வரு. 68 இல. 34

துர்முகி வருடம் ஆவணி மாதம் 05ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 துல்க-ஃதா பிறை 16

SUNDAY  AUGUST 21, 2016

 

அமெரிக்காவின் அசைக்க முடியாத பதக்கப்பட்டியல்

அமெரிக்காவின் அசைக்க முடியாத பதக்கப்பட்டியல்

பிரேசிலில் ஜெனிரோ நகரில் நடைபெறும் 31வது ரியோ ஒலிம்பிக் இலங்கை நேரப்படி நாளை காலை நடைபெறும் நிறைவுவிழா வைபவத்துடன் முடிவடைகின்றது.

இம்முறையும் வழமைபோல் பதக்கப் பட்டியிலில் ஐக்கிய அமெரிக்காவே முன்னிலை பெற்றுள்ளது. அடுத்த இடங்களில் அமெரிக்காவுக்கு சிறந்த போட்டியாளராக பிரித்தானியாவும், சீனாவும் முழுப்பலத்துடன் மோதியது. இம்முறை பிரித்தானியாவின் வீர, வீராங்கனைகளும் மற்றைய வீரர்களுக்கு சவால் விடுக்கும் அளவுக்கு வலுவாகவே மோதினார்கள். அந்நாட்டின் வீர வீராங்கனைகளை நீச்சல் குளத்திலும், ஜிம்னாஸ்டிக் மேடைகளிலும் பெரிதாகக் காணாவிட்டாலும் மற்றைய எல்லாப் போட்டிகளிலும் பற்கேற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தககது. ஒலிம்பிக் போட்டி வரலாற்றில் அமெரிக்காவுக்கு சிறந்த போட்டியாளராக இருந்து வந்த ரஷ்யா கடந்த சில ஒலிம்பிக் போட்டிகளில் பின்னடைவைச் சந்தித்துள்ளது. அவ்விடத்தை இம்முறை சீனாவும், பிரித்தானியாவும் கைப்பற்றியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இம்முறை ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த நாடுகளைப் பொறுத்தவரையில் ஒலிம்பிக் வரலாற்றில் சீனாவே முன்னணியில் திகழ்கிறது. ஜப்பான், கொரியா நாடுகளும் ஓரளவு பிரகாசித்து வருகின்றது. ஆனால் ஆசிய கண்டத்தின் அடுத்த வல்லரசு என்று அழைக்கப்படும் இந்தியாவினால் இவ்வாறான சர்வதேச போட்டிகளில் மிளிர முடியாமலுள்ளமை வேதனைக்குரிய விடயமே. இம்முறை வெள்ளிக்கிழமை வரை அவர்கள் ஒரே ஒரு வெண்கலப்பதக்கத்தையே பெற்றிருந்தனர். அடுத்த ஒலிம்பிக் 2020ஆம் ஆண்டு ஆசியக்கண்ட நாடான ஜப்பான் டோக்கியோவில் நடைபெறவிருப்பதால் இந்தியாவும் இப்பொழுதிலிருந்தே அடுத்த ஒலிம்பிக்கில் பிரகாசிப்பதற்கு முயற்சிக்க வேண்டும்.

ரியோ ஒலிம்பிக்கில் வழமைபோல் இம்முறையும் ஜெமய்க்காவின் தடகள குறுந்தூர வீர. வீராங்கனைகள் சாதனை படைத்தனர். பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்போட்டி கடந்த 14ஆம் திகதி நடைபெற்றது. இதில் ஜெமய்க்காவின் எலைன் தொம்சன் போட்டித் தூரத்தை 10.71 வினாடிகளில் ஓடி முடித்து ரியோ ஒலிம்பிக்கில் அந்நாட்டுக்கான முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்ததுடன் அதிவேகமான வீராங்கனையாகவும் தெரிவானார். இப்போட்டியில் இங்கிலாந்து வீராங்கனை டோரிபல் 10.83 வினாடிகளில் ஓடி முடித்து வெள்ளிப்பதக்கத்தையும், லண்டன் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மற்றொரு ஜெமெய்க்கா வீராங்கனையான ஷெலிவின் பிரேசர் 10.86 வினாடிகளில் ஓடி முடித்து வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர்.

பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் ஜெமய்க்காவைச் சேர்ந்த எலைன் தொம்சன் 21.78 வினாடிகளில் ஓடி முடித்து தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அந்தப் 10 வினாடிகள் கடந்த திங்கட்கிழமை காலை உதயமானது. ஆடருக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டி நிகழ்ச்சியே அது. இப்போட்டியில் அமெரிக்காவின் ஜஸ்டின் கெட்டினுக்கும். ஜெமெய்க்காவின் ஹுசேன் போல்ட்டுக்கும் இடையில் கடும் போட்டி நிழவியது. ஏற்கனவே டியூட்டரில் மோதிக் கொண்ட இவர்கள் களத்தில் சந்தித்திதனர். போட்டி ஆரம்பமானது முதல் சுமார் 75 மீற்றர் வரை கெட்டினே முன்னணியில் இருந்தார். ஆனால் கடைசி 20 மீற்றர்களில் வேகத்தை கூட்டிய ஹுசேன் போல்ட் 9.81 வினாடிகளில் ஓடி முடித்து 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் மூன்றாவது முறையாகவும் தங்கம் வென்று தான்தான் அதிவேக மனிதன் என்று மீண்டும் நிரூபித்தார். இது இவர் பெறும் 7வது தங்கப்பதக்கமாகும். வெள்ளிப்பதக்கம் வென்ற கெட்லின் போட்டித் தூரத்தை 9.88 வினாடிகளில் ஓடி முடிதார். கனடாவைச் சேர்ந்த அன்ந்ரே கிராஸ் 9.90 விளாடிகளில் ஓடி வெண்கலம் வென்றார். அமெரிக்க வீரர் கெட்டினின் இத் தோல்வி குறித்து அவரின் ரசிகர்கள் எரிச்சலடைந்ததுடன் இணைய தளங்களில் அவரை விமர்சித்துமிருந்தனர்.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த மற்றொரு போட்டி கடந்த வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது. ஆண்களுக்காக 200 மீற்றர் இறுதிப் போட்டி இதிலும் எதுவித சவாலுமின்றி உசேன் போல்ட் 19.78 வினாடிகளில் ஓடி முடித்து தொடர்ச்சியாக மூன்று ஒலிம்பிக்கிலும் 200 மீற்றர் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இவரின் போட்டயாளராகக் கருதப்பட்ட ஜஸ்டின் கெட்டின் அரையிறுதியுடன் வெளியெறியிருந்தார். வெள்ளிப்பதக்கத்தை கனடாவைச் சேர்ந்த அன்ந்ரே கிராஸ் பெற்றுக்கொண்டார். உசேன் போல்ட் 100, 200 மீற்றர் போட்டிகளில் தொடர்ச்சியாக தங்கம் வென்று சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தென்னாபிரிக்க வீரர் வேட்வான் நிக்கலஸ் 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் 17 வருட ஒலிம்பிக் சாதனை மற்றும் உல‍க சாதனையை முறியடித்து 43.03 வினாடிகளில் ஓடி முடித்து தங்கம் வென்றுள்ளார். இவர் 1999ம் ஆண்டு அமெரிக்க வீரர் மைக்கல் ஜோன்சன் 43.08 வினாடிகளில் ஓடிப் படைத்த சாதனையையே முடியடித்துள்ளார்.

இம்முறை ஒலிம்பிக்கில் 400 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் சாதனையுடன் கூடிய வெற்றி பெற்ற தென்னாபிரிக்க வீரர் வேட்வான் பற்றியே மைதானத்திலும் பத்திரிகைகளிலும் கூடுதலாக பேசப்படுகிறது. இது குறுந்தூர ஓட்ட வீரர் உசேன் போல்ட்டை சற்று எரிச்சலடைய வைத்துள்ளது. எனவே அவரை தன்னுடன் 300 மீற்றர் ஓட்டப் பந்தயத்துக்கு வருமாறு சவால் விட்டுள்ளார் உசேன் போல்ட்.

800 மீற்றரில் கென்யா வீரர் டேவிட் ருடீஷா தங்கம் வென்றார். இவர் 2012ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கின் போதும் 800 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்றிருந்தார். 800 மீற்றர் ஓட்டத்தில் தொடர்ந்து இரு முறை தங்கம் வென்று ரூடீஷா 52 வருடகால சாதனையை முறியடித்துள்ளார்.

மேலும் இம்முறை ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பிரேஸில் வீரர் டியோகோடி சில்வா புதிய ஒலிம்பிக் சாதனை படைத்தார். அவர் 6.08 உயரம் பாய்ந்து தங்கம் வென்றதுடன் இதற்கு முன் பிரான்ஸ் வீரர் ரெனால்ட் வில்லியம்ஸின் 5.97 மீற்றர் சாதனையை முறியடித்தார்.

பெண்களுக்கான சங்கிலி குண்டெறிதலில் போலந்து வீராங்கனை அனிட்டா விலோடர் புதிய உலக மற்றும் ஒலிம்பிக் சாதனையுடன் தங்கம் வென்றார். இவர் சங்கிலி குண்டெறிதலில் 82.29 மீற்றர் தூரம் எறிந்துள்ளார். இதற்கு முன் 80.08 மீற்றர் தூரமே சாதனையாக இருந்தது. இச்சாதனையும் இவருடையது என்பது குறிப்பிடத்தக்கது.

ரியோ ஒலிம்பிக்கில் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இங்கிலாந்து வீரர் ஆண்டி முர்ரேக்கு தங்கம் கிடைத்தது. இவர் கடந்த முறையும் இப்பிரிவில் தங்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது. வெள்ளிப்பதக்கத்தை முர்ரேயிடம் 7-5, 4-6, 6-2 என்ற கணக்கில் தோல்வியுற்ற ஆஜென்டினாவைச் சேர்ந்த டெவ் பொட்ரோவுககுக் கிடைத்தது. ஆடவர் இரட்டையர் ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடாலுடன் அந்நாட்டைச் சேர்ந்த மார்க் போபஸ் தங்கம் வென்றனர். கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இறுதியாட்டத்தில் ருமேனியாவைச் சேர்ந்த புளொரின் மெர்ஜியா- டொகாவு ஹொரியா ஜோடியை எதிர்கொண்டு 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றனர்.

மேலும் ரியோ ஒலம்பிக்கில் கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் வெண்கலப் பதக்கத்துக்காக ஆடிய இந்திய ஜோடி சானியா மிர்ஷாவும்- ரோகன் போப்பன்னாவும் செக் குடியரசு ஜோடியிடம் தோல்வியுற்றது. இத்தோல்வியின் காரணமாக உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் வீட்டழுத்தார் இந்திய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஷா.

தங்க மகன் ஓய்வு

ஒலிம்பிக்கில் தங்கமகன் என்று வர்ணிக்கப்படும் அமெரிக்காவின் மைக்கல் பெல்ப்ஸ் இம்முறை ரியோ ஒலிம்பிக்குடன் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். லண்டன் ஒலிம்பிக்கின் போதும் இவர் ஓய்வை அறிவித்துவிட்டு இரண்டு வருடங்களில் மீண்டும் நீச்சல் குளத்துக்கு வந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் இம்முறை அப்படி நடக்காது என்று உறுதிபடக் கூறியுள்ளார். பெல்ப்ஸ்.

இவர் இம்முறை ரியோ ஒலிம்பிக்கில் 5 தங்கங்கள் வென்றுள்ளார். மொத்தமாக இவர் பங்குபற்றிய 4 ஒலிம்பிக்குகளிலும் 23 தங்கங்கள் உட்பட 28 பதக்கங்கள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக் வரலாற்றில் ஒரு வீரரால் பெறப்பட்ட கூடிய பதக்கக் குவியல் இதுவாகும். இவருக்கு அடுத்த இடத்தில் சோவியத் யூனியனின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை எல். லென்னினா 18 பதக்கங்களைப் பெற்றுள்ளார்.

மைக்கல் பெல்ப்ஸ்ஸின் இப் பதக்கச்சாதனைக்கு அவரின் உயரமும், இயற்கையாகவே அமையப்பெற்ற உடல் அமைப்புமே காரணமாகும் என்று நீச்சல் வல்லனர்கள் தெரிவிக்கின்றனர். அவர் நீந்தும் போது அவரின் கை சுமார் 7 அடி வரை நீலுமாம் இது துடுப்பைப் போல் அவருக்கு வேகமாக நீந்துவதற்கு வசதியாக இருக்கும். மேலும் ஒரு சுற்று முடிந்து காலை உந்தி திரும்பும் போது மற்றைய வீரர்களை விட மிக மீண்ட தூரம் செல்லுவாராம். எனவே, அவருக்கு வேகமாக நீந்தி பதக்கம் பெறுவதற்கு வசதியாக அவரின் உடல் அமைப்பும் உள்ளது.

அமெரிக்காவின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஷிமோகன் பெல்ஸ் ரியோ ஒலிம்பிக்கில் 4 தங்கப்பதக்கங்களையும். 1 வெள்ளிப்பதக்கத்தையும் வென்றுள்ளார். இவர் ஜிம்னாஸ்டிக் சகலதுறை, ஆர்டிஸ்டிக் பெண்கள் புளோர் பிரிவு, வோர்ட் பிரிவு ஆகிய பிரிவுகளில் தங்கம் வென்றிருந்தார்.

இந்தியாவுக்கு முதல் பதக்கம். ஒலிம்பிக் மகளிருக்கான மல்யுத்தத்தின் 50 கிலோ எடை ப்ரீஸ்டைல் பிரிவில் இந்திய வீராங்கனை சாக்சி மாலிக் கிரிகிஸ்தான் வீராங்கனை ஜகலு டைனிபிகோவா உடன் மோதி 7-5 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்று வெண்கலப்பதக்கத்தை வென்றார். ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா பெறும் முதல் பதக்கம் இதுவாகும்.

ரியோ ஒலிம்பிகில் இங்கிலாந்து வீரர் ஜாசன் கென்னியும் இவரது காதலி லாராடிரோட்டும் சைக்கிளோட்டப் போட்டியில் தங்கம் வென்றனர். இவர்கள் இருவரும் மைதானத்தில் முத்தமழை பொழிந்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.