வரு. 68 இல. 34

துர்முகி வருடம் ஆவணி மாதம் 05ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 துல்க-ஃதா பிறை 16

SUNDAY  AUGUST 21, 2016

 

 
நல்லைக் கந்தனின் திருவிழா

நல்லைக் கந்தனின் திருவிழா

வருடாந்த மஹோற்சவம் ஆவணி மாத அமாவாசைக்குத் தீர்த்தம் நடைபெறக் கூடியதாக 26 தினங்கள் நடைபெறுகின்றது. 1-ஆம் திருவிழா கொடியேற்றமாகும். கொடியேற்றம் முற்பகல் 10 மணிக்கு நடைபெறும். முற்பகல் 8.00 மணிக்கு பூசையும், அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபப் பூசையும் நடைபெறும்.

பின்னர் முருகப் பெருமானும் வள்ளியம்மையும் தெய்வயானை அம்மன் சகிதமாக தம்ப (கொடிமரம்) மண்டபத்தை அடைந்து அங்கு கொடியேற்றத்திற்கான கிரிகைகள் நடைபெற்று முற்பகல் 10.00 கொடியேற்றம் நடைபெறும். (பஞ்சாங்க நேரத்தின் படி) கந்தனின் திருவிழாவிற்கு கொடித்திரை கொடிச்சீலை) வழங்கும் அரும்பெரும் பேற்றைப் பெற்றவர்கள் திருநெல்வேலி செங்குந்த மரபினர்.

இவர்கள் தொன்றுதொட்டு கிட்டத்தட்ட ஏழு, எட்டுத் தலைமுறையாக இத்தொண்டைச் செய்துவருகின்றனர். இதற்கென அக்காலத்தில் கொடித் தேர் மடமும், தேரும் வைரவநாதர் வல்லிபுரச்சாமியாராலும் நிர்மாணிக்கப்பட்டது. இன்றைக்கும் இம்மடத்திலிருந்தே கொடித்திரை தேரில் கொண்டு செல்லப்படும்.

அன்றைய காலப் பழைய தேர் பழுதடையவே சாமியாரின் வழித்தோன்றலாகிய சி.கணபதிப்பிள்ளை என்பவரின் ஊக்கத்தாலும், அண்டைய அடியார்களின் உதவியாலும் புதிய சித்திரத்தேர் ஆக்கப்பட்டு, தற்பொழுது கொடித்திரை அதன் மூலமாக வழங்கப்படுகின்றது. தற்போது இந்தச் சௌகாரிய திருத்தொண்டை கணபதிப்பிள்ளை குருநாதன் அவர்கள் செய்து வருகின்றார். கொயேற்றத்திற்கு 1ம் நாள் மாலை கொடித்திரை தேர் மடத்திற்கு மேளவாத்திய சகிதம் எடுத்துக் கொண்டு வரப்படும்.

மடத்தில் கோயில் கொண்டருளியிருக்கும் முருகப்பெருமானுக்கும் விசேட பூசைகள் நடைபெற்று, கொடித்திரை தேரில் புடைசூழ நல்லூர்க் கந்தசுவாமி கோயிலுக்கு கொண்டு செல்லப்படும். அங்கு பிரதம குருக்களிடம் கையளிக்கப்படும். பகல் 8.00 மணிக்கு பூசையும், அதனைத் தொடர்ந்து வசந்தமண்டபப் பூசையும் நடைபெறும்.

வசந்தமண்டபப் பூசை முடியவே முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்திலும் வள்ளி தெய்வயானை வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி ஸ்தம்ப மண்டபம் வந்தடைந்து அங்கு அடியார்களுக்குக் காட்சி அளித்துக்கொண்டிருப்பார். அங்கு கோயிற் காவலர்கள் அழைக்கப்பட்டு சங்கற்பம் செய்யப்படும்.

பின்னர் வேத சிவாகம முறைப்படி பிரதான குருக்கள் ஆற்றவேண்டிய கிரிகைகள், பூசைகள் ஆற்றப்பட்டு பக்தர்களின் அரோகரா, முருகா என்ற பக்திக் கோஷத்துடனும், மங்கள வாத்தியங்களின் ஒசையுடனும், வேத ஆசீர்வாதங்களுடனும் முற்பகல் 10.00 மணிக்கு கொடியேற்ற விழா முருகப் பெருமானுக்கு நடைபெறும்.

10 ஆம் திருவிழாவாகிய மஞ்சத் திருவிழா இரவு 6.00 மணிக்கு நடைபெறும். அன்றைய தினம் வள்ளி, தெய்வானை சமேதராக முத்துக்குமாரசுவாமிப் பெருமான் மஞ்சத்தில் எழுந்தருளி வீதிவலம் வருவார். பகல் சிறிய கைலாச வாகனத்தில் முருகன் உள்வீதி வலம் வருவார். கார்த்திகைத் திருவிழா 17ம் திருவிழாவாக அல்லது 18ம் திருவிழாவாக வரும். அதாவது கார்த்திகை நட்சத்திரத் தினத்தன்று நடைபெறும்.

இரவு 7.00 மணியளவில் நடைபெறும் உற்சவமாகிய இத்தினத்தில் முத்துச் சப்பறத்தில் (முக்கூட்டுச் சப்பறத்தில்) வள்ளி, தெய்வானை சமேதராக முத்துக்குமார சுவாமிப் பெருமான் எழுந்தருளி காட்சியளித்துக் கொண்டுவருவார்.

கார்த்திகைத் திருவிழாவிற்கும், தொண்டாயுதகாணித் திருவிழாவிற்கும் இடையில் நடைபெறும் திருவிழா கைலாசவாகனத் திருவிழாவாகும். கைலாசவாகனம், இராவணன் கைலாச மலைத் தோளினாலே தூக்கிய வண்ணம் அமைக்கப்பட்டது. பத்துத் தலைகளுடன் இராவணன் இருக்கும் காட்சியும், முனிவர்கள், ரிஷிகள் முதலானோரின் உருவங்களும் கைலாச வாகனத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

கைலாச வாகனத்தில் முருகன்(வேல்) வள்ளி, தெய்வயானை சமேதராக வீதி வலம் வருவார். மாம்பழத் திருவிழா 22ம் திருவிழாவாகும். காலை 7.00 மணிக்கு நடைபெறும் விழாவாகும். தெண்டாயுதபாணிப் பெருமான் தங்கமயில் வாகனத்திலும், விநாயகப் பெருமான் வெள்ளி மூஷிக(எலி) வாகனத்திலும் எழுந்தருளி வலம் வருவார்கள். வீதி வலம் வந்து கோவில் வாசலை அடைந்ததும் விநாயகப் பெருமானின் திருக்கரத்தில் மாம்பழம் கொடுக்கப்படும்.

தெண்டாயுதபாணிப் பெருமான் காவியுடை, ருத்திராட்சமம் அணிந்து ஆண்டியாகக் காட்சியளிப்பார். மாங்கனி பெற்ற விநாயகப் பெருமான் கோயிலுள்ளே செல்ல, தெண்டாயுதபாணிப் பெருமான் திருக்குள மண்டபத்திலுள்ள தனது திருக்கோயிலை அடைவார்.

23ஆம் திருவிழா சப்பறத் திருவிழாவாகும். இத்தினத்தில் பகல் முருகன், வள்ளி, தெய்வானை சமேதராக ஒரு சாத்துப்படியில் பச்சை மயில் வாகனத்தில் எழுந்தருளி உள்வீதி வலம் வருவார். இரவு வேல் சாத்துப்படி மிகவும் பெரிய சாத்துப்படியாக அலங்காரம் செய்யப்படும்.

பெரிய படல் சப்பறத்தில் முருகன் வீதி வலம் வருவார். சப்பறத் திருவிழா கைலாய காட்சியென்றும் அதை ஒவ்வொருவரும் கட்டாயம் பார்த்துத் தரிசிக்க வேண்டுமென்று கூறுவர்.

24ம் திருவிழா தேர்த் திருவிழாவாகும். சண்முகப் பெருமான், வள்ளி, தெய்வானை சமேதராகப் பட்டு வஸ்திரங்களினாலும், தங்க ஆபரணங்களினாலும், அலங்காரமாகவும், அழகாகவும் அலங்கரிக்கப்பட்டு மலர் மாலைகளும், மருக்கொழுந்து மாலைகளும் அழகுக்கு அழகு செய்ய, வசந்த மண்டபத்தில்

வெள்ளியினாலமைக்கப்பட்ட சிங்காசனத்தில் எழுந்தருளியிருப்பார்.

அதிகாலை வசந்தமண்டபப் பூசை நடைபெற்று சண்முகப் பெருமான் வள்ளி, தெய்வானை சமேதராகத் திருக்கோபுரவாசலையடைந்து தேருக்கு எழுந்தருளிச் செல்வர். சண்முகப்பெருமான் தேரில் அடியார் புடைசூழ ஆனந்தக் காட்சியுடன் அரோகரா ஒலியுடன் வீதிவலம் வருவார்.

தேர் மண்டபத்தை அடைந்ததும் சண்முகப் பெருமான் பச்சை ஆபரணங்களும், பச்சை பட்டு வஸ்தரங்களும், பச்சை மலர் மாலைகளும் அணிந்து பச்சைப் பசேலென்று காட்சியளிப்பார்.

மண்டபத்தில் விசேட பூஜைகள், ஆராதணைகள் நடைபெற்று தேர் மண்டபத்தினின்று எழுந்தருளிச் செல்வார். சண்முகப் பெருமான் பச்சை வண்ணனாகப் பக்தர்கள் புடைசூழப் பக்தர்களின் இச்சையைப் பூர்த்தி செய்யும் வண்ணம் அந்தக் காலை வெய்யிலின் ஒளியில் மரகதத்தைப் போன்று தனியழகுடன் அந்த அழகன் முருகன் ஆடிப்பாடி வரும் அழகான காட்சி கல் நெஞ்சத்தையும் உருக வைக்கும் கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். இவ்வண்ணம் சண்முகப் பெருமான் ஆலயத்தையடைவான்.

25ம் திருவிழா தீர்த்தத் திருவிழாவாகும். அன்று பகல் பூசை அதிகாலை நடைபெறும். அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபப் பூசையும் கொடித் தம்ப பூசையும் நடைபெறும்.

அன்றைய தினம் வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகப் பெருமானும், வெள்ளி மயில் வாகனத்தில் தெய்வானை அம்மனும், தங்கமயில் வாகனத்தில் முருகப் பெருமானும், வெள்ளி அன்ன வாகனத்தில் வள்ளியம்மனும், வெள்ளிரிஷப (இடபம்) வாகனத்தில் சண்டேஸ்வர மூர்த்தியும் எழுந்தருளி பூங்கா மண்டபத்தையடைந்து, அங்கு திருபூங்கா குளத்தில் அஸ்திர தேவருக்கு விசேட அபிஷேகம், பூசைகள் நடைபெற்று தீர்த்தம் பஞ்சமூர்த்திகளுக்கும் அளிக்கப்படும். பின்னர் பஞ்சமூர்த்திகளுடன் அடியார்கள் புடைசூழ வீதிவலம் வந்து கோயிலையடைவர்.

மாலை கொடியிறக்கம் நடைபெறும். முருகன், வள்ளி, தெய்வானை ஒருங்கையும் வீதி வலம் வருவார்கள். அதைத் தொடர்ந்து சண்டேஸ்வரமூர்த்தி வீதி வலம் வருவார்.

26ஆம் திருவிழா பூங்காவனத் திருவிழாவாகும். மாலை வள்ளியம்மைக்கும், தெய்வானையம்மனுக்கும், முத்துக்குமாரசுவாமிக்கும் திருக்கல்யாணம் நடைபெறும். வள்ளியம்மை மாலை பூங்காவனத்தில் தவமிருக்க எழுந்தருளிச் செல்வார்.

பின்னர் விநாயகப் பெருமானும், முத்துக்குமாரசுவாமிப் பெருமானும் பூங்காவனத்திற்குச் சென்று அங்கு முருகன் வள்ளியம்மைக்கு மாலை சூட்டி விசேட பூசைகள் நடைபெற்று வள்ளியையும் அழைத்துக் கொண்டு மூவரும் கோபுர வாசலையடைய கோபுரவாசல் அடைக்கப்பட்டு உள்ளே தெய்வானையம்மன் எழுந்தருளி இருப்பார்.

கோயில் ஓதுவார் அவர்களால் தெய்வானையம்மன் கேள்வி கேட்பது போல் பாடல்கள் பாடிப் பின்னர் கதவு திறக்கப்படும். வள்ளி, தெய்வானையாருடன் முருகனுக்கு மண்டபத்தில் திருக்கல்யாணம் நடைபெறும். திருக்கல்யாணம் முடிந்த பின்பு சுவாமிகள் எழுந்தருளி வீதிவலம் வருவார்கள்.

திருவிழாக் காலத்தில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் எண்ணற்ற அடியார்கள் நல்லைக் கந்தனை நாடித்திரண்டு வருகிறார்கள். அவர்களுக்கு எதுவித இடையூறுகளும் ஏற்படா வண்ணம் கோயிலுக்கண்மையில் கோயிலை நோக்கி வரும் பிரதான பாதைகளில் வாகனப் போக்குவரத்துத் தடைகள் விதித்து வருகின்றனர். சுகாதார வசதிகள், பாதுகாப்பு வசதிகள் முதலியவற்றை யாழ்ப்பாண மாநகரசபை செய்து வருகின்றது.

மக்களின் பாதுகாப்பை முன்னிட்டு மாநகர உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பொது அமைப்புக்கள் மக்கள் கூட்டத்தைக் கண்காணித்து ஆவன செய்து வருகின்றனர்.

இங்கு நடைபெறும் பூசைகலெல்லாம் காலந்தவறாது இடம்பெறுவது முக்கிய விடயமாகும். இதனால் அடியார்கள் அந்தந்த நேரங்களில் பூசைகளைக் காணக்கூடியதாயுள்ளது. இங்ஙனம் எல்லா வசதிகளும் ஒருங்கே கொண்டதாய் அமைந்துள்ள நல்லைக்கந்தன் தினமும் எண்ணற்ற அடியார்களைத் தன்வசம் அழைத்து அருள்பாலிக்கின்றான்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.