வரு. 68 இல. 34

துர்முகி வருடம் ஆவணி மாதம் 05ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 துல்க-ஃதா பிறை 16

SUNDAY  AUGUST 21, 2016

 

 

நல்லாட்சி அரசில் மலையக அபிவிருத்திக்கான சிறந்த அத்திவாரம் இடப்பட்டுள்ளது

நல்லாட்சி அரசில் மலையக அபிவிருத்திக்கான சிறந்த அத்திவாரம் இடப்பட்டுள்ளது

நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் மலையக அபிவிருத்திக்கான சிறந்த அடித்தளம் இடப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த மலையகப் பிரச்சினைகளுக்கும் இந்த 5 வருடங்களில் தீர்க்கமுடியாது போனாலும் அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான இலக்கு நோக்கிய பயணம் ஆரம்பிக்கப்படுமாக இருந்தால் அது அடுத்தகட்டத்தை நோக்கிய நகர்வாக இருக்கும் என்கிறார் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நிதிச்செயலாளருமான எம். திலகராஜ்.

கொழும்பிலுள்ள அலுவலகத்தில் பல்வேறு வேலைகளுக்கு மத்தியில் இருந்த திலகராஜ் எம்.பியிடம் மலையக அபிவிருத்தி, வீடமைப்புத்திட்டம், கல்வி அபிவிருத்தி போன்ற விடயங்கள் தொடர்பான கேள்விகளை முன்வைத்தபோது அவர் தெரிவித்த கருத்துக்கள் வாரமஞ்சரி வாசகர்களுக்காக தொகுத்து தரப்படுகிறது.

மலையக அபிவிருத்திக்கென முன்மொழியப்பட்ட பத்தாண்டுத்திட்டம் ஐந்தாண்டுத்திட்டமாக குறைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அதன் நடவடிக்கைகள் எந்த நிலையில் இருக்கிறது?

பத்தாண்டுத் திட்டம் ஐந்தாண்டுத் திட்டமாக மாற்றப்பட்டமை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அதனைச் செய்து முடிக்க வேண்டும் என்பதே இத்திட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னதாகவே சில நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்கிறோம். திட்ட தயாரிப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு அதனை அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகள் அமைச்சு மட்டத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு முன் மூன்று வேலைகளைச் செய்ய வேண்டியுள்ளது. இத்திட்டத்தை மக்கள் மயப்படுத்துவது, சக நிறுவனங்களுடன் இணைப்பது மற்றும் இத்திட்டத்திற்கு போதுமான நிதியைப் பெற்றுக்கொள்ளல் என்பனவாகும்.

முதல் இரண்டு வேலைகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தை மக்கள் மயப்படுத்துவதென்பது சிவில் சமூகம், புத்திஜீவிகள் மற்றும் பல நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து திட்டம் உருவாக்கப்பட்டிருப்பினும் அது மக்களைச் சென்றடைய வேண்டும். இத்திட்டத்தின் மூலம் என்ன கிடைக்கப்போகிறது, ஐந்தாண்டுகளுக்குள் நாம் அடையப்போகும் இலக்கு குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இத்திட்டம் தொடர்பான தெளிவு மக்களிடம் இருந்தால்தான் அதனை வெற்றிகரமாகவும் இலகுவாகவும் முன்னெடுத்துச் செல்லக்கூடியதாக இருக்கும். மக்கள் மத்தியில் தெளிவுபடுத்துவதற்கென செயற்குழுக்களை நியமித்து வளவாளர்களைக் கொண்டு பிரதேச மட்டத்தில் விளக்கி வருகிறோம்.

அத்துடன் பதுளை, கண்டி, மாத்தளை மாவட்டங்களுக்குச் சென்று ஐந்தாண்டு அபிவிருத்தித் திட்டம் குறித்து மக்களிடம் தெளிவுபடுத்தி வருகிறேன். கடந்தகாலங்களில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் அவை எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படாமைக்கு அது முறையாக முன்னெடுக்கப்படாமையே காரணமாகும்.

இத்திட்டத்தை சக நிறுவனங்களுடன் இணைத்து செயற்படுவதென்பது, இதனை அமைச்சு தயாரித்தது என்பதற்காக அனைத்து அபிவிருத்தி வேலைகளையும் அமைச்சினூடாக மட்டும் முன்னெடுக்க முடியாது. இத்திட்டத்தில் சுகாதாரம், வீதி அபிவிருத்தி, நீர்வழங்கல் உட்பட அரசுடன் தொடர்புபட்ட பல விடயங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் அவற்றை நாமே செய்யாமல் அந்தந்த அமைச்சுகளூடாகவே முன்னெடுக்க வேண்டும். அரசியல் மட்டத்திலும், அமைச்சுக்களின் செயலாளர்கள், ஆலோசகர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் இத்திட்டம் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்படுகிறது. அதன்மூலம் அந்தந்த அமைச்சுக்களினூடாக நிதியொதுக்கீடுகளைச் செய்து பல அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும்.

அத்துடன் அரசாங்கத்தின் அபிவிருத்தித்திட்டங்களில் கவனம் செலுத்தும் விதத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பல குழுக்கள் இயங்குகின்றன. நான் சுகாதாரம் சமூக அபிவிருத்தி மற்றும் சட்டம் ஒழுங்கு போன்ற விடயங்களுக்கும் வடிவேல் சுரேஸ் எம்.பி, கல்வி தொடர்பான குழுவிலும் அங்கத்தவராக இருக்கிறார். இந்த கமிட்டிகளின் மூலம் அரசியல் ரீதியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

இத்திட்டத்திற்கான நிதியை இரண்டு விதமாக பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். ஒன்று அரசாங்க மட்டத்தில் நிதியைக்கோருவது. இந்த ஐந்தாண்டுத்திட்ட வரைபை ஒரு பொது நிகழ்வில் பிரதமரிடம் கையளித்ததற்கான காரணம் அரசாங்கம் என்ற வகையில் அதன் பங்களிப்பையும் தேவையான நிதி ஒதுக்கீடுகளையும் செய்ய வேண்டும் என்பதேயாகும்.

இரண்டாவதாக வெளிநாடுகளிலிருந்து நிதியை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அயல்நாடான இந்தியாவிடமிருந்து மட்டுமே எம்மால் நேரடியாக ஏதேனும் உதவிகளைக் கேட்கமுடியும். இந்திய அரசாங்கம் 4000 வீட்டுத்திட்டத்திற்கு உதவுகிறது. மேலும் 20,000 வீடுகளை அமைத்து தருமாறு கோரியிருக்கிறோம். அத்துடன் மலையக இளைஞர் யுவதிகளின் சுயதொழில் முயற்சிக்கென அட்டனில் பயிற்சிக்கல்லூரியொன்றை அமைப்பதற்கு கருத்தளவில் இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது. மேலும் ஐரோப்பிய நாடுகளிடம் உதவிகளை கோருவதற்கு எண்ணியுள்ளோம். ஐரோப்பிய யூனியன், பிரிட்டன் போன்ற நாடுகளுக்கான விஜயத்தின்போது அந்தந்த நாடுகளின் பாராளுமன்ற அங்கத்தவர்களிடமும் இது குறித்து பேசியிருக்கிறோம்.

தற்போதைய சூழ்நிலையில் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகியிருப்பதால் சில தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன. எதிர்வரும் காலங்களில் ஜேர்மன், நோர்வே போன்ற நாடுகளுக்கான இலங்கையிலுள்ள தூதரகங்களினூடாக பேச்சுவார்த்தை நடத்தப்படும். முன்னரைப்போலல்லாமல் தற்போது மலையக அபிவிருத்திக்கான திட்ட வரைபு எம்மிடமிருப்பதால் அந்த அறிக்கையைகூட அவர்களிடம் கையளிக்கக்கூடியதாக இருக்கும்.

இந்திய அரசின் உதவியுடன் நிர்மானிக்கப்படும் வீடமைப்புத் திட்டத்தை எடுத்துக்கொண்டால் இரண்டு மட்டங்களில் நடைபெறுகிறது.

முதலாம் கட்டம் ஏற்கனவே திட்டமிட்டவாறு எந்தெந்த தோட்டங்களுக்கு எத்தனை வீடுகள் என தீர்மானித்தார்களோ அதில் எந்த மாற்றத்தையும் செய்யாமல் அதனை முன்னெடுக்குமாறு கூறியிருக்கிறோம். அதில் குறைபாடுகள் இருப்பினும் அது மக்களைச் சென்றடைய வேண்டும்.

எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பில் நன்கு ஆராயப்பட்டது. முதலில் ஊவா, மத்திய மாகாணங்களுக்கு மட்டுமே இந்திய அரசின் வீடமைப்புத் திட்டத்தை முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டிருந்தது. அவ்வாறான முடிவை ஏன் எடுத்தார்கள் எனத்தெரியாது. இருந்தும் மத்திய மாகாணத்தில் நுவரெலியா மாவட்டமும் ஊவா மாகாணத்தில் பதுளை மாவட்டம் மட்டுமே வீடமைப்புக்காக தெரிவு செய்யப்பட்டிருந்தது. கண்டி, மாத்தளை, மொனராகலை மாவட்டங்கள் இத்திட்டத்தில் இணைத்துக்கொள்ளப்படவில்லை. இரண்டாம் கட்டப்பணிகளின்போது கண்டி, மாத்தளை, மொனராகலை மாவட்டங்களையும் இணைத்து வீடமைப்புத் திட்டங்கள் உருவாகும்.

ஐந்தாண்டுத்திட்டத்தின் பிரதான நோக்கம் ஒரு மாவட்டத்திற்கென மட்டுப்படுத்தப்படாமல் எங்கெல்லாம் பெருந்தோட்டங்கள் இருக்கின்றனவோ அப்பகுதிகளையும் உள்ளடங்கும் விதத்தில் வீடமைப்புகள் உருவாக்கப்படவுள்ளன.

மலையக அபிவிருத்தி அதிகார சபையானது இந்த ஐந்தாண்டுத் திட்டத்தில் மிகமுக்கிய பங்கை வகிக்கப்போகிறது. இதுகாலவரையில் இந்த மக்களுக்கான அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான அரசாங்கம் அங்கம் வகிக்கக்கூடிய அல்லது முழு பொறுப்பு சொல்லக்கூடிய எந்தவொரு நிறுவனமும் இருக்கவில்லை என்பதே வரலாறு.

பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி பொறுப்பு (TRUST) மட்டுமே இயங்கி வருகிறது. இது அரச நிறுவனமாகவோ அல்லது மக்களது நிறுவனமாகவோ இருக்கவில்லை. தனியார் கம்பனிகளின் நிதியைக்கொண்டு அவர்களால் உருவாக்கப்பட்ட நிறுவனமாகும். தொழிலாளர்களின் சம்பளத்தின் ஒரு பகுதியைக்கொண்டே ட்ரஸ்ட்டின் பணிகள் நடைபெறுகின்றன. ஆயிரம் ரூபா சம்பளம் கொடுக்க வேண்டிய நிலையில் 600 ரூபாவைக் கொடுத்துவிட்டு மிகுதி 300 ரூபாவை அந்த மக்களின் பெயரில் ஒவ்வொரு கம்பனியும் நிதியாக ட்ரஸ்டுக்கு வழங்குகின்றன. அந்த நிதியத்தினூடாக பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட்டிருக்க வேண்டும். எனினும் அத்திட்டம் முறையாக முன்னெடுக்கப்படவில்லை. தற்போது அந்நிதியம் ஒரு நிறுவனமாக மாறி சேமிக்கப்படும் பெருந்தொகைப் பணம் அங்கு பணிபுரியும் அதிகாரிகளுக்கு சம்பளம் வழங்குவதற்கும், அந்த அலுவலகங்கள் மற்றும் வாகனங்களை பராமரிப்பதற்காகவும், செலவிடப்படுகிறது.

அப்போது ஒரு முதலீடு சார்ந்த பணிகளே அந்த அமைச்சினூடாக முன்னெடுக்கப்பட்டது. பாராளுமன்றத்திற்கு பொறுப்பு சொல்வதற்கான நிறுவனமாக இல்லாமல் அது ஒரு தனியார் கம்பனியாகவே ட்ரஸ்ட் செயற்பட்டது.

அவ்வாறான நிலைமைகள் இனியும் ஏற்படக்கூடாது. தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாம் குறிப்பிட்டுள்ளது போல மலையக அபிவிருத்திக்கான திட்ட வரைபை கொண்டுவந்து அது அமைச்சரவையின் அனுமதிபெற்று தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு சட்ட வரைபுக்காக அனுப்பப்பட்டுள்ளது. அவ்வாறு சட்ட வரைபுகளாக வந்தால் மகாவலித் திட்டம் கொண்டுவரப்பட்டபோது மகாவலி அபிவிருத்தி அதிகார சபை எப்படி உருவாகியதோ, தென் மாகாண அபிவிருத்திக்கு ஒரு அதிகார சபை, வடகிழக்கு யுத்தத்தின் பின்னர் வடகிழக்கு மீள் குடியேற்ற அதிகார சபை போன்று மலையகத்திற்கு அதிகார சபை உருவாக்கப்படும்.

மலையக அபிவிருத்தி அதிகாரசபை சட்டம் வெகு விரைவில் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு அங்கு எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் வெற்றிபெறுவதற்கான சூழலை நாம் உருவாக்கியிருக்கிறோம்.

பாராளுமன்ற உறுப்பினரும் பிரதான எதிர்க்கட்சி கொறடாவுமான அனுரகுமார திஸாநாயக்கவின் உரையில், மலையக மக்களின் அபிவிருத்திக்கென ஒரு அதிகார சபையை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். அதனால் எதிர்ப்பு தெரிவிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றே கூற வேண்டும்.

இந்திய வம்சாவழி மக்கள் தொடர்பான சனத்தொகை கணக்கெடுப்பில் பல்வேறுபட்ட குழறுபடிகள் இருப்பதை கடந்த வரவு செலவுத்திட்ட அறிக்கையில் அவதானிக்கக்கூடியதாக இருந்தது. மலையகம் சார்ந்து வாழக்கூடிய மக்கள் சம்பந்தமான சரியான புள்ளிவிபரங்கள் இதுவரை இல்லாமல் இருந்தது. எனவே இவ்வாறானதொரு அதிகார சபையூடாக சரியான புள்ளிவிபரங்களை பெறக்கூடியதாக இருக்கும்.

அதிகார சபையும் ஒட்டுமொத்த அபிவிருத்தி என இல்லாமல் புதிய கிராமங்களை உருவாக்குவதற்கான சபையாக இருக்க வேண்டும். புதிய கிராமங்களை உருவாக்கினால் லயன்குடியிருப்புகள் இல்லாமல் போய் கிராமத்து வாழ்க்கைமுறை உருவாகும். அவ்வாறான கட்டமைப்பு வந்ததும் கிராமத்தில் இருக்கும் அனைத்து விடயங்களும் இயல்பாக வரக்கூடிய வாய்ப்பு கிடைக்கும்.

(தொடரும்...)

திட்டம் ஒரு வருடம் கடந்த நிலையில் இன்னும் நான்கு ஆண்டுகளுக்குள் முழுமையடையுமா?

2016 ஆம் ஆண்டு திட்டமிடலில் கடந்திருக்கிறது. தேசிய திட்டமிடலுடன் ஒப்பிடும்போது மலையகம் சார்ந்த திட்டமிடல் மிக உயர்வான இடத்தில் இருப்பதாகவே கருதுகின்றேன். தேசிய மட்டத்தில் ஐந்தாண்டுக்கான பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தை எடுத்துக்கொண்டால் இன்னும் ஆரம்ப நிலையிலேயே இருக்கிறது. மலையகத்துடன் ஒப்பிடுகையில் நாம் முன்னோக்கி சென்றிருக்கிறோம். 2016 திட்டமிடலுக்கான வருடமாக எடுத்தால்கூட அடுத்த 4 வருடங்களில் திட்ட அமுலாக்கம் செய்யக்கூடிய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. புதிய கிராமங்களை உருவாக்குவதன் ஊடாக உலக வங்கியின் உதவியின் மூலம் தேசிய நீர்வழங்கல் அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து பெருந்தோட்டப்பகுதிகளில் குடிநீர் வழங்கல் அபிவிருத்தி திட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம். அபிவிருத்தித் திட்டங்களை மலையக அபிவிருத்தி அமைச்சினூடாக செய்யாமல் அந்தந்த துறைகளுக்கு பொறுப்பான அமைச்சுக்களின் மூலம் முன்னெடுக்கப்படும்போது திட்டங்களும் நேர்த்தியானதாக இருக்கும்.

மலையகத்தைப் பொறுத்தவரையில் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் அரசியல்வாதிகளிடம் தங்கியிருக்கும் நிகழ்ச்சித்திட்டமாகவே வருகிற எல்லா அரசாங்கங்களும் செய்து வந்திருக்கின்றன. அவ்வாறில்லாமல் அடுத்தடுத்த வேலைத்திட்டங்களை அரசாங்கம் திட்டமிட்டு வடிவமைத்து அதற்கான நிதியை ஒதுக்கி அந்த நிறுவனங்களினூடாகவே முன்னெடுக்க வேண்டும். இவ்வாறான நிகழ்ச்சிகளினூடாக வீதி, நீர், மின்சாரம், வீடமைப்பு போன்ற விடயங்கள் எதிர்வரும் நான்கு ஆண்டுகளுக்குள் கணிசமானளவு எட்டக்கூடியதாக இருக்கும்.

இவ்வாண்டுக்குள் 1500 வீடுகளை நிர்மாணிப்பதென்ற இலக்காக இருக்கிறது. அடுத்தாண்டு அதனை பத்தாயிரமாக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஐந்தாண்டுகளுக்குள் 50 ஆயிரம் வீடுகள் எனும் இலக்கை அடைந்தாலே அது பெரிய விடயமாகும். ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான நல்லாட்சியில் ஐந்து வருடங்கள் முக்கியமானதொரு காலமாகும். இந்த ஐந்து வருடங்களில் செய்யப்படும் அபிவிருத்திகளைக் கொண்டே அடுத்த ஐந்தாண்டுகாலம் தீர்மானிக்கப்படும். நூறு நாள் வேலைத்திட்டத்தில் 300 வீடுகள். ஒரு வருடத்தில் ஆயிரம் வீடுகள், அடுத்தாண்டில் 10 ஆயிரம். அடுத்தடுத்த ஆண்டுகளில் பல மடங்குகளாக விரிவடையும் வாய்ப்பிருக்கிறது. அவ்வாறான மாற்றம் வரும்போது பழைய கலாசாரங்களை மக்கள் மறந்துவிடுவார்கள்.

பெருந்தோட்ட மக்கள் மத்தியில் அபிவிருத்தி தொடர்பாக அவர்களிடம் விளக்கப்படுகிறது. வீதிகள் செப்பனிடப்படுவதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபையை நாட வேண்டும் என மக்கள் தீர்மானிக்க வேண்டும். இது மலையக மக்கள் மத்தியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்கள் நிறைய விடயங்களை எம்முடன் பகிர்ந்து கொள்கிறார்கள். அண்மையில் மாத்தளையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டபோது மூன்று மணித்தியாலங்கள் அவர்கள் பேசுவதையே செவிமடுத்துக் கொண்டிருந்தேன். முன்பெல்லாம் அரசியல்வாதிகள் பேசுவதை மட்டுமே கேட்டுக்கொண்டிருப்போம். அவர்கள் சொல்வதை மறுத்து எதனையும் பேசமுடியாது. இப்போது நிலைமை மாறிவிட்டாதாக ஒரு பெண்மணி கூறினார். அவரது பேச்சில் ஒரு தெளிவிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.

என்னைப் பொறுத்தவரையில் ஒட்டுமொத்த மலையகப் பிரச்சினைகளுக்கும் இந்த 5 வருடங்களில் தீர்க்கமுடியாது போனாலும் அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான இலக்கு நோக்கிய பயணம் ஆரம்பிக்கப்படுமாக இருந்தால் அது அடுத்தகட்டத்தை நோக்கிய நகர்வாக இருக்கும். அத்திவாரம் நன்றாக இருந்தால்தான் கட்டிடம் உறுதியாக இருக்கும். அடுத்துவரும் காலப்பகுதியில் யார் பதவிக்கு வந்தாலும் இதைத்தான் செய்ய வேண்டும் என்ற நிலை உருவாகிவிடும். இப்போதெல்லாம் மக்கள் எம்மிடம் எப்போது வீடுகட்டித் தருவீர்கள் என்றே கேட்கிறார்கள். நாங்கள் எப்போது தனி வீட்டுக்குப் போகப்போகிறோம் என கேட்கிறார்கள்.

தோட்டங்கள் கிராமங்களாக மாற்றமடைவதற்கான முன்னோடியாக ஏதாவது ஒரு தோட்டம் உதாரணமாக இருக்கிறதா?

பெருந்தோட்ட மக்கள் செறிந்து வாழக்கூடிய நுவரெலியா மாவட்டத்தின் அக்கரபத்தனையிலும் அம்பகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட பொகவந்தலாவையிலும் 300 வீடுகளைக்கொண்ட இரண்டு மாதிரிக் கிராமங்கள் உருவாகின்றன. ஒன்று ஜனாதிபதி முன்னிலையிலும் அடுத்தது பிரதமர் முன்னிலையிலும் திறந்து வைக்கப்பட வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். அப்போதுதான் மலையக மக்கள் என்ன கேட்கிறார்கள் என்ற தெளிவும் பார்வையும் நமது நாட்டுத் தலைவர்களிடம் உண்டாகும்.

இதுவரையிலும் நாம் பார்த்த தோட்டம் டிவிசன் என்றில்லாமல் 150 வீடுகளைக் கொண்ட ஒரு வீடமைப்புத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதில் சகல உட்கட்டமைப்பு வசதிகளும் விளையாட்டு மைதானம், ஆலயம் உட்பட அனைத்தும் உள்ளடங்கும் விததத்தில் அமைக்கப்படும். பழைய லயன்குடியிருப்புகளை அப்புறப்படுத்தும்போது அதனை ஒரு விழாவாகவே நடத்த தீர்மானித்திருக்கிறோம். ஏனெனில் அப்போதுதான் மக்கள் மனதில் ஒருவித மாற்றம் ஏற்படும். பழைய குடியிருப்புகள் இருக்குமானால் மக்கள் மீண்டும் அந்தக்குடியிருப்புகளை நாடிச்செல்வார்கள். இவ்வாறான பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன. ஹப்புத்தளை பிட்ரத்மலை தோட்டத்தில் நிர்மானிக்கப்பட்ட வீடுகளில் 60 சதவீதமான வீடுகள் தனியாருக்கு விற்கப்பட்டுள்ளதாகவும் குடியிருப்பாளர்கள் மீண்டும் அந்த பழைய குடியிருப்புகளுக்கே சென்றுவிட்டதாகவும் தோட்டத்துரை தெரிவித்தார். இதுபோன்று பல தோட்டங்களில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடுகள் வெளியாருக்கு விற்கப்படுவதுடன் அவர்கள் மீண்டும் பழைய லயன் குடியிருப்புகளில் வாழ்ந்து வருகின்றனர்.

சுயதொழில் செய்யும் இளைஞர் யுவதிகளுக்கு மீள்சுழற்சி கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து உங்களது கருத்தென்ன?

பெருந்தோட்டங்களில் இருக்கும் அனைவரும் தொழிலாளர்களல்ல. க.பொ.த சா/த, மற்றும் உயர்தரப் பரீட்சைகளை எழுதிய இளைஞர் யுவதிகள் பல்வேறு சுயதொழில் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மலையக மக்கள் பரந்துவாழும் 12 மாவட்டங்களிலுள்ள தோட்டப்புறங்களைச் சார்ந்த சுயதொழிலை விருத்தி செய்ய எதிர்பார்க்கும், சுயதொழிலை ஆரம்பிக்கவுள்ள இளைஞர் யுவதிகளுக்கு இத்திட்டம் பயனுள்ளதாக இருக்கும். முதற்கட்டமாக நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு நேர்முகத் தேர்வின் பின்னர் தெரிவு செய்யப்பட்ட 16 இளைஞர் யுவதிகளுக்கு தலா ஒரு இலட்ச ரூபா வீதம் கடனுதவி வழங்கப்பட்டது. 6 மாத சலுகைக்கால அடிப்படையில் 5 வருடம் கடன் மீள செலுத்துவதற்கான வாய்ப்பும் வழங்கப்படுகின்றது. மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு வங்கிக்கு ஒரு தொகையை வழங்கும். சுயதொழில் செய்ய எதிர்பார்த்திருப்போருக்கு உதவும் வகையில் இந்த மீள்சுழற்சி கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இத்திட்டம் உரியமுறையில் அமுல்படுத்தப்பட்டிருந்தால் பெரும்பாலான மலையக இளைஞர் யுவதிகளின் வாழ்வாதாரம் உயர்வடைந்திருக்கும். இத்திட்டத்திற்கு விண்ணப்பிப்போருக்கு கடன் பெற்றுக்கொடுத்தால் இரண்டாவது தடவை அவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. கடனை உரியமுறையில் மீளச்செலுத்துவதன் மூலம் வங்கிகள் அடுத்தடுத்த தடவைகளில் கடனை வழங்கத் தயாராக இருக்கின்றன.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.