வரு. 68 இல. 34

துர்முகி வருடம் ஆவணி மாதம் 05ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 துல்க-ஃதா பிறை 16

SUNDAY  AUGUST 21, 2016

 

short stories

காலை 7.00 மணி. அனுராதபுர புதிய நகரும் வாகன நெரிசலில் அன்றாட வாழ்க்கையைக் கூட அழகியல் செய்ய முடியாதபடி பிரபஞ்சத்தின் அசைவில் பிதுங்கிற்று, முன் அனுபவமாக நாதியா, நவீத் இருவரும் வேலைக்கு முன்னதாகவே வெளிக்கிட்டு அலுவலகம் நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார்கள்.

”நவீத் வேலை பிடித்திருக்கிறதா?”

“பிடித்திருக்கு பரவாயில்லை...”

“நவீத் பிடித்திருக்கு அல்லது பரவாயில்லை ரெண்டில் ஒன்றைச் சொல்லுங்க அதுவென்ன பிடித்திருக்கு. பரவாயில்லை?”

“நாதியா மனைவி, பிள்ளைகளுக்காக வேலை பிடித்திருக்கு. எனக்கு நான் எழுதுகின்ற எழுத்துக்களுக்கு மேலதிகமான நேரம் கிடைக்கின்றது அதனால் பரவாயில்லை.”

“பொய் சொல்லாதிங்க, இன்றைய பொழுதுகள் வெள்ளை நாட்களை மனசு திரப்பி தருகின்றதா? நேற்றைய உங்க ஊர் நாட்கள் போல இந்த புதிய ஊர், புதிய மானுடம், புதிய வேலை சந்தோசங்களைத் தருகிறதா?”

“ஏன் இத்தனை கேள்விகள் எட்டு மாதத்தில் என்னில் என்ன மாற்றத்தை உணர்கின்றீர்கள்? நான் நேற்றைய புன்னகைகளோடு உங்களுடன் பேசவில்லையா? பழகவில்லையா?”

“காலம் அதன்பாட்டில் போய்க் கொண்டிருக்கிறது உங்கள் முகம், நடத்தைகள் நேற்றை போல் இல்லாமல் மங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு தோழியாய் கேட்கிறேன் சொல்லுங்க இயல்பாகவே நீங்க இப்படி இருந்ததில்லையே. உங்க இயற்கையின் இருப்பில் ஏன் இந்த மாற்றம். பளீஸ்...”

“நாதியா நீங்க என்னில் மாற்றத்தை என் நடத்தைகளை, அசைவுகளை வார்த்தைகளால் வெளித்தள்ளும் போது உங்களில் நான் பல மாற்றங்களை கவனிக்கின்றேன். ஒவ்வொரு நாட்களும் சிரிக்கும் உங்கள் முகம். குரல், குதித்துப் பாய்ந்த வார்த்தைகள் சடமாகி உறைகிறதே ஏன்?”

“அது வேலைப்பளு அலுவலக நெருக்குதல்கள் வாழ்நிலை மீறல்கள் எதுவுமில்லை.”

“உங்க வார்த்தைகளின் அசைவில் உங்க பொய்மை தெரிகிறது.” நவீத்தின் கண்டுபிடிப்பில் அனர்த்தம், அதிர்ச்சி அந்தமெனச் சுழன்றடிக்கிறது நாதியாவின் எல்லாத் திசைகளிலும்.

“சரி என் தீட்சண்யத்தினுள் வரும் முன் உங்க,வாழ்வு, இருப்பு பதற்றம் ஏன் மனசு உணர்வலைகளால் கிளர்ந்தெடுகிறது சொல்லுங்க?”

“பிரியமான அன்புத் தோழியே லேடிஸ் பெஸ்ட் நீங்க உங்க நிஜங்களின் வலிகளைச் சொல்லுங்க முதலில் நான் உங்வாங்குகிறேன்”.

மதியம் 01.15

அலுவலகம்

அதே நாள்.

“நான் அவரைக் கல்யாணம் முடித்த காலத்தில் எங்க படுக்கை அறையில் என் இலக்கியப் பதிவுகளை குறிப்பாக நான் எழுதிய கவிதைகள் பற்றிஅவருக்கு சொல்லியிருக்கிறேன். என் வாசிப்பின் அனுபவங்களைத் தனக்கும் பிடித்திருப்பதாக அவர் அடுக்கிக் கொண்டே போனார். நாட்களின் முடிவில் அவரின் நடத்தைகளில் புதிது புதிதான மாற்றங்கள் நான் படுக்கை அறையில் என் அன்றைய எழுத்துக்கள் பற்றி சொல்ல முனையும் போது அவருக்கு கொட்டாவி வரும்.”

“நாதியா நீ என்னைக் கல்யாணம் செய்யாமல் உன் எழுத்துக்களுடனேயே வாழ்ந்திருக்கலாம் இது என்ன கொடுமை?” நிலாரின் மனசு வெட்டும் வார்த்தைகளில் சிதறியது அவளது பாதைகள்.

“நிலார் ஏன் அப்படிச் சொல்றீங்க? அந்த அற்ப சந்தோசத்தை மட்டும் தினம் விரும்புறீங்க? எனக்கு என் கணவருக்கிட்ட சொல்ல ஆசைகள் சந்தர்ப்பங்கள் இல்லையா?” ஆத்திரமும் அழுகையும் வார்த்தைகள் உஷ்ணமாக வெடித்தன. பின் அவள் நெஞ்சை நேராக அழைத்து ஒரு சோக மூச்சொன்றை உள்வாங்கி வெளியே தூக்கி எறிந்தாள்.

“எனக்கு உன் கதை, கவிதைகள் கேட்க நோ டைம். எனக்கு என் வேலை. என் பிஸ்னஸ் ஓ. கே.

“இல்ல நான் சொல்ல முன் வந்தது. நிலார் நீங்க படிச்சவர், மாணவர்களுக்கு அளவு கோல்படி சொல்லிக்கொடுப்பவர். ஆசிரியர் உங்களுக்கு எப்படி இலக்கியம் பிடிக்காமல் போகும்?” நாதியா அழுத நாட்கள் அதிகம். இப்படி எத்தனையோ விஷயங்கள் எத்தனையோ இரவுகள் முரண்பட்ட வாழ்தல்.

அவளுக்குத் தன் கணவன் பற்றி எல்லா முறைமையான சேதிகளும் உலவத்தொடங்கியது. எனினும் தன் ஆழமான அன்பு, காதல் அவனை தன் திசை திருப்பும் என்கின்ற நம்பிக்கை அவளுக்கு முன்னே நின்றது.

காலை, மாலை அசைவுகள் அவள் சார்ந்ததாக இருக்கவில்லை. அவன் தன் மனைவியின் தனித்த பார்வைகளை நேருக்குநேர் சந்திக்க விரும்புவதில்லை. சில பொழுதுகள் அவனுள்ளேயே மறைந்திருப்பவை எல்லாம் வெளி வந்துவிடும்.

நிலாரின் ஒவ்வொரு வார்த்தைத் துளியிலும் குளிர்ந்த நிலவுக்குப் பதிலாக சூரியனாய் தீயென வார்த்தைகள் இறங்கும். ஒவ்வொரு வார்த்தையிலும் ஏதோ ஒரு கொடூர ஊசி அவளைக் குத்தும். மகிழ்ச்சித் துளிகள் காயங்களால் கசியும்.

நாதியாவின் கனவுகள், கற்பனைகள், யோசித்தல்கள் இவைகளை புறங்கையால் தள்ளித் துரத்தி இப்போதெல்லாம் அதுகள் பாட்டுக்கு கிடக்கின்றன.

“நிலார் நாளைக்கு பிறோஸின் பேனா சிற்றிதழ் வெளியீடு இருக்கு ரெண்டு பேரும் போய் வரலாமா?”

“இப்போதைக்கு என் வேலையைச் செய். பிறகு அதுகள் பார்த்துக் கொள்ளலாம்” திடீரென வந்து வந்து விழுந்த அந்த வார்த்தைகள் வெறிப்புக்களை அவள் உடலெங்கும் கவலையாய் பிரவாகிக்கிறது. ‘சில ஆண் வர்க்கம் இப்படித்தான் பெண்களின், ஆசைகளில் அசட்டுத்தனமாக பட்டினி போடுவது’ அவளது துயரப்பிரலாபம் நெஞ்சுருக வைத்தது. ‘ஏன் இந்த ஆண்கள் பெண்களை ஒரு சிவப்பு விளக்காக உபயோகிக்க திறந்தே கிடக்கு இவர்கள் எண்ணங்கள்’ வலியின் படருகை நாதியா கொடுமை செய்திற்று. நிலாருக்குக் கன்னங்களில் ஓங்கி பல தடவை அறைய வேண்டும் போலிருந்தது அவளுக்கு. ஆனாலும் கோபத்தை குறைக்கலானாள். அவளின் தாகம், தேடல், தவிப்பு எழுந்து தணித்திற்று.

சோகங்களை அடைகாத்து அனுபவப்பட்ட அவள் அன்று நிலார் சொன்ன வார்த்தைகளால் மிரண்டு போனாள்.

“உன் உடல் சார்ந்த தாபம்தான் எனக்குத் தேவை.

உன்னை உடல் சார் தாபத்திற்காகத்தான் நான் கல்யாணம் செய்தேன். உன் கவிதைகள் கேட்கயில்ல” அவளுக்குள் லட்சம் உஷ்ணமேறிய உணர்வுகளின் உதைப்பு, கண்களுக்குள் ஆயிரத்து இரண்டாவது கோபம்.

கண்ணுக்கெட்டிய தூரம்

வாழ்க்கையை வாழ்வதற்கு

வெளுப்பதுவான ஆகாயம்

எங்கேயும் இல்லை

பிடித்தவைகளும் பிடிக்காதவைகளும்

என் உலகத்தில் அதிகப்படுத்திக் கொண்டு

பூமி வெளியில் பறந்து

கொண்டிருக்கின்றன

எல்லோருக்கும் பொதுவென்பதுணர்ச்சி

மீளவும் மிக அருகாமையில்

என் இயலாமையின் தவிப்பு

பறவைகளுக்கும் சில சிறகுகளுக்கும்

பகையின் பிரம்மாண்டம்

முடிவின் பயணத்தில்

என் மன அறைக்குள் நுழைகிறேன்

கவலையேதுமில்லை எனக்கு.

மாலை 05.35

நாச்சியா தீவு குளக்கரை

அதே நாள்.

நாதியா இருண்மையின் பிடியிலிருந்து மீட்சி பெற்றவள் போல் நவீத்தை முடிகிறவரை அண்ணார்ந்து பார்த்தாள். அவளின் கண்களுக்குள் குளம் உருவாகி உதைப்பெடுத்து அனுபவம் தந்தது.

நாதியாவின் பயணத்தில் சவாலாய் அமைந்திட்ட வாழ்வின் அழுத்தங்கள் நவீத்தை நிர்க்கதியில் வீழ்ந்திடச் செய்திற்று. அவனின் கண்களிலிருந்து சின்னதாக நீர்த்துளி. நாதியா கவனித்தாள் அவளுக்கு மனசு குழம்பிப் போயிற்று.

“ம்... அ... ம்... ஆ.... நவீத் உங்க கவிதையை நேற்று தினகரன் வாரமஞ்சரியில் பார்த்தேன். அசந்து போயிற்றேன்.

இருபது நிமிஷம் திருமணமாகி

இருபது வயதில் குழந்தை

பக்கத்தில் புது மனைவி

உங்க கவிதையில அன்பு, காதல், உறவு ஆத்மார்த்த தளத்தில் வேர் கொள்ளவைக்குது. இண்டைக்கு உங்களுக்கு ஒரு டீப் பாட்டி நான் தரப்போறன் ஓ. கே.” “அவன் அவள் முகத்தை வெறுமையோடு பார்த்தான்.

“நாதியா நீங்க உங்க வாழ்வியலை ஆழமாச் சொல்லிற்றிங்க. அதனால் ஒரு நிம்மதி. அழுது குறைந்ததாய் கவலை காணாமல் போகும். பதின்மூன்று வயதிலிருந்து வந்த வாசிக்கும் பழக்கத்தை அவளுக்காக என்னை விடச் சொல்லுகிறாள். என் மனைவி இதுல சேதி என்னான்னா உங்க கணவர் உங்கள நடை பாதையாக உபயோகிக்க பார்க்கிறார் என் மனைவி என்னை நடைபாதையாக உபயோகிக்கப் பார்க்கிறாள்.

“நதிசா ம்மா வீட்டுப் பயணம் எப்படி சந்தோசமாயிருந்தாயா?”

”ம்.... ஓ! அதற்கென்ன?”

“என்னயிது? இப்படி கோபமாய் கதைக்கிறாய் என்ன நடந்தது?”

“... நதிசா பதில் சொல்லவில்லை ஞாயிறு வாரமஞ்சரி பத்திரிகை ஒன்றை நவீத் முன் நீட்டி “உங்க. அருகில் இருக்கும் இந்தப் பெண் யார்? இதற்குத்தான் ம்மாவின் வீட்டுக்கு வரமாட்டேன் பங்ஷன் இருக்குன்னு நீங்க சொன்ன நவீத்”

“அது விழாவிற்கு வந்தவங்களுல ஒரு பெண்” நதிசா விர்ரென்று அறையுள் நுழைந்து அவனின் அல்பமொன்றை எடுத்து நீட்டினாள்.

“முதல் பக்கத்திலயே உங்களுடன் புகைப்படத்தில் இந்தா இருக்கிறாள். ரெண்டும் ஒரு பெண்தானே” நவீத் குழம்பிப் போனான். ‘சில பெண்கள் இப்படிதான் ‘தேவையில்லாத குப்பைகள் கிளறி அவர்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்புவார்கள்” அவன் மனசு பெருமூச்சாய் கரையொதுங்கியது. நதிசா மேலும் மேடை போடாமலே பேசிக்கொண்டு போனாள். நவீத் இடை மறித்தான்.

“நதிசா வாழ்க்கையின் அறிமுகத்திலயும் புதிய அடையாளத்திலும் நாம இருக்கிறம். உனக்கும் எனக்கும் கல்யாணம் நடந்து இன்னும் ரெண்டு மாதம் கூட முடியவில்லை மனக் குழப்பமாக ஒத்து வாழப்பார். வறட்டுப் பிடிவாதங்கள் மேலதிகமான நினைத்தல்கள் வாழ்க்கைக்கு ஒத்துவராது...” பல திசை யோசித்தலோடு அவனைத்தாண்டி அறைக்குள் போனாள் அவள்.

நதிசாவிடம் உலகம் வீழ்ந்து கிடக்க வேண்டும் என்று அவள் நினைப்பவள். அதற்காக நவீத் நதிசாவை பிடுங்கிக் காயப்படுத்தியதில்லை.

நதிசா வெள்ள நிற உடற்கட்டு அழகிய முகம். தசை செறிந்த கன்னங்கள். தீட்சாண்ய மிக்கக் கண்கள். மெல்லிய நீண்ட கழுத்து அதில் சின்னதாக ஒரு கறுப்பு நிறமாலை மூக்கில் மூக்கத்தி கைநிறைய இந்திய வளையல்கள். ம்... அழகிய நாச்சியார். குறிப்பு அவள் அதிகமாக தங்க ஆபரணங்களை சம்பிரதாயங்களுக்காக அணிவதில்லை. ஆனால் அந்த ஊர் முதலாளி வர்க்கத்தில் நதிசா குடும்பம் முன் நிலையில் உள்வாங்கலாம்.

காலம் அல்லது ஆண்டு என இரண்டு தாண்டின. இருவருக்கும் இரட்டைச் செல்வங்கள் நவீத் உற்சாகமாக அலுவல்களை நடத்திக் கொண்டு வந்தான். நதிசாவின் குடும்பம் நதிசாவிற்கு புதுவீடு கொடுத்து தனிக்குடுத்தனம் அனுப்பினார்கள்.

அவள் தன் வீட்டில் ராணியாக அதிகாரம் செய்து ஆகாயம் பறந்தவள். இப்போது கண்களைக் கட்டி காட்டில் விடப்பட்டவள் போல அந்தரித்துப் போனாள். அடிக்கடி நவீத் மேல் தன் கோபத்தை அறைந்தாள்.

நதிசா நவீத் அவசிய உடல் ரீதியான நெருக்குத்தை அவசியமில்லை என்பது போல நடந்து கொண்டாள். அறைக்குள் முடங்கிக் கிடந்தாள். குழந்தைகள் மீது கூட அவள் நினைத்தல்கள் பூரணத்தில் நிறைந்திருக்கவில்லை.

அன்று நதிசாவின் வாப்பா வந்திருந்தார். அவள் தன் வாப்பாவுடன் போகப்புறப்பட்டாள். அந்த மாதிரியான சமயங்களில் ஒரு வாப்பா மகளுக்கு பல யோசனைகளை தன் அனுபவங்களை அசைவுகளை எனச் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் மகள் சொல் மந்திரமாய்.

“இதல்லாம் உனக்கு சாத்தியமாகாது. அவர் விரும்பினால் அங்கு வரட்டும் நடங்கபோவோம்” என இரைச்சல், புகை என்றோ கக்கிப் போனார்.

அந்தப் புது வீடு வெறுமையின் நிழலில் வேர் ஊண்டிக்கிடந்தது.

நான்கு புறமும்

பள்ளத்தில் தள்ளி

என்னையும் நான் சார்ந்த

உணர்வுகளையும் இயலாமையின் சுகங்களுக்கு

பூட்டிவைக்கும் பெரும் மகிழ்வோடு

உன் பார்வைகளின்

கூர்முனை மூச்சுத் திணறுவது

உன்விழிகளின் வார்த்தைகளிலும்

உன் திசைகளின் பயணத்திலும்

நீயிட்ட நடத்தைகளிலும்

அகப்பட்டுத் தென்படுகிறது

இறுதிகளின் இறுதியில்

என்னுடைய துயரத்தின் தகிப்பில் நவீத், இன்னொரு கவிதை எழுதுகிறான்!

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.