வரு. 68 இல. 34

துர்முகி வருடம் ஆவணி மாதம் 05ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 துல்க-ஃதா பிறை 16

SUNDAY  AUGUST 21, 2016

 

'லாமோஸ்ட்' விண் தொலைநோக்கி


'லாமோஸ்ட்' விண் தொலைநோக்கி

சீனாவின் 'லாமோஸ்ட்' என்ற சக்திவாய்ந்த விண் தொலைநோக்கி, 70 லட்சம் நட்சத்திரங்களைப் பற்றிய தகவல்களை சேகரித்துள்ளது. இதுதான், உலகில், விண்வெளி ஆய்வு மேற்கொள்ளும் வேறு எந்த நாட்டு தகவல் சேகரிப்பை விடவும் அதிகபட்சமானதாக இருப்பதாக அறியப்படுகிறது.

கடந்த, 2012 ஆண்டிலிருந்து இயங்கி வரும், 'லாமோஸ்ட்' தொலைநோக்கி, விண்வெளி நட்சத்திரங்கள், கோள்களின் இயக்கம், எடை, தட்பவெப்பம், வேதியியல் பரிமாணம் ஆகியவற்றை சேகரித்து வருகிறது.விண்வெளியில் அதிகபட்ச பரப்பளவை நோக்கக்கூடிய வசதியுடைய உலகின் முதல் தொலைநோக்கியான லாமோஸ், ஒரே சமயத்தில் 4,000 நட்சத்திரங்களை கண்காணித்து தகவல் சேகரிக்கும் திறன் வாய்ந்தது.

சீனாவில், பெய்ஜிங்கிற்கு அருகே உள்ள ஹெபெய் பிராந்தியத்தில் லாமோஸ் தொலைநோக்கி நிறுவப்பட்டுள்ளது. இது 2014இல் கண்டுபிடிக்கப்பட்ட, 'அதிவேக நட்சத்திரம்' உட்பட, சில முக்கியமான விண்வெளியியல் கண்டுபிடிப்புகளுக்கு உதவியுள்ளது. நட்சத்திரக் கூட்டங்களுக்கிடையே பல ஈர்ப்பு சக்தி உண்டு. ஆனால், அதிவேக நட்சத்திரம் இந்த ஈர்ப்பு சக்திகளுக்கு உட்படாத அளவுக்கு, அதிவேகமாக விண்வெளியில் பயணிக்கக்கூடியது.

சீனாவின் 13ஆம் நுாற்றாண்டு விண்வெளியியலாளரான குவோ சவுஜிங்கின் பெயரால் அழைக்கப்படும் இந்த தொலைநோக்கி, பிரபஞ்சம் உருவான விதம் பற்றி அறிய உதவும், 'கரும்பொருள்' ஆராய்ச்சியில், கணிசமாக உதவி வருகிறது. பிரபஞ்சத்தின் பெரும்பகுதி கரும்பொருளால் ஆனதாக, விண்வெளி ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது, ஒளி மற்றும் இதர மின்காந்த வீச்சுகளுடன் வினைபுரிவதில்லை. எனவே, இதை நேரடியாக பார்க்க முடியாது.'பெரு வெடிப்பு நிகழ்ந்து, இந்த பிரபஞ்சம் உருவானதிலிருந்து இருக்கும் கரும்பொருளை, அதன் ஈர்ப்பு விசையை மட்டுமே வைத்து கணக்கிட முடியும்' என, விண்வெளி ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.


பூக்கள் எடுக்கும் வினோத அவதாரங்கள்

மனிதர்கள் எதன் மீதும் தங்கள் நம்பிக்கைகள், பயங்களை போர்த்தித்தான் பார்ப்பர். இதனால், இல்லாததை இருப்பதாக பாவித்துக் கொள்வது வழக்கம். நிலாவில் கால் நீட்டிய கிழவி, செவ்வாயில் கடவுளர் உருவம் என்று பார்ப்பது இதன் அடிப்படையில் தான். காடெங்கும் மலர்ந்திருக்கும் பூக்களிலும், மனிதனின் கண்களுக்கு பல வடிவங்கள் தெரிகின்றன. ஆனால், தாவரங்கள் தங்கள் இனப்பெருக்கம் அல்லது எதிரிகளிடமிருந்து தற்காப்பு ஆகிய இரண்டுக்கும் தான் பலவித உருவங்களை தரித்துக் கொள்வதாக தாவரவியல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இப்படி வினோத உருவங்களை கொண்ட சில பூக்கள் இதோ.

குரங்கு மூஞ்சிப் பூ

வட கிழக்கு ஈக்வடார் மற்றும் பெரு ஆகிய நாடுகளின் மலைக் காடுகளில் மட்டும் காணப்படும் இந்தப் பூவை சற்று தள்ளி நின்று பார்த்தால், அசல் குரங்கு தான். அதன் இதழ்களின் நுனி, ரத்தக்காட்டேரியின் விரல்கள் போல கூர்மையாக இருப்பதால், இந்த இரண்டு அம்சங்களையும் சேர்த்து ஆங்கிலத்தில், 'மங்கி பேஸ் இர்க்கிட்' என அழைக்கின்றனர். இந்தப் பூவின் தாவரவியல் பெயர், டிராகுலா சிமியா. ஆண்டு முழுவதும் பூக்கும் இந்தப் பூ, கனிந்த ஆரஞ்சு பழத்தின் வாசம் கொண்டது.

பிசாசுப் பூ

தென் அமெரிக்க கண்டத்தின் வட கிழக்கே உள்ள கொலம்பியாவில், சமீபத்தில் ஒரு புதிய வகை பூவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பார்க்க அசப்பில் ஏதோ பிசாசு போன்ற கொடூர தோற்றத்தில் இருக்கிறது அந்தப் பூ. இதற்கு, 'டெலிபோகோன் டயபாலிகஸ்' என்று விஞ்ஞானிகள் பெயர் சூட்டியிருக்கின்றனர். இப்போது தான் கண்டுபிடிக்கப்பட்டாலும், அது அழிவின் விளிம்பில் இருப்பதாக தாவரவியலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கொலம்பியாவின் வனப்பகுதியில் இதுவரை, 30 செடிகளே விஞ்ஞானிகளுக்கு தட்டுப்பட்டுள்ளது. எனவே, வழக்கொழியும் ஆபத்திலுள்ள தாவரமாக இதை சிவப்புப் பட்டியலில் சேர்த்திருக்கிறது, 'சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கம்!

'ஈ' ஈர்க்கும் பூ

ஐரோப்பிய பூ வகையைச் சேர்ந்த இந்தப் பூக்கள் பார்ப்பதற்கு ஈக்கள் பல செடிகள் மீது வடிவத்தில் அமர்ந்திருப்பதைப் போலவே இருக்கும். இதனால் தான் இதை ஆங்கிலத்தில், 'ப்ளை ஆக்கிட்' என்கின்றனர். இதன் தாவரவியல் பெயர் ஓப்ரிஸ் இன்செக்டிபெரா. அசல் ஈக்களுக்கு இருப்பது போலவே புடைத்த கண்களைப் போன்ற அம்சமும் இந்தப் பூவில் உண்டு! அதுமட்டுல்ல, நிஜ ஈக்கள் இனக் கவர்ச்சிக்காக சுரக்கும் பிரமோன்களின் சாயலில் ஒருவித வாசனையையும் இந்த பூக்கள் சுரக்கின்றன. எதற்கு? மகரந்த சேர்க்கைக்காக ஈக்களை கவர்ந்திழுக்கத்தான்.

தேன்கூட்டுப் பூ

தேனீக்கள், தேனுக்காகத்தானே வருகின்றன என்று, தேன்கூடு போலவே இந்தப் பூ வடிவெடுத்து விட்டது போலிருக்கிறது. இடுக்குகளில் நீரை சேகரித்து வைக்கும் இந்தப் பூ, இஞ்சி போன்ற நறுமணம் வீசும். இதன் செடி, 6 அடி உயரம் வரை வளரும். இதை, கொய் மலர் தொழிலில் இருப்பவர்கள் மிகவும் விரும்புகின்றனர். ஏன் தெரியுமா? இதை கொய்து, மலர்க் கொத்தில் சேர்த்த பிறகும், வெகு நாட்களுக்கு வாடாமல் இருக்கும். ஆங்கிலத்தில், 'பீஹைவ் ஜிஞ்சர்' எனப்படும் இதன் தாவரவியல் பெயர், ஜிஞ்சிபெர் ஸ்பெக்டாபைல்.

சிங்கி இறால் பூ

பொலிவியாவின் தேசிய மலர்களுள் ஒன்றான, 'சிங்கி இறால் பூ' ஆண்டிற்கு சில முறை மட்டுமே மலரும். கடல் உணவான சிங்கி இறாலின் கொடுக்கு போல உள்ள இப் பூக்களில் தேன் உறிஞ்ச வரும் சிறு பறவைகளும், வவ்வால்களும் வந்து போகும்போது மகரந்த சேர்க்கை நிகழ்கின்றன. பறவைகள் மகரந்த சேர்க்கை செய்த பூக்கள் பிரகாசமாகவும், வௌவ்வால்கள் மகரந்த சேர்க்கை செய்த பூக்கள் நிறம் மங்கியும் இருக்கும். ஆங்கிலத்தில், 'லோப்ஸ்டர் க்ளா' எனப்படும் இந்த வினோத பூவின் தாவரவியல் பெயர் ஹெலிகோனியா ரோஸ்ட்ராட்டா.


 

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.