புத் 65 இல. 15

விஜய வருடம் சித்திரை மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஆஹிராஃ பிறை 03

SUNDAY APRIL 14 2013

 

 
தேசிய பரீட்சைகள் தொடர்பில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமா?

தேசிய பரீட்சைகள் தொடர்பில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமா?

ஆராய்ந்து உடன் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆலோசனைக் குழுவுக்கு கல்வியமைச்சு பணிப்பு

ஒகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தர பரீட்சைகள் தொடர்பாக ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமா என்பது பற்றி ஆராய்ந்து உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன புதி தாக நியமிக்கப்பட்டுள்ள ஆலோச னைக் குழுவுக்கு பணிப்புரை விடுத் துள்ளார்.

பரீட்சை திணைக்களத்தால் பாட சாலை மாணவர்களுக்கென நடத்தப்படும் பொதுப் பரீட்சைகள் தொடர்பாக ஆராய்ந்து ஆலோசனை வழங்கவென கல்வி அமைச்சர் 11 பேர் கொண்ட விசேட ஆலோசனைக் குழுவொன்றை நியமித்துள்ளார்.

இக்குழுவின் முதல் கடமையாக ஒகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள இரண்டு பரீட்சைகள் தொடர்பாக ஆய்வு செய்து பரிந்துரைகளை முன்வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

1968 ம் ஆண்டின் 25 ம் இலக்க பரீட்சைகள் சட்டத்தின் 3 (1) உபபந்தியின் மற்றும் 1972 ம் நவம்பர் 09ம் திகதிய கட்டளைகள் பிரகாரம் கல்வி அமைச்சருக்குள்ள அதிகாரத்தின் பிரகாரம் 2013-04-11 ம் திகதி மேற்படி ஆலோசனைக் குழு பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ. எம்.என்.ஜே. புஷ்பகுமார தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினருக்குரிய நியமன கடிதங்கள் நேற்று முன்தினம் வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சுயாதீனமாக இயங்கக் கூடிய இக்குழு பரீட்சை முறைமை, பரீட்சை முறையில் மாற்றங்கள் ஏற்படுத்தல், வினாத்தாள்கள் தயாரித்தல், விடைத்தாள் திருத்துதல், பரீட்சை குளறுபடிகள், தடைகள் ஏற்படுத்துதல் தொடர்பாக ஆராய்தல், அதற்கான தீர்வுகளை வழங்குதல் போன்ற விடயங்களை இக்குழு முன்னெடுக்கும்.

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்காக நடத்தப்படுகின்ற பொதுப் பரீட்சைகள் அனைத்தும் ஒழுங்கான முறையில் ஏற்றுக் கொள்ளக் கூடிய விதத்தில் நடத்தப்பட வேண்டும் என்ற நோக்கில் இக்குழு நியமிக்கப்பட்டதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

பிரதி பரீட்சைகள் ஆணையாளர் ஆர். சுபசிங்க குழுவின் செயலாளராக செயற்படுவார். தேசிய கல்வி ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் லக்ஷ்மன் ஜயதிலக்க, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் எஸ்.எஸ்.எம்.கே. ஹிரிபுரேகம, கல்வி அமைச்சின் செயலரின் பிரதிநிதியாக எஸ்.யூ. விஜேரட்ண,

கல்வி அமைச்சின் முன்னாள் செயலர்களான எம்.டி.டி.பீரிஸ்,நிமல் பண்டார முன்னாள் பரீட்சைகள் ஆணையாளர் ஸ்டேர் லின் பெரேரா, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் மதிப்பீட்டு நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி எம். கருணாநிதி, பேராசிரிய கிஹான் விக்கிரமசிங்க, கலாநிதி சமரதுங்க ஆகியோரும் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.