வரு. 68 இல. 34

துர்முகி வருடம் ஆவணி மாதம் 05ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 துல்க-ஃதா பிறை 16

SUNDAY  AUGUST 21, 2016

 

 
துறைமுக அபிவருத்தியூடாக பொருளாதாரத்தின் புதிய உதயம்

துறைமுக அபிவருத்தியூடாக பொருளாதாரத்தின் புதிய உதயம்

 

ஒரு நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு ஏற்றுமதி இறக்குமதி பிரதான காரணமாகவுள்ளது. எமது நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு கொழும்பு துறைமுகம் பாரிய பங்களிப்பினை வகித்துவருகின்றது. அத்துடன், இந்து சமுத்திரத்தினூடாகச் செல்லும் கம்பல்களின் தரிப்பிடமாகவும், ஆசியாவின் கேந்திர நிலையமாகவும் கொழும்பு துறைமுகம் திகழ்கிறது. உலகின் 26 ஆவது துறைமுகமாக அது சிறந்து விளங்குகிறது.

அண்மையில் கொழும்பு துறைமுகம், இலங்கை பொருளாதார அபிவிருத்தி நிலையமும் ஒன்றிணைந்து கொழும்பு துறைமுகத்தை அபிவிருத்திச் செய்யும் நோக்கத்துடன், கொழும்பு போர்ட் சிட்டியுடன் புதிய உடன்படிக்கை ஒன்றை செய்துள்ளது.

கொழும்பு துறைமுகம் ஆசியாவின் பழமைவாய்ந்த துறைமுகமாக இருந்தாலும், 14 ஆம் நூற்றாண்டில்‘ கொலொம்தொட’ என்ற பெயரில் அழைக்கப்பட்டது. போர்த்துக்கேயர் கிறிஸ்தோபர் கொலம்பஸ் நினைவாக ‘கொலம்போ’ என்று பெயரிட்டதாகவும் வரலாறும் உண்டு. கொழும்பு துறைமுகம் கொழும்பு வெளிச்சவீடு தொடங்கி களனி கங்கை கழிமுகம் வரை பரந்து விரிந்து காணப்படுகிறது. சுமார் 4.8 கி.மீ2, (1200 ஹெக்கர்) நிலப்பரப்பினை உள்ளடக்கியுள்ளது. அத்துடன் இத்துறைமுகம் மேற்கு கடற்கரை சார்ந்து மேற்குப் பிராந்திய 9 வலையங்களை கொண்டதாக காணப்படுகிறது.

கடந்த காலங்களில் ‘போர்ட் சிட்டி’ எனும் பட்டுப்பாதை திட்டத்தினூடாக கொழும்பு துறைமுகம் குறித்ததான ‘கேள்வி’ உருவானது. கொழும்பு துறைமுகத்தை துரித அபிவிருத்தியை நோக்கிய பொருளாதார புதிய உதயத்தை உருவாக்கவும் வர்த்தக கேந்திர நிலையமாக மாற்றியமைக்கவும் ஆசியாவின்கேந்திர துறைமுகமாக வளர்ச்சியடையவும் அரசாங்கம் தனது முழுமையான பங்களிப்பை வழங்குகிறது.

கொழும்பு துறைமுகம் அந்நிய ஆதிக்கத்தின் மூலம் 1505 முதல் செயற்படத் தொடங்கியது. 1912 இல் கொழும்பு துறைமுக ஆணைக் குழு உருவாக்கப்பட்டது. 1948 ஆம் ஆண்டு சுதந்திரத்திற்கு பின் இத்துறைமுகம் ஆங்கில அதிகாரத்திற்குட்பட்டே இருந்தது. 1958 ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கம் இத்துறைமுகத்தை சுவீகரித்து அரசுடமையாக்கியது. இந்நிகழ்வில் அப்போதைய அமைச்சர்களான பிலிப் குணவர்தன, மைத்திரிபால சேனநாயக்க, ஜெயவீர குறுப்பு ஆகியோர் பங்குபற்றினர்.

கொழும்பு துறைமுகம் இரண்டு பிறந்த நாளைக் கொண்டாடுகிறது. ஒன்று 1958 ஆம் ஆண்டு அரசுடமையாக்கப்பட்டதையும், 1979 ஆம் ஆண்டு துறைமுக அதிகார சபை ஸ்தாபிக்கப்பட்டதையும் நினைவுகூருகிறது.

அண்மையில் நடைபெற்ற துறைமுக அதிகார சபையின் விழாவிற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அங்கு தனதுரையில், ‘நாட்டின் அபிவிருத்திக்கு துறைமுகம் பாரிய பங்களிப்பு செய்துள்ளது. அரசு உடமையாக்கப்பட்ட நிறுவனங்களை விற்காமல் அவைகளை இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றியமைப்பதற்கு தனியார் நிறுவனங்களின் உதவியை பெற்றுக் கொள்ளும்' என்றார்.

இலங்கை துறைமுக அதிகார சபை காலி, ஹம்பாந்தோட்டை, காங்கேசந்துறை, ஒலுவில், திருகோணமலை, பருத்தித்துறை ஆகிய துறைமுகங்களையும் நிர்வகிக்கிறது.

கொழும்பு துறைமுகம் இந்நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு பாரியளவு உதவி செய்கிறது. இதன் வருமானம் காலத்திற்கு காலம் அதிகரித்துள்ளது. 2015 வருடம் 40805 மில்லியன் ரூபா பெற்றுக் கொண்டது. 2014 வருடம் 28279 மில்லியன் ரூபா வருமானம். 2015இல் இலாபம் அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் கப்பல்களின் வருகை அதிகரிப்பாகும். 2015 கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்த கப்பல்களின் எண்ணிக்கை 4197 ஆகும். 2014 ஆம் வருடம் 3742 கப்பல்கள் வருகை தந்திருந்தன. இதன் மூலம் இன்று கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

காலி துறைமுகத்திற்கு 2013 வருடம் 36 கப்பல்களும், 2014 வருடம் 60 கப்பல்களும், 2015 வருடம் 72 கப்பல்களும் திருகோணமலை 2013 வருடம் 134 கப்பல்களும், 2014 ஆம் வருடம் 127 கப்பல்களும், 2015 வருடம் 164 கப்பல்களும் வருகை தந்துள்ளன.

கொழும்பு துறைமுகத்திற்குள் உட்கட்ட மைப்புகள் மேலும் வசதிகளுடன் விஸ்தரிக்கப்பதற்கும் முன்னேற்றம் செய்வதற்கும் மற்றும் மீன்பிடி துறைமுகங்கள் அபிவருத்தி செய்து வருவாய் அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் வருவாயை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அதிக செலவு கூடிய குழந்தையாக ஹம்பாந்தோட்டை துறைமுகம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 2014 இல் 335 கப்பல்களும், 2015 இல் 295 கப்பல்களும் வருகை தந்துள்ளன.கொழும்பு துறைமுகத்தில் வருடாந்தம் 4.1 மில்லியன் கொள்கலன்கள் கையாளப்படுகிறன.

 51 கொள்கலன்கள் இறக்குமிடமும் 27 இறங்குதுறைகளும் உள்ளன. அத்துடன் கொள்கலன்கள் விரைவாக வெளியேற்ற அதிவேக வீதியமைப்பையும் கொண்டுள்ளது.

கொழும்பின் அபிவிருத்தி போன்றே கிழக்கின் அபிவிருத்தியும் செய்யப்படும். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் இரண்டாவது கட்டத்திட்டம் 808 மில்லியன் அ.டொலர் நிதியுதவியுடன் செயற்படுத்தப்படும்.

திருகோணலை, காலி துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் ஆயத்தமாகவுள்ளது. திருகோணமலை துறைமுகம் மட்டக்களப்பு, அனுராதபுரம், பொலன்னறுவை, ஹிங்குராங்கொட போன்ற விவசாய பிரதேசங்களின் நன்மைக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதேநேரம் காலி, ஹம்பாந்தோட்டை துறைமுகங்களை அபிவருத்திசெய்யும் போது கைத்தொழில் உற்பத்திகளுக்கு பயன்படுத்த உத்தேசிக்கபட்டுள்ளது..

கொழும்பு துறைமுகம் 2015 இல் 8725 பேர்கள் உத்தியோத்தர்களாக உள்வாங்கப்பட்டுள்ளனர். அத்துடன் காலி 355 பேர், திருமலை 417 பேர் உத்தியோத்தர்களாக உள்வாங்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்காலத்தில் ஹம்பாந்தோட்டையில் அமையவிருக்கும் சுதந்திர வர்த்தக வலைய மூலமாக பல்லாயிரம் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பும், நீரியல்வ தொழில் மூலம் இன்னும் பலரும் தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொள்ள முடியும். துறைமுகம் அபிவிருத்தியில் இன்னும் தொழில்வாய்ப்புகள் அதிகரிக்கும். அத்துடன்கொழும்பு துறைமுகம் உலகின் சிறந்த கொள்கலன் துறைமுகமாக மதிப்பிடப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகம் அபிவிருத்தியை நோக்கி விஸ்தரிக்கப்படும் போது, ஏனைய துறைமுகத்துடன் பேட்டியிட முடியும் .இலங்கை பொருளாதாரத்தின் புதிய உதயமாக அது விளங்கும் என்பதும் திண்ணம்.

 

போல் வில்சன்

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.