST 21, 2016

 

 
அறிவு சார் பொருளாதாரமும் இலங்கையும்

அறிவு சார் பொருளாதாரமும் இலங்கையும்

உயர் வளர்ச்சி இலக்கை அடையும் பொருட்டு நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைக்க வேண்டிய வேளையில், அறிவு சார் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டியது அவசியமாகும்.

நாட்டு மக்கள் மற்றும் நிறுவனங்கள், அறிவினை பெற்றுக்கொள்ளுதல், உருவாக்குதல், பரப்புதல், மற்றும் அறிவை திறம்பட பயன்படுத்துவதன் மூலம் நிலைத்திருக்கக்கூடிய பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியை ஏற்படுத்துதலென அறிவுசார் பொருளாதாரத்தை விவரிக்கலாம்.

அறிவு சார் பொருளாதாரத்தின் மூலம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறன் அதிகரிப்பதுடன் பொருளாதாரத்தை போட்டித் தன்மை வாய்ந்ததாக மாற்றுவதுடன் வேலைவாய்ப்புக்களை உருவாக்கவும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் முடிகிறது. மேலும் நாட்டை உயர் வருமானமுள்ள நாடாக மாற்றுவதற்கு அறிவு சார் பொருளாதாரத்தை நோக்கி நகர்த்துதல் இன்றியமையாததாகும்.

தாய்வான், சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா போன்ற கிழக்காசிய நாடுகள் மற்றும் பல வளர்ச்சி அடைந்த நாடுகள் ஏற்கனவே அறிவு சார் பொருளாதாரத்தில் ஈடுபடுவதுடன் இவற்றின் மொத்த உள் நாட்டு உற்பத்தியில் கணிசமான அளவு இதன் மூலம் ஈட்டப்படுகிறது.

உலக வங்கியின் அறிவு சார் பொருளாதார கட்டமைப்பானது, பொருளாதாரம் மற்றும் நிறுவன ஆட்சி, புத்தாக்கம், தகவல் தொழிநுட்ப உட்கட்டமைப்பு மற்றும் படித்த மக்கள் தொகை ஆகிய தூண்கள் மீது கவனம் செலுத்துவதுடன் இவை வெற்றிகரமான அறிவுசார் பொருளாதாரத்திற்கு மிக அவசியமாகும்.

அரசாங்கம் நாட்டில் அறிவு சார் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு சாதகமான பொருளாதார கொள்கைகள், நிறுவனங்கள், முதலீடுகள் மற்றும் ஒருங்கிணைப்பு போன்றவற்றை மேம்படுத்தவும் வேண்டும்.

அறிவு சார் பொருளாதாரத்திற்காக வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கவர்வதற்கான பொருளாதார கொள்கைகள் மற்றும் வரிச் சலுகைகள், நாட்டின் தொழில் கொள்கை மற்றும் மனித வள அபிவிருத்தி, நிதி மூலங்களை எளிதாக்குதல், புதிய தொழிநுட்பங்களை அறிமுகப்படுத்துதல் போன்றவற்றில் கொள்கை மாற்றங்களை எற்படுத்துவது இன்றியமையாததாகும்.

அறிவு சார் பொருளாதாரத்தில் ஈடுபடுவதற்கு உயர் திறன் படைத்த மனித வளம் அவசியமாவதுடன் குறிப்பாக தொழிநுட்பத்தில் நிபுணத்துவம் மற்றும் மூன்றாம் நிலைக் கல்வித் தராதரம் உடையவர்களின் தேவையும் அதிகமாகும்.

அறிவியல், பொறியியல் மற்றும் தொழிநுட்ப விடயங்களில் பிரயோக ரீதியிலான கல்வியை வழங்கும் உயர் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை, இவ்விடயங்களில் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் திறனில் வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டியதுடன் தொழிட்சந்தையின் தேவைக்கேற்றவாறு தரம்வாய்ந்த கல்வித் தரத்தை அதிகரிப்பதன் மூலம் பொருத்தமான தொழிட்படையை உருவாக்கலாம்.

மேலும் உள்ளூர் தேவைகளுக்கேற்ப புதிய தொழினுட்பம் மற்றும் புத்தாக்கங்களை உருவாக்கத் தகுந்த நிறுனங்கள், ஆராய்ச்சி நிலையங்கள், பல்கலைக்கழகங்கள், சிந்தனையாளர்கள் மற்றும் நிபுணர்களை உள்ளடக்கிய திறமையான அமைப்பொன்று அவசியமாகும்.

2014 – 2015 யிற்கான உலகளாவிய போட்டித்திறன் அறிக்கையின்படி ( The Global Competitiveness Report), புத்தாக்கத்தின் அடிப்படையில் 144 நாடுகளில் பின்லாந்து 1 ஆம் இடத்திலும் ஆசிய நாடுகளான ஜப்பான் 4 ஆம் மலேசியா 21 ஆம், சிங்கப்பூர் 09 ஆம் இடங்களில் முறையே இடம் பெற்றிருப்பதுடன் இலங்கை 46வது இடத்தை பிடித்திருப்பதைக் காட்டுகிறது.

இவ் அறிக்கையின் படி இலங்கையின் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களின் தரம் 47 வது இடத்திலும், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்காக கம்பனிகளினால் மேற்கொள்ளப்படும் செலவு அடிப்படையில் 50 வது இடத்திலும் காணப்படுவதானது இவ்விரு விடயங்களிலும் பாரிய இடைவெளி நிலவுவதைக் காட்டுகிறது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.5 சத வீதத்தையேனும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டுமென எதிபார்க்கப்படுவதுடன் இவை உயர் விளைவுகளை தரக்கூடிய துறைகளில் முதலீடு செய்யப்படுவதுடன், ஆய்வுகளின் வினைத்திறன் அதிகரிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

விஞ்ஞான ஆராய்ச்சி மற்றும் புதிய தொழிநுட்பங்கலின் பிரயோகச் செயற்பாடுகளை அதிகரிப்பதில் தனியார் துரையின் கவனம் அதிகரிக்கப்பட வேண்டியதுடன் இதற்காக முதலீடுகளும் அதிகரிக்கப்பட வேண்டும். அரசாங்கம் இதற்கு போதிய ஊக்குவிப்பை வழங்க வேண்டும்.

ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 144 நாடுகளில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்காக நிறுனங்கள், மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பின் அடிப்படையில் இலங்கை 110 வது இடத்தை பிடித்திருப்பதானது மிகவும் பின் தங்கிய நிலை ஆகும்.

பல்கலைக்கழகங்கள், ஆய்வு நிறுவகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கான இணைப்புக்கள் பலப்படுத்தப்படுவதன் மூலம் சிறந்த அறிவு பரிமாற்றத்திற்கு வழிவகுப்பதுடன் அறிவியல் மற்றும் வணிகத்திற்கிடையிலான தொடர்புகள் வலுவடையும் நிலையில் ஆய்வுகளின் மூலம் உருவாகும் புதிய அறிவுகளை வர்த்தக ரீதியில் பெருமானமுள்ளதாக மாற்றலாம்.

கண்டுபிடிப்புக்களுக்காக பெற்றுக்கொள்ளும் காப்புரிமைகளின் (பேட்டன்ட் ரைட்) அடிப்படையில் 76 வது இடத்தில் இலங்கை காணப்படுவதானது கண்டுபிடிப்புக்கள் மற்றும் புத்தாக்கங்களின் வெளியீடுகள் பின்தங்கிய நிலையையே காண்பிக்கிறது.

முன்னோக்கிய பயணம்

அறிவு சார் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தை விரைவுபடுத்துவதற்கு, நாட்டின் கொள்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதுடன் தகுந்த முதலீடுகளும் அவசியமாவதுடன் அரச மற்றும் தனியார் துறைகள் இரண்டும் இதன் மீதான கவனத்தை அதிகரிக்க வேண்டும்.

குறிப்பாக கல்விச் சீர்திருத்தம், ஆய்வு மற்றும் அபிவிருத்திச் செயற்பாடுகளை ஊக்குவித்தல், வெளிநாட்டு முதலீடுகளை கவர்தல், மனித வள மேம்பாடு, தகவல் தொழிநுட்ப உட்கட்டமைப்பை மேம்படுத்தல் போன்ற வியூகங்களை மேற்கொள்ளலாம்.

ஸஹ்ரான் சிக்கந்தர் லெவ்வை

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.