புத் 64 இல. 29

நந்தன வருடம் ஆனி மாதம் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் பிறை 25

SUNDAY JULY 15 2012

 
நல்லதும் புதிதுமான பார்வையும் பாதையும்

நல்லதும் புதிதுமான பார்வையும் பாதையும்

முருகேசு ரவீந்திரனின் “வாழ்க்கைப் பயணம்” சிறுகதைத் தொகுப்பு - ஒரு விமர்சனப் பார்வை

நாளாந்த வாழ்வில் நாம் காணும் சாமான்ய மனுஷர்களின் வாழ்க்கையோடு அமைந்ததான பண்பியல்புகளை தான் வாழ்ந்த பிரதேச சமூக, பொருளாதார, சமய, சூழலுக்குள் நின்று எடைபோடுகின்ற போக்கினை ரவீந்திரனின் கதைகளில் காணலாம். பொதுவாக படைப்பிலக்கியவாதிகளிடம் காணப்படும் பிரசாரம், உன்னத வாழ்க்கையை ஆகர்சிக்கும் கருத்து வெளிப்பாடு என்பன ஏதுமற்று ஒரு நடுநிலை பார்வையாளனாக நின்று தான் தரிசித்த அல்லது அவ்வாறான தரிசனத்தினூடாக சிருஷ்டிக்க முடிந்த கற்பனை மாந்தர்களை, உயிரோட்டத்துடன் நம்முன் கொண்டுவர முயன்றுள்ளார்.

தன்னையொத்த ஒரு சாமான்ய நடுத்தர மனிதனின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் பிரதான சம்பவங்களையே, தனது கதைப்புலனாக கொண்டுள்ளார். விடலைப்பருவம், கல்வி, இளமை, காதல், உத்தியோகம், திருமணம், முதுமை என வாழ்வின் சுழற்சிக்குள் தனது கதைகளின் பகைப்புலனை கச்சிதமாக கட்டமைத்துக் கொண்டு கதாபாத்திரங்களைச் சிருஷ்டித்துள்ளார்.

கதையை வாசித்து முடித்தபின்னர் சில கதாபாத்திரங்கள் எங்களுக்கு மிகப் பரிச்சயமானவர்களாகி விடுவார்கள். எங்களின் நினைவுகளில் இடம்பிடித்து விடுகிறார்கள். உதாரணத்துக்கு இந்த உணர்வு எனக்கு ஜெயகாந்தன், வல்லிக்கண்ணனை வாசித்தபோது ஏற்பட்டிருக்கிறது. மிகமிக நீண்ட இடைவெளியின் பின்னர் நல்லதொரு சிறுகதைத் தொகுதியினை வாசிக்க கிடைத்தமை மனதுக்கு சந்தோசமளிக்கிறது.

இரண்டு தசாப்தங்களாக ரவீந்திரன் கட்டுரைகள் சிறுகதைகள் என எழுதியிருப்பினும் இத்தொகுதியில் இடம்பெற்ற கதைகளில் பல கடந்த ஓரிரு ஆண்டுகளில் இலங்கையில் சிவில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் எழுதிய கதைகளாக உள்ளன. இலங்கையின் பிரபல தினசரிகளில் பிரசுரமான தனது கதைகளில் பன்னிரண்டு கதைகளை தேர்ந்து இவர் தொகுப்பாக்கியுள்ளார்.

நீண்ட காலம் கொழும்பில் வாழ்ந்த தனது அனுபவங்களையும் தனது பிறந்த மண்ணான யாழ்ப்பாணத்தில் திரும்பி மீண்டும் வாழும் புறச் சூழல்களில் ஆதிக்கம் செலுத்த அரசியல் கருத்தியல்களுக்கு அப்பால் நின்று யுத்தத்தின் பின்னரான மக்களின் நாளாந்த வாழ்வியல் கூற்றின் அம்சங்களை அழகிய சிறுகதைகளாக ஆக்கித் தந்துள்ளார்.

கதை நிகழ்ச்சிக் கூறுகளை அபரிதமாக விவரிக்காமல், பாத்திரங்கள் அதீத உணர்ச்சி விளைவினை தோற்றிசிக்கச் செய்யாமல் வாசகர் மனதில் பதியும் வண்ணம் மிக கவனமாக கதையோட்டத்தை, கதை மாந்தர்களை வார்ப்புச் செய்துள்ளார்.

இவரின் இச் சிறுகதைத் தொகுதியை வாசிக்கும் போது கதாசிரியருக்கும் வாசகனுக்குமிடையே ஒரு மெலிதான பரிச்சயம் ஏற்பட்டுவிடும் வகையில் வாசகனை தனது கதைகளுடன் நெருக்கமாக அழைத்துச் செல்கிறார்.

தான் காணும் மாந்தரின் சமூக பொதுமைப்பாட்டு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு அவர்களின் போலித்தனங்களையும் அடையாளப்படுத்தி, அவற்றின் குறியீடுகளாகவே தனது கதாபாத்திரங்களை அமைத்து அதி வெற்றியும் கண்டுள்ளார் என்று கூறலாம். ஆயினும் தனது ஆழ்ந்த வாசிப்பின் மதிப்பீடுகளை ஆங்காங்கே மெலிதானதாக சில கதைகளில் சொல்ல வருவது பிரசாரத்தன்மையாக விமர்சகர்களால் கண்டுகொள்ளப்படலாம்.

இளம் படைப்பாளியான ரவீந்திரன் தனது தோளுக்கு மேல் எதார்த்த உலகை தனது உன்னத உலகு பற்றிய அகவய சிந்தை யுடன் பார்க்கும் திறன் கொண்டவராக உள்ளார் அவ்வாறான பார்வையி னூடாக ஒரு அனுபவமிக்க படைப்பாளியின் திறனை கண்டுகொள்ள முடிகிறது என்பது எனது அபிப்பிராய மாகும். கதாசிரியர் மனித இருத்தலின் இயங்குதளத்தை அடையாளம் காண முயன்றிருக்கிறார், அந்த முயற்சியில் அவரின் சிறுகதை இலக்கியப் படைப்பாற்றல் அவரின் அடையாளத்தை ஆக்க இலக்கியப்ப ரப்பில் உறுதி செய்யும் என்பது மிகைக் கூற்றல்ல.

இத் தொகுதியிலுள்ள சிறுகதைகள் எல்லாமே சிறப்பானதாக அமைந்திருந்தாலும் சில கதைகள் வாசகர்களின் தர வேறுபாடுகளை மீறி சகல தரப்பு வாசகனையும் கட்டிப்போடும் கதைகளை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உதாரணமாக ‘சின்ன அரும்பு’ எனும் கதை மூலம் ஒரு சிறிய மத்திய தர குடும்பத்தினரின் குழந்தை ஒன்று இன்றைய நவீன பாடசாலைக் கல்விச் சூழலில் பாடசாலை கணனிக் கல்விக்கு காசில்லாமல், தண்டிக்கப்படுவதும் கலைவிழாவுக்கு காசில்லாததால் கலந்து கொள்ளாமல் போவதும் என்ற ஒரு சராசரி நடைமுறை குடும்பத்தின் பொருளாதாரப் பிரச்சினையை சுற்று எழுப்பியுள்ள உணர்வுக் கொப்பளிப்புக்கள் உள்ளத்தை நெருடுகின்றன.

‘கன்னங்கரா இந்த நாட்டுக்கு இலவசக் கல்வியை அறிமுகப்படுத்தினார். அதனால் தான் ஏழைகளான அப்புஹாமி ஐயாத்துரை அஸ்லம் போன்றவர்களின் பிள்ளைகள் பெரிய படிப்பு படிக்க முடிஞ்சது, அதனால்தான் அவர் மக்களின்ர மனங்களில் இன்றைக்கும் நிறைஞ்சிருக்கிறார், போன்ற கருத்து வார்ப்புகளும் பிரபஞ்சனின் பாடசாலைகள் பற்றிய கருத்துகளும் இக்கதையின் பிரசாரப் பகுதியாகவன்றி, இக்கதைக்கு மெருகூட்டும் பாணியில் இயல்பாகவே சொல்லப்பட்டிருப்பதும் இங்கு கவனிக்கப்படவேண்டியதே.

இக்கதைகளில் சில நம்முடைய கதையும் தான் இது என்ற பிரதிபலிப்பினை மத்திய தர வர்க்க வாசகர்கள் பலருக்கு ஏற்படுத்தலாம். ஆயினும் இக்கதையில் ஆசிரியர் - பெற்றோர் - குழந்தைகள், அன்னியமாகிப் போகும், அரவணைக்கும் உறவுகள் பற்றிய படிமங்களை மனதில் கொண்டு மெல்லிதான ஒரு பிரசார இழைப்பினூடே, பிரசார நெடியில்லாமல் கதைசொல்லி மிகக் கவனமாக தனது கதையோட்டத்தை உணர்வினை ஊடறுக்கும் வகையில் இறுக்கமாக கொண்டு செல்கிறார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.