புத் 64 இல. 29

நந்தன வருடம் ஆனி மாதம் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் பிறை 25

SUNDAY JULY 15 2012

 
அருள்மிகு ஸ்ரீதேவி கருமாரி அம்மன் ஆலய ஆடிப்பூரத் திருவிழா

அருள்மிகு ஸ்ரீதேவி கருமாரி அம்மன் ஆலய ஆடிப்பூரத் திருவிழா

கொழும்பு மாநகரில் கருணைக் கடலாகக் காவியத்தலைவி போன்று கதிரேசன் வீதியிலே கோயில் கொண்டு எழுந்தருளி ஸ்ரீதேவி கருமாரி அன்னை அருளாட்சி புரிகின்றாள்.

ஸ்ரீதேவி கருமாரி அன்னையின் ஆலயத்தில் நிகழும் ஒவ்வொரு விழாவும் பக்தி உணர்வையும், தனிச்சிறப்பையும், உயர்ந்த எண்ணங்களையுமே வெளிப்படுத்தி நிற்கின்றன. அதாவது புத்தாண்டு தொடக்கம் திருவெம்பாவை வரையான அனைத்து விரத கொண்டாட்ட நிகழ்வுகளும் அன்னையின் அருளை சித்தரித்த வண்ணமே உள்ளன. அந்தவகையில் அம்பிகைக்குரிய ஆடிமாதமும் சிறப்பு வாய்ந்ததே. ஆடிமாதத்தில் வரும் பூரநட்சத்திம் அம்பிகை பூப்பெய்திய (ருதுவான) நாளாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

தைப்பொங்கலோடு உத்தராயணபட்ஷம் ஆரம்பமாவது போல ஆடிப்பிறப்போடு தட்சணாயனம் தொடங்குகிறது. ஆடிமாதத்தில் கற்கடகராசியில் சஞ்சரிக்கத் தொடங்கும் சூரியன் வடக்குத் தெற்காக நோக்கி சஞ்சரிக்கும் காலம் இதுவாகும். ஆடி பிறந்ததால் அனைவரின் வாழ்விலும் விடியல் தான். தமிழர்கள் தம் வாழ்வில் குதூகலித்து கொண்டாடும் விழாக்களில் இதுவும் ஒன்று. ஆடிப்பிறப்பன்று பிதிர்கள் தாம் வாழ்ந்து கழித்த இடங்களுக்கு வருவதாக நிலவும் ஒரு ஐதிகம் காரணமாக கொழுக்கட்டை, கூழ், பனங்கிழங்கு முதலியவற்றை ஆடிப்பிறப்பன்று பிதிர்களுக்கு படைத்து அவர்களைப் பிரீதி செய்யும் வழக்கம் இன்னும் நம்மிடையே இருக்கிறது.

 ஆடி மாதத்தில் 18ஆம் நாள் ஆடிப்பெருக்கு, மழை, குளிர், வெள்ளப்பெருக்கு, பனி போன்ற இயங்கையின் மாற்றங்களால் மக்களுக்கு நோய் நொடிகள் தொற்றுநோய்கள் ஏற்படுவது இயல்பு. இவற்றிலிருந்து தம்மைப் பாதுகாப்பதற்காகவே எம் மூதாதைகள் மருத்துவ குணங்கொண்ட பானமொன்றைத் தயாரித்து உண்டனர். அதுவே தற்காலத்தில் ஆடிக்கூழாக மாற்றம்பெற்றதாம்.

ஸ்ரீதேவி கருமாரி அன்னையின் ஆலயத்தில் ஆடிமாதத்தின் பிரதான நிகழ்வாக விளங்கும் ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் இறு வெட்டு வெளியிடுவது ஓர் வழக்கம். அந்த வகையில் அன்னையின் அருளோடு இம்முறை “கருமாரி கைகொடுப்பாள் பயம் எதற்கு” என்ற இறு வெட்டை வெளியிடவுள்ளனர். இவ் இறுவெட்டைத் தென்னிந்தியப் பிரபல பாடகர்களும் இணைந்து பாடியுள்ளனர். அவ் இறுவெட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை விவேகானந்த சபை மண்டபத்தில் வெளியிடப்படுகின்றது. இவ் ஆலயத்தின் முக்கிய அம்சமாக பால்குட பவனிக்கு கட்டணம் அறவிடப்படமாட்டாது. அடியவர்கள் பால் குடம் என்பவற்றை மட்டும் கொண்டுவர வேண்டும் மற்றையவை ஆலயத்திலேயே வழங்கப்படும் என்பதுமோர் சிறப்பு.

ஆடிப்பூரத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் கையில் காப்புக் கட்டி விரதமிருந்து தம் குறைகளை அன்னையிடம் சமர்ப்பிப்பர். ஆடிப்பூரத்தன்று அவளின் திருவருளுடன் கூடிய திருமுகத்தைக் காண ஆசைகொண்டு கதிரவன் தன் கரங்களை நீட்டி பூமியை ஒளியாக்கியும், பறவைகள் மக்களுக்கு செய்தி கூறுவதாக தம் ஒலிகளை எழுப்பியும், பூக்கள் தம் தலையை நிமிர்த்தி “நான் இன்று அன்னை மாலையாக வருகிறேன்” என்று சண்டையிட்டு கூறுவதைப் போல காற்றில் அசைந்தும் அன்னையின் வரவைக் காண ஏங்கி நிற்பதாகவும் ஒவ்வொரு இயற்கை நிகழ்வும் இந்நாளில் அன்னைக்கு சாதகமாகதாக விளங்குகிறது.

அதிகாலை மூன்று மணிப்பொழுதினிலே ஸ்ரீ பொன்னம் பலவானேஸ்வரர் ஆலயத்தில் பக்த அடியாளர்கள் பால் குடங்களை தலையில் சுமந்து நின்று தமது நேர்த்திக்கடன்களை செலுத்தும் முகமாக பரவசத்தில் ஆழ்கின்றனர். ஆண்கள் ஒரு புறமாகவும், பெண்கள் ஒருபுறமாகவும், சிறுவர்கள் ஒருபுறமாகவும், அன்னையின் திருநாமத்தைக் கூறிக்கொண்டே பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்திலிருந்து அன்னையின் அருளுடனும், ஸ்ரீ ரெங்கதாஸ் சுவாமிகளின் ஆசியுடனும், அன்னையின் தொண்டர்களின் வழிநடத்தலிலும் பால்குட பவனி வீதி உலாவாகச் சென்று அன்னை கருமாரிதேவியின் ஆலயத்தை வந்தடைகிறது. எண்ணிலடங்காத பக்தகோடிகள் பால்குடங்களைத் தலையில் சுமந்துகொண்டு “எங்கே அன்னையின் திருமுகம்” என்று ஏங்கி ஏங்கி அவளைக் காண நடையாக வருகின்றனர். ஆலயத்தை வந்தடைந்ததும் இவ்வளவு நேரமும் பார்க்கத்துடித்த அன்னைக்கு பாலால் அபிஷேகம் செய்து தம் குறைகளையெல்லாம் அவள் பாதத்தில் சமர்ப்பிக்கின்றனர்.

அன்னைக்கு அபிஷேகம் செய்து வரும் அடியார்களின் கையில் கட்டப்பட்ட காப்பு வெட்டிய பின் அன்னையின் அருட்பிரசாதமும் பெற்று அபிஷேகிக்கப்பட்ட பாலையும் அன்னதானத்தையும் உண்டு மகிழ்ந்து அடியார்கள் இல்லம் செல்கிறார்கள். பின்னேரம் 4 மணிவரை அன்னை பால் முகத்துடனே காட்சியளிப்பாள். அதன் பின்னர் சாயங்காலம் விஸ்ணு ஆலயத்திலிந்து சுமங்கலிப் பெண்கள் சிறு குழந்தைகள், கன்னிப்பெண்களால் சீர்வரிசைகள் கொண்டுவரப்பட்டு அன்னைக்கு ருதுசாந்தி செய்யப்படும். இந்நிகழ்வையும் கண்டுகளிக்க அலைதிரண்ட வெள்ளம் போல பக்த அடியார்கள் ஆலயத்தில் திரண்டிருப்பர்.

இத்தனை பெருமையுடனும், புகழுடனும், தவயோகியாகவும், அட்ஷய பாத்திரமாகவும், காவல் தெய்வமாகவும், கல்வித் தெய்வதமாகவும் காட்சியளிக்கும் கதிரேசன் வீதி ஸ்ரீதேவி கருமாரி அன்னையின் பால்குட பவனி நந்தன வருடமாகிய இவ்வருடம் ஆடி மாதம் 23ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.

கண்ணெதிரில் காட்சி தருவாள் அன்னை கருமாரி

கூறிடுவோம் அவள் புகழை தினந்தோறும்

ஓம் சக்தி

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.