புத் 64 இல. 29

நந்தன வருடம் ஆனி மாதம் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் பிறை 25

SUNDAY JULY 15 2012

 
ஆயிரத்தில் ஒருவன்....

ஆயிரத்தில் ஒருவன்....

பாடசாலைக்கு மாணவர்களைப் புதிதாகச் சேர்க்கும் போது வசதிக் கட்டணங்களைத் தவிர வேறு நன் கொடைகள் அறவிடப்படக்கூடாது என்று அரசாங்கம் திட்டவட்டமாகத் தான் அறிவித்திருக்கிறது. ஆனால், இதனைச் சில பாடசாலை அதிபர்கள் கண்டுகொள் வதே இல்லை. தம் பிள்ளையைப் பெரிய தொகை யொன்றைக் கொடுத்துப் பாடசாலையில் சேர்த்திரு க்கிறேன் என்று பெருமையாகப் பீற்றிக்கொள்ள நினைக்கும் பெற்றோர்கள் இருக்கிறபோது அதிபர்கள் என்ன செய்வார்கள். எனினும் வறிய நிலையில் உள்ள மாணவர்கள் என்ன செய்வார்கள்.

சில வாரங்களுக்கு முன்னர் மலையகத்தின் முக்கிய நகரத்திற்கு அண்மித்த பகுதியில் மனதை உருக்கும் ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. தந்தை ஏதோ ஒரு துரதிர்ஷ்டத்தால் சிறைவாசம். தாயின் தனி உழைப்பில் நான்கு பிள்ளைகள் படித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் ஒரு பிள்ளை உயர் தரத்தில் பொறியியல் பிரிவில் கல்வி கற்கத் தகுதி பெற்றிருக்கிறார். இவரை உயர் தரத்திற்கு அனுமதிப்பதற்கு ஐயாயிரம் வேண்டுமென் கிறார் அதிபர். மாணவனுக்கு இக்கட்டான நிலை.

ஓர் ஐம்பது ரூபாய் என்றாலும் எப்படியாவது தேடிக்கொடுத்து விடலாம், ஐயாயிரம் ரூபாய்க்கு எங்கே போவது? இவருக்கு கல்வி விடயத்தில் அடிக்கடி உதவிகளைச் செய்து வருபவர் ஒரு சமுர்தி உத்தியோகத்தர். அவர் பாடசாலை உபகரணங்களைப் பெற்றுக்கொடுத்து தட்டிக்கொடுப்பவர். தம் சமூகத்தில் இப்படியான பிள்ளைகள் படித்து முன்னேற வேண்டும் என்பதில் அக்கறை மிகுந்தவர்.

அவரிடம் போய் விடயத்தைச் சொல்லி இருக்கிறார் மாணவன். அவர் நினைத்திருந்தால் விடயத்தை ஐயாயிரம் ரூபாய் கொடுத்து முடித்திருக்கலாம். ஆனால், இவ்வாறான விடயத்திற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று நினைத்தவர், தம் கைப்படக் கடிதம் எழுதி கல்வித் திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்திருக் கிறார். அந்தக் கடிதத்தைக் கல்வி அதிகாரிகள் இன்ன மும் ஆற அமர படித்துக்கொண்டிருப்பதாகத் தகவல்.

நித்திரை செய்பவரை எழுப்பிவிடலாம். ஆனால் படுத்துக்கொண்டு பாசாங்கு செய்பவரை என்ன செய்வது? நெம்புகோல்கொண்டுதான் முயற்சிக்க வேண்டும். அப்படித்தான் சில அதிபர்களையும் ஆசிரியர்களையும் நித்திரையைக் கலைக்க வேண்டியிருக்கிறது. தவறு தவறு என்று என்னதான் இடித்துரைத்தாலும் அவர்களுக்கு அதனைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு சுரணை இல்லையே என்று நொந்துகொள்கிறார் அக்கறையுள்ள ஓர் அதிபர். உயர் தரத்திற்குத் தெரிவான இந்த மாணவன் பற்றியும் "விநாயக மன்னனான" கல் மனங்கொண்ட அதிபர் பற்றியும் "புளிக்காத தோட்டத்தில்" மட்டுமன்றி முழு தொப்பித் தோட்டத்திலும் பரபரப்பாகப் பேசிக்கொள்கிறார்கள்.

இவ்வாறான விடயங்கள் எல்லாம் சிலருக்கு வாய்க்கு அவல் கிடைத்த மாதிரியே இருக்கின்றதேயொழிய அதனால் ஏற்படும் அனுகூலம் எதுவும் இல்லையே என்கிறார் இந்த நல்லாசிரியர். விநாயக மன்னனைக் கவிழ்ப்பதற்கோ அல்லது தெளிய வைப்பதற்கோ கல்வித் திணைக்களத்தினர் நடவடிக்கை எடுப்பார்கள் என்று இன்னும் எதிர்பார்த்துக்கொண்டிருப்பதால் ஏதும் பலன் கிடைக்குமோ தெரியவில்லை. அதனைவிட அவர் கேட்ட ஐயாயிரம் ரூபாய் நன்கொடையையே கொடுத்து விடலாம் என்பது நமது கருத்து. எப்படி? இதென்ன அநியாயம் என்று புருவத்தை உயர்த்துகிaர்களா? நிச்சயமாக ஐயாயிரம் ரூபாய் கொடுத்துத்தான் பார்ப்போமே.

அவர் பணம் கோரிய விடயத்தை அதே சமுர்த்தி அதிகாரி ஊடாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அறிவிப்போம். பணம் நாம் கொடுக்க வேண்டாம். இலஞ்ச ஊழல் அதிகாரிகளே கொடுத்து கையுமெய்யுமாக எடுத்துக்கொள்வார்கள். அதன் பின்னர் என்ன நடக்கிறதென்று பாருங்கள். இதனையெல்லாம் செய்யத் தெரியாதவர்கள் அல்லர் உழைப்பாளர்கள். ஆனால், இப்படிச் செய்வதால், ஏனைய நல்ல மனம் கொண்டவர்களுக்கும் ,அவப்பெயர் அல்லவா அதனால்தான் கல்வித் திணைக்களத்தின் நடவடிக்கையை எதிர்பார்த்திருக்கிறோம் என்கிறார்கள். இந்தப் பஞ்சைகளுக்கு பணம்தான் இல்லையே தவிர மனம் இருக்கிறது பாருங்கள்.

பாடசாலையின் நற்பெயரும் அதிபரின் சுய கெளரவமும் எந்தளவிற்கு முக்கியத்துவமானதோ அந்தளவிற்கு இந்த மாணவனின் கல்வியும் முக்கியம் அல்லவா. மிகவும் இக்கட்டான நிலையில் கல்வி கற்று உயர் தரத்திற்குத் தேறியிருக்கிறார். எனவே இவர் விடயத்தில் இனியும் தாமதிக்காமல் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என எதிர்பார்த்திருக்கிறோம். அடுத்த வாரமளவில் பிரச்சினை தீர்க்கப்பட்டுவிடும் என்ற நம்பிக்கை சகலருக்கும் உண்டு. அதற்கான வழியைத் தோற்றுவித்தது மட்டுமல்லாது ஏழை மாணவர்களின் கல்வி நலனில் அக்கறையுடன் செயற்படும் "காற்றுக்கடவுளர்" போன்ற சமுர்த்திப் பணியாளர்களுக்குச் சிரந்தாழ்த்துகிறோம். மீண்டும் புதிது புதிதாய் சந்தித்துக்கொள்வோம்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.