புத் 65 இல. 15

விஜய வருடம் சித்திரை மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஆஹிராஃ பிறை 03

SUNDAY APRIL 14 2013

 

 
காங்கேசன்துறை சீமெந்து ஆலையை மீள இயக்குவதற்கு நடவடிக்கை

காங்கேசன்துறை சீமெந்து ஆலையை மீள இயக்குவதற்கு நடவடிக்கை

காங்கேசன்துறை சீமெந்து தொழிற் சாலையின் உற்பத்தி பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதேசமயம் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் புதிதாக சீமெந்து தொழிற் சாலை ஒன்றை ஆரம்பிக்க உத்தேசித்துள் ளதாக அரச வளங்கள் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் தயாசிறித திசேரா தெரிவித்தார். இதன்மூலம், சந்தையில் எந்தவித தட்டுப்பாடுகளும் இன்றி, குறைந்த விலையில் சீமெந்தை வழங்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை கடந்த கால யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டு அதன் உற்பத்தி நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்தன. இந்நிலையில் மீண்டும் ஆரம்பிப்பதன் மூலம் குறைந்த விலையில் தரமான சீமெந்தை மக்களுக்கு வழங்க முடியும் என்றார்.

இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்தின் மீள் உற்பத்தி செயற்றிட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர்: இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனம், லங்கா சீமெந்து கம்பனி பாகிஸ்தானிலிருந்து சீமெந்தினை இறக்குமதி செய்து லங்கா சீமெந்து மற்றும் காங்கேசன் சீமெந்து என்ற பெயர்களில் அதனை உள்நாட்டில் சந்தைப்படுத்த தீர்மானித்துள்ளது.

தற்போது சந்தையிலுள்ள விலைகளை பார்க்க மேற்படி இறக்குமதி செய்யப்பட்ட சீமெந்து குறைந்த விலைகளில் பொது மக்களுக்கு விநியோகப்படும் என்றார்.

இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனம் அரச வளங்கள் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்குகிறது. எனவே மேற்படி நடவடிக்கைகளில் இலாபத்தை மாத்திரம் எதிர்நோக்காது தேசிய தேவைக்கு ஏற்ற வகையில் பொருளாதார மற்றும் சமூக நலன்களையும் பெறுவதாகும்.

இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்தினால் உற்பத்தி செய்யப்படும் காங்கேசன் சீமெந்து மூடை ஒன்று கொழும்பில் 780 ரூபாவுக்கும் வெளியிடங்களில் 890 ரூபாவுக்கும் கிடைக்கும். இலங்கையில் சீமெந்து பொதி செய்யும் தொழிற்சாலை ஒன்று ஆரம்பிக்கப்பட்டவுடன் இந்த விலைகள் மேலும் குறையும் என்றார்.

தற்போது வருடாந்தம் 10 மில்லியன் சீமெந்து மூடைகளை இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனம் விநியோகித்து வருகிறது. இது இலங்கையின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பு செய்கிறது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.