புத் 64 இல. 29

நந்தன வருடம் ஆனி மாதம் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் பிறை 25

SUNDAY JULY 15 2012

 
தர்ஹா நகர் அல்-ஹம்ராவின் பரிசளிப்பு விழா பல்கலைக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கும் பாராட்டு

தர்ஹா நகர் அல்-ஹம்ராவின் பரிசளிப்பு விழா பல்கலைக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கும் பாராட்டு

ஹீர்கா நகர் அல் - ஹம்ரா மகா வித்தியாலய 2012ஆம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா மிகச் சிறப்பாக கல்லூரி ஆராதனை மண்டபத்தில் நடைபெற்றது.

அதிபர் எம்.எப்.எம்.நல்ரி தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில் கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். இப் பாடசாலையிலிருந்து இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 7 மாணவர்கள், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 10 மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதனை நிலைநாட்டி கல்லூரிக்குப் புகழ் சேர்த்த மாணவர்கள், அவர்களுக்கு ஊக்கமளித்த ஆசிரியர்கள் இவ் விழாவில் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.அஸ்லம் மேல் மாகாண சபை உறுப்பினர்களான எம்.எம்.எம்.அம்ஜாத் பியல் நிசாந்த பிரதேச சபை உறுப்பினர்களான எம்.எம். இஸ்மாயில், ஏ.ஆர்,எம்.பதியுதீன், பைஸான் நைஸர், எம்.ஆர்.எம்.ருஷ்தி, பிரதிக் கல்விப் பணிப்பாளர் நூருல் பாக்கியா கரீம், முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.ஹுஸைன் உட்பட அதிபர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு அங்கத்தவர்கள் பெருமளவிலான பெற்றோர்கள் விழாவில் பங்குபற்றினர்.

விசேட மலர் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் மாணவர்களது பல்வேறு நிகழ்ச்சிகளும் மேடையேற்றப்பட்டன. சிறந்த கல்விக் கொள்கை மூலம் அரசாங்கம் நாட்டிலுள்ள பாடசாலைகளின் கல்வித் தரத்தை மேம்படுத்தி நாட்டுக்கும் சமூகத்திற்கும் உகந்த நற்பிரஜைகளை உருவாக்கி வருவதாக இங்கு உரையாற்றிய அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.

இன்றைய யுகத்தில் தகவல் தொழில்நுட்பத்தையும் ஆங்கிலப் பயிற்சியையும் மாணவர்களுக்கு சிறப்பாக வழங்குவதன் மூலம் எதிர்காலத்தில் உயர் பதவிகளில் தொழில் வாய்ப்புக்களை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார். இலங்கையில் உள்ள அரச பாடசாலை மாணவர்களுக்கு இலவச சீருடை, புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. பல்கலைக் கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மஹாபொல புலமைப்பரிசில் வழங்கப்படுகிறது. இந்த வசதி வாய்ப்புக்களை குறைத்தால் பாடசாலைகளுக்கு மேலும் கட்டிடங்களை அமைக்க வாய்ப்புக்கிட்டும்.

பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு வழங்கும் செல்வங்களில் விலை மதிக்க முடியாத அழியாத செல்வம் கல்விச் செல்வமாகும். தொழில்நுட்ப கல்வியுடன் ஆங்கில மொழியில் நல்ல தேர்ச்சியும் மாணவர்களுக்கு அவசியம். மாணவர்களுக்கு மொழி அறிவு பெற்றுக்கொடுக்க வேண்டும். உலக பாஷையாகவுள்ள ஆங்கில மொழிக்கு முக்கியத்துவம ளித்து கற்க வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர் அல்-ஹாஜ் எம்.எஸ்.எம்.அஸ்லம் பேசும் போது தர்கா நகர் முஸ்லிம் சமூகத்திற்கும் இந்த நாட்டுக்கும் பல புத்திஜீவிகளைப் பெற்றுக் கொடுத்த ஒரு பிரதேசமாகும் என்றார். தர்கா நகர் அல்-ஹம்ரா மகா வித்தியாலயத்திற்கு அடுத்த வருடம் 2013இல் சகல வசதிகளையும் கொண்ட இரு மாடிக் கட்டடமொன்றை அமைத்துத் தருவதாக மேல் மாகாண சபை உறுப்பினரும் களுத்துறை மாவட்ட ஸ்ரீ.ல.சு.கட்சி அமைப்பாளருமான எம்.எம்.எம்.அம்ஜாத் விழாவில் உரையாற்றும் போது உறுதியளித்தார்.

மேல் மாகாணத்தில் உள்ள தமிழ் மொழிப் பாடசாலைகளுக்காக புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட 250 பட்டதாரி ஆசிரியர்களுள் 80 பேர் வரையில் களுத்துறை மாவட்டத்திற்கு கிடைப்பர்.

பலத்த ஆசிரியர் தட்டுப்பாடு நிலவும் முஸ்லிம், தோட்டப்புற தமிழ் பாடசாலைகளுக்கு அவர்களை நியமிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் மாகாண சபை உறுப்பினர் அம்ஜாத் குறிப்பிட்டார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.